கபிலன் சிலை-- சிறுகதை

2011-08-25

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்







வீட்டு முன்னால் ஓலைப்பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் நடுவே வெள்ளைத்துணி கட்டியிருந்தார்கள். வீடு முழுவதும் மரண ஒலம் கேட்டுக்கொண்டிருந்த்து. " ஏய், ஐயா, என்ன பெத்த ராசா...!! என்ன விட்டுட்டு போயிட்டியே... அய்யோ... கபிலா.. இப்படி எங்கல தனியா விட்டுட்டு போயிட்டியே..." என்று வாயில் எச்சில் ஒழுக அழுதுக்கொண்டிருந்த்னர். மரண செய்தி கேட்டு சொந்தகாரர்கள், தெரிந்தவரகள் வர ஆரம்பித்தனர். வீட்டுக்கு முன்பு சைக்கிளும், டூவீலரும் குவிந்து இருந்தது. பந்தல் அருகே உள்ள ஒரு கல்லில் உட்கார்ந்திருந்தான் சிவா. அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காலையில் விசயத்தைக் கேட்டதிலிருந்து அழுதுக்ககொண்டேதான் இருந்தான். போஸ்ட் மார்ட்டம் முடிந்து பாடி வந்ததும் பெணகளுடன் சேர்ந்து பிணத்தை கட்டிப்பிடித்து அழுதான். மற்ற ஆம்பளைகளெல்லாம் விலகி நிற்க இவன் மட்டும் நெஞ்சில் அடித்து அடித்து அழுதான்.யாரும் அவனை த்டுக்க முடியல. கொஞ்சம் நேரம் கழித்து நன்பர்களெல்லாம் வந்து அவனை இழுத்துட்டு போய் வெளியே உட்கார வைத்தனர். பேச்சு வரவில்லை, வாய் கோணியது.

" டேய் மணி, நம்ம கபிலன் நம்மள விட்டுட்டு போயிட்டாண்டா...அய்யோ..கடவுளே.." என்று உளறிக்கொண்டிருந்தான். வந்தவர்கள் அனைவரும் இவனை வினோதமாக பார்த்தனர். நண்பர்களால் இவனை தேற்ற முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். உருண்டு பிரண்டு அழுததில் சாரமெல்லாம் அழுக்காயிருந்தது.

"தண்ணியாவது குடிடா..?" என்று கெஞ்சிக் கேட்டான் மணி. எந்த பதிலும் சொல்லாமல் நிலைக்குத்திப் போய் உட்கார்ந்திருந்தான். அவனாகவே வாய் திறந்தான்.

"நாந்தாண்டா.. கபிலன கொன்னென்.. பேசாம நான் ட்ரெயின்ல போறேன்னு சொன்னான்.. நாந்தான் பஸ்ல போன்னு டிராவல்ஸ்ல ஏத்திவிட்டேன்..."என்று அழுது கொட்டினான்.



ஜமுனா தன் தம்பியோடு வந்தாள். அவளைப் பார்த்தும் தன் இரு கையால் கண்ணைத்துடைத்துக் கொண்டான். அவளை அழைத்துட்டு போய் கபிலனின் உயிரற்ற உடலைக் காட்டினான்..அவள் அவளை அறியாமல் அழ ஆரம்பித்தாள். அப்படியே உட்கார்ந்து விட்டாள். கபிலனின் மேல் மாலைகள் குவிக்கப்பட்டிருந்தது..!



சிவா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தன் அம்மாவிடம் எல்லாருக்கும் காபி கொடுக்க சொன்னான். தீடிரென்று ஆளே மாறி விட்டான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தான். நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.மதியம் மூன்று மணிக்கு மேல் கபிலனின் பாடியை தூக்குவதாக முடிவு பண்ணினர்.

மையான வண்டி வந்தது. கபிலன் அதில் எற்றப்பட்டான். சங்கு ஊதப்பட்டது. ஆம்பளைகள் வண்டியின் பின்னால் சென்றனர். பெண்கள் பெரும் கூச்சலிட்டு அழுதார்கள்.



ஜமுனாவும் ஆழுதாள். சிவா அம்மாவும், கபிலன் அம்மாவும் ஜமுனாவை வினோதமாக பார்த்தனர்." யார், இந்த பெண்ணென்று..?"..

வண்டிக்கு பின்னால் கபிலனின் முகத்தைப் பார்த்தவாறு வந்துக் கொண்டிருந்தான் சிவா. தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை தாண்டும் போது மயக்கம் வந்தது. கபிலனின் நினைவலைகள் சிவா மனதில் எழும்ப ஆரம்பித்தன.. அஸ்போர்ன்ஸ் ஸ்கூலப் பார்த்தான். கபிலனும் சிவாவும் அங்கதான் படித்தார்கள். அங்கு எட்டு வரைக்கும்தான். அதன்பின் ஜான்ஸ்ல படித்தார்கள். இஞ்ஜினியரிங்க் போறதுக்கு வாய்ப்பு கிடைத்தும் நான் சிவா கூடத்தான் படிபேன் என்று சேவியர்ஸ் காலேஜ்ல சிவா கூட சேர்ந்தான் கபிலன். சின்ன வயசிலேருந்து ஒன்னாதான் சுற்றுவாரகள். அவர்களுக்குள்ளே கருத்துவேறுபாடு வந்ததே கிடையாது.

என்ன கொஞ்சம் சிவா தைரியசாலி, கபிலன் கொஞ்சம் அமைதி டைப். வாரத்திற்கு ஒருமுறை கபிலனை படத்திற்கு கூட்டிட்டு போயிருவான் சிவா. பாம்பே தியேட்டர், பேரின்பவிலாஸ் தியேட்டர் என திருநெல்வேலி தியேட்டர் முழுவதும் சுற்றுவார்கள்.

எங்க போனாலும் சைக்களில்தான் போவார்கள். சிவாதான் அழுத்துவான். கபிலன் பார்கம்பில உட்கார்ந்திருப்பான்...

நைட் வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திட்டு கதை பேசிக்கொண்டிருப்பார்கள். காலேஜ் படிப்பு முடிந்ததும் வேலை தேட ஆரம்பித்தர்கள்.

கபிலன் கவர்ன்மெண்ட் எக்ஸாம் கோச்சிங்க் போறேன்னுட்டு சாப்டர் ஸ்கூல் பக்கத்தில் உள்ள செண்டருக்கு போயிருவான். கபிலன் வர்ற வரைக்கும் மார்க்கெட்ல உள்ள் மணி கடையில் உட்கார்ந்திருப்பான் சிவா.. மணி இரண்டானதும் நேராக வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப்புக்கு போய் கபிலனை கூட்டிட்டு வருவான். வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திருக்கும் போது சிவா சொன்னான்..

" கபிலா, ஜமுனாவ பார்த்தேன்டா.."

" எங்க வச்சுடா.. எப்ப பார்த்த..." என்று ஆர்வமாய் கேட்டான் கபிலன்.

"பாளை பஸ்டாண்ட்லதான்.. தோள்ல பேக்க மாட்டிகிட்டு சூப்பரா போனாடா.. ஆனா பேச முடியல..?

"சூப்பரா இருந்தா நமக்கென்னடா.. பேச்ச மாத்ரியா.. ப்ளீஸ்..."என்று சலிப்புடன் கூறினான்.

" யேய்.. சும்மா கத வுடாத.. அவள ஒரு தடவ கூட நினைக்க மாட்ட.. பெரிய இவன் கனக்கா பேசுற...உனக்கு அவள பார்ததா பயம்... அதான்.. அதுக்கு அவா என்ன பண்னுவா..நல்ல பொண்ணுடா.. நீதான் மிஸ் பண்ணிட்ட..காலேஜ் படிக்கும் போதே நீ சொல்லிருக்கனும்.. நான் போய் சொல்றேன்னாலும் நீ வேனான்னு சொல்லிட்ட..”

கபிலன் பதில் எதும் சொல்லவில்லை. எதிர்த்தாப்புல உள்ள கேலரிய பார்த்துட்டு இருந்தான். ஈகிள் புக் செண்டர் மேல ஜீஸஸ் சேவ்ஸ் அஸ் என்று லைட் எரிந்தது...

" என்னடா..ஒன்னும் சொல்ல மாட்டுக்க.. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல.. அவ இங்கதான் எங்கயாவது வேலை பார்ப்பா.. நாளைக்கு பாளைபஸ்டாண்டுக்கு போவோம்.. பார்த்து பேசுவொம்.. என்ன ஒகேவா..." என்றான் சிவா.

கபிலன் சிரித்தான். தொலைந்து போன காதலை மறுபடியும் தேட ஆரம்பித்தான்.


ஜமுனாவை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது. காலேஜ் படிக்கும் போதே கைக்கூடும் நிலையில்தான் கபிலன், ஜமுனா காதல் இருந்தது. ஆனால் காதலை வெளிப்படுத்தாமலே இருவருமே பிரிந்தனர். மறுபடியும் ஜமுனாவைத் தேடி கபிலன் போக விரும்பவில்லை. தேடிப்போய் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்து அவளது எண்ணத்தை மறக்க முயர்ச்சித்தான்..இப்பொழுது நாளை பார்க்கப்போகிற சந்தோசத்தில் தூங்கிப்போனான். .



காலையில் பாளைபஸ்டாண்டு ஹோட்டல் சரவனாஸ் அருகே நின்றுக்கொண்டிருந்தனர். அவள் வேனி பஸ்ல வந்து இறங்கினாள்.

சிக்னலை கிராஸ் பண்ணி நடக்க ஆரம்பித்தாள். ஜமுனா முன்ன விட இப்போது ரொம்ப அழகாயிருப்பதாக கபிலனுக்கு தோன்றியது.

" வாடா.." என்று இழுத்துட்டுப் போனான் சிவா. ஜமுனா முன்னால் போனாள். தீடீரென்று ஸ்டேட் பேங்குள் நுழைந்தாள்.

இவர்களுக்கு திகைப்பாயிருந்தது. இவர்கள் உள்ளே போய் அவளைத் தேடினார்கள். ஜமுனா கபிலனை பார்த்துவிட்டாள். அழகிய சிரிப்புடன் அருகில் வந்தாள்.

" கபிலா, எப்படி இருக்கிங்க..!!" என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க.

"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்...உங்கள பார்க்கதான் வந்தேன்.. ஆனால் நீங்க இங்க வேலை பார்க்கிறீங்கன்னு எனக்கு தெரியாது.."

"என்ன பார்க்கவா..?" கண் விழி உயர்ந்தது. அருகில் இருந்த சிவா "வாங்களேன் வெளிய போய் பேசிட்டு வரலாம்.." என்றான்.

"வரேன்.." என்று கூறிவிட்டு உள்ளே போய் யர்ரிடமோ சொல்லிவிட்டு வெளிய வந்தாள்.

மூவரும் அரசனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சிவா முன்னாடி போனான். பின்னாடி ஜமுனாவும் கபிலனும் சிரித்து சிரித்து

பேசிட்டு வந்தனர். கபிலனுக்கு கூச்சம் எல்லம் போயிருந்தது..

அரசனில் ஜீஸ் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்தனர். கபிலன்தான் ஆரம்பித்தான்.

" உங்கள மறுபடியும் பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை.. ரொம்ப சந்தோசமா இருக்குது " என்றான்.. சிவா நைசா நழுவ பார்த்தான்." நீ பேசிட்டு இருடா..வெளிய மணி போற மாதிரி இருக்குது.. பார்த்துட்டு வந்துருதேன்.."என்று கிள்ம்பினான்.

கபிலனும், ஜமுனாவும் சிரித்துக் கொண்டார்கள். கணகளால் பேசிக்கொண்டார்கள். சிவா உள்ளே வரும் போது கபிலன் பேசிக் கொண்டிருந்தான்

" எப்படிங்க.. இண்டர்வியு ரொம்ப கஷ்டமா இருக்குமா.. ?"

சிவா தன் தலையில் அடித்து கொண்டான்.


"ஹலோ, என்னங்க பேசிக்கிட்டிருக்கிங்க.. ஜமுனா இங்க பாருங்க..நான் ஒபனாவே கேட்குறேன்.. காலேஜ்ல இருந்தே உங்க மேல உசிர வச்சிருக்கான் கபிலன்.. நீங்க என்ன சொல்றீங்க.." என்று போட்டு உடைத்தான். அவன் அப்படி கேட்டது. அவள் முகத்தில் வெட்கத்தை உண்டு பண்ணியது. இருவரையும் பார்த்தான் சிவா.


"பதிலை யாருட்ட சொல்லனும்.. உங்ககிட்டயா.. இல்ல உங்க நணபர்கிட்டயா.." என்றாள் ஜமுனா.

"இந்த உத்தமபுத்திரண்டதான்" என்று கபிலன் தலையை தன் கையால் திருப்பி காட்டினான் சிவா. அவள் சிரிச்சிகிட்டு

"பிடிச்சிருக்கு... போதுமா.."என்றாள். கபிலன் சந்தோசத்தின் உச்ச்த்திற்கு சென்றான். அன்றிலிருந்து கபிலன் தினமும் ஜமுனாவை பார்க்க செல்ல ஆரம்பித்தான். அவர்கள் காதல் ஆரோக்கியமாக வளர்ந்தது..இதற்கெல்லாம் சிவாதான் காரணம் என்று நினைத்துக் கொள்வான் கபிலன்.



ஜங்ஸனில் நல்ல கூட்டம். சென்னைல பேங்க் எக்ஸாம் இருந்தது. அத்ற்கு கபிலனை வழியனுப்ப வந்திருந்தான் சிவா. கூட்டத்தை பார்ததும் " பஸ்ல போடா.." என்று வர மறுத்த கபிலனை வலுகட்டாயமா இழுத்துட்டு வந்து பஸ்ல எற்றிவிட்டான்.

" நல்லா எக்ஸாம் எழுதுடா.. அப்புறம் ஜமுனாவும் பேங்கு, நீயும் பேங்கு.. கலக்கலாம்.." கபிலன் சிரித்துக்கொண்டே கை ஆட்டினான். அதுதான் அவன் கடைசி சிரிப்பா இருந்தது.



வெள்ளக்கோவில்ல கபிலனை எரித்தார்கள். தாமிரபரணியில் தலை மூழ்கி வீடு வந்து சேர்ந்தார்கள். அதனை தொடர்ந்து மூன்றாவது நாள் விசஷேம், பதினாறாவது நாள் விசஷேம் என முன்னின்று நடத்தி வைத்தான். எப்பொழுதும் சோகமாக திரிய ஆரம்பித்தான். உடல் மெலிய ஆரம்பித்தான். தாடி வளர்த்தான்.சிவா அம்மா எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். இவன் அசையவில்லை. கபிலன் கூட எங்கெல்லாம் சுற்றினானோ அங்கெல்லாம் போய் உட்கார ஆரம்பிததான். நம்மாலதான் கபிலன் இறந்தான் என்று நினைக்கும் பொதெல்லாம் இந்த உலகத்தை வெறுக்க ஆரம்பித்தான். இரண்டு தடவை தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுப்போனான்...

தீடீரென்று கபிலன் தான் கனவில் வந்து தான் சாதிக்க நினைத்ததை நீயாவது செய்யுடா என்று சொன்னதாகவும் , அடுத்த நாள் முதல் சிவாவும் கிளாஸ் போக ஆரம்பித்தான். சிவா வீட்ல ரொம்ப சந்தோசப்பட்டார்கள். பையன் திருந்திவிட்டான் என்று.. அடிக்கடி ஜமுனாவை போய் பார்ப்பான். அவள்க்கு இவன் ஆறுதல் கூறுவான். இவனுக்கு அவள் ஆறுதல் கூறுவாள்.

குருப் 2 ரிசலட் வந்தது. இண்டர்வியூ போறதுக்கு முதன்முறையா தாடியை எடுத்தான். பளிச்சென்று இருந்தான். கபிலனின் இரண்டாவது நினைவு தினம் வந்தது. நண்பர்கள் அனைவரும் பெரிய அளவில் பண்ண பிளான் பண்ணினார்கள்.

மணிதான் சொன்னான் " பேப்பர்ல பெரிய விளம்ப்ரம் கொடுப்போம். தெற்கு பஜார் முழுவதும் பேனர் வைப்போம்.. " என்றான்.





சிவா யோசிச்சிக்கொண்டே உட்கார்ந்திருந்தான். அடுத்த நாள் குருப் 2 இண்டர்வியூ ரிசல்ட் வந்தது. இண்டர்வியூவில் பெயில் ஆயிருந்தான். அதை பற்றி அவன் கவலைப்படவில்லை..





சைக்கிளை எடுத்துட்டு சமாதானபுரம் ரோட்ல போனான். சிலை செய்யிற கடைக்கு போனான். அங்கே எம்.ஜி.ஆரும், காந்தியும், அண்ணாவும் நின்றுக் கொண்டிருந்தனர்.. ஒனரைப் பார்த்தான்.

" ஐயா, ஒரு சிலை செய்யனும்.."

"யார் சிலைப்பா.." என்றார் பெரியவர்.

தன் பாக்கெட்டில் இருந்து கபிலன் போட்டாவை எடுத்துக் கொடுத்தான். பெரியவர் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தார். தன் நண்பனைப் பற்றி சொன்னான்.

பெரியவர் ஆதங்கப்பட்டார் " கண்டிப்பா நல்ல பண்ணிரலாம் தம்பி " என்று சிவாவை அனுப்பி வைத்தார்..





தன் வீட்டு முன்னால் உள்ள இடத்தை சுத்தம் செய்தான். சிலையை கொண்டு வந்து இற்க்கினார்கள். சிலையை நிறுத்தினர். அவன் நினைவு நாளன்று கிளரிந்தா சர்ச், நூற்றாண்டு மண்டபம் அங்குள்ள பிச்சைககாரர்கள், எழை எளியவர்களை அழைத்துட்டு வந்து சாப்பாடு போட்டான். கபிலன் அப்பாதான் சிலையைத் திறந்த்தார். ஜமுனாவும் வந்திருந்தாள்.

நண்பர்களும், ஜமுனாவும், சிவாவும் கபிலன் சிலையை கண் கலங்க பார்த்துக்கொண்டிருந்தனர்.



என்னுயிராய் இருந்தாய்....!



         என்னை விட்டு சென்றாய்....!



                  என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்....!



                            நண்பனே...!



என்று சிலையின் அடியில் பொரிக்கப்பட்டிருந்தது...

கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தான் கபிலன்.....!!

" தெய்வத்திருமகள்--- தந்தையின் தாலாட்டு "

2011-07-17

| | | 4 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


விக்ரமின்  "தெய்வத்திருமகன்" நான் ரொம்பவும் எதிர்பார்த்த படம்.  கடைசியில்  "தெய்வத்திருமகளாக" வெளி வந்தது.

முதல் நாளே நண்பர் சுப்பையா நைட் ஷோ பார்த்துட்டு இரவு இரண்டு மணிக்கு " படம், சூப்பரோ சூப்பர் " என்று sms அனுப்பினார். அடுத்த நாள் காலையில் படத்தை அவ்வளவு அழகாக விமர்சித்தார். அவர் சொன்ன விதம் படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது.

படத்தின் டைட்டில் கார்டில்  Dr .சீயான்  விக்ரம்...  வாழ்த்துகள் விக்ரம்  ...

படத்தில் ஆறு வயது மன நிலையில் உள்ள ஒரு இளைஞன் கேரக்டர் விக்ரமிற்கு.. கிருஷ்ணா கேரக்டரில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்... அவர் மட்டுமே இந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும்..
" என்னடா, இந்த மெண்டல் இப்படி போட்டு அறுக்கிறான் " என்று நம்மை முகம் சுழிக்க வைக்காமல், அழகாக ரசிக்க வைக்கிறார்.

சில காட்சிகளின் போது என் உடலின் சிறகு முளைக்கிறது, மனம் லேசானது, சந்தோசம் மனசு பூராவும் இருந்த்தது..
அவன் குழைந்த தனமாக இருந்தாலும் சின்ன சின்ன விசயத்திலும் perfection  ஆக இருக்கிறான். " தண்ணீர் பைப்பை மூடுவது, டிராபிக் சிக்னலில் Go என்று விழுந்ததுமே தான்  நடக்கிறான், அதுவும் வண்டியே வராத ரோட்ல!! "

கடற்கரையில் தன் பணத்தை திருடி விட்டு ஓடும் திருடன், மீன் பிடிக்கிற வலையில் கால் தட்டி விழ ,கிருஷ்ணா அந்த திருடனுக்கு கை கொடுத்து துக்கி விடுவது ,
காக்கா குஞ்சு ஒன்றை பூனையிடம் இருந்து காப்பாற்றி மரத்தில் மேல் ஏறி அதன் கூட்டில் வைக்கிறது ( இந்த காட்சி ஈரானிய திரைப்படமான color of paradise ல் வருகிறது. அதனால் என்ன தமிழ் ரசிகர்களுக்கு இது புதுசுதான்),


கிருஷ்ணா நண்பர்கள் அவர்களும் மனநிலை குன்றியவர்கள். வாழ்க்கையை அழகாக எதிர் கொள்கிறார்கள். அவர்களோடு தன் குழந்தை
நிலாவிற்கு ஷூ எடுத்து கொண்டு பலூன் பிடித்துக்கொண்டே வருவது .. என பல காட்சிகள் என்னை சிறகு முளைக்க  வைத்தன..

படம் முடிந்து வந்தாலும் இப்ப வரை படத்தின் பின்னணி இசை மற்றும் சில வசனங்களும் மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது...  

" நீங்க கூட்டிட்டு போறது ஒரு குழந்தைய   அல்ல , இரண்டு குழைந்தையை ..."
"அப்பா வந்தாச்சு, நிலா வந்தாச்சு..!"
"காக்கா ஏன் கருப்ப இருக்கு, வெயில்ல ரொம்ப அலையிதுலா அதான்... யானை ஏன் பெருசா இருக்கு, நெறைய சாப்பிடுதுலா  அதான்.."
"நிலா எப்ப வருவா, அம்மாவாசைக்கு அப்புறம்..!!"

விக்ரமின் குழைந்தையாக வரும் நிலா-- பௌர்ணமி நிலா..

இந்த படத்த பார்த்ததுக்கு அப்புறம் குழைந்தைகள் உலகம் எவ்வளவு அழகாக உள்ளது என்று தோன்றுகிறது..

இந்தப்படம் ஆங்கில படமான " I am sam " என்ற படத்திலிருந்து  சுட்டது,  இதை நாங்க பார்க்க மாட்டோம், வரவேற்க மாட்டோம், டைரக்டர் விஜய் கிட்ட சரக்கு இல்ல என்று விமர்சனம் எழுதுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.

 படத்தை நான் ரசிச்சேன்,கண் கலங்கினேன்,கண்ணீரோடு வெளியே வந்தேன்..
போட்டிகள் நிறைந்த இந்த உலகம் அழகாக இருந்தது. அன்பு மட்டும் எங்கும் கொட்டி கிடந்தது....
  

சிப்பியின் வயிற்றில் முத்து-- தமிழ் நாவல்

2011-06-02

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





போதிசத்வ மைத்ராய என்னும் வங்காள எழுத்தாளர் பணியின் நிமித்தமாக தூத்துக்குடி யில் 1960 ல் வசித்து வந்திருக்கிறார். அங்கு அவர் கண்ட மீனவர்களின் வாழ்க்கைப்பதிவை வங்காளத்திற்கு  சென்று  நாவலாக பதிவு பண்ணியிருக்கிறார். தூத்துக்குடி மீனவர் வாழ்க்கையை  மட்டுமல்ல , தென் தமிழகத்தின் வாழ் இயல்புகளையும் , தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் , அக்காலக்கட்டத்தில் நடைப்பெற்ற அரசியல் தளங்களையும் அழகாக பதிவு பண்ணியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில் இந்த அறிய படைப்பு தமிழில் வெளிவந்துள்ளது. நேஷனல் புக் டிரசட் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் மிகப்பெரிய மீனவ பணக்காரர், அவர் செல்வாக்கு இலங்கை வரை பரவிள்ளது ,எவ்வாரானால் அங்குள்ள மந்திரிகளை இவர் நியமிக்கும் அளவுக்கு.. அவருடைய மகன் அந்தோணி. அந்தோணி சிறு வயதிலே தூத்துகுடிய விட்டு ஓடி போய்,கல்கத்தாவில் படித்து லண்டனில்  இந்திய பாரின் கம்மிசனில் வேலை செய்கிறார். இவனுடைய பால்ய சிநேகிதன் பீட்டர். இவன் கடலில் போய் மீன் பிடிக்கும் கூலி மீனவன்.

அந்தோணி அப்பாவை தொழில் போட்டி காரணமாக யாரோ கொலை செய்ய, அப்பாவின் இறந்த செய்தி கேட்டு அந்தோணி லண்டனிலிருந்து தூத்துக்குடி வருகிறான்.
அவன் சிறு வயதில் பார்த்த தூத்துக்குடி இப்போது இல்ல. மிகவும் மாறி போயிருக்கிறது. தன ஜாதிக்குள்ளே போட்டி, பொறாமை என்று மாறியிருக்கிறது.. தன ஜாதிகுள்ளான சண்டைகளை மாற்ற முயல்கிறான்.

தஞ்சாவூர் காவிரிகரையில் பிறந்த வளர்ந்த ராமன் ,திருச்சியில் படித்து , பரத கலையில்  தேர்ச்சிப்  பெற்றவன்.  ராமனுடைய  கதையும்  பீட்டர் கதையும் இணைவது அருமை 

ராமன் கதையும், பீட்டர் கதையும் தனித்தனியாக  பயணம் செய்கிறது.

தமிழகத்தின் அனைத்து ஊரும் இந்த நாவலில் இடம் பெறுகிறது. அதன் மாதிரி அந்தந்த காலகட்டத்தில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்சிகளையும் இடம் பெறுகிறது. எடுத்துகாட்டாக  ஆஷஸ் துரை கொலை, சிதம்பரனார் பிள்ளை கப்பல் விட்டது, ராஜாஜி தமிழத்தை ஆண்டது  போன்றவை.

மீனவர்களான பரவர்களின் பழைய பாரம்பரியம், அவர்களுக்கும் இலங்கை, மற்ற நாடுகளுக்குண்டான   உறவுகளை சொல்கிறது. அவர்வளுக்குள்ளே மேசைகாரர்கள், கம்மகாரர்கள் என்ற பாகுபாடு, அவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய தோணி வியாபாரம், கப்பல் வியாபாரம் போன்றவற்றையும் விவரிக்கிறது.

கடைசியில் அந்தோணி தன அப்பாவை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் லண்டன் செல்ல , பீட்டர் அதை முடித்து வைக்கிறான்.

நாவல் பல வரலாறுடன், வரலாறுகளை பதித்து விட்டு செல்கிறது. முத்துகுளிதுரை மீனவர்கள் எவ்வாறு கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் , அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், முத்து குளித்தலில் தாங்கள் எவ்வளவு  பேர்பெற்றவர்கள் என்பதையும் சொல்கிறது

இந்த நாவல்.
படித்து முடித்தவுடன் எப்படிடா ஒரு வங்காள எழுத்தாளர் நம்முடைய கலாச்சாரத்தை அனுபவித்து, அதை பதிவு பண்ணினார்  என்பதை நினைத்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

மீனவர்களைப்பற்றி பதிவு செய்த நாவலான வண்ணநிலவனின் கடல் புரத்தில், ஜோ டீ குருஷின் ஆழி சூழ் உலகு, கொற்கை போன்றவற்றிற்கு முன்பாகவே சிப்பியின் வயிற்றில் நாவல் அவர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது.

கதைகள் நம் மண்ணில்தான் கொட்டி கிடக்கிறது.. நாம்தாம் அள்ளிக்கொள்ள வேண்டும்.

தமிழில் மிகச்சிறந்த நாவல்

யாமம்

2011-05-10

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

யாமம் -- நான் படிக்கும் ராமகிருஷ்ணனுடைய முதல் நாவல்.  இதற்கு முன்பு அவருடைய கட்டுரை தொகுப்புகளையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். புதிதாக படிக்கும் எவரையும் தன் பக்கம் இழுக்கும் எழுத்து அவருடையது..

யாமம் என்பது ஒரு வாசனை திரவியம். அதனை உடம்பில் பூசிக்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையும், இரவுக்கும் மனித இனத்துக்கும் உள்ள உறவையும் காலம் கடந்து இட்டு செல்கிறது இந்த நாவல்..
கதை சென்னையின் வரலாற்றை கூறுகிறது என்று பொத்தம் பொதுவாக சொன்னாலும், கதை அவ்வாறு இல்லாமல் பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணம் செல்கிறது..

பலதரப்பட்ட கதைகளின் வழியே நாவல்  செல்கிறது. வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமின் குடும்பம், நெல்லையிலிருந்து வந்து ஆங்கிலயரின் கீழ் வேலை பார்க்கும் பத்ரகிரி குடும்பம், லண்டனுக்கு  கணித மேல் படிப்புக்காக செல்லும்  பத்ரகிரி தம்பி திருச்சிற்றம்பலம் ,  நாயின் பின்னாலே வரும் சதாசிவ பண்டாரம் , மேல்மலையிலிருந்து வந்திருக்கும் கிருஷ்ணன் கரையாள்  இந்த கதா பாத்திரங்களின் வழியே கதை செல்கிறது..

இந்தியாவிற்குள் எப்படி வெள்ளைகாரர்கள் வந்தார்கள் , சென்னை நகரத்தை எவ்வாறு பிரான்சிஸ் டே வடிவமைத்தார் , இந்தியாவின் செல்வங்கள் எப்படி அவர்களால் திருடப்பட்டது.. மாஞ்சோழை, தென்மலை போன்ற இடங்களில் எப்படி தேயிலை தோட்டம் உருவானது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகள்  வழியே கதை செல்கிறது..

உணமையிலேயே நாவல் முடியும் போது அத்தர் மனம் நமக்கும் அடிக்கிறது...ஒரே நாளில் இந்த நாவலை படித்து முடித்தேன்.

இந்த நாவலுக்காக ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்துள்ளது..

குடி'மகன் '

2011-05-06

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
" என்னடே, உங்க அப்பா எப்படி இருக்காரு, இப்ப பரவாயில்லையா இல்ல இப்பவும் அதே குடிதானா..?" என்று சொந்தகார்களாலும் , தெரிந்தவர்களாலும்  கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு சிறிய பையனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்திருக்கீர்களா...? பதிலுக்கு அந்த பையன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் " இப்ப குடிக்கிறதில்லை " என்று நகர்ந்து செல்லும் போது அவன் தலை தாழ்ந்து இருக்கும்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள தத்தம் அப்பாவைப் பற்றி புகழ்ந்து பேசும் போது தன் அப்பாவை பற்றி ஏதும் கேட்பார்களோ, அப்படியே கேட்டாலும் அப்பாவை பற்றி பெருமையாக கூறிவிட்டு  ,  கூனி குறுகி எப்படா இந்த இடத்தை விட்டு நகலலாம் என்று அவன் மனம் துடிக்கும்...

"டேய் உங்க அப்பாவ  இன்னும் காணல, போய் பஜார்ல பார்த்துட்டு வாடா " என்று அம்மா சொல்லும் போது , பஜார்ல உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் லயும் தேடி, கடைசியில் ஒரு டாஸ்மாக்  பக்கத்தில் தன் சைக்கிள்  மேலே குடி போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவைத்தூக்கி ஒரு கையில் சைக்கிளையும் மறு கையில் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரும் போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என மனது பதைபதைக்கும்...

திருவிழா காலங்களில் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கும் போது ,அப்பா குடித்து விட்டு பிரச்சினை  பண்ணும் போது ,திருவிழா சந்தோசங்களை எல்லாம் துறந்து விட்டு  அவன் செல்லும் போது அவன் மனது எல்லாம் சந்தோசமும் கொஞ்ச நேரம் தான் என்ற தத்துவ நிலைக்கு வந்திருப்பான்..

இப்படி குடிகார தகப்பனால் வளரப்படும் பிள்ளை, நெறைய பிரச்சனைகளை சந்தித்து தேர்ந்தெடுத்த அனுபவசாலியயிருப்பான்...
இந்தக்குடியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் மேசை குடிகாரர்கள்...அவர்களின் பிள்ளைகளும் ஒரு குடிகாரர்கள் தான்..

அரசு தான் மக்களுக்கு கூலியாக காசு கொடுத்து, அதை தானே புடுங்கிற கேவலமான வேலை தான் இங்கு நடக்கிறது..

எல்லாம் குடிகாரர்களும் நல்லவர்கள்தான் குடிக்காதவரைக்கும்....

அவன்   அப்பா நல்லவர்தான்....!!!

தென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல் காற்று..

2011-01-26

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
தமிழ் சினிமா எத்தனையோ கிராம படங்களை தந்தாலும் ஒரு சில படங்களே மனதிலும், வரலாறிலும் இடம் பிடிக்கிறது. இப்ப நெறைய யதார்த்த படம் வர ஆரம்பிச்சிட்டு, இதுவும் நல்லதுக்குத்தான்.

திருவிழா பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மேலும் கஞ்சா கருப்பு இல்லாத கிராம கள்ளிக்காட்டின் வாசத்தை சொல்கிறது இந்த தென்மேற்கு பருவக்காற்று.


 



டைட்டில்ல வருகிற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலில் வருகிற ஒவ்வொரு வரியும், பெண்ணும் மனதில் அழுத்தமாக பதிகிறார்கள். பூ படத்திற்கு அப்புறம் இயல்பான கிராம படத்தில் நான் பார்த்து வியந்தது இந்த படத்திற்குதான்..
தாய் பாசம் சம்பத்தப்பட்ட படம்னு நாம் ஒரு வரையறுக்குள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் தாயில் அன்பு மட்டுமல்ல  அதையும் தாண்டி அவள் வீரமும், உழைப்பும், ஒரு நாட்டுபுற தாயின் அச்சு அசல் வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கு..

ஆடு மேய்க்கும் கதாநாயகன், ஆடு களவாண்டு அதை கறியாக்கும் குடும்பத்தில் கதாநாயகி, பொட்டல்  பூமி என  ரொம்ப எதார்த்தமான கதை..

படத்தில் அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக சரண்யா , இந்த படத்தில் அம்மாவாக  வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகனின் மாமா பொண்ணு, அவனது நண்பர் கணேஷ் என படம் முழுக்க நிஜ நாயகர்கள்.

கதாநாயகன் சேது அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். காதல் பொங்க கண்களால் பார்ப்பதும் சரி,  எதிராளியுடன்  சண்டை போடுவதும்  சரி அழகா செய்திருக்கிறார்.
கதாநாயகி வசுந்தரா தாவணியில் அழகாக  இருக்கிறார், பட்டிகாட்டு பொண்ணை போல அமைதியாக நடித்திருக்கிறார்.

கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ற ஆரம்பித்த படம், அதே பாடலுடன் முடிகிறது ,
சிறப்பான முடிவு.

ஒரு சிறுகதை படித்த அனுபவத்தை கொடுத்தது, குறிப்பாக அந்த பாடலை தொடர்ந்து நான்கு தடவை கேட்டேன், அவ்வளவு அழகான வரிகள், கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த வைரமுத்து இவ்வரிகளையும் படைத்துள்ளார்.

செழியனின் ஒளிப்பதிவு செம்மண் நிலங்களையும், ஆடு மந்தைகளையும் அழகான மனிதர்களையும் சிறப்பாக வர்ணம் தீட்டியுள்ளார்.

சீனு ராமசாமி பெரிய இயக்குனராக  வருவார், சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர் பார்க்கலாம்..

கண்டிப்பாக இதுவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று அதில் மாற்றமில்லை..



புத்தக கண்காட்சியில் நான்..

2011-01-15

| | | 3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
சென்னை புத்தக கண்காட்சி எனக்கு புதுசு, திருநெல்வேலியில் இருக்கும் போது சென்னை என்பது வெகு தூரம் மட்டுமல்லாமல் வெறும் புத்தக கண்காட்சிக்கா சென்னை போறன்னு கேள்வி வேற...? எனவே அது முடியாத காரியமாக இருந்தது.. இப்போது விருத்தாசலம் பக்கத்துல இருக்கிறதுனால இந்த தடவ பார்த்ருவோம்னு நண்பர் சுப்பையாவுடன் கெளம்பியாச்சு.. சுப்பையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேராவுரனியில் பணிபுரிகிறார்.. இருவரும் சென்னை வந்து இறங்கினோம்..


நிறைய புத்தகங்கள் கோவை மற்றும் நெய்வேலி யில் வாங்கியாச்சு எனவே குறிப்பிட்ட புக்ஸ் வாங்கலாம்னு முடிவு பண்ணி முதல்ல உயிர்மை பதிப்பகம் போனோம்.. செம கூட்டம், எல்லாம் இளைஞர்கள் , நானும் இளைஞன்தான் ( கலைஞரின் இளைஞன் அல்ல பா ).

அங்கு வா.மு.கோமுவின் சாந்தாமனியும் இன்ன பிற காதல் கதையும் வாங்கினேன், மேலும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நண்பருக்காக வாங்கினேன். அங்கு மனுஷ்யபுத்திரனை சந்தித்தோம்.

மேலும் தமிழினி வெளியிடான நெடுஞ்சாலை, ஜெயமோகனின் இரவு, வண்ணதாசனின் சின்னு முதல் சின்னு வரை, மேலும் சில சிறுகதை தொகுப்புகள் வாங்கினோம்.

ராமகிருஷ்ணன் காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற தொகுப்பில் சிப்பியின் வயிற்றில் முத்து என்கிற நாவலை அறிமுகபடித்திருப்பார், அந்த நாவலை நேஷனல் புக் டிரசட்ல் வாங்கினேன்.

இந்த புத்தக கண்காட்சி இனிமையாக அமைந்தது....