தள்ளுபடி--சிறுகதை

2011-10-01

| | |




ரோடு வழியா வராமல் ஏரி வழியா வந்தான் மூக்கன். ஏரி வழியா வந்தால் மரமா நிக்கும் நிழலா இருக்கும். அது தவிர வயக்காட்டுக்கும், வேற எதுக்காவது போயிட்டு வரும் பெண்களின் சாடை மாடை பேச்சு. அவங்க கூட பேசிட்டு வருவது நேரம் போவது தெரியாது. ராஜேந்திரனுடைய கரும்பு காட்டுல, டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு இருக்கும் போதுதான் இவனுக்கு வீட்டுக்கு போவதற்கு அவசரம். பொண்டாட்டி வழி சொந்தம் ஒன்னு வந்து நிக்குதாம். அத போய் பார்க்கனும். கரும்பு ஆலைக்கு நாலு மணிக்குள்ள போயிர சொல்லி முதலாளி அண்ணாதுரையிடம் இருந்து உத்தரவு. அதையும் தட்ட முடியாது. விறுவிறுவென்று நடந்தான்.காலில் போட்ட செருப்பு அருந்து விழுவது மாதிரி இருந்தது. மூக்கன், அண்ணாதுரை டிராக்டர்ல விவரம் தெரிஞ்ச நாளிலே இருந்தே வண்டிக்கு போயிட்டு இருக்கான். மூக்கனுக்கு ஒரே பையன். இப்போ ப்ளஸ் டூ முடிச்சு வீட்டில முழு மாடு மாதிரி நிக்கான். மார்க் இன்னும் வரல. வந்தா தெரியும் அவன் படிக்குதா வேணாமான்னு. ஐயாட்டத்தான் படிக்க வழி கேட்கனும். பையனுக்கு படிக்க ஆசைத்தான். உதவி கிடைச்சா படிக்க வைக்கனும். இல்லன்னா ஊர்ல உள்ள வயசு பசங்க மாதிரி டெஸ்ட் அடிச்சுட்டு சிங்கப்பூர்க்கு அனுப்பிர வேண்டியதுதான். இப்ப ஊர்ல பூரா பசங்களும் வெளி நாட்டுலத்தான் கிடக்கானுவ. போயிட்டு அஞ்சு வருசம் கழிச்சு வாரானுங்க. வந்து வீட்டக் கட்டுனாதுங்க. ஒரு கல்யாணத்தை பண்ணுதானுங்க. அப்புறம் மறுபடியும் போயிருதானுங்க. என்ன வேலையோ.. ஒரு தாலியும் தெரியலை. இங்க கட்டுனதுவளை அதுக்குள்ள கோழிக்குஞ்சை பருந்து சுத்துன மாதிரி ஒவ்வொருத்தனும் சுத்த ஆரம்பிச்சுருவானுவ. நம்ம பையனுக்குஅப்படிலாம் நடக்காது. நம்ம பையனுக்கு ஐயா உதவி பண்ணாமலையா போயிருவாரு. அதுலாம் பண்ணுவாரு. அவசர அவசரமா வீட்டுக்கு வந்தான். வந்த பொம்பளை எதோ இழவு செய்தி கொண்டு வந்திருந்தாள். பண்ருட்டி பக்கம் மூக்கன் பொண்டாட்டி சொந்தம் ஒன்னு போயிடுச்சாம். இவன் போயிதான் ஆகனும். ஐயாட்ட போயி கேட்க கிளம்பினான். இழவு சொல்ல வந்த பிள்ளையை சோறு சாப்பிட சொல்லி அனுப்பினான்.

அண்ணாதுரை வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். வீடு இப்ப கட்டினதுதான்.ரெண்டு டிராக்டர். பத்து ஏக்கர் நிலத்தில் புல்லா கரும்பு. இரண்டு பசங்களையும் நல்ல படிக்க வச்சிருந்தார். மூத்தவன் வாத்தியாரா உள்ளுரிலே இருக்கான். சின்னவனுக்கு இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சது. வெளி நாட்டுல இருக்கான். பிள்ளைகளெல்லாம் கரை சேர்த்த பெருமையை ஊர்ல எல்லாருட்டையும் அடிக்கடி சொல்லுவார். எதோ அவங்களும் பெரிய மனுசன் சொல்றானேன்னு கேட்டுட்டு போவாங்க. வீட்டு வாசலில் உட்கார்ந்தாலே தெருவிலே போறவனை கூப்பிட்டு வச்சு கதை பேச ஆரம்பிச்சுவாரு. தெருவிலே போன காமராசை கூப்பிட்டார்.
அவரும் அண்ணாதுரையும் ஒரே வயசுக்காரர்கள்.
"அப்புறம் அண்ணாதுரை.. என்ன சமாசாரம்.." பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் காமாரசு.
வீட்டு முன்னால் வேப்பமரத்தில் கட்டி போட்டிருந்த நாய் குலைத்தது. அது தவிர மரத்திலிருந்து காத்து வேற வந்தது.
" ஒன்னுமில்லைப்பா.. கல்யாணம் முடிச்சாச்சு... வீட்டை கட்டியாச்சு.. பசங்களையும் நல்ல நிலமைக்கு ஆக்கியாச்சு...வேற என்ன வேணும்.." மறுபடியும் பழைய பெருமையை அளந்தார்
"உனகென்ன அண்ணாதுரை.. குடுத்த வச்சவன் நீ...! அப்புறம் வேற என்ன விசயம்...?”

நீதான் சொலலனும்.. கட்சில பெரிய ஆளுன்னு சொல்லிட்டு சுத்திட்டு அலையுதே.. உனக்கு தெரியாத விசயமா...?”
நீயும் என்னை கிண்டல் அடிக்க பார்த்தியா...! எலெக்சன்லாம் முடிஞ்சுட்டு, இந்த வருசம் பேங்குல தள்ளுபடி வருதுன்னு சொல்றாங்க உண்மையாவா..?”
'எதுக்கு... அதான் போன தடைவையே சும்மா கோடிகளை அள்ளி அள்ளி கொடுத்தாங்களே.. அது போதாதா...?”
அது இல்லைப்பா... பேங்குலருந்து சும்மா நோட்டீஸ் மேல நோட்டீஸ் பறக்காம்.. நகை கடனை திருப்பு, பயிர்க்கடனை கட்டுன்னு.. அதாம் ஒரு வேளை தள்ளுபடி வருதுன்னால இந்த மாதிரி கணக்க குறைக்கலாம்னு பேங்குகாரங்க நினைக்காங்கன்னு பள்ளிகூடத்தெருவுல பேசிக்கிட்டாங்க..”
பேச்சு சுவாராசயமாக போயிக்கொண்டிருக்கும்போது மூக்கன் வந்து நின்னான். மண்டையை சொறிந்துக்கொண்டே...
ஐயா, நம்ம சொந்ததுல ஒன்னு தவறிட்டாம்... பண்ருட்டி பக்கம்... அதான் போயிட்டு வரனும்... கொஞ்சம் போயிட்டு வந்துட்டா நல்லா இருக்கும்யா...!” என்று கெஞ்சினான்.
என்னாப்பா சொல்லுர.. கரும்பு லோடு வேற நிக்குமே.. என்ன பண்ண...?”
அதுக்கில்லையா.. இங்க பக்கமுன்னா என் பொண்டாட்டியை அனுப்பிருவேன்... அம்மாந்தூரம் போகனும்.. அதான்யா...”என்று இழுத்தான்.
சரி சரி.. உன் பையன் என்ன பண்ணுறான்...இப்ப சும்மாத்தான இருப்பான்... அவனை வுட்டு அனுப்பிரலாமா..?”
ஐயா.. ஐயா.. அதுலாம் வேணாம்யா.. லோடு வண்டிலாம் தாங்காதுயா... அவன் சின்னப்பையன்.. வேற எதாவது ஆளை வுடுங்கயா...?”
எவன் இருக்கான்... இங்க.. எல்லா பயலுவலும் வெளிநாட்டுக்கு ஒடிட்டானுவ.. எந்த இளவட்டப் பய இங்க இருக்கான்...! அவனை வரச்சொல்லு.. இல்லன்னா நீ ஒன்னும் போக வேண்டாம்..” என்று சடாரென்று பதில் வந்தது.
மூக்கனுக்கு கண்ணுலெல்லாம் நீர் கோத்துவிட்டது.
ஐயா.. சாமி.. நீங்க நல்லா இருப்பிங்க... இந்த ஒரு தடவை வுடுங்கயா... “ என்று காலில் விழாத குறையா கெஞ்சினான்.
டேய்.. நான் சொன்னதையே சொல்லிட்டு இருக்க முடியுமா... லோடு எடுத்துட்டு ஆலைக்கு போக முடிஞ்சா போ... இல்லன்னா.. உன் பையனை அனுபபு... அப்படி இல்லன்னா அப்படியே போய் தொலைஞ்சிரு...”









மூக்கனுக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியில்லை. பேசமா காட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். வேற வழியேயில்லை..நாளைக்கு பையனுக்கு படிப்புக்கு அவருட்டத்தான் போய் நிக்கனும். எல்லாம் நம்ம விதி. நொந்துக்கொண்டே நடந்தான். பலமா அடித்த காத்துல வேட்டி கலைந்தது. தோளில போட்டிருந்த துண்டு பறந்து பக்கத்தில் கடந்த சாணத்தில் உழுந்தது. எடுக்க மனசில்லை. இருந்தாலும் நம்ம நிலமை இந்த மாதிரிதான். என்று துண்டை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். போற வழியில் எத்தனையோ மோட்டரு அதுல கழுவுனா போச்சு. விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தான்.




காமராசு போட்டுவிட்டு போன குண்டு இப்பத்தான் வெடிச்சு, அண்ணாதுரை மனசுல புகை கிளம்ப ஆரம்பிச்சிருந்தது. குழப்பமான மன நிலையில் இருந்தாரு. ஒரு வேளை தள்ளுபடி வருமோ. வந்தா நல்லதுதான் நம்ம டிராக்டரும் தள்ளுபடியிலே போகும். போனதடவை வந்தப் போது அந்த 'மயிரு மண்ணாங்கட்டி' மாணிக்கம் மட்டும் மேனஜரை கைக்குள்ள போட்டுகிட்டு அவன் டிராகடர் லோனு, மூணு லட்சத்துக்கு மேல பயிர்க்கடனு எல்லாத்தையும் தள்ளுபடி பண்ண வச்சான். அவனும் பெரு விவசாயித்தான். அவனுக்கு மட்டும் தள்ளுபடி. நம்மளுக்கு ஒன்னுமில்லை. பிச்சைக்காரத்தனமா அம்பதாயிரத்துக்குக் நகை தள்ளுபடியாச்சு. அதனாலத்தான் இந்த டிராக்டர் லோனை நான் கட்டவேயில்லை. ஒரு தவணையோடு முடிச்சுகிட்டேன். பார்த்துரும் பேங்கு என்ன பண்ணுதுன்னு.. ஒரு மயிரும் புடுங்க முடியாது. என்று யாரிடமோ சொல்லுவதுப் போல தனியா புலம்பிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் களத்துக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப் போது அண்ணாதுரைக்காக போஸ்ட் மேன் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தார். பக்கத்தில் வந்ததும் போஸ்ட் மேன் கிட்ட யாருட்ட வந்துருக்கு என்று மெதுவா கேட்டார். அவனும் எடக்குக்கு "உங்க மாமியார் வீட்டுல இருந்தா வரும்...!! பேங்குல இருந்து வந்துருக்குயா.. சீக்கிரம் கையெழுத்து போடு.. நான் வேற ஜோலியை பார்ர்க்க வேணாம்.. உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுரது.. கேட்டா.. மதிக்கமாட்டுக்கான்பே.. “என்று லெட்டரை கொடுத்துட்டு சைக்கிளில் பறந்துட்டான்.
நம்ம மரியாதை ஒரு நிமிசம் இறங்குனதுல ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டாரு அண்ணாதுரை. சரி உடு, ஒரு கவுருமெண்ட் சர்வண்ட் தானே.. என்றாவாறு லெட்டரை கிழித்துப் படிக்க ஆரம்பித்தார்.











Agri Term Loan No : 10585
Activity : Tractor & Trailor

ஐயா,

பொருள் : தாங்கள் எங்கள் வாங்கிய கடன் தொடர்பாக ஜப்தி நடவடிக்கை.

தங்களது மேற்குறிப்பிட்ட கடன் கணக்கில் தங்களது கடன் நிலுவை தவணைத் தாண்டி உள்ளது. கடிதம் கிடைத்த 7 நாளுக்குள் வந்து கணக்கை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில்தங்கள் டிராகடர் ஜப்தி செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கனம்
கிளை மேலாளர்



படித்து முடித்து லெட்டரை கசக்கி தூக்கி எறிந்தார். வாய்க்கு வந்தப்படி மேனஜரையும், பேங்கையும் திட்ட ஆரம்பித்தார். “துக்கிருவாங்கலா.. அதையுந்தான் பார்த்துருவோம்.. என மயிரக் கூட புடுங்க முடியாது.” என்று கத்திக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து வந்த மூக்கன்
ஐயா, எம் பையன் பண்ணிருண்டாவதுல பாஸ் ஆயிட்டான்யா.. மேல படிக்க வைக்கனும்.. நீங்கத்தான்.உதவி பண்ணனும்...! “ என்று நேரம் காலம் தெரியாமல் வந்து கேட்டான்.
அதுவரைக்கும் யாரு மேல கோபத்தை காட்டலாம் என்று இருந்த அண்ணாதுரை, மூக்கனைத் திட்ட ஆரம்பித்தான்.
டேய்.. நானே இங்க என்ன பண்ணுதுன்னு தெரியாமல் நிக்குறேன்... நீ என்னனானா.. உதவி பண்ணு.. மயிரு பண்ணுன்னு.... வந்து நிக்குறே..
ஒம்பயன் படிச்சான் என்ன..? மண்ணா போனா என்ன..? ஒடுடா..?” என்று கத்த...

என்ன சொல்வதென்று தெரியாமல் நடக்க ஆரம்பித்தான் மூக்கன்
அண்ணாதுரை கோபம் இன்னும் இறங்கவில்லை. பேங்க்குக்கு போலாமுன்னு முடிவு பண்ணி கசங்கி எறிஞ்ச லெட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.






போற வழியிலே அவரு்க்கும் பேங்க்குக்கும் உண்டான உறவையும் நினைச்சுப் பாரத்தார். பேங்க் முதலில் இந்த ஊருக்கு வநத புதுசுல நாயா, பேயா அலைந்து பேங்குக்கு உதவி பண்ணினார். டெபாசிட் புடிக்கிறது. காடுகளை காட்ட கூட்டிக்கு போறது. அப்பலாம் சைக்கிளில் மேனஜரை வச்சு அழுத்திட்டுப் போவார். பேங்கு இவருக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தது. அவரு பயிர் பண்ண பயிர் கடன். வண்டி வாங்க டிராக்டர் லோனு.. இப்ப அது எல்லாம் மலையெறிப் போச்சு.

பேங்கு முன்னால் வந்து நின்னார். அவரு பேங்க்குக்கு வந்து இரண்டு வருசத்துக்கு மேல ஆகுது. எல்லாம் அந்த தள்ளுபடி பிரச்சினையில் மேனஜரை முறைச்சுக்கிட்டு வீம்புக்கு போயிட்டார். இப்பத்தான் பேங்கு பக்கம் வாராரு.

பேங்க முன்னாடி நல்ல கூட்டம். சுய உதவிப் பெண்கள் கொஞ்சம் பேர் வெளியே உட்கார்ந்து எதோ எழுதிக்கொண்டிருந்தனர். பணம் எடுக்க உள்ளே போன அம்மா எப்ப வருமென்னு பார்த்தப்படி தாத்தாவுடன் உட்கார்ந்திருந்தது ஒரு குழந்தை.
பேங்கிலிருந்து வெளியே வந்த பச்சமுத்து, அண்ணதுரையைப்பார்த்து
என்ன அண்ணாதுரை... இந்த பக்கம் எப்படி..?”
சும்மாத்தான்.. மேனஜரைப் பார்க்க வந்தேன்..நீ...?”
நானா.. கரும்பு பணம் வந்துட்டான்னு பார்க்க வந்தேன்.. ஆலையில கேட்டா அனுப்பிட்டேங்கிறான்.. இங்க வந்து கேட்டா இன்னும் வரலைன்னு சொல்றாங்க.. லோடு அனுப்பி மூனு மாசத்துக்கு மேல ஆச்சு.. பணம் இன்னும் கைக்கு வரல..நடுவுல நாமந்தான் அல்லல் படுறோம்.. சரி நான் வரேன்.. போயி மாடுக்கு தண்ணி காட்டனும்..” என்று புலம்பியவாறு நடையைக் கட்ட ஆரம்பித்தான் பச்சமுத்து.

உள்ளே போயி ஒரு பார்வை பார்த்தார். பேங்க் ரொம்ப மாறியிருந்தது. எல்லாம் புதுசுகளா இருந்தார்கள். நகை ஆசாரியும், பியூனைத்தவிர எல்லாம் புதுசுத்தான். மேனஜர் கேபினைப் பார்த்தார். அவர் அறைக்கு முன்னாடி பசங்களா நின்னுட்டு இருந்தனர். கூட அப்பாவோ, அம்மாவோ நின்றனர்.
நகை ஆசாரி இவரைப் பார்த்து வணக்கம் வைத்தார். பியூன் வந்து கொஞ்சம் நேரம் உட்காருங்க கூட்டம் கலைந்ததும் நான் உங்களை கூப்பிடுறேன் என்று சொல்லி அருகில் உள்ள சேரில் உட்கார வைத்தார்.

கொஞ்சம் நேரம் கழித்து கூப்பிடவும் மேனஜர் அறைக்குள் சென்றார்.
உட்காருங்கய்யா.. உங்க பேரு..” என்று சிரித்தப்படியே கேட்டார் மேனஜர்.
அண்ணாதுரைங்க..”
.. அந்த அண்ணாதுரையா... கேள்விப்படிருக்கேன்.. பேங்க்குக்கு முன்னாடி உதவிலாம் பண்ணுவிங்கலாமே.. என்னயா வேணும்...?”
அண்ணாதுரை லெட்டரை எடுத்து நீட்டினார்.



ஆமாயா... தவணை கட்டாத டிராக்டரை ஜப்தி பண்ண சொல்லி ஆர்டர் வந்தாச்சு.. பைனான்ஸ்ல போட்டு வண்டி வாங்குனா, ஒழுங்கா கட்டுறாங்க.. பேங்குல வாங்குனா மட்டும் கட்ட மாட்டுக்காங்க...நீங்க நல்ல கஸ்டமருன்னு நினைச்சேன்.. நீங்களுமா..?”

அதுக்கில்லையா.. கொஞ்சம் தவணை தப்பி போச்சு வாஸ்தவந்தான்...முன்னாடி உள்ள ரிக்கார்ட எடுத்துப் பாருங்க.. வாங்கி எப்படி கட்டியிருக்கன்னு...எல்லாம் இந்த தள்ளுபடியினால வந்தது.. பயந்துட்டு கட்டுறவனுக்கெல்லாம் ஒன்னுமில்லை.. திமிரா கட்டாம போட்டவனுக்கெல்லாம் லட்சம் லட்சமா தள்ளுபடி.. அதான் அப்படியே போட்டுட்டேன்...”

அப்படி சொல்லுறதைப்பார்த்தா நாங்க கொடுக்கிற லோன் பூராவும் தள்ளுபடி பண்னினா.. நாங்க எதுக்கு விவசாயகடன் கொடுக்கனும்.. அரசியல்வாதிகள் அவங்க லாபத்துக்காக எதோதோ சொல்றாங்க.. கடைசியா யார் உறவு கெட்டுப்போகுது.. நம்ம உறவு தான்.. இங்க விவசாயகடனை வாங்கிட்டு பாதி பேரு விவசாயத்துக்கு பயன்படுத்துல...வீடு கட்டுறதுக்கும்.. நகை, நட்டு வாங்குறதுக்கும்.. வட்டிக்கு உடுறதுக்குந்தான் வாங்குறாங்க..
இனிமேல் தள்ளுபடி பண்ணினா எந்த விவசாயி உண்மையிலே கஷ்டப்படுறானோ. அவனுக்குதான் தள்ளுபடி பண்ணனும்... பொத்தம் பொதுவா கொடுக்கிறதுனால பயன் அடையிரது உங்கள மாதரி பணக்கார விவசாயித்தான்.. எழை விவசாயி இல்லை..” என்று மேனஜேர் பேசிக்கொண்டிருக்கும் போது பியூன் வந்து
சார், எஜுகேசன் லோனுக்காக பசங்க நிறைய பேர் நிக்காங்க.. அனுப்பிட்டு நாளைக்கு வரச்சொல்லுட்டா.. “ என்று கேட்க

நோ..நோ.. எல்லாரையும் வெயிட் பண்ண சொல்லு.. இவங்களை மாதிரி கட்டாதவனுக்கெல்லாம் லோனு கொடுக்கிறதுக்கு பதிலா, படிக்கிறதுக்கு கொடுத்தா பசங்க வாழ்க்கையாவது முன்னேறும்...” என்று சொல்லி அனுப்பினார்.
அண்ணாதுரைக்கு முஞ்சில அடித்தால் போல் ஆகிவிட்டது.
உடனே ஆவேசம் வந்தவனாய்

என்ன சார்.. இப்படி விவசாயத்துக்கு கொடுக்காம, படிப்புக்கு மட்டும் கொடுத்திங்கன்னா.. விவசாயி நாங்க என்ன பண்ணரது...விவசாயத்தை எதிர்க்கிற மாதிரிலா இருக்கு...”

நான் விவசாயத்தையோ. விவசாயியோ எதிர்க்கலை... உண்மையிலே பண்ணுனா.. நான் கண்டிப்பா தாரேன்.. நீங்க நேர்மையாயிருந்தா உங்களுக்குத்தான் நல்லது.. படிப்பு லோனுமே நான் எல்லாத்துக்குமே கொடுக்கலையே.. உண்மையிலே யார் கஷ்டப்படுறாங்களோ.. அவங்களுக்குதான் கொடுக்கிறேன்... விவசாயி பையன் இஞ்சினியருங்கிறது உங்களுக்குதான் பெருமை... தள்ளுபடிங்கிற விசயத்தை மறந்துட்டு லோன் வாங்குங்க.. கட்டுங்க.. திருப்பி வாங்குங்க.. நான் எவ்வளவு வேணா தாரேன்...
கண்டிப்பா நீங்க அந்த டிராக்டர் லோனை அடுத்த வாரத்துகுள்ளே கட்டப் பாருங்க...”


என்று சிரித்தப்படியே சொல்லி விட்டு எழுந்து சாப்பிட கிளம்பினார் மேனஜர்.
அப்ப நான் வரேன்யா...” என்று ஒரு கும்பிடு போட்டுட்டு வெளிய வந்தார் அண்ணாதுரை..
வெளியே வெயிலில் கண்ணு கூசியது. மேனஜர் சொன்னது எதோ ஒரளவு உறுத்தியது.

அடுத்த நாளே மனைவி நகை, மருமகள் நகை பேங்குல கொண்டு அடகு வச்சு டிராக்டர் லோனை அடைத்தார். மனசு ரொம்ப நிம்மதியாயிருந்தது.

மூக்கன் மறுபடியும் அண்ணாதுரையை பார்ர்க வந்திருந்தான். இப்பவாது கோபம் தணிஞ்சுருக்கான்னு பார்த்துட்டு பையன் படிப்பு விசயமா கேட்கலாமுன்னு வந்திருந்தான்.

ஐயா... எம் பையன் விசயமா.. “ என்று இழுத்தான்.
என்னல இழுத்துட்டு நிக்குற.. ஓடு உம்பையனை கூட்டிட்டு வா... “ என்று சத்தம் போட..
ஒரே ஓட்டம் ஓடி பையனை இழுத்துட்டு வந்துட்டான்.
வாடா.. “ என்று தன் வண்டியின் பின்னால் எற்றிக்கொண்டு எஜுகேசன லோனு விசயமா மேனஜரைப் பார்க்க பேங்குக்கு கிளம்பினார் அண்ணாதுரை.
நம்ம பையன் வாழ்க்கை இனிமேல் உருப்பட்டுரும்..” என்று கண்கலங்க பார்த்துக்கொண்டிருநதான் மூக்கன். இப்போது காத்து பலமா அடித்தது. ஆனால் தூண்டு கீழ விழவில்லை. பலமா புடித்துகொண்டான்.



--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி


0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment