பாளையங்கோட்டை வவுசி மைதானம்

2013-12-11

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தை நான் முதன்முதலில் பார்த்தது மூன்றாவது படிக்கும்போதுதான் என்றுதான் நினைக்கிறேன். இதற்கும் நான் படித்த பள்ளி மைதானத்தின் அருகிலேதான் இருக்கிறது. ஒரு நாள் பள்ளி முடிந்ததும் ஒருவன் கத்தினான்
 " யோழ், வவுசி கிரவுண்டுல சூட்டிங்க நடக்குல.. சரத் வந்திருக்கானாம்...பார்க்க வாங்கல..."
"என்ன படம்ல... " என்று கேள்விக்கு பதில் கூறாமல் முருகன் கோவிலைத்தாண்டி பறந்துட்டான். அந்த பெயர் தெரியாத நண்பன் சரத்குமார் ரசிகன். அப்போது சரத்குமாருக்கும் கார்த்திக்கும்தான் எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும். நான் தனியா ஆளாக அரக்கு கலர் டவுசரோடு ஒடினேன். கையில் புத்தகப்பை வேற சுமையா இருந்துச்சு. அடிச்சு பிடிச்சு ஒடினேன். அந்த ரோடு பூராவும் ஜனக்கூட்டம்.  மைதானத்தின் நடுவில் பெரிய மேடைப்பந்தல் போட்டுருந்தார்கள். மைதானம், கேலரி முழுவதும் தலைகள் நிரம்பி வழிந்தது. நான் கூட்டத்தின் நடுவே புகுந்து மேடையருகே நின்றுக்கொண்டு அண்ணாந்துப்பார்த்தேன். மேடையில் விசு, நக்மா, ஊர்வசி, ஆனந்தராஜ், வெள்ளை வேட்டியில் சரத்குமார் நின்றுக்கொண்டிருந்தனர். சரத்குமார் மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க தீடிரென்று நெஞ்சில் யாரோ சூட , ரத்தம் வந்து சாய்ந்து விழ, நக்மா வந்து பிடிக்க, கூட்டம்  மிரண்டு ஒடுகிறார்கள். நானும் கீழே விழுந்து டவுசர் கிழிச்சு ஏறிக்குதித்து ரோட்டுக்கு வந்து மறுபடியும் மேடையை எட்டிப்பார்த்தேன். சரத்குமார் நக்மாவிடம் சிரிச்சு குலாவிட்டு இருக்காரு, ஊர்வசி கண்ணுல கிளிசிரின் போடுது. மறுபடியும் மைதானம் முழுவதும் கூட்டம் அதே மாதிரி நிக்குது. பக்கத்துல இருக்குற ஒருத்தன் சொல்றான் "சவத்து பயலுவ, இத எத்தன தடவதான் எடுப்பானுவோ..வேற வேல மயிரு இல்ல.. வால போலாம்.." நான் அந்த அண்ணனிடம் " என்ன படம்னே இது.." என்றேன். அவரு என்னை சட்டை செய்யாமல் நடையைக்கட்டினார். அடுத்த நாள் தந்தி பேப்பர்ல அரவிந்தன்னு படம் பேர் வந்துருந்துச்சு.
நான் மேடைக்கிட்டத்தான் நின்னுட்டு இருந்தேன். எப்படியும் படத்துல வருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். பின்னர் ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்க்கும்போதுதான் நான் அந்த காட்சியில் இல்லை என்று தெரிஞ்சது. டவுசர் கிழிஞ்சதுக்கு வீட்டுல அடிலாம் வாங்கினேன். எனக்கும் வவுசி கிரவுண்டுக்கும் முதன்முதலில் உருவான  நினைவு இதுதான்.
1966 ல் கட்டப்பட்டது வவுசி மைதானம். ஹாக்கி கிரவுண்ட் மாதிரியில் செவ்வகமாக இருக்கும். சுதந்திர தினத்துக்கு கலெக்டர் இங்கத்தான் கொடி ஏற்றுவார்.  இருபக்கமும் சேர்த்து ஆறு கேலரிகள் . இரு மைதானமாக இருக்கும். மைதானத்தின்  இன்னொரு பக்கத்தில் இப்பொழுது இறகு பந்து உள் தளம், உடற்பயிற்சி தளம், பள பளக்கும் வவுசி சிலை எல்லாம் வந்துட்டு. முன்னாடிலாம் கருப்பு வவுசி சிலை மட்டும்தான் காக்கா எச்சத்தோடு நிப்பாரு. சிலை மேல ஏறி நின்னுட்டு சிலை தலையை தடவிகிட்டு பயலுவ நிப்பார்கள். பெரிய கிரவுண்ட்ல மேட்ச்சுக்கு பிட்ச் கிடைக்கலன சின்ன கிரவுண்ட்டுக்குதான் வரனும். இங்க அடிக்கிற சிக்ஸ் எதிர்த்தாப்புல இருக்குற எல்ஐசி ஆபிஸுக்கு ஈசியா போகும். ஆஃப் சைட் அடிச்ச திருவனந்தபுரம் ரோட்டுல இருக்குற தேவி டீகடையின் கண்ணாடியை உடைக்கும். அதனால எப்பொழுதும் பெரிய மேட்ச்சுன்னா பெரிய கிரவுண்ட் பிட்ச் பிடிக்க பெரிய போட்டி நடக்கும். காலையில் பத்து மணிக்கு பெட் மேட்ச்சுன்னா ஏழு மணிக்குலாம் வந்து ஸ்டிக்க நடனும், ஒருத்தன் காவல் நிக்கனும். கிரவுண்ட் பக்கத்துலதான் சிவா வீடு. அங்கத்தான் ஸ்டிக், பேட், பால் எல்லாம் இருக்கும். நான் காலையிலேயே போய் ஸ்டிக் நட்டி , கூவை மாதிரி பிட்ச் காவலுக்கு கேலரியில் உட்கார்ந்திருந்த காலம்லாம் உண்டு.

வேற எந்த ஊரிலும் இந்த மாதிரி விளையாடுவார்களா என்று தெரியவில்லை, பாளையங்கோட்டை வவுசி கிரவுண்டில் மட்டும் விட்டா அவுட் என்று சொல் மிகவும் பிரபலம். பொதுவாக இரண்டு டீமுக்கு ஒவர் மேட்ச்னா மட்டும்தான் ஸ்டிக் நட்டு விளையாடுவோம்.  மத்தப்படி விட்டா அவுட்தான்.
விட்ட அவுட்னா பேட் கீழே வைத்து இரு பக்கத்திலும் கல் வைத்துவிடுவோம். இரு கல்லுக்கு நடுவில்தான் பேட்டிங்க். உடம்பில் பட்டாலும் அவுட், இரு கல்லுக்கும் நடுவில் பந்தை விட்டாலும் அவுட். ரன்லாம் ஒடி எடுக்க முடியாது, ஃபோர், சிக்ஸ் மட்டும்தான். ரொம்ப நல்லா இருக்கும். வெறிக்கொண்டு ஆடுவோம். இந்த மாதிரி விளையாடி பயிற்சி எடுத்ததினால் என்னவோ எந்த ஸ்டிக் மேட்ச் நடந்தாலும் ஒரு பந்தையும் உள்ளே விடாமல் ஆடுவார்கள் வவுசி மைதானத்தின் வீரர்கள். மைதானம் முழுவதும் குழு குழுவாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். பந்து எந்த மூலைக்கு போனாலும் " பாஸ், பால் " என்று கத்தினால் போதும் பந்து கிளீன் த்ரோவில் நம் கைக்கும் வரும்.

பௌலிங்க் போட்டு விளையாடுவதற்கு முன்பு த்ரோ மேட்ச்சில் நான் சிறந்த காட்டான். நல்ல சுத்துவேன். எல்லாம் பந்துகளும் பறக்கும். எல்லாரும் என்னை காட்டான் என்றுதான் சொல்லுவார்கள்.
எட்டாவது படிக்கும் வரை நேருஜி கிரவுண்டில் விளையாடுவோம். வவுசி கிரவுண்டில் இடம் இல்லனா இங்கத்தான் மேட்ச் நடக்கும். இது கிரவுண்ட் மாதிரி அமைப்பா இருக்காது. பாளையங்கோட்டை நகராட்சி அலுவலகம் நேருஜி கிரவுண்ட்க்கு பக்கத்துல இருக்கு. நல்ல மரம் நிழலா இருக்கும். தண்ணி குடிக்க கடை கடையா அலைய வேண்டாம். நகராட்சி சுவரைத்தாண்டி ஏறிக்குதித்து தண்ணி குடிச்சிட்டு வருவோம். அதுக்கு பின்னால் எங்கள் பள்ளி. மதியம் சாப்பிடறதுக்கும் இந்த நகராட்சி அலுவலகம்தான்.
புளிய மரமும், கொடுக்காபுளி மரம் அதிகமா நிக்கும். புளிப்பு சுவையுடன் கிரிக்கெட் விளையாடுவது தனிசுகம்.  இன்னொரு பக்கம் நூற்றாண்டு மண்டபம். அங்கேயும் சில நேரம் அடிக்கிற பந்து போயிரும். நூற்றாண்டு மண்டபம் 1870களில் கட்டப்பட்டதுன்னு நினைக்கிறேன். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கால்டுவேல் இப்படி சொன்னாராம் " தமிழ் நாட்டில் இருக்கிற மொத்தம் இருக்கிற கிறிஸ்துவர்களில் அறுபதுக்கு சதவீதம் பேர் தின்னேல்வேலி( திருநெல்வேலி ) மாவட்டத்தில் இருக்கிறார்கள். இன்னும் இது அதிகமாக வேண்டும் என்று" . நேருஜி கிரவுண்டில் இப்பொழுது அடிக்கடி கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றில் பாளையங்கோட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. இன்னும் பல இடுக்குகளில் ஒளிர்ந்திருக்கும் வரலாற்று நிகழ்வின் இடங்கள் பாளையங்கோட்டையில் நிறைய உண்டு. பொதுவாக பாளையங்கோட்டை கிறிஸ்துவ நகரம் என்று அழைத்தாலும் பல தாய் தெய்வ வழிபாட்டு எச்சங்கள் இன்றும் இருக்கிறது. தசரா விழாவிற்கு பாளையங்கோட்டை களைகட்டிரும். மைசூருக்கு அப்புறம் இங்கத்தான் தசரா பிரபலம். சுமார் பதினைந்து அம்மன் கோவில் சப்பரங்கள் பாளையங்கோட்டை நகரை அழகாக வலம் வந்து , சூரசம்ஹாரத்துடன் நிறைவேறும். மேலும் ஆயிர வருடங்களான வைணவக் கோயில் இருக்கிறது. கோபாலசாமி கோவில் என்று அதனை அழைப்போம். கோபாலசாமி கோவில் பக்கத்திலும் மைதானம் உண்டு. அங்கேயும் விளையாடுவோம். இன்னொரு மைதானம் அண்ணா ஸ்டேடியம். அங்கு விளையாட்டு வீரர்கள் விடுதி உண்டு. மேலும் இன்னொன்று கேம்பஸ் கிரவுண்ட். இது ஜான்ஸ் காலேஜ் எதிர்த்தாப்பில் இருக்கிறது. இங்கு வருடம் தோறும் பேட்ரியாட் டிராபி நடக்கும். காரட் பால் மேட்ச். இங்கு கேம்பஸ் டீம் ஒன்றுடன் நாங்கள் அடிக்கடி மேட்ச் விளையாடுவோம்.
இந்த கிரவுண்ட் இரு வரலாற்று நிகழ்வின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ளது. மைதானத்தின் மேற்புரம் மாவட்ட மியூசியம் இருக்கிறது. இங்குத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை சிறையில் அடைத்த இடம். ஆங்கிலேய காலக்கட்டத்தில் பழைய சிறைச்சாலை இது. பின்னர் பாளையங்கோட்டையின் தாலுகா அலுவலகமாக இருந்தது. பின்னர் மாவட்ட மியூசியமாக்கப்பட்டது.
இன்னொரு வரலாறு நிகழ்வு , கேம்பஸ் கிரவுண்டுக்கு எதிர்த்தாப்பில் இருக்கிறது கிளாரிந்தா ஆலயம். இங்குத்தான் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷஸ் துரை அவர்களின் கல்லறை அமைந்துள்ளது. இன்றும் இங்கிலாந்தில் இருந்து அவர்களின் வாரிசுகள் நினைவுதினத்துக்கு இங்கு வருகை புரிவர். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேம்பஸ் கிரவுண்டில் நடந்த ஒரு கொலை காரணமாக , கிரவுண்ட் மூடப்பட்டது. பாவம் பந்துக்கள் , அவைகளுக்கு பின்னாலும், முன்னாலும் உள்ள வரலாற்று இடத்துக்கு சென்று வர கொடுத்து வைக்கவில்லை.

2003ம் வருடம் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் " மார்ச் 10ல் நெல்லையில் சூரியன் 106.4"  என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தாமிரபரணி ஆத்துப்பாலம் அருகே, டவுன் மேம்பாலம் அருகே, நெல்லையப்பர் கோவில் அருகே, மார்க்கெட், சமாதானபுரம், பாளை பஸ்ஸ்டாண்டு என முக்கிய இடங்களில் அனைத்திலும் கட் அவுட் வைத்திருந்தனர். வவுசி கிரவுண்ட் அருகேயும் ஒரு கட் அவுட்.  " சித்திரையிலதான அக்னி வரும், மார்ச்லயே என்னல சூரியன் 106 ன்னு போட்டுருக்கான், ஒரு எழவும் புரிய மாட்டுக்குன்னு " நாங்க புலம்பிக்கிட்டு இருந்தோம். அதே நாளில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உலககோப்பை மேட்ச் ஒன்று இருந்துச்சு. அதுவா இருக்குமோ என்று கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாளையங்கோட்டையில் கடல் இல்லை , எனவே எங்களைப்பொறுத்த வரை வவுசி மைதானமே பீச். இரவு கூட்டம் கலை கட்டும். புது புது மனிதர்கள். "வீட்டுல கிடந்து என்னத்த பண்றது , அப்படியே செத்த நேரம் நடந்துட்டு வரலாம்லா " என்று தாத்தாவை கைத்தாங்கலா பிடித்து வரும் ராமசாமி கோவில் தெரு மாமி, தன் அக்கா குழந்தைகளையோ, அண்ணன் குழந்தைகளையோ நண்பர்களுடன் வரும் பெரிய அண்ணன்மார்கள், கல்யாணம் முடிந்த இளசுகள், ஊரே பார்த்துட்டு இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி கடலை போடும் லவ்வர்ஸ், தனிமை தீவிரமாகி தற்சமயம் பேச ஆள் இல்லாமல் வெற்று வெளியை பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்கள்,
அரட்டை அடிக்கும் நண்பர்கள், கடலை விற்கும் இள நரை பையன் என இரவில் சில பல கதாபாத்திரங்களால் மைதானம் கேலரி நிரம்பும். மைதானத்தில் இரவொளியில் கால்பந்து விளையடுவார்கள். நெல்லைக்கு  மார்ச் 10 சூரியன் 106.4 வந்தது. அதாவது சூரியன் எஃப் எம். அதே நாளில்தான் நான் வவுசி மைதானத்தில்  இரவு கால்பந்து விளையாடும்போது என் தாடை கிழிந்தது.
அன்று சூரியன் எஃப் எம் என்ற புதிர் அவிழ்ந்த நாள், இந்தியா இலங்கையை கிரிக்கெட் மேட்ச்சில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாள். மிகுந்த சந்தோசத்துடன் இரவு விளையாடிக்கொண்டிருந்தேன். வண்டி ஒட்டி பழகும் ஒருத்தரின் மேல் மோதி கீழே விழுந்தேன். தாடை தோல் சதை கிழிந்தது. சிவா வீட்டுக்கு ஒடினோம். அவங்க அக்கா சல்பனா பவுடர் போட்டுவிட்டார்கள். பின்னர் ஆஸ்பிட்டல் போனால் சல்பனா பவுடர் போட்டதுக்கு நாலு திட்டும்  நாலு தையல் போட்டார்கள். திட்டுக்கும் சேர்ந்து காசு வாங்கினார்கள். வீட்டில் பயங்கர கெடுபடி. விளையாட போக வேண்டாம் என்று. மைதானம் முழுவதும் செம்மண். வீட்டுக்கு தெரியாமல் விளையாடிவிட்டு சிவா வீட்டில் பைப் அடித்து நல்லா காலையும், செருப்பையும் கழுவிட்டுத்தான் வீட்டுக்கு போவேன். அதே வருடம் செப்டம்பர் 10 மறுபடியும் கால்பந்து விளையாடும்போது கீழே விழுந்து என் இடது கையை உடைத்தேன். இரு எலும்புகளும் உடைந்த சத்தம் கேட்டது. சிறிது ரத்தம் வழிந்து மைதானத்தில் சிதறியது. அந்த செம்மண் பூமியில் இரு தடவை என் செங்குருதியை வடித்தேன். கை சரியாகி ஆறு மாதம் கழித்து அதே கேலரியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். என் இடது கையை வைத்து பேட்டை தூக்க முடியாது. மறுபடியும் திரும்பி போய் கேலரியில் உட்காருவேன். மனம் உளைச்சாலா இருக்கும். தினமும் பயிற்சி எடுத்து முதன் முதலில் ஒரு பந்தை எதிர்க்கொண்டேன். பேட்டில் பந்து பட்டதும் கை வலித்தது. பேட்டை போட்டுவிட்டு கேலரியில் உட்கார்ந்துவிடுவேன். போராடி போராடி மறுபடியும் காட்டானாக மாறினேன். சில நேரம் என்னை அறியாமலே பேட் என் கையை விட்டு உருவிவிடும். இதனால் அருகில் ஃபீல்டிங்க் நிக்க பயப்படுவார்கள். பின்னர் எல்லாம் சரியானது. சிக்ஸ் பிபிஎல் கல்யாண மண்டத்துக்கும், ஈகிள் புக் செண்டருக்கும் பறந்தது. கிரிக்கெட் மட்டும் விளையாடவில்லை என்றால் என் கை கோணியிருக்கும். நிமிர்ந்ததுக்கு காரணம் கிரிக்கெட்தான்.

வவுசி மைதானத்தில் அடிக்கடி இந்திய அளவில் கபடி , கால்பந்து , ஹாக்கி மேட்சுகள் நடைபெறும். ஜனவரி மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கிடையே நடைபெறும் மகளிர் கபடி போட்டிகள் தென் மாவட்டம் முழுவதும் பிரபலம். நகர முழுதுமிருந்து வவுசி மைதானத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பார்கள்.  எல்லா மாநிலத்தில் இருந்தும் மகளிர் அணிகள் வரும். மின்னொளியில் போட்டி நடைபெறும். கேலரி முழுவதும் பல்லு தெரிய உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ரைட் போகும் போது கிரவுண்ட் முழுவதும் சத்தம் போடுவர். தமிழ் நாட்டு அணி விளையாடுவது என்றால்
அதிக சத்தம் வரும். போட்டி தொடங்குவதற்கு முன்பு விருந்தினருக்கு வீரர்கள் கை கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரையும் எண்ணையும் சேவியர்ஸ் பள்ளி வாத்தியார் கமெண்ட் கொடுப்பார். ரவி சாஸ்திரி லாம் தோத்துருவான். குரல் கம்பீரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். " நம்பர் ஒன், பூஜாஜாஜா....." என்று புனே டீம் ஒருத்தியை சொன்னதும் கேலரி முழுவதும் அசையும். ஆர்ப்பரிக்கும். அந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட். தமிழ் நாட்டு டீம் பொண்ணுங்கள் விளையாடும் போது கிண்டல் அதிகமாக வராது, வெளியூர் டீம் விளையாடும்போதுதான் அதிக கிண்டலும் ,சத்தமும். மேடைக்கும் பின்னால் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதை பார்க்க அதிக கூட்டம் நிக்கும். லூசான டவுசர் போட்டுருக்குற டீமை விட டைட்டாக டவுசர் போட்டுருக்கிற டீமுக்குதான் அதிக மௌசு.

வவுசி கிரவுண்டில் அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெற்ற சமயம். சீன முக அமைப்பைக் கொண்ட இருவர் தெற்கு பஜாரில் சுற்றிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் அவர்களிடம் தானாக சென்று பேசினான். அவன் ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறான். ஆங்கிலம் சரளமா வந்துச்சு. அவர்கள் மிசோரம் மாநில அணியைச்சேர்ந்தவர்கள். என்னையும் அவர்களுக்கு அறிமுகம் பண்ணினான். அவர்கள் எனக்கும் கைகொடுத்தனர். சிறு கண்கள். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தார்கள். மிசோரம் என்பது அப்பொழுது என்னைப்பொறுத்தவரை வேற நாடு. என் நண்பன் அவனுடைய பாக்கெட் டைரியில் அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குகிறான். அவர்களும் வெட்கப்பட்டுக்கொண்டே போட்டனர். நாங்கள் விடைபெற்று நடக்க ஆரம்பித்தோம். பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கு வந்த ராமசாமி கோவில் சப்பரத்தின் அருகே நின்று விபூதியை மாறி மாறி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள், ஒருவித நாணத்துடன். அவர்கள் விளையாடும்  ஆட்டங்களை ஒடிச்சென்று பார்ப்போம்.  இப்பொழுது அவர்கள் எப்படி, எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கையெழுத்து வாங்கின என் பால்ய நண்பனும் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அதன் பின்பு மிசோரம் என்ற வார்த்தை கேட்டாலே அந்த  சப்பர வெளிச்சத்தில் நாணத்துடன் கூடிய அந்த இரு முகங்கள் என் முன்னால் விரியும்.

***
கல்லூரிக்காலங்களில் அதிகம் வவுசி மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால் எங்கள் கனவுகளையும், ஏக்கங்களையும் மைதானத்தில் காற்றுடன் கலந்துவிடுவோம். நான், சிவா, மணி எல்லாரும் கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பிரச்சினையினாலும் " வாங்கல,  கிரவுண்டுக்கு போயிட்டு வருவோம் " என்ற வார்த்தை சொல்ல முடியாத நம்பிக்கை கொடுக்கும்.  விமர்சனம் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாமல் அப்பொழுது வெளிவரும் படங்களை விமர்சிப்போம். மிஸ்கின் படங்களில் வருகிற மஞ்சள் ஒளி லைட் போன்று ஒரு கேலரி அருகில் மஞ்சள் லைட் இருக்கும் . அதன் அருகில் அமர்ந்திருப்போம். பிறந்த நாள் விழா, அடிதடி என்று ஒவ்வொரு கேலரிலும் ஒவ்வொரு நிகழ்வுகள்.   என் பால்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பாளையங்கோட்டை நகர வீதிகளும், இந்த மைதானமும் முக்கிய இடம்பெறுபவை. நாங்கள் எப்பொழுதும் அமரும் கேலரியில் இருந்து பார்த்தால் ஈகிள் புக் செண்டர் மேல் ஜீசஸ் சேவ் அஸ் என்று ஆங்கிலத்தில் எல்லா வார்த்தையும் சிகப்பு லைட் எரியும். சில நேரம் ஜீசஸ் என்று வார்த்தை மட்டும் லைட் எரியாது. அந்த கோடிட்ட இடத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொள்வர். நான் என்னை நிரப்பினேன். ..!!!

யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்

2013-03-08

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்**

மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. குறிப்பாக சாகித்ய அகாடமி பதிப்பகமும், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகளை ஒரளவு வாசித்திருக்கிறேன். வாசிப்பின் முதற்படியில் சுழியிடும் போது  மொழிபெய்ர்ப்பு பக்கமே  சென்றதில்லை. அதில் ஒர் அந்நிய தன்மை இருப்பதாக எனக்குப்பட்டது. பின்னர் வாசிக்கும் போதை அதிகமானதும் எல்லாவற்றையும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் முதன்முதலின் வாசித்த மொழிபெயர்ப்பு செம்மீன் நாவல். சுந்தர ராமசாமி மொழியாக்கத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். பின்னர்தான் மொழிபெய்ர்ப்பு நாவல்/சிறுகதைகளிலும் அடர்த்தி இருக்கிறது என்ற உண்மை உரைத்தது. அன்று முதல் பல மொழிபெயர்ப்புகளை கடந்து வந்துவிட்டேன். தற்பொழுது குளச்சல் மு.யூசப் தமிழ் மொழிப்படுத்திய "யௌவனத்தின் கடல்" என்ற மலையாள சிறுகதை தொகுப்பு வாசிக்க நேர்ந்தது. மலையாள இலக்கியம் எப்பொழுதும் காட்சி வகைப்படுத்துதலிலும் அகம் சார்ந்த உரையாடல்களிலும் வாசகனை சொக்க வைக்கும்.  யௌவனத்தின் கடல் தொகுப்பும் மிக மெல்லிய புழுக்கத்தை கிளப்பி விட்டது. பெரும் மழைக்கு முன்னால் வருவதுப் போல்.
தொகுப்பில் மலையாள எழுத்தாளர்களின் 22 சிறுகதை அடங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு வகை என்று எடுத்துக்கொண்டாலும், வாசிப்பின் பின் இவை அனைத்தும்  மனதை வெற்றிடமாக்கியது என்று கொள்ளலாம். கதைகள் ஒவ்வொன்றும் பல சரடுகளையும் அடுக்குகளையும் தன்னுள் கொண்டு கதையின் நீட்சியை அடுக்கிக்கொண்டே செல்கிறது.

**

பாபு குழிமற்றம் எழுதிய " கருத்த மருவில் இரண்டு ரோமங்களுடைய யுவதி " என்ற கதையில் பெண் மீதான ஆணின் குரூரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் என்பவள் ஆணிடம் தோற்றாலும் பெண்தான் அந்தத்தில் வெற்றி கொள்கிறாள். மெல்வின் எழுதிய மொபிடிக்கையும் பாப்பியோன் எழுதியதை வாசிக்கும் ஒர் பெண்ணை எதார்த்த சந்திப்பில் பழகியபின்  கட்டிலில் வீழ்த்தும் ஆணின் மனம் எப்பொழுதும் அவளை தனக்கு கீழானவள் என்ற மனப்பாங்குடையே அவளிடம் போகிக்கிறான். அவளது தாடையின் மருவில் உள்ள ரோமங்களை பிடிக்கவில்லை என்று சொல்லும் அவனை அலட்சியம் செய்கிறாள். தன் தொடையை காண்பித்து அதில் இருக்கும் வடுக்களை காண்பித்து இது உனக்கு பிடிக்குமே என்கிறாள். அந்த காயங்களுக்கு பின்பு ஒரு கதை இருக்கிறது என்று அந்தக்கதையையும் சொல்ல ஆரம்பிக்கிறாள். கங்கையின் உற்பத்தி மூலத்தை தேடி தனியாக சுற்றியலையும்போது கோமுக் பயணத்தில் கட்வாள் கிராமத்தில் காட்வாளிவாசி அவளை முதுகில் ஏற்றி மலை உச்சியில் கொண்டு விடுகிறான். பயணம் முடிந்து இறங்கி வரும்பொழுது உடற் சூடேறி இருந்த கட்வாளி பனிக்கட்டியாயிருந்த இவளை அணைத்து அக்னி கோளமாக மாற்றுகிறான். அவன் பிடிக்கும் கஞ்சா பீடியைக்கொண்டு வைத்த சூடுதான் இது என்று கதையை நிறுத்துகிறாள். இவனால் தாங்க முடியவில்லை. அதுவும் உற்பத்தி மூலத்தை தேடி அலைபவள் இவள். கட்வாளியை பலசாலி என்று உபயோக்கிறாள் என்ற பொறாமையால் அவள் மீது தீவிரமாக இயங்குகிறான். அடுத்த நாள் காலையில் ஒரு குறிப்பு வைத்துவிட்டு செல்கிறாள். எனக்கு வேலை இருக்கிறது. உன் பர்ஸில் அதிகம் பணம் இல்லை என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் செலவுக்கு வைத்துள்ளேன். தயவு செய்து ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா..? என்று. அவன் கால் மடக்கி உட்கார்ந்து அவளால் வீழ்த்தப்பட்டதை உணரத்தொடங்குகிறான். உன் பெயர் என்ற உரையாடலில் உனக்கு பிடித்த எந்தப்பெயரில் வேண்டுமானாலும் அழைத்துகொள் என்கிறாள். ஆக்ரா சந்திப்பின் பின் அவளின் அக உலகத்தையும் அவளது அகத்தை ஏற்க மறுக்கும் ஆண் உலகத்தையும் இக்கதை மிக யதார்த்தமாக இட்டுச்செல்கிறது. மது சாப்பிடுகிறாய என்ற கேள்விக்கு, இல்லை நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். நான் நாகரீக வாழ்க்கைக்கு உட்பட்டாலும் அதன் சில அம்சங்கள் என்னிடமிருந்து விலகாமலிருக்கின்றன எனக்கூறும் வலுவான பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.
" அம்மாளு வம்மாவின் வீட்டுக்காரர் " என்ற சிறுகதையிலும் தன் கணவர் இறந்துப்போனாலும் அவர் இருப்பதாக ஊரை நம்ப வைத்து வாழும் பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.

**
மதுபால் எழுதிய  " வெளிச்சம் நிழலுக்குத்தெரியும் " கதையில் ஒர் ஆண் விபச்சாரியின் மன பிம்மங்களையும் அதன் பின் செல்லும் வாழ்க்கையும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். ராஜேஸ் அலெக்சாண்டர் என்னும் விபச்சாரன், ஃபாதர் மேத்யூசின் என்பவரின் மனைவி ஆக்னசின் அழைப்பை ஏற்று ஒர் இரவு செல்லுவதையும் அவள் இவன் மீது  மிகுந்த ஆசை வைத்திருந்தாலும் தான் ஒர் விபச்சாரன் தான் என்ற அகன்று நிற்கும் மனப்பான்மையுடன் மற்றொரு அழைப்பு வந்ததும் அவனது மனம் பதைபதைத்து மற்றொரு நிர்வாணத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான். ஒர் விபச்சாரனுக்கு மன  நிறைவே அவளுடன் இருக்கும் பெண்ணின் குரலிருந்து வரும் பரிவில் நீ மட்டும்தான் சிறந்தவன் என்ற ஒற்றைச்சொல். இது போன்ற உரையாடல்களையும், விகாரமில்லாத விபச்சாரனின் உலகத்தை மிகச்சிறிய சிறுகதையில் தொகுத்திருக்கிறார் மதுபால்.
"ஜெபக்கூடத்தில் வியாகுலமாதா " என்ற கதையில் டிவைன் செண்டருக்கு இட்டு வரும் ஒர் சிறுமியின் பால்ய நாட்களின் அவளுக்கு நடந்த ஒர் துர்சம்பவத்தையும் அதன் பின் வாழ்க்கை மாறுவதையும் அவளை துன்புறுத்திய நான்கு பேரை பின்னர் எப்படி தன்னையறியாமல் கண்டடைகிறாள் என்பதையும் இக்கதையில் தொகுத்திருக்கிறார் மதுபால். வன்கொடுமையின் மெல்லிய அதிர்ச்சியை தாங்காத ஃபிலோமினா புத்தி சுவாதினம் இல்லாமல் ஆகிறாள். டிவைன் செண்டருக்கு வரும் வழியில் வரும் ஆட்டோக்காரனும் , டிவைன் செண்டரில் உள்ள ஃபாதரும் " எங்கே பார்த்தேன் கர்த்தாவே " என்று முழிக்கிறார்கள். நம்பிக்கையின் பெயரால் அதே டிவைன் செண்டரில் விட்டுச்செல்லப்படுகிறாள் ஃபாத்திமா. பெண் என்பவள் மீது நடத்தப்படும் வேட்டைகளையும் வேட்டை நடத்துப்பவனே பின்னால் பெண்களை காக்க வந்த ரட்சர்களாக காட்டிக்கொள்வதும் இவ்வேடிக்கை உலகத்தின் தொலி உறிந்த கதையாகும்.

**

இ.சந்தோஷ்குமாரின்  " கண் பார்வையற்ற மூன்று பேர் யானையை விவரிக்கிறார்கள் " என்ற கதையில் கண்பார்வையற்ற மூன்று பேரிடம் ஊடகச்செயல்பாட்டின் மீது மிகுந்த ஆர்வமுடைய  இளைஞன் ஒருவன் நேர்காணல் பண்ணுகிறான். அவனது நிலைப்பாட்டில் குருடர்கள் யானையைப்பார்த்ததுப் போல என்ற பழமொழியின் பின்னால் இருக்கும் குருடர்களைப்பற்றிய கேலி, கிண்டல்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அவர்கள் மூன்று பேரிடமும் யானையைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ற கேள்வியை முன்வைக்கிறான். சேகரன் என்பவர் முதலில் வாய்திறக்கிறார். அவர் சிறுவயதில் திருவிழாக்கு சென்றிருந்த போது ஒர் மதம் பிடித்த யானை அத்திருவிழாவை அலைக்கழிக்கிறது. எல்லாரும் ஒடிவிடுகிறார். இவர் கீழே விழுந்து மாட்டிக்கொள்கிறார். பெரும் சுறாவளியைப்போல் யானை பெரும் சத்தம் இடுகிறது. பூமி குழுங்கும் சத்தம் கேட்கிறது. சேகர் மேலும் சொல்கிறார்.
" என்னைப்பொறுத்தவரை யானையென்பது பெரியதோரு சலனம்தான். அதற்கென்று தனியொரு வடிவம் கிடையாது. அது நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சி, திடீரென்று நின்று போன வாத்ய கோசங்கள், கீழே விழுவது, தடுமாறி விலகியோடுபவர்கள். பயமுறுத்தும் நிசப்தத்தின் மீதான அந்தச் சத்தங்கள்.. யாருமில்லாமல் நான் விழுந்து கிடந்தபோது என்னைக்கடந்து சென்ற ஒரு உலகத்தின் பேரோசை.." என்று.

ரகுராம் என்பவர் யானை என் கனவில் வருமென்றும் அது எனக்கு எப்பொழுதும் பயத்தை உண்டாக்காது என்கிறார். வினாயகரை எனக்கு பிடிக்கும் என்கிறார்.
சந்திரன் என்பவர் யானையை நான் தொட்டிருக்கிறேன். கல் யானையை என்கிறார். கல் யானையின் மீது ஈடுபாட்டால் தன் தொடையால் யானையை பச்சை குத்தி வைத்திருக்கிறார் சந்திரன்.
ஒவ்வொருவரும் யானை பற்றி கருத்தை முன்வைத்ததைப்போல் அந்த இளைஞனிடமும் கேட்கிறார்கள். அவன் சொல்ல தெரியாமல் தவிக்கிறான். கருப்பாக இருக்கும். தந்தம் வெள்ளையாக இருக்கும். பஸ் மாதிரி பெருசா இருக்கும் என்று சமாளிக்கிறான்.  ஒரு விசயத்தை உள் மனதால் உணராத வரைக்கும் அவற்றை பெருசாக வெளிப்படுத்தமுடியாது. அந்த இளைஞனும் சமாளிக்கிறான். பார்வையில்லாதவர்கள் கூறிய யானை அனுபவத்தை விட நம்முள் பரவி இருக்கும் யானைப்  பற்றிய  அனுபவம் மிக குறைந்ததுதான் என்பது நிதர்சனமான உண்மை..!

**

சந்தோஷ் ஏச்சிகானம் எழுதிய " கொமல " என்ற கதை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியில் வந்த "பீப்ளி லைவ்" என்ற திரைப்படத்தின் கதையை ஒத்திருந்தது. திரைப்படம் வருவதற்கு முன்பாகவே இக்கதை வந்திருக்கிறது. வங்கியில் தன் நண்பன் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்திடுகிறார் விசுவன் என்பவர். நண்பர் கடனை கட்ட தவறியதால்  விசுவனது வீட்டை ஜப்தி பண்ணுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறது உள்ளூர் கூட்டுறவு வங்கி. இதனால் மனமுடைந்த விசுவன் ஆக்ஸ்ட் பதினைந்தாம் தேதி குடும்பத்துடன் தற்கொலை பண்ணப்போவதாக வீட்டு முன்னால் எழுதி வைத்து ஊடக கவனத்தை ஈர்க்கிறார். தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கையிலும் விசுவனது தற்கொலை முடிவு பற்றி கடும் விவாதம் நடைபெறுகிறது. விமர்சகர்களும் சமூகப் பொறுப்பில் இருப்பவர்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் தனது கோணத்தில் தற்கொலையைப்பற்றி பேசுகிறார். வழக்கறிஞர்கள் தற்கொலைக்கு முயற்ச்சிப்பது குற்றமாகும் என்கின்றனர். தற்கொலையைப்பற்றி தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவர் சொன்ன மெக்சிகன் நாவலில் வரும் கொமல என்னும் கிராமம்  தற்கொலைகளால் நிரம்பியிருக்கிறது என்கிறார். இதைக்கேட்ட விசுவன் வாசக சாலைக்கு வந்து ' பெட்ரோபராமோ' என்னும் அந்த நாவலை இரவல் வாங்கிச்சென்று ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் எல்லாரும் உறங்கிய பிறகு  வாசிக்க தொடங்குகிறான். ப்ரேசியாதோ எனும் இளைஞன் பெட்ரோபராமோ என்னும் தந்தையைத்தேடி கொமால கிராமத்திற்கு வருகிறான். வறண்ட கிராமம் முழுவதும் இறந்தவர்களின் சத்தம் எதிரொலிக்கிறது. தேடி வந்தவனும் இறக்கிறான். நாவலின் ஒரு வரி விசுவனை தாக்குகிறது. " இங்கே எதுவுமில்லை, எங்கு பார்த்தாலும் வீச்சமடிக்கும் அந்த கெட்ட, புளித்த நாற்றத்தை தவிர. இது ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தக் கிராமம்."
வாசித்து முடித்த விசுவன் ஒருகணம் திகைக்கிறான். இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இனிய காலங்களை நினைக்கிறான். மனம் தெளிவு பெறுகிறது. நல்ல புத்தகம் அதைத்தான் செய்யும். ஒடிப்போன தன் நண்பனை தேடி செல்கிறான்.  இரண்டாம் நாள் முடிவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒர் விபத்து நடைபெறுகிறது. அடிப்பட்டவன் ஊளையிடுகிறான். விசுவன் அவனை ஒடிச்சென்று அரவணைத்து மருத்துவமணைக்கு கொண்டுச்செல்ல வாகனங்களை தேடுகிறான். எவரும் முன்வருவதில்லை.  ஒருவன் முன்வந்து ஏற்றிக்கொண்டு விரைந்து செல்ல முயற்சிக்கிறான். மனசாட்சியில்லாத இம்மக்களை பார்க்கும்போது அவனுக்கு பின்னரவில் படித்த கொமல கிராமம்  ஞாபகம் வருகிறது. அடிப்பட்டவன் தண்ணீர் தண்ணீர் என்று பிதற்றுகிறான். டிரைவர் வெற்று பாட்டில்களை காட்டுகிறான். மரங்களடர்ந்த காட்டுப்பாதையில் வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. எங்கோ சிறு நீரோடை உயிர் போய்க்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்காக சென்றுக்கொண்டிருக்கிறது. விசுவன் நீரைப்பிடித்து இளைஞனின் உதட்டில் ஒத்துகிறான். மார்பில் தெளிக்கிறான். அவன் இறக்கிறான். கண் முன்னால் இறப்பைப் பார்த்து திகைக்கிறான். விசுவன் யோசிக்கிறான். "தன்னைபோலவே இவனும் எங்கெல்லாமோ சஞ்சரித்தான்.யாரிடமெல்லாமோ பேசினான். போட்டியிட்டான். தோற்றிருக்கிறான், அழுதிருக்கிறான், வெற்றியும் மகிழ்ச்சியுமடைந்திருக்கிறான். நாமளும் இந்த இரண்டு சொட்டு தண்ணீரைப்போல் யாருடைய கருணை நம்மில் படாதா என்றுதான் இந்த தற்கொலை நாடகமெல்லாம் நடத்தியிருக்கிறோம்."  அவனது தற்கொலைப்பலகை அவனுக்கே அபத்தமாக தெரிகிறது. சீக்கிரம் எடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நடக்க ஆரம்பிக்கிறான்.
மனித மனமும் எதாவது கருணைக்காகவும், வாஞ்சைவார்த்தைக்காகவும் அலைந்துக்கொண்டிருக்கிறது. அது தடை படும் இடத்தில்தான் பாவங்கள் தோன்றுகிறது. எல்லாருமே பாவத்தையும் ஒரு கையிலும் நன்மைகளையும் இன்னொன்றிலும்தான் வைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எதன் எடை கூடுவதைப்பொறுத்தே அவனது கதாபாத்திரங்கள் இச்சமூகத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மனித நேயம் என்ற ஒற்றை வார்த்தை பின்னால் இருந்து  அழகாக விவரிக்கப்பட்ட மிகச்சிறந்த சிறுகதை இது." புத்தகங்கள் உலகம் " என்ற சிறுகதையில் தேர்ந்தெடுத்த வாசகனின் இறப்பிற்க்கு பின்பு அவனது உடலைக் காணாமல் அவனது நண்பர்கள் தேடுகிறார்கள். அந்த உடலை எடுத்த சென்றது யார் என்று அறியும் போது  ஆளேயே தூக்கிப்போட்டது போன்ற பதற்றத்தை உள்வாங்குகிறார்கள். தூக்கிச்சென்றது யாருமில்லை. ஃபியதோர் மிகெய்லோவிச் தஸ்தாயேவ்ஸ்கி.
மிகுந்த கற்பனையுடன் புனைந்துள்ளார் சந்தோஷ் ஏச்சிகானம்.

**

கே.வி.அனூபு எழுதிய  " உருவகம் " கதையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு தலை வேறு உடல் வேறு என்று கிடக்கும் பிணத்தை இரவில் காக்கும் பொறுப்பில் இரு போலீஸ்காரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த முண்டத்தின் நிர்வாணத்தை ஒருவன் ரசிக்கிறான். இன்னொருவனுக்கு அந்த நிர்வாணத்தின் பின்னாலிருந்து அவளுக்காக அனுதாபம் படுகிறான். இவனின் பால்யகாலத்தில் முதல் நிர்வாணத்தை பார்த்த கதை மிக வேகமாக விவரிக்கப்படுகிறது. உள்ளூர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கடல் கன்னி வேடமிட்ட ஒருத்தியை பார்க்க ஆசைப்பட்டு கூடாரத்துக்குள் ஏறி குதித்து பார்த்தப்பொழுது அந்த கடல் கன்னி வேடமிட்டவள் முழு நிர்வாணத்தில் இருக்கிறாள். மிகப்பயந்து மறுபடியும் கூடாரம் ஏறிகுதித்து வீடு திரும்புகிறான். மிகுந்த பயத்திலும் அந்த நிர்வாணக்காரியை நினைத்து பரிதாபப்படுகிறான். நினைவுகள் திரும்புகையில் அந்த முண்டத்தை நாய் ஒன்று கவ்வி செல்கிறது. உடலைத்தேடி நாய் பின்னால் ஒடுகிறான் என்று முடிகிறது கதை.  எளிதில் சீரணிக்கமுடியாத களத்தை பிடித்து வார்த்தை விவரணங்களால் விவரித்திருப்பார் கே.வி. அனூபு. எந்த அளவுக்கு நிர்வாணம் போதை தருகிறதோ, அந்த அளவுக்கு பயத்தையும் அளிக்கும்..!!

**


வினு ஆப்ரஹம் எழுதிய  " குருவிளைசார் உலகச்சந்தையில்" என்னும் சிறுகதை மிகுந்த நேர்த்தியுடன் எழுதப்பட்ட  திரைக்கதை வடிவத்துடன் ஒத்துப்போகிறது. குறும்படமாக எடுக்கலாம்.

இரண்டாம் பதிப்புக்கூட வராத புத்தகங்களை எழுதிய குருவிளை என்ற எழுத்தாளரைப்பற்றி கதை இது.
குருவிளை சாரை இலக்கிய உலகு மதிப்பதே இல்லை. அவர் மனைவி கூட நீங்கள் மலையாள மனோரமா இதழில் வருகிற கதையை மாதிரி ஏன் எழுவதில்லை என்று கேட்டு அவர் சங்கடப்படுத்திருக்கிறார். அவர் எழுதிய எல்லா புத்தகங்களையும் சொந்த செலவிட்டே வெளியீடுகிறார்.
என்றாவது ஒரு நாள் சிறந்த படைப்பை படைப்போம் என்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
அந்த படைப்பின் கரு உதிக்கிறது. அந்த மல்லம்பள்ளி கிராமத்தின் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த எஸ்தர் என்ற பெண்மணி வாழ்க்கையை எழுத நினைக்கிறார். எஸ்தர் கல்கத்தாவிலிருந்து இந்த மலையாள தேச மண்ணுக்கு பழக்கப்படுவது என்ற பார்வையில் குருவிளை யோசிக்க யோசிக்க இதுதான் சிறந்த படைப்பு மனம் பூரிப்படைகிறது. எஸ்தர் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரின் கதைகளை கேட்டு அறிந்துக்கொள்கிறார். திரட்டப்பட்ட எல்லா தகவல்களை வைத்து எழுத ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது. சர்வதேச புகழ் பெற்ற ஆங்கில நாவல் எழுதும் மலையாள பெண் எழுத்தாளர் குருவிளை சார் வீட்டுக்கு வந்து அந்த நாவலை எழுதப்போவதாகவும், எஸ்தர் பற்றி குறிப்புகளை எனக்கு கொடுங்கள் என்கிறாள். அதற்காக லட்சங்களை அள்ளி வீசுவதாகவும், நன்றியுடன் என்று குருவிளை சார் பெயரை போடுவதாக வாக்குறுதி கொடுக்கிறாள். எதற்கு அசையாத குருவிளை சார் அவர்களை அனுப்பிவிடுகிறார். மனம் லயித்த ஒரு நாளில் எஸ்தர் அவர்களின் வாழ்க்கையை வட்டார மொழியில் எழுதி முடிக்கிறார். இரண்டாம் பதிப்பு வராத தன் புத்தகங்களை எடுத்து உச்சி நுகர்கிறார். இந்த விவரணையுடன் கதை முடியும் போது மிகுந்த மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தான் எழுதிய எழுத்து யாராவது படித்துப்பார்த்துவிட்டு எதாவது சொல்வார்களா என்று அலையாத மனமே கிடையாது. குருவிளை சார் போல சிறந்த படைப்புகளை படைத்தாலும் படைப்பு அரசியல் ஒன்று இருக்கிறதே. அதில் பிழைத்தால்தான் நம்மை கொண்டு சேர்க்க முடியும். தீவிர இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் குழுமனப்பான்மையுடன் கூட்டம் சேர்த்துக்கொண்டு அலைந்தால்தான் தன்னை மெய்பிக்க முடியும். இல்லையெனில் குருவிளை சார் கதிதான் நமக்கும்...!!

பல கதைகள் இருந்தும் எனக்கு மிகப்பிடித்த கதைகளை மட்டுமே என்னால் எழுத முடிந்தது. தமிழிலும் இப்பலதரப்பட்ட கதைக்களங்களில் செறிவான சொல்லாடல்களின் சிறுகதைகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இம்மொழிபெய்ர்ப்பு சிறுகதைத்தொகுப்பு மிகுந்த வாசிப்பனுபவத்தை நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை.

யௌனவத்தின் கடல்
மலையாள மொழிப்பெயர்ப்பு சிறுகதை
தொகுப்பு : குளச்சல் மு.யூசப்
அம்ருதா பதிப்பகம்
விலை 180

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

உப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்

2013-01-22

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

சில நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு  தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க ஞாயங்களை முன்வைத்து அந் நாவலை பொருத்திப்பார்க்கும். மனதின் அலைபாயும் தருணங்களை அந் நாவல் பூர்த்தி செய்யுமானால் அவை நமக்கு சிறு சந்தோச உணர்வையும், நீங்காத துக்கத்தையும் நம்மில் பரவ விட்டு அவை சென்று விடும். 

அவை சென்ற பின்னும் நம்மில் அந்த கதைக்களத்தின் எச்சம் நீடித்து நம்மை துரத்திக்கொண்டிருக்கும்.
லஷ்மி சரவணகுமாரின்  " உப்பு நாய்கள் " நாவலை வாசித்து முடித்த தருணங்களில் இருந்து நீங்கா துயரம் என்னுள் எழுந்துக்கொண்டிருக்கிறது.

பெருநகர வாழ்வு என்பது எல்லாருக்கும் கிடைக்காத வாழ்வு. அந்நகரத்தில் பணம் இருக்கும். சந்தோசம் இருக்கும். சுதந்திரம் இருக்கும். நினைத்ததை முடிக்கும் வாய்ப்பை அது கொடுக்கும்.
இருந்தாலும் அந்த நகரத்துக்கென்று ஒரு அந்தரங்க வாழ்வு இருக்கும். சென்னையும் அவ்வாறே.
சென்னையின் இன்னொரு முகம். மிதமிஞ்சிய பயம்.

நாவல் பேசும் விசயம் என்னவெனில் எல்லாருக்கும் தெரிந்தும், எல்லாரும் பேச முற்படாத கதையை.
நாவலில் மதுரையிலிருந்து திருட்டு தொழில் செய்ய சென்னை வரும் செல்வி மற்றும் அவளின் குடும்பம்,  சிறுவயதிலிருந்தே தவறை தனது தொழிலாக செய்து பின்னால் சிறு பெண்பிள்ளைகளை கடத்தும் சம்பந்த், ராஜஸ்தானிலிருந்து தொழில் செய்ய வந்த மார்வாடி குடும்பத்தில் உள்ள ஷிவானி என்ற பெண்,
ஆந்திராவிலிருந்து சென்னையை அண்ணார்ந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை கட்ட வரும் சிறுமி ஆதம்பாவின் குடும்பம்.  இவர்களை மையாமாக வைத்தே கதையின் போக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் செயல்பட ஆரம்பித்ததும் அதனை சுற்றி பார்க்க வரும் கட்டிடத்தொழிலாளிகளின் குழந்தைகளை உள்ளே பார்க்கத் தடை செய்கிறார்கள். நாங்கள் கட்டியது சார் என்று கண் கலங்க கூறும் சிறுமி ஆதம்பாவின் கனவுகளும் எண்ணங்களும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. கடப்பாவிலிருந்த வெக்கை,  சென்னையில் இல்லை என்றும்  சென்னையில் கடல் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே சென்னையை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.  கட்டிடத்தொழிலாளிகளின் கதை  தமிழ் நாவல்களில் இன்னும் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை. அதுவும் இடம்பெய்ர்ந்து வந்து பொருந்தாத நகரத்துடன் தன்னைப்பொருத்தி தன் வயிற்றுப்பிழப்பிற்காக அடிமைகளாகும் இத்தொழிலாளிகளைப் பற்றி நிறைய எழுத வேண்டும். இந்நாவல் அவர்களின் வலியை ஒரளவு பதிவு செய்கிறது.


நாவல் பின்புலமாக காமம் வழிந்தொடுகிறது. எல்லாருமே காமத்தின் முன்னால் மண்டியிட்டு மடிய முற்படுகின்றனர். தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் இப்பெருநகரத்தின் மீது காமம் பெரும் மழையாக பெய்துக்கொண்டிருக்கிறது. அதனை விட்டு விலகவும் முடியாமல், நனையவும் முடியாமல் இந் நாவலின் மாந்தர்கள் தவிக்கிறார்கள்.

திருடுவதும், வேசித்தொழில் பண்ணுவதும், கஞ்சா கடத்துவதும் தவறானத் தொழிலாக இச்சமூகம் போதித்து வருகிறது. ஆனால் இத்தொழிலை வேறு வழியில்லாமல் செய்பவர்களைப் பொறுத்தவரை இத்தொழிலே இவர்களை வாழவைக்கிறது. இவர்களை இந்த வழிக்கு விரட்டிவிட்டதும் இந்த சமூகமே.!

சென்னையின் இன்னொரு வாழ்க்கையையும், தொழில்நுட்பத்தின் காரணமாக பாலியல் வழித்தவறுதலையும், அறியாத இன்னும் சில வாழ்க்கையும் இந் நாவல் கண்டிப்பாக நம் மனதில் பதிவிடும் என்பது நிச்சயம்..!!

தடதடக்கும் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்றவுடன் இருளில் வெறுமையாக நீண்டு  கிடக்கும் தண்டவாளங்களின் தனிமை இந்நாவல்.

உப்பு நாய்கள்
லஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம்.

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி