ஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்

2012-01-18

| | |
 (  அலிப் முதல் லாம் மீம் வரை  )
இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போன்று நெய்தல் வாழ்க்கையை குறிக்கும் நாவல்களும் நம்மில் சேர்ந்துக் கொண்டே இருக்கிறது. கடற்புரத்தில், சிப்பியின் வயிற்றில் முத்து, செம்மீன், ஆழி சூழ் உலகு, கொற்கை, புயலிலே ஒரு தோணி, துறைமுகம், கன்னி அந்த வகையில் ஒரு கடலோர கிராமத்தின் கதையும் சேரும்.

இந்த நாவல் கடற்கரை மக்களைப் பற்றியவை அல்ல. மாறாக கடற்கரை ஒரத்தில் வாழும் ஒரு இஸ்லாமிய வாழ்க்கையை தோப்பில் முகமுது மீரான் கூறியுள்ளார். இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த முதல் இஸ்லாமிய நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. அது கூட அந்த அளவுக்கு ஆழமாக பதியவில்லை என்பது கடலோர கிராமத்தின் கதையை படித்தவுடன் தெரிந்தது. இந்நாவலில் உள்ள மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இயல்பாக நம் முன்னால் நடமாடுகின்றனர்.

நாவலில் ஒரு கெட்டவன் தான் கதாநாயகன். அவனைச்சுற்றியே கதை நடக்கிறது. வடக்கு வீட்டு அகமதுகண்ணு முதலாளி என்பது அவனது பெயர். அவனது முதலாளித்துவம் அந்த கிராமத்தையே அடக்கி இருக்கிறது. கதை ஆரம்பிக்கும்போதே முதல் உலகப்போர் முடிவில் ஆரம்பிப்பதாக கூறி அதன் காலத்தை உணர்த்தாமல் உணர்த்தியிருப்பார் தோப்பில்.
ஊரில் கடல் மட்டுமல்ல, மள மளவென்று ஒடிவரும் ஆறும் ஒரு கதாபாத்திரம். அதன் வர்ணனைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

ஊரை அதிகாரம் செலுத்தும் முதலாளி வடக்கு வீட்டு அகமதுகண்ணு, அவரது வேலையாள் அவுக்கார், சிறு வயதிலே விதவையாகி முதலாளி வீட்டிலே வாழும் முதலாளியின் தங்கை பாத்திமா, அவளது மகன் பரீது, பரீதுவின் மேல் உயிரையே வைத்திருக்கும் முதலாளியின் மகள் ஆயிஷா. மேலும் முதலாளியியை தனது வறுமையினுடையே எதிர்க்கும் மஹ்மூது. பள்ளிக்கூட வாத்தியாராக வெளியூரிலிருந்து வரும் மெக்யூப்கான், அவனது மனைவி நூர்ஜகான் , கள்ளிகோட்டையிலிருந்து ஊருக்கு வரும் மதப்போதகர் தங்ஙள், சுக்கு கடை உசேன்பிள்ளை, பள்ளிவாசலின் வேலைக்காரன் அசனார் லெப்பை என நாவலில் குறைந்த கதாபாத்திரங்கள் ஆனாலும் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராமம் பழைய மதச்சடங்குகளாலும் மூட நம்பிக்கைகளிலும் ஆற்றில் மூழ்கி கிடக்கும் கூலாங்கல்லைப் போன்று மூழ்கி கிடக்கிறது.  அக்கிராமத்திற்கு அரசாங்கம் அமைத்து தரும் பள்ளிக்கூடத்திற்கும் இடம் கொடுக்காமல் பள்ளியையே எதிர்க்கிறார்கள். காரணம் அது காபிர்களின் கூடமாம். காபிர்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர். ஆனாலும் துணிந்து பள்ளிக்கு இடம் கொடுக்கும் எழை மஹ்மது நாவலில் உயர்ந்து நிற்கிறான்.  தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த  இடத்தையே பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்டு தனது மகள் திருமணம் எப்படியாவது நடக்கும் என்று அலையும் மஹ்மது நம்பிக்கையின் அடையாளம். தோப்பிலின் வர்ண்ணைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் .
"மேற்கூரையை முட்டி நிற்கும் மூத்த மகள் " என்ற ஒரே வார்த்தையிலே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.
ஆசிரியராக வந்து அல்லல் படும் மெக்யூப்கான் வாகை சூட வா விமலின் கதாபாத்திரத்தின் மூலம்.  எந்த பிரச்சினை வந்தாலும், தனது சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு செயல்படும் மெக்யூப்கான் மனதில் நிற்கிறார்.
பரீதுக்கும் ஆயிஷாவுக்கான காதல் தொடர்பான வரியில் இளமை கொட்டும். ஆயிஷாவுக்கு பெரிய செல்வந்தர் மாப்பிளை பார்த்து கட்டிகுடுத்துவிடுவார் முதலாளி. அங்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினையால் அங்கிருந்து தனது வீட்டிலே வந்து இருந்துவிடுவாள் ஆயிஷா.. தனது காதல் பிரிந்து மட்டுமல்லாமல் இப்போது ஆயிஷாவுக்கு வாழாமல் இங்கிருக்கிறாளே என்ற கவலையில் தாடியில் அலைவான் பரீது.
ஒரு நாள் ஆயிஷா அறையில் தனித்திருக்க, பரீது ஆயிஷா அறைக்கு சென்று
" ஆயிஷா...!!" மெல்லிய குரலில்
"யாரு.." அதனினும் மெல்லிய குரலில்
"நாந்தான்.."
இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை நோக்கினர்.
"மச்சான் தாடி எடுக்காதது ஏன்..? " ஆயிஷா மவுனத்தை உடைத்தாள்.
"நீ உன் மாப்ளே வீட்டுக்கு போகாது ஏன்..?"
"அது ஒரு கதை.."
"அந்த தொடர்ச்சியிலே உள்ள கதைதான் இது.."
என ஒவ்வொரு வசனத்திலும் காதலும் அதன் பிரிவின் வலியும் கொப்பளிக்கும்..  ஆயிஷா கதாபாத்திரத்தை நான் ஈரான் திரைப்பட நாயகி Golshifteh Farhani  யை உருவகம் செய்துக் கொண்டேன்.

மதப்போதகர் என்ற பெயரில் வந்து அவர் செய்யும் செயல்கள் இஸ்லாம் சமுதாயத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தில் அவர்கள் செய்யும் சேட்டைகளை அவிழ்த்து காட்டியிருப்பார்.
அகமது கண்ணு முதலாளியின் மிரட்லும், உருட்டலும் பதிவுசெய்யப்பட்ட அதேவேளையில் தன்னை விட்டு எல்லாரும் பிரிந்துசென்று பைத்தியமாகிவிடும் முதலாளியின்  வீழ்ச்சியும் எடுத்துகாட்டியிருப்பது நாவலின் இன்னொரு பக்க அடர்த்தி.

நாவலின் வட்டார மொழி இன்னொரு சிறப்பு. தமிழும் மலையாளமும்  கலந்த தமிழ். ஐஸ்கீரிமில் தேன் கலந்த மொழி.இஸ்லாமிய சமூகம்  இறுகிப்போன  ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயைத் தமிழில் உடைத்தெறிந்த நாவல்.
மொத்தத்தில் நாவல் படித்தவுடன் ஒரு அழகிய ஈரான் திரைப்படம் பார்த்த திருப்தி.
1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சித்திரவீதிக்காரன் said...

தோப்பில் முகமது மீரானின் கடலோர கிராமத்தின் கதை நல்ல நாவல். அதைக் குறித்த தங்கள் பதிவு நன்று. ஜெயமோகனின் கொற்றவை வாசித்துப் பாருங்கள். அதிலும் நெய்தல் நிலம் குறித்து நிறைய எழுதியிருக்கிறார்.

Post a Comment