ஈரோடு புத்தகக் கண்காட்சி - 2015

2015-08-03

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்கொஞ்ச நாட்களாக மொழி பெயர்ப்பு நாவல்கள் மேல் அதீத ஈடுபாடு, நிறைய மொழிப்பெயர்ப்பு வாசித்திருந்தும் மிச்சமுள்ள நல்ல மொழிப்பெயர்ப்புக்களை வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்துதது. கடந்த இரு மாதங்களில் வாசித்த பாவ்லோ கொய்லாவின் பதினொரு நிமிடங்களும், ஹோமரின் ஒடிஸியும் அதற்கு முக்கிய காரணம். எந்த முன் ஏற்பாடு இல்லாமல்தான் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். ஓநாய் குலச்சின்னம் நாவல் மட்டும் கிடைக்கவில்லை. மற்றவை நிறையவே பொறுக்கிவிட்டேன்.
நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடமி குறைந்த விலையில் நிறைய புத்தகங்களை அளித்தார்கள். கொஞ்சம் சுற்றுச்சூழல் சார்ந்த புதினங்களை வாசிக்காலம் என்று நினைத்திருந்தேன். அதற்காக காடோடி, உப்புவேலி போன்ற நாவல்களை வாங்கினேன். இப்பொழுது ஒவ்வொன்றாக எடுத்துப்பார்க்கும் போது அதிகமாகத்தான் வாங்கியிருக்கோம் என்று தோன்றுகிறது. வாங்கினால் போதாது வாசிக்கனும். கண்டிப்பா வாசிப்பேன். நேரடி தமிழ்ப்படைப்பு கொஞ்சம் குறைவுதான். முடிந்தவகையில் நல்ல collectionஐ அள்ளியிருக்கிறேன்.

வாங்கியவை இதோ

சாகித்ய அகாடமியில்

ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய( தமிழில் குமாரசாமி )
அபராஜிதா- விபூதிபூஷண் ( தமிழில் திலகவதி )
சிதம்பர ரகசியம் - பூரணசந்திர தேஜஸ்வி ( தமிழில் கிருஷ்ணசாமி )
சாரஸ்வதக்கனவு - கோபால கிருஷ்ண பாய் ( தமிழில் இறையடியான் )-
பூமி - ஆஷா பகே( தமிழில் ராஜாராம்)
தட்டகம் - கோவிலன் ( தமிழில் நிர்மாலயா )

நேஷனல் புக் டிரஸ்டில்

மங்கியதோர் நிலவினிலே- குர்தயாள் சிங்க் ( தமிழில் ராஜீ)
கங்கவ்வா கங்கா மாதா - சங்கர் மோகாசி புணேகர்  ( தமிழில்  வெங்கட்ராம் )
கங்கைத்தாய் - ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா ( தமிழில் சரஸ்வதி ராம்னாத்)
வங்கச்சிறுக்கதைகள் - அருண்குமார் முகோபாத்தியாய் ( தமிழில் கிருஷ்ணமூர்த்தி )
வினை விதைத்தவன் வினையறுப்பான் - எம்.எஸ் புட்டண்ணா
ஏமாற்றப்பட்ட தம்பி - பலிவாடா காந்தாராவ் ( தமிழில் பாலசுப்பிரமணியன் )
கவிதாலயம் - ஜீலானி பானு ( தமிழில் முக்தார் )
உர்துக்கதைகள் - ( தமிழில் வீழி நாதன் )
ராதையுமில்லை ருக்குமிணியில்லை - அமிருதா பிரீதம்( தமிழில் சரஸ்வதி ராம்னாத்)

காலச்சுவடு பதிப்பகத்தில்

தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் மார்க்கேஸ் ( தமிழில் சுகுமாரன் )
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துக்கோபாலன் ( தமிழில் குளச்சல் மு.யூசப் )
என் பெயர் சிவப்பு - ஒரான் பாமுக் ( தமிழில் ஜி.குப்புசாமி )

மேலும்

மௌனவசந்தம் - ரெய்ச்சல் கார்சன் ( தமிழில் வின்செண்ட்) - எதிர்வெளியீடு
பிரான்ஸிஸ் இட்டிக்கோரா- ட்டி.டி.ராமகிருஷ்ணன் ( தமிழில் குறிஞ்சி வேள் )- உயிர்மை பதிப்பகம்
ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி( தமிழில் எத்திராஜீலு)-  சிந்தன் புக்ஸ்
எண்ணும் மனிதன் - மல்பா தஹான் ( தமிழில் கயல்விழி )- அகல் பதிப்பகம்
உப்புவேலி - ராய் மாக்ஸம் ( தமிழி சிறில் அலெக்ஸ் )- எழுத்து பதிப்பகம்
எங்கெத- இமயம் - க்ரியா பதிப்பகம்
விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் - சி.மோகன் - சந்தியா பதிப்பகம்
சயாம் மரண ரயில் - சண்முகம் - தமிழோசை பதிப்பகம்
காடோடி - நக்கீரன் - அடையாளம் பதிப்பகம்.

பி.கு : ஈரோடு புத்தகக்கண்காட்சி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.ஜோ.டீ.குரூஸ் -- உவரியில் சந்தித்த அனுபவம்

2015-03-10

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

ஜோ.டீ.குருஸ் அவர்களுக்கு கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைத்த அன்று பேஸ்புக்கில் எழுதியது. மீள்பதிவு..

2011 ஏப்ரல் என்று
நினைக்கிறேன். ஊருக்கு சென்றிருக்கும்பொழுது நானும் நண்பர் சுப்பையாவும்
எழுத்தாளர் வண்ணதாசனை பார்க்க சென்றிருந்தோம். நான் அப்பொழுதுதான் ஆழி
சூழ் உலகு நாவலை வாசித்து முடித்திருந்தேன். ஒரு பிரமாண்ட வாசிப்பின்
சுவையை அந் நாவல் எனக்குக்கு அளித்திருந்தது. நான் அறிந்த  பரதவர்
இனத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாக எந்த சமரசமும் இல்லாமல் அவர்களின்
கலாச்சாரத்தையும் கடலுக்கும் கரைக்குமான முரண்பட்ட வாழ்க்கையையும் நெல்லை
மாவட்ட உவரி கிராமத்தை கதைக்களமாகக்கொண்டு வரலாற்றின் தகவலோடும்  நாவல்
படைக்கப்பட்டிருக்கும். வண்ணதாசனோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது பேச்சு
ஆழி சூழ் உலகு பற்றி வந்ததது. வண்ணதாசன் ஆழி சூழ் உலகு நாவலை விட  கொற்கை
தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். கொற்கை அப்பொழுது நான்
வாசித்திருக்கவில்லை. அவர்தான் இந்த ஈஸ்டர் லீவிற்கு தன் சொந்த
கிராமத்திற்கு ஜோ.டி.குரூஸ் வந்திருக்கிறார் என்றும் முடிந்தால் சென்று
பார்த்துவிட்டு வாருங்கள், அவ்வளவு அற்புதமான மனிதர் என்றார். அடுத்த
நாள் ஏதோ ஒரு முடிவில் நானும் சுப்பையாவும் பாளையங்கோட்டையில்
திசையன்விளைக்கு பஸ் ஏறினோம். உவரி அந்தோணியார் கோவில் மிக பிரபலமானது.
அவரை பார்க்கமுடியவில்லை என்றாலும் நாவலில் வரும் அந்தக்கடற்கரையையும்
கோவிலையும் தெருக்களையுமாவது பார்த்துட்டு வருவோம் என்று முடிவுடன்
கிளம்பினோம். திசையன்விளையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
உவரிக்கு டக்கர் பயணம் சுவாரஸ்யாமாக இருந்தது. ஏப்ரல் மாத வெயிலுக்கு
தூரத்தில் இருந்தது வரும் ஈரக்கடற்காற்று ரம்மியமாக இருந்தது. உவரியில்
இறங்கி கடற்மண்ணில் நடக்கும்பொழுது இனம்புரியாத சந்தோசம். நாவலின்
பக்கங்களில் வாசித்து பரசவமடைந்த பிரதேசங்களை நேரில் பார்க்கும்பொழுது
எப்பொழுதும் எனக்கு சந்தோசம்தான். வண்ண நிலவனின் பாளையங்கோட்டை வீதிகள்,
கண்மணி குணசேகரனின் விருந்தாச்சலத்தையும், இமயத்தின் கோவேறு கழுதை
நாவலின் கழுதூர் கிரமாமும் அப்படித்தான். எப்பொழுதும் ஈர்ப்பாக
இருக்கும்.
அப்படி இப்படி விசாரித்து அவர் வீட்டை கண்டடைந்தோம். வீட்டுக்கதவை
தட்டியதும் யாரென்று கேட்பவரிடம் நாங்கள் வாசகர் என்று சொல்வதில் ஒரு
பெருமை இருக்கத்தான் செய்தது. கதவை திறந்தது அவரின் தாய். நாங்கள் எங்களை
அறிமுகப்படுத்தியது உள்ளே அழைத்து உட்கார செய்தார்கள். அங்கு அவரின்
மூத்த அக்கா தேன்மொழி டீச்சரும் இருந்தார்கள். அவர் வீட்டில் இல்லை. ஒரு
படபடப்பாக இருந்த எங்களுக்கு தேன்மொழி டீச்சரின் பேச்சுதான் எங்களை
சகஜநிலைக்கு திரும்ப வைத்தது. எனது வாசிப்பின் அனுபவத்தை சொல்லி
முடித்ததும் தேன்மொழி டீச்சரின் அற்புதமான பேச்சு ஆரம்பித்தது. தன்
தம்பியின் பால்ய வரலாற்றில் ஆரம்பித்து சொல்லமுற்படாத அவர்களின் குடும்ப
ரகசிய கதைகளின் வழியாக நாவல் வந்ததும் அவர்களின் சமூகமே கொடுத்த
நெருக்கடிகளையும் சிரிப்பும் பெருமிதமும் கலந்து ஒரு தேர்ந்தேடுத்த
கதைச்சொல்லிப்போல் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே சென்றார். ஒரு மணி நேரம்
எப்படி போனது என்று எங்களுக்கே தெரியவில்லை. மொழி லாவகம் அவர்களுக்கு
இயல்பிலே அழகாக அமைந்திருந்ததுப்போல. இவர் நாவல் எழுதினால் ஜோ.டீ.குரூஸை
விட காத்திரமாக ஒரு படைப்பை படைக்கலாம். கொஞ்ச நேரம் கழிந்ததும் வெளிய
சென்றிருந்த ஜோ.டீ.குரூஸ் தன் குடும்பத்தினரோடு வந்தார். அவருடைய அக்கா
எங்களை அறிமுகப்படுத்த ஒரு கடற்கரை கிராமத்தான் உடல்மொழியிலே எங்களை
வரவேற்றார். பேச்சிலும் அப்படித்தான். தன் தாயை " ஏய் ஆத்தா, இங்க
பார்த்தியா.. பெரிய புக்க எழுதிட்டன்னு சொன்ன.. இப்ப பார்த்தியா என்ன
பார்க்க வந்திருக்காங்க.." என கேலியோடு " சொல்லுங்கய்யா..." என்றார்
வாஞ்சையாக.
நாவல் அனுபவத்தை நாங்கள் தெரிவிக்க எந்த வியப்பும் பெருமையும் கொள்ளாமல்
இயல்பாக எங்கள் பேச்சை கவனித்தார். மிக பெருமை அவரை வெட்கப்படவே வைத்தது.
நாவல் பற்றி நாங்கள் கேட்க அவர் பேச ஆரம்பித்தார்.  நான் ஒண்னும்
இலக்கியவாதியெல்லாம் கிடையாது, நான் எழுத வந்த விபத்துதான். தமிழினி
வசந்தகுமாரின் முயற்சியினாலே இது சாத்தியமாச்சு என்றார். ஆழி சூழ் உலகு
நாவல் ஒரு மாத காலத்தில் எழுதிமுடித்திருக்கிறார். இந்த நாவலின் கதை நான்
பார்த்து, கேட்டு, வியந்து இக்கிராமத்தின் உண்மைக்கதை என்றும், நாவலின்
கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை மாந்தார்கள்.தன் தாய் ஒரு கதாபாத்திரம்,
தந்தை, தாத்தா என அனைவரும். படித்து வியந்த கதாபாத்திரத்தை நேரில்
தரிசித்தோம். நாவலில் எஸ்கலின் என்ற கதாபாத்திரமே அவரின் தாய். நாவலின்
பிரதான மனிதன் தொம்மந்திரையே அவரின் தாத்தா. நான் ஒவ்வொரு
கதாபாத்திரத்தின் பேரைக்கேட்க கேட்க அவர் யார் யாரென்று சொல்லிக்கொண்டே
வந்தார். இருப்பிடங்களைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். இந்த
தெருவில்தான்  கதையின் முடிவு பெரும் சண்டையில் முடியும் என்றார். தான்
சார்ந்திருக்கும் சமூகத்தின் பெருமைகளைப்பற்றி பேசாமல் அவர்களின் ஒழுக்க
கேடுகளையும் திருச்சபையை விமர்சனம் செய்ததினாலும் ஊரே விட்டு  விலக்கி
வைக்கப்பட்டிருக்கிறார். மீனவசமுதாயத்தின் வாழ்வினை மற்ற நில மக்களும்
தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும், குலப்பெருமை பேசி
அழிந்துக்கொண்டிருக்கும் பரதவ சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்குமே ஆழி
சூழ் உலகு நாவல் படைக்கப்பட்டிருப்பதாக கூறினார். நான் அப்பொழுது கொற்கை
நாவல் வாசித்திருக்கவில்லை. கொற்கை நாவல் ஐந்தாண்டு உழைப்பில் பெரும்
ஆராய்ச்சிக்கிடையே உருவாக்கியிருக்கிறார். எல்லாரும் அவரவர்களின் சமூக
பிரதிநிதி, நான் என் சமூகத்தை மாற்ற முயல்கிறேன். மாற்றம் நிகழும்
கண்டிப்பா நிகழும் என்ற நம்பிக்கை மட்டுமே அவரின் பேச்சின் முழுவதும்
இருந்தது. சுமார் மூன்று மணி நேர சந்திப்பின் பின்பு கிளம்ப மனம்
இல்லாமல் விடைபெற்றோம். எந்த ஒப்பனைகளும் அற்ற ஒர் இயல்பான கலைஞனை
சந்தித்த சந்தோசம் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. சமூகப்போராளிகள்
இலக்கணத்துக்கு மறு வடிவம் கொடுத்திருக்கிறார் ஜோ.டீ.குரூஸ். மொழியையை
எந்த சமூகம் தனதாக்கி கொள்கிறதோ அச்சமூகமே முன்னேற்றுப்பாதையில் செல்லும்
என்பதே விதி. இந்த சாகித்ய விருதின் மூலம் ஜோ.டீ.குரூஸ் தன் சமூகத்தை தலை
நிமிர வைத்துள்ளார். கடற்கரைச்சமூகங்களுக்கு பெருமைத்தேடி
தந்திருக்கிறார். அவரின் ஆசைப்படி அவரின் சமூக மெல்ல மாறும். மொழியின்
பிடியில் அவர்களும் கரை ஒதுங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவருக்கு
வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். வண்ணதாசன் சொல்லியதுப்போல அவர்
அற்புதமான மனிதர் மட்டுமல்ல, அதிசயமான மனிதர்...!!

- ஜெபா

அக்னி நதி நாவல்

2015-02-18

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

குர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி என்னும் உருது மொழிபெயர்ப்பு நாவலை படித்து முடித்தேன். காலமென்னும் நீண்ட நதியின் இருபது நூற்றாண்டு வாழ்க்கையை தான் கதையின் மையம். மதமென்னும் மாயையில் பேரரசுகள் சரிவையும், மனித ஆன்மாக்களின் நுட்பமான மனதையும் திறந்து காட்டுகிறது இந்நாவல்.
கொளதம நீலம்பாரன் என்னும் சிற்ப கலைஞனின் ஆசிரமக்கல்வியில் கதை ஆரம்பிக்கிறது.மிக நீண்ட சரயு நதியை நீந்தி வருகிறான்.ஆசிரமக்கல்வி பயில்வோர் யாரும் படகில் ஏற கூடாது. காலமோ கிமு ஒன்றாம் நுற்றாண்டு, புத்த மதம் ஆழமாக பரவிவரும் காலக்கட்டம். எங்கும் புத்த பிக்குகளாக மத மாற்றம் நடந்துக்கொண்டே இருக்கிறது. கொளதமனுக்கோ புத்த கோட்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் கலையின் உச்ச அடைய வேண்டும் கூடவே சம்பா என்னும் அரச பணிப்பெண்ணின் மீது மையல். குப்த பேரரசு மகத நாட்டு பாடலிபுத்திரம் என்னும் பாட்னாவை அபகரிக்க வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. கொளதமனோ எந்த தத்துவ நிலையை எதிர்த்தானோ அத்தத்துவ நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆட்சியின் பிடிக்கும் அதிகாரத்தின் போட்டியில் சாமானியனான கொளதமன் கரைந்து போகிறான்.கூடவே அவனுடைய காதலும்..
கால வெள்ளத்தில் நதி வேகமாக ஓடுகிறது. மீண்டும் அடுத்த கதை, அதே நதிக்கரையில் ஆரம்பம். காலமோ பதினாறாம் நுற்றாண்டு. கமாலுதீன் என்னும் இளைஞன். சுல்தான் சாம்ராஜ்ஜியத்தின் பணியாளன். பழமையான நூல்களை தேடி பயணத்தில் இருப்பவன். அவனுக்கு பாரத தேசம் புது வியப்பை தருகிறது. தன் தாய் நாடு பாக்தாத்தை விட இத்தேசம் அழகானது என்று கருத்துடையவன். கங்கை நதிக்கரையின் போக்கிலே இவன் பயணம் அமைகிறது. மீண்டும் மதத்தை புறந்தள்ளிவிட்டு ஆட்சி பிடிக்கும் அதிகாரம் உள் நுழைகிறது. மொகலாயர்கள் சுல்தான்களை வீழ்த்தி அதிகாரம் பெறுகிறார்கள். கமாலுதீன் மொகலாயர்களை எதிர்த்து போரிடுகிறான். போரினால்  வாழ்க்கை மாறுகிறது. நாடோடி இசையினை தேடி தேசமெங்கும் பயணிக்கிறான். காசியின் கங்கை கரையில் அலைகிறான். மீண்டும் நதியின் ஓட்டத்தில் கரைந்து போகிறான். கமாலுதீன் கதை நாவலின் அடர்த்தி பகுதிகள். தத்துவங்களும் விளக்கங்களுமாக நிறைந்தவை.  மீண்டும் ஒரு இளைஞன் வருகிறான், பெயர் சிரில் , காலமோ பதினெட்டாம் நூற்றாண்டு. கல்கத்தா கரையில் கதை நிகழ்கிறது. வியாபார செய்ய வந்த சிரில் ,அரசின் அங்கமாக மாறுகிறான். இவனும் கால வெள்ளத்தில் கரைந்து மீண்டும் கதை சுதந்திர இந்தியாவின் முன் காலகட்டத்தோடு முடிவடைகிறது.
காலம் முழுவதும் அதிகாரத்துக்கு மட்டுமே போட்டியும் சண்டையும், அமைதியாக ஒடிக்கொண்டிருக்கும் நதி அது பாட்டுக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது..காசி, பாட்னா,லக்னோ,அயோத்தி,கல்கத்தா,தில்லி போன்ற பழய இந்திய நகரங்களின் சித்திரங்கள் நாவலை படித்து முடித்தவுடன் நம்மில் இடம்பிடிக்கும். ஏராளமான வரலாற்று தகவலும் கதாமாந்தர்களின் ஆளுமையும் நாவலின் பலம்..
சொல்ல சொல்ல எவ்வளவோ இருக்கிறது மானுட வாழ்வியலைப்பற்றி. வரலாறு என்பது மீக நீண்ட நதியின் பயணம், நதியின் கசிவில் அவிழும் மனித வாழ்வின் கதைகள் ஏராளம். நதியில் மூழ்க மூழ்க மனசு நிறைகிறது. வாசிப்பின் முடிவில் வாசகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்திய மொழிகளில் மிக முக்கிய நாவல்.

அக்னி நதி
நேஸனல் புக் டிரஸ்ட்