செவத்தியின் பிஞ்சு காதல்--சிறுகதை

2011-09-27

| | |
கோடை வெயிலின் தாக்கத்தால் பி்ள்ளைகளெல்லாம் தோமையார் கோவிலுக்குள்ளே விளையாடிக்கொண்டிருந்தனர். கோவிலை சுற்றி பெரிய சுவருகள். நாலு அடிக்கு ஒரு வேப்ப மரம் இருந்தது. அதன் கொப்பு சூரியனை மறைத்தப்படி நிழலாய் விழுந்தது. அந்த நிழலுக்குள் அடியில் இருந்து வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா பாட்டி.
கோடை காலமென்றால் இவளுக்கு இதுதான் வேலை. பிள்ளைகள் சப்பரக்குடில் கிட்ட விளையாடினர். காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தனர்.
பசங்க ஒருபுறமும் பொண்ணுங்க ஒருபுறமும் கண்ணாபூச்சி விளையாட்டும், பாண்டி விளையாட்டும் விளையடினர்.

கண்ணாபூச்சி விளையாட்டுக்காக பாட்டி பின்னால் உள்ள மரத்தின் பின்னால் ஒழிய வந்தான் செவத்தியான் என்ற செவத்தி.

ஏல.. என்னல காட்டு கத்து கத்துரிங்க.. அமைதியா விளையாட முடியாதா..உங்காத்தாட்ட சொல்லனுமா...”
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திரு திருன்னு முழித்துக்கொண்டே
ஆச்சு.. சும்மா இரு... காட்டுகொடுத்திராத... “
என்னல.. காட்டிகொடுத்திராத...போ போ.. ஒழிஞ்சுக்கோ...” என்று கொட்டை பொறுக்க ஆரபித்தாள்.

கண்ணைப்பொத்துன ஜோசு மரத்து பின்னால் ஒழிஞ்சுருந்த செவத்தியை பார்த்துட்டு ஐஸ்பால் சொல்ல ஒடினான் அதுக்குள்ள ஒடிவந்து கோழிகுஞ்சு பிடித்தான் தம்பான். கோழிகுஞ்சு அம்புகிட்டுச்சு என்று கத்த பாதர் பங்களாவில் ஒழிந்திருந்த பீட்டர், சப்பரகுடிலில் இருந்து அமுல், கோவில் பின்னாடி இருந்து அண்டன் எல்லாரும் ஒடிவந்து ஜோசுவை தம்பான் கூட சேர்ந்து கட்டிப்பிடித்து" கோழி குஞ்சு அம்புட்டுகிச்சு..” என்று தாறுமாறு கத்தினர். ஜோசு கையை உதற தம்பான், ஜோசு காலை வாரி விட்டான். எல்லாரும் மொத்தமா விழுந்தனர். புழுதியா கிளம்பியது. கீழ விழுந்த சத்தம் கேட்டு ஒரமா பாண்டி விளையாடிக்கொண்டிருந்த பொம்பளை பிள்ளைகளும் ஒடி வந்து வேடிக்கை பார்த்தனர்.

ஏல...மூதிகளா.. கை,காலு ஒடிஞ்சுருமா... மடத்தனமா விளையாடுதிங்க..
உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே...” என்று கத்தினாள் பாட்டி.

கீழ விழுந்து டவுசரில் ஒட்டிய தூசியை தட்டிக்கொண்டே தம்பான் கேட்டான். அவன்தான் இந்த கூட்டத்திலே பெரிய பையன். ஏழாப்பு படிக்கிறான்.
உட்கார்ந்துட்டு என்னத்த விளாட...?”

இந்தா, பொட்டை புள்ளைகளும் இருக்கிங்க.. நீங்களும் இருக்கிங்க.. கல்யாண விளாட்டு விளையாட வேண்டியதுதானே... “

இப்படி பாட்டி சொல்லும் போது தம்பான், ஜோசு, பீட்டர், செவத்தி, அமுல், அண்டன், பாத்திமா, சுதா, ஜெயந்தி, டீனா எல்லாரும் சுற்றி நின்னார்கள்.
செவத்தி மட்டும் பாத்திமாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.


கல்யாண விளாட்டு அப்படினா...?” என்று பெரிய ஆள் தோரணையில் கேட்டான் அண்டன்.

அதாம்ல.. அப்பா, அம்மா விளையாட்டு... “என்று சிணுங்கிகிட்டே சொன்னான் ஜோசு. ஜோசு எப்போதும் வால்தான்.

பார்த்தியா.. இந்த கல்லப்பயலுக்கு தெரியுது..” என்று சொல்லிக்கொண்டே ஒரு வேப்பங்காயை எடுத்து ஜோசு மேல வீசினாள் பாட்டி.
அவன் சிரிச்சுகிட்டே நின்னான். வேப்பங்காய் ஜோசு டவுசர் மேல பட்டு கீழ விழுந்தது. “அத எடுத்து இங்கப் போடு..” என்று மறுபடியும் வேப்பங்காயை வாங்கிக்கொண்டாள். அவளுக்கு ஒரு கொட்டை இழப்பு எற்பட கூடாதுலா..

எல்லாரும் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தனர். தம்பானுக்கு இந்த விளாட்டுல ரொம்ப சந்தோசம்.
நான் ரெடிப்பா...” என்று முதல் ஆளா கையை தூக்கினான்.
பசங்களுக்கு எல்லாருக்கும் விருப்பம்தான். பொட்டை பிள்ளைகளில் பாத்திமா வர அடம் பிடித்தாள்.
நான் வரலப்பா.. வீட்டுல தெரிஞ்சா திட்டுவாங்க..” என்று சுதாட்ட கிசுகிசுத்தாள்.
அதுலாம் திட்ட மாட்டாங்க.. பாரு உன் ஆளு பீட்டருலாம் வந்திருக்கான்.. சேருப்பா.. ப்ளீஸ்..” என்று அவளுக்கு பீட்டர் ஆசையைக் காட்டி தூண்டி விட்டாள் சுதா.
பாத்திமா பீட்டரைப் பார்த்தான். அவன் கெஞ்சும் கண்களாலே கூப்பிட்டான்..
பாத்திமா ஒரு வழியா வரேன் என்று சொல்லி விட்டாள். பாத்திமா ஒகே சொன்னதுக்கு அப்புறம்தான் பொண்ணுங்க பக்கம் சந்தோசம் வந்தது.
பொண்ணுங்க சைடுல பாத்திமா மட்டும்தான் நல்ல கலரா இருப்பாள். ஸ்டிக்கர் பொட்டும், ரப்பர் சடையுமா சூப்பரா இருப்பாள். அதுக்கு மேல அவள் புருவம் ரெண்டும் கருப்பா மூக்கு மேல சேர்ந்துருக்கும். அத பார்க்க அழகாய் இருக்கும். மத்ததெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை. டீனா கொஞ்சம் மாநிறமாய் இருப்பாள். கலையா இருப்பாள். சுதா ரொம்ப அட்டை கருப்பியா இருப்பாள். ஜெயந்தியும் அப்படித்தான். சுதா மேல ஜோசுக்கு ஒரு கண். எப்பவும் அவளையே வம்பிழுப்பான்.

சரி சரி.. எல்லாரும் விளாட்டுக்கு ரெடியா...” என்று கத்தினான்.
ரெடி.......!!” என்று உரக்க கத்தினர். கத்துன கத்துல வேப்ப மரத்துல கூடு கட்டுன காக்கா பறந்துப் போச்சு.எல்லாரும் ஒரு வேப்ப மரத்து அடியில் வந்து ரவுண்டா உட்கார்ந்தனர்.
செவத்தி பார்வை பாத்திமா மேல் இருந்தது. பாத்திமா பார்வை பீட்டர் மேல் இருந்தது.

தம்பான்தான் ஆரம்பித்தான்

இப்ப கல்யாண விளாட்டு விளாடப் போறோம்... யாரு மாப்பிளையாக இருக்க ஆசை படுறிங்க..

தம்பானுக்கு எப்போதும் நடுஆளா இருக்கத்தான் விருப்பமா இருக்கும். அதனாலே தம்பான்தான் கல்யாண விளாட்டை முன்னின்று நடத்த ஆரம்பத்தான்.
கேள்வி கேட்டவுடன் பசங்க எல்லாரும் கையை தூக்கினர். செவத்திக்கு பாத்திமா பொண்ணா வரனும் என்று தோமையாரிடம் வேண்டிக்கொண்டான்.

வேற வழியே இல்லை. சீட்டு குழுக்க வேண்டும். அமுல் ஒரே ஒட்டமா வீட்டுக்கு ஒடி ஒரு பென்சிலும், பேப்பரும் எடுத்துட்டு வந்தான்.

எல்லார் பேரும் எழுதப்பட்டது. மாப்பிளையைத் தேர்ந்தெடுக்க தனியாகவும், பொண்ணுக்கு தனியாகவும் எழுதப்பட்டது. பாத்திமாத்தான் எழுதினாள். அவள் கையெழுத்து அச்சில் அடித்தால் போல் இருக்கும்.

எல்லார் பேரும் எழுதி முடித்து, முதலில் பொண்ணைத் தேர்ந்தெடுக்க குலுக்கி போட்டனர். தம்பான் எடுத்தான். எல்லாரும் பாத்திமாத்தான் பொண்ணா வரனும் என்று நினைத்தனர். ஜோசு மட்டும் சுதா வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

கடைசியில் பாத்திமா பேர்தான் வந்தது. பாத்திமா வெடகப்பட்டு சிரித்துக்கொண்டாள். மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க குலுக்கி போட்டனர்.

பீட்டர் பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கடைசியில் செவத்தி பேர்தான் வந்தது. செவத்திக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. தை தைன்னு குதித்தான். அவனை பார்த்து எல்லாரும் சிரித்தனர். பாத்திமாவும் கொஞ்சம் சிரித்துக்கொண்டாள். அவளுக்கு பீட்டர் பேரு வராதது கொஞ்சம் எமாற்றம்தான். இருந்தாலும் இது விளையாட்டுத்தானே..

முதலில் நிச்சயதார்த்தம் பண்ணுவதெற்கு முடிவெடுக்கபப்ட்டது.
ஜோசு குடுகுடுன்னு வீட்டுக்கு ஒடினான்.
எம்மா.. தண்ணி கொடு.. விளாட போனும்.. சீக்கிரம்...” என்றான் சத்தம் கொடுத்தான்.

பெரிய இவரு.. “என்று சொல்லிக்கொண்டே தண்ணிக்கொண்டுவந்து வைத்துட்டுப் போனாள். மடக்கு மடக்கு குடித்துட்டு

எம்மா.. நிச்சயநார்த்தம்.. வைக்கலமா..?”
எதுக்குடா... அது என்னடா நிச்சயநார்த்தம்..?”
இல்ல.. இன்னைக்கு நல்ல நாளா...”
எதுக்கு கேட்குற..”
சும்மாத்தான்.. சொல்லும்மா... நான் போகனும்...”
நல்ல நாளுந்தாண்டா...”
சரி வாரேன்...” என்று கோவிலுக்குள் ஒடினான்.


டேய் தம்பான் இன்னைக்கு நல்ல நாளுந்தாண்டா.. எங்கம்மாட்ட கேட்ட... நிச்சயநார்த்தம் பண்ணிருலாம்டா..” என்று மூச்சிரைக்க கூறினான்.
நிச்சயநார்த்தம் என்ற வார்த்தையை கேட்டு எல்லாரும் சிரித்தனர்.

எல்லாரும் பாட்டிட்டப் போய் " ஆச்சு.. இன்னைக்கு நல்ல நாளா..”என்றான் தம்பான்.
யாருக்கு தெரியும்...எந்த மாசம்டா இது..”என்று திருப்பி கேட்டாள்.
மே மாசம் ..” என்றான் அமுல்.
தமிழ் மாசம் சொல்லுடா..”
தெரியல..”
எந்த நாளா இருந்தா என்ன... கல்யாணத்தை பண்ணி விளாடுங்க.. போங்க..” என்று அனுப்பி வைத்தாள்.

ஒரு இடத்தில் ஒன்னு கூடி உட்கார்ந்தனர். நிச்சயத்திற்கு முன்பு எல்லாருக்கும் டிரெஸ் எடுக்கனும் என்றான் பீட்டர்.
திருநெல்வேலி போலாமா.. இல்ல சாத்தான்குளம் போலாமா..”
அட நீ வேறப்பா.. திருநெல்வேலிக்கே போவும்...”என்று சொல்லிவிட்டு பஸ் மாதிரி நின்றுக்கொண்டான்.
திருநெல்வேலி.. திருநெல்வேலி...” என்று கத்தினான்.
டவுன்ல போய் இறங்கி போத்தீஸ்ல டிரெஸ் எடுத்த மாதிரி நடித்தனர்.
ஜோசுதான் பஸ் டிரைவர், பீட்டர் கண்டெகடர்.
செவத்தியும் பாத்திமாவும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டனர்.
அதே பஸ்ல ஊர் வந்தனர்.

***************
பாதி பாதியா பிரிந்து எதிர் எதிரா கோவில் மணலில் உட்கார்ந்துக்கொண்டனர். மாப்பிளை பக்கம் கொஞ்ச பேரு.. பொண்ணு பக்கம் கொஞ்ச பேரு..

தம்பான் தான் வாசித்தான்.

வியாகுலத்தின் மகனாகிய செவத்தியானுக்கும், சகாயத்தின் மகளாகிய பாத்திமாவுக்கும் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு திருமணம் நிச்சயக்கப்படுகிறது.”

செவத்தியானுக்கு பதிலா, ஜேம்ஸுன்னு வாசிப்பா...” என்று கெஞ்சினான் செவத்தி.

"அதுலாம் வாசிக்க முடியாது. செவத்தி செவத்திதான்.. "என்று வாசித்து முடித்தான் தம்பான்.
செவத்திக்கு எப்போதும் தன் பெயரை பிடிப்பதில்லை. ஜேம்ஸ் என்றே எல்லாரையும் கூப்பிட சொல்வான்.

கல்யாண வேலைகள் மும்முரமா நடக்க ஆரம்பித்தது.
ஜோசுக்கு அவசரமா ஒன்னுக்கு வந்தது. கோவிலுக்கு பின்னாடி போயி ஒன்னுக்கு அடிச்சுட்டு வந்தான். கையில் பட்டதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுதா பாவாடையில் துடைச்சுக்கொண்டான். அவ அதைப்பார்த்துட்டு திட்ட ஆரம்பித்தாள்.
அறிவு இல்ல... ச்சீ... ச்சீ.. பாவாடையில போய் துடைக்க.. நாய...”
நீ வேணா இருந்துட்டு வந்து என் மேல துடைச்குக்கோ...” என்றான் சர்வசாதரணமா.
ஜோசு தலையில் நங்குன்னு ஒரு கொட்டு வைத்தாள் சுதா..
தலையை தடவிக்கொண்டே
வலிக்கிலயே... எப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்... இந்த மாதிரி...”
ஆங்... இச்சுக்கு.. போய் வேலையைப்பாரு...உன் காதுல போட்டுருக்க வாளிய எப்ப கழத்துவ...”
அது உவரி அந்தோணியார் கோவிலுக்கு போ்ட்டது.. நான் ஒன்பதாப்பு படிக்கும் போதுதான் கழற்றமுடியும்... அப்ப பண்ணிக்கலாமா...”
அப்ப வேணா பார்ப்போம்..” என்று சிரிச்சிக்கொண்டே சொன்னாள்.
அப்படினா..சரி..”என்று சொல்லிட்டு ஒடிவிட்டான் ஜோசு,
சுதா திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.

கோவில் கேட்டில் இருந்து சத்தம் வந்தது.
ஏல தம்பா... வந்து சாப்பிட்டுட்டு போ...” என்று.
சரிப்பா.. எல்லாரும் சாப்பிட்டு வந்து விளாடலாம்...” என்று எழுந்து போயிட்டான்.
செவத்திக்கு எமாற்றமாகிவிட்டது. எல்லாரும் கலைந்து சென்றனர்.
வீட்டுக்குப்போய் அவசரமாய் சாப்பிட்டுவிட்டு வந்துப்பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. கொஞ்சம் நேரம் உட்கார்ந்துப்பார்த்தான். ஜோசு மட்டும் வந்தான். மத்தவங்கெல்லாம் எங்கடா என்று கேட்டதற்கு உதட்டை பிதுக்கினான்.
போய்.. கூப்பிடுட்டு வரலாமா..” என்று ஆசையா கேட்டான் செவத்தி.


அதுலாம் வேண்டாம்டா.. அதுலாம் வருவாங்க..வா கோலிக்காய் விளாடும்..” என்று டவுசர் பாக்கெட்டில் இருந்து கோலிக்காய் எடுத்து விளையாட ஆரம்பித்தனர். டப்பா கோலிக்காய்தான் விளையாண்டனர்.
செவத்திக்கு கவனமெல்லாம் இங்கில்லை. கல்யாணம் முடியாம போச்சே என்று வருத்தப்பட்டான்.
வுடுடா.. நாளைக்கு அத விளையாடலாம்...” என்றான் ஜோசு.


ராத்திரி ஜெபத்துக்கு எல்லாரும் கோவிலுக்கு வந்திருந்தனர். முன்னாடி முட்டங்காள் போட்டு உட்கார்ந்திருந்தாள் பாத்திமா. செவத்தி பக்கத்தில் அமுல் இருந்தான். ஒருவனும் மத்தியான விளையாடின விளையாட்டை யாருமே பேசவேவில்லை. பீட்டர்தான் ஜெபம் வாசித்தான். ஜெபம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்தனர். நாளைக்கு பார்க்கலாம் என்று பிரிந்து சென்றனர்.
செவத்தி ராத்திரி புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வரவேயில்லை. எழுந்துப் போய் பழைய சாமான் போட்டுருக்கிற பையை எடுத்து பழைய மோதிரம் எடுத்துக்கொண்டான். நாளைக்கு பாத்திமாவுக்கு போடலாம் என்று.அடுத்த நாள் கோவிலுக்கு எல்லாரும் வந்துவிட்டனர். கல்யாண எற்பாடு எல்லாம் நடக்க ஆரம்பித்தது.
..புள்ள நீ சமைஞ்சுட்டியா...?” என்று பாத்திமாவ பார்த்து கேட்டாள் பாட்டி.
எல்லாரும் முன்னாடி கேட்டதும் பாத்திமாக்கு வெட்கம் வந்தது. சுதாவும் வெட்கப்பட்டாள்.
சமைஞ்சுதுனா... அப்படினா என்னடா..” என்று ஜோசுவை பார்த்து கேட்டான் அண்டன்.
அப்படின்னா.. கூட்டாஞ்சோறு சமைப்பாங்கல்லா...அதான்.. அந்த கிழவிக்கு தெரியாது போல..அதான் பாத்திமாட்ட கேட்கும் போல..” என்று சொல்லிக்கொண்டே நடந்து சென்றான் ஜோசு.

இல்ல பாட்டி.. “ என்று கூறிவிட்டு ஒடி வந்து விட்டார்கள் பாத்திமாவும் சுதாவும்.

கல்யாணத்துக்கு முன்பு பச்சை குத்தும் சடங்கு நடைபெற்றது. ஜோசுதான் வேப்பங்காயை ஒரு குச்சியால் குத்தி அதில் உள்ள பாலைத் தொட்டு செவத்தி கையில் பாத்திமா என்று எழுதினான். பின்பு கரியைத் தொட்டு அதில் மேல் தடவினான். பாத்திமா என்று பளிச்சென்று பச்சை குத்துனது மாதிரி தெரிந்தது. பாத்திமா கையிலும் செவத்தி என்று எழுதும் போது தடுத்துவிட்டாள். ஜோசும் வற்புறுத்தவில்லை.


பீட்டர்தான் ஃபாதராகிவிட்டான். தம்பான் அவனுக்கு ஃபாதர் வேடம் குடுத்தான்.
கோவில் ஸ்டேஜ்ல மேலேறி நின்றான் பீட்டர்.
கீழே பாத்திமாவும் செவத்தியும் நினறனர்.

பாத்திமாவைப் பார்த்து
இனபத்திலும் துனபத்திலும் செவத்தியுடன் பங்குகொள்வாயா..?” என்றான் பீட்டர்.
ஆம்..”

செவத்தியைப் பார்த்து
இனபத்திலும் துனபத்திலும் பாத்திமாவுடன் பங்குகொள்வாயா..?”
ஆம்"

கையில் சணலை தாலியாக பாவித்து, அதை பீட்டர் எடுத்து செவத்தி கையில் கொடுத்தான். செவத்தி பாத்திமா கழுத்தில் கட்டினான். எல்லாரும் கை தட்டினர். பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.


ஃபர்ஸ்ட் நைட்லா உண்டாடே...”என்று குரல் கொடுத்தான் ஜோசு.
ஆமா.. அதுலாம் இல்லாம....”தம்பான் அதுக்கான வேலைல இறங்கினான்.
அதுலாம் வேண்டாம்..”என்று சினுங்கினாள் பாத்திமா..
சும்மாத்தான்பா.. வாப்பா..” என்று அவளையும் செவத்தியும் இழுத்துட்டுப் போய் சப்பரகுடிலுல் விட்டனர். சப்பரகுடில் இருட்டா இருக்கு்ம். திருவிழா நடக்கும் போது மட்டும்தான் சப்பரத்தை ஜோடிக்க வெளிய எடுப்பார்கள். மற்றப்படி அது பாழடைந்துப்போய்தான் கிடக்கும்.

வெளியே தென்னைந்தட்டி கொண்டு அடைத்திருந்தனர்.
உள்ளே போய் இருவரும் உட்கார்ந்தனர். சின்ன சப்பரத்தின் மேல் பாத்திமா உட்கார்ந்தாள். பெரிய சப்பரத்தின் மேல் செவத்தி இருந்தான். ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர். தீடிரென்று செவத்தி எழுந்துப் போய் பாத்திமா கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அவள் அலறியடித்து தட்டியை தள்ளிவிட்டு வெளியே ஒடினாள். பீட்டரிடம் போய்
அழுதுக்கிட்டே
என் கண்ணத்தை எச்சிப் படுத்திட்டான்..” என்று அழுதாள்.கோபம் வந்தவனாய் செவத்தியப் போய் அடித்தான் பீட்டர். அடித்த அடியில் செவத்தி கீழே விழுந்து விட்டான். திருப்பி அடிக்க முடியவில்லை. ஜோசு வந்து தடுத்துப் பார்த்தான் அவனுக்கு உதை விழுந்தது.
அடித்த அடியில் முட்டெல்லாம் பேந்துவிட்டது. தம்பான் தான் தடுத்து விட்டான். எல்லாரும் ஒடிவிட்டனர். செவத்தி கூட ஜோசு மட்டும் இருந்தான். கால் மூட்டுல ரத்தம் வந்தது. ஈ மொய்க்க ஆரம்பித்தது.
சூ சூ என விரட்டிக்கொண்டிருந்தான். கையில் உள்ள பாத்திமா என்ற எழுத்தை அழித்தான்.  அழித்தது அழித்ததுதான்.

**********************************************************************************


பீட்டர் மற்றும் பாத்திமா வின் திருமணத்திற்கு வருகை தரும் மண்ணின் மைந்தர் ஃபாதர் ஜேம்ஸ் அவர்களை வரவேற்கிறோம் என்று ஊர் முழுக்க பேனர் அடித்திருந்தது.

ஃபாதர் ஜேம்ஸ் வந்தார். ஊரே வந்து ஆசி வாங்கியது. பாவ மன்னிப்பு கொடுத்தார்.

திருமண திருப்பலி நடைபெற ஆரம்பித்தது. மாப்பிளை பொண்ணுமாக பீட்டரும் பாத்திமாவும் ஜோடியா முன்னால் நின்றுக்கொண்டிருந்தனர்.
ஜேம்ஸ்தான் திருமணத்தை நடத்திவைத்தார்.

இனபத்திலும், துன்பத்திலும், நோய் நொடியிலும் பக்கத்தில் இருந்து பீட்டரைப்பார்த்துக்கொள்வாயா...?”
பார்த்துக்கொள்வேன்..”
இனபத்திலும், துன்பத்திலும், நோய் நொடியிலும் பக்கத்தில் இருந்து பாத்திமாவைப் பார்த்துக்கொள்வாயா...?”
பார்த்துக்கொள்வேன்..”

உனக்கு பீட்டரை மணப்பதற்கு சம்மதமா..?
சம்மதம்..”
உனக்கு பாத்திமாவை மணப்பதற்கு சம்மதமா..?
சம்மதம்..”

இருவரை கையை சேர்த்து பிடித்து ஒரு வசனம் சொன்னார்.
தாலிச்செயினை எடுத்துக் கொடுத்து கட்டச்சொன்னார்.
பீட்டர் பாத்திமா கழுத்தில் தாலி கட்டினான். கோவில் மணி அடித்தது.
வெடி வெடித்தது.

இருவருக்கும் திருமண வாழ்த்து சொன்னார் செவத்தியான் என்ற ஜேம்ஸ்..

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment