நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவல்

2019-08-16

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவல்


மலையாள மொழியில் இயற்றப்பட்ட தமிழ் நாவல். மலையாளத்திலும் நாவல் பெயர் நிலம் பூத்து மலர்ந்த நாள் தான்.!

கதையின் களம் இரண்டாயிம் வருடம் முற்பட்ட சங்கக் காலம்.  தமிழ் நிலப்பரப்பு என்பது வங்கக்கடல் முதல் அரபிக்கடல் வரை பரவியிருந்த காலக்கட்டம் அது.  மலையாள மொழி தோன்றாத காலம். இன்றும் சமஸ்கிருதம் கலக்காத மலையாளம் தூய தமிழ்தானே..!!

வறுமையின் காரணமாக மன்னர்களிடம் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடலிசைந்து வெகுமதிப் பெற புறப்படும் பாணர் கூட்டத்தின் பயணக்கதையே இந்நாவல்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலத்தின் வழியே பயணப்படும் கதை அதன் சமூக பண்பாடுகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.  குறவர்கள், ஆயர்கள், உழவர்கள், பரதவர்கள், மறவர்கள், எய்னர்கள் என ஐவகை நில மக்களும் நாவலில் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.

பயணப்பட்ட பாணர் கூட்டம் சங்க காலப் புலவர்களான பரணர், கபிலருடன் உரையாடுகின்றனர். வேளிர் நில மன்னர் வேள் பாரியை சந்திக்கின்றனர்.
கதையில் அவ்வையும் வருகிறாள், அதியமான் மன்னனும் வருகிறான்.
நாவலின் பலமே சங்க கால மன்னர்களையும் புலவர்களையும் கதையின் மாந்தர்களாக உருவகப்படுத்தியதுதான்.
நாவலினுடே மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சதியினால் வீழ்த்தப்பட்ட வேளிர் மன்னர்களின் கதையும் சொல்லப்படுகிறது.

மேலும் பழங்குடி வாழ்க்கை முறை, நாட்டுபுற தெய்வங்கள், கூத்து, காதல், களவு என பழந்தமிழ் மரபு அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேள்பாரி மன்னன் வீழ்த்தப்படுவதும், நன்னன் மன்னனால் கொல்லப்படும் சிறுமி பின்னர் தொல் தெய்வமாக மாற்றப்படுவதும் நாவலின் சிறந்த
பகுதிகளாகும்.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் தமிழ் சங்க இலக்கியத்தின் மீது இருக்கும் மிகுந்த பற்றின் காரணமாகவே இந்நாவல் மிக பிரமாண்டக விரிந்து இருக்கிறது. கே.வி.ஜெயஸ்ரீ மூல மொழி சிதையாமல் சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளார்.
வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சங்கப்பாடல்களில் எத்தனையோ பாடல்களைப் பதிவு செய்த பாணர்களைப் பற்றிய சிறந்த நாவல்.