தமிழரைத் தேடி நூல் வாசிப்பு

2022-03-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

 



நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பாலம் புத்தக நிலையத்தில் தற்செயலாக கண்ணில் பட்டது எழுத்தாளர் தங்கவேல் எழுதிய " மீண்டும் ஆரியரைத் தேடி"  புத்தகம்.  நான் அப்பொழுது மனிதர்கள் இடப்பெயர்வு பற்றி  வாசித்தும், ஆராய்ந்தும் கொண்டிருந்தேன்.  தொல்லியல், மொழியியல் மட்டுமல்லாமல் DNA ஆராய்ச்சி மூலம் மனிதக்கூட்டத்தின் இடப்பெயர்ச்சிகள், இனக்கலப்புகள் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என தீவிரமாக தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கட்டத்தில் நாமும் DNA Test எடுத்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து இந்தியாவிலே ஒரு கம்பெனியில் டெஸ்ட் எடுத்தேன். முடிவுகள் ஆச்சர்யமாக இருந்தது.


இரத்த வகைப் போல மரபணுவில் Haplogroup என்ற வகை உண்டு. ஆண் வழித் தொடர்புகளை  YDNA மூலமாகவும், பெண் வழித் தொடர்புகளை மைட்டோகான்ரியா mtDNA வழியாகவும் கண்டறியலாம். இண்டுக்கும் Haplogroupகள் உண்டு.  


எல்லா மனித இனத்தையும் இந்த வகைக்குள் அடக்கிடலாம். ஒவ்வொரு வகையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பல பகுதியில் மனிதர்களிடையே மரபணு பிறழ்வு ( Mutation ) மூலம் தோன்றியது. தமிழில் அவ்வளாக மரபணு ஆராய்ச்சி பற்றி எழுதாத சுழலில் " மீண்டும் ஆரியரைத் தேடி " புத்தகத்தில் இடம்பெற்றது ஆச்சர்யமளித்தது. மொத்தப் புத்தகம் அதைவிட புதிய தகவலை, வாசலை திறந்து வைத்தது.


ஆரியர்களின் வருகைக்கு பின்புதான் இந்திய துணைக்கண்ட வரலாறு ஆரம்பிக்கப்பட்டது என்ற வட இந்திய அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் கருத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்டதுதான் இப்புத்தகம். 


உண்மையில் ஆரியர் யார்?? அவர்களின் ஐரோப்பிய மூலத்திற்கு என்ன காரணம்? நார்டிக் இனத்தினர், அல்பைன் ஆரிமினாய்டு இனத்தினருக்கும் ஆரியருக்கும் உள்ள  தொடர்பு என்ன? மிட்டானி நாகரிம், ஹரியன் பண்பாடு, அனோடாலியா பண்பாடு, சுமேரிய நாகரிகம் என்று ஐரோப்பிய, மத்திய கிழக்கு வரலாற்றை ஆராய்ந்து எழுதியிருப்பார். 


இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் உண்மையான ஆரியர்களா? கருப்பு சிவப்பு பண்பாடு சிந்து சமவெளியில் மற்றும் தென்னிந்தியாவில் மட்டும் ஏன் கிடைக்கிறது? மகாபாரதம், ராமயாணம், வேதங்கள் உண்மையிலே ஆரியர்களால் படைக்கப்பட்டதா? ரிஷிக்கள் உண்மையில் ஆரியர்கள்தானா?? என ஆராய்ச்சி நூல் போல் இல்லாமல் திரில்லர் நாவல் போல் விரிந்திருக்கும். தமிழின் மிக முக்கிய ஆராய்ச்சி நூல் இது. 



தற்பொழுது புதிதாக வெளிவந்திருக்கும்

" தமிழரைத் தேடி" எழுத்தாளர் தங்கவேலின் அடுத்த  நூல். 

முதல் நூல் ஆரியரின் மூலத்தை தேடியவர், இதில் தமிழரின் ஆதி மூலத்தை தேடுகிறார். மிக முக்கியமாக இந்நூல் தொல்லியல், மொழியியல், மானுடவியல், மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரின் வரலாறுகள் யூகங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட சுழலில் உண்மையான அறிவியல் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். 


தமிழரின் தோற்றுவாய் எங்கே ஆரம்பிக்கப்பட்டது?? தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழியா? ஆரியருக்கும் தமிழருக்கும் உள்ள மரபணு வேற்றுமையில் ஒற்றுமை, சடங்குகளின் வரலாறு, மொழியில் பின்புலத்தில் ஆராய்ச்சி,  இலக்கியச் சான்று, கருப்பு சிவப்பு பண்பாடு, பெருங்கற்கால பண்பாட்டு போர்க்குடிகள்,  இரும்பைதேடிய வணிக குழுக்கள்,  மத்திய தரைக்கடல் நாடுகளுடன் வாணிகம்,மினோயன் நாகரிகத்தின் தொடர்புகள், ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளுக்கு பின் உள்ள வரலாறுகள் என பத்தாயிரம் வருட வரலாற்றை தரவுகளுடன் நூல் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.


தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்திற்குரிய காரணக் கண்ணி இப்புத்தகத்தில் உள்ளது.


 ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டின் மூலமே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது  என்று அழுத்தமாக பல தகவல்களிம் மூலம் சொல்லுகிறார்.


முக்கியமான வரலாற்றாய்வு நூலாக தமிழரைத் தேடி பரிணமிக்கும்.