நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் தேனின் சுவையை உண்ர்ந்தான். வெயிலில் அலைந்து திரிந்து வியர்வை நெற்றிப்பொட்டில் முத்தமிட ஆரம்பிக்கும் போதே, மரத்தின் நிழல் ந்ம்மை அரவணைத்துக்கொள்வதுப் போல் ஒவ்வொரு வரியிலும் அந்த ஒட்டுதலை உணர்ந்துக்கொண்டிருந்தான்.
அந்த நாவல் ஒன்னும் காதல் கதையும் அல்ல. இவன் வாழ்ந்த பகுதியை மையமாக வைத்து வரும் கதை அது. எழுத்தாளர் சிவராமகிருஷ்ணனின்
" வேர்களாகும் விழுதுகள் " என்ற நாவலைத்தான் படித்துக்கொண்டிருந்தான்.
அவரது நாவல்கள் எப்பொழுதும் அடித்தட்டு மக்கள் மற்றும் இடைத்தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக பதிவுசெய்யும். விவசாயிகள் மட்டும்தான் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் என்ற நாவல் எழுதுபவர்களின் அரைத்த மாவை புளிக்க வைத்து, அவர்களை விட ஒரு இனம் இருக்கிறது அதுதான் கூலித்தொழிலாளி இனம் என்று தனது
நாவல்களில் முதன்முதலில் அடையாளம் காட்டினார். அவர் நாவல்களை படிக்கும் போது எதோ அவனது வாழ்க்கை, பக்கத்து வீட்டுக்காரனின் வாழ்க்கையை செதுக்கியதுப் போல் இருக்கும். வேர்களாகும் விழுதுகள் நாவலை பாதி அளவு படித்து முடிந்திருந்தான். படுத்துக்கொண்டும், புரண்டுக்கொண்டும் நாவலின் அத்தியாகங்களை அனுபவித்தான்.
அவன் சந்தோசங்களை கலைக்கிறது மாதிரி செல்போன் ஒலி எழுப்பியது. எடுத்துப்பார்த்தால் நண்பர் சுப்பையா.
“அண்ணா.. சொல்லுங்க...!”
“அப்புறம் விசயம் தெரியுமா... உங்க எழுத்தாளரு சிவராமகிருஷ்ணன் இறந்துட்டாரு தெரியுமா..?” குரல் இறங்கியிருந்தது.
ஒரு வினாடி திக்கென்று ஆகிவிட்டது.
“அய்யயோ.. அப்படியா.. எப்படி தெரியும்..? “
“பேஸ்புக்கில் பார்த்தேன்.. குணாலன் ஸ்டேடஸ் போட்டுருக்காரு..! முடிஞ்சா பாரு..” என்று அழைப்பை கட் செய்தார்.
ஹாயா கட்டிலில் படுத்து நாவல் படித்துக்கொண்டிருந்தவன், அதிர்ச்சி அடைந்து எழுந்து உட்கார்ந்தான். உண்மையிலே அவர் இறந்ததை நம்ப முடியவில்லை. கொஞ்ச நாள் முன்னாடிதான் தீராநதியில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். சுமார் பத்து வருடாங்களாக எழுதுவதை நிப்பாட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் அவரைப்பற்றி அறிவது மிகவும் கஷ்டம்.
பேஸ்புக்கில் சென்று அவர் இறந்ததை உறுதிச் செய்துக்கொண்டான்.
மனம் அவரை நோக்கிச் சென்றது. உறவினர் யாராவது இறந்தாக்கூட இவ்வளவு அனுதாபபட மாட்டான். ஆனால் இது அனுதாபம் இல்லை. அவனுள் ஒடிக்கொண்டிருந்த நரம்பை பிய்த்த மாதிரி இருக்கிறது.
அவர் இறப்பதற்கு முன்னாடி அவர் நாவலைத்தான் படித்துக்கொண்டிருந்தோம் என்று நினைக்கும் போது மனம் கிள்ர்ச்சியடைந்து வடிந்தது. சடாரென்று பரணி மேல் மூடி வைத்திருந்த அட்டைப்பெட்டியை இறக்கினான். அதில்தான் அவனது புத்தக புதையல் இருக்கும். ஒவ்வொன்றா தேடி அவரது ஆறு நாவலையும், ஒரு சிறுகதை தொகுப்பையும் எடுத்து வெளிய வைத்துவிட்டு அட்டைப்பெட்டியை மேலே எடுத்து வைத்தான். அவன் படித்துக்கொண்டிருந்த நாவல் சேர்த்து மொத்தம் ஏழு நாவல், ஒரு முழுத்தொகுப்பு.
ஒவ்வொரு புத்தகத்தையும் பிரித்துப் பார்த்தான். பின் அட்டைப்பக்கத்தில் அவரது சிரித்த முகம் படிந்திருந்தது. “ கரையாத கானகம் " என்ற நாவலின் முன்னுரையைப் படித்தான். அவனுக்கு பால்ய ஞாபகம் எல்லாம் வந்தது. வாசிப்பனுவம் என்பது நம் அனுபவத்தையும் தாண்டி அழகானது, ஆரோக்கியமானது. புத்தகத்தை அனைத்தையும் மூடி வைத்துவிட்டு ஒரு நிமிடம் சாமி போட்டா முன்னாடி பிராத்தினை செய்தான். மனக்கண்னில் அவர் முகம் மட்டும் தெரிந்தது. தனது டைரியை திறந்து அவர் அனுப்பிய லெட்டரை எடுத்து படித்தான். அதில் கூட அவரது எளிமைத்தான் வார்த்தையாக இடம்பெற்றிருந்தது. அவரது புத்தகங்கள், கடிதம் எல்லாத்தையும் எடுத்து ஒரு அவன் பேக்கில் வைத்தான். கடைசியா அவரது பேட்டி வந்த தீரா நதியில் அவரது முகவரி இருந்தது. அதையும் எடுத்துக்கொண்டான். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு செல்ல தீர்மானித்தான். அவரது முகவரி இவன் ஊரிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவசர அவசரமாய் புறப்பட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தான். பஸ் ஒரு மிகப்பெரிய எழுத்தாளார் இறந்து விட்டார் என்று தெரியாமல் அதுப்பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது.
****************************
ஜன்னோலரம் சீட். இவனுக்கு பிடித்ததுதான். ஆனால் இன்றைக்கு அது கொஞ்சம் கொடுமையாக இருந்தது. அடித்த குளிர்ந்த காற்றுக்கு முன்னால் இவனால் ர்டு கொடுக்க முடியவில்லை. கண்ணாடி ஜன்னலை மூடி விட்டு வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். பஸ்ஸில் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். எல்லாரும் முகமும் சோகம் படர்ந்திருந்ததாக உணர்ந்தான். தன் முகத்தையும் அவ்வாறு வைத்துக்கொண்டான். அவரது நாவல் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதுதான் இவன் படித்த முதல் நாவல். அதுக்கு முன்னாடி வெறும் சினிமா கட்டுரையும், ராஜேஸ் குமார் கதைகளையும் படித்துக்கொண்டிருந்த அவனுக்கு இந்த நாவல் அவனை வேறு ஒரு உலக்த்துக்கு இட்டுச்சென்றது. நூற்றாண்டு மண்டபம் பக்கத்தில் உள்ள் சிறுவர் லைப்ரரியில் ஒரு நாள் ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான். அதில் அவன் வசிக்கும் இடங்களான தெற்குப்பஜார், மார்க்கெட், முருகன்குறிச்சி என்று இருக்க அவனுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. இரண்டு நாளுக்குள்ளே அதை படித்து முடித்தான். அவனுக்கு புது யுகம் பிறந்தது. வாசிப்பு என்பது விரியடைய ஆரம்பித்தது. அதன் பின்னரே அவருடைய மற்ற நாவல்களெல்லாம் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தான். அதில் பாதி நாவல்கள் மறுபதிப்பு இல்லாமல் பழைய பதிப்பிலே காலேஜ் லைப்ரரியில் கிடைத்தது. ஒரு நாள் மாவட்ட மைய நூலகத்தில் அவருடைய பெயரை சொல்லி அவரது நாவல்கள் இருக்கிறதா என்று கேட்டப் போது அநத லைப்ரரியன் சிரித்துக்கொண்டே
“அவர்லாம் அப்ப எழுதினாரு, இப்பலாம் எழுதுரதில்லை.. அவருடைய நாவலும் எங்கேயும் கிடைக்காது.. நீங்க என்ன பிஹெச்டி பண்றீங்களா.. “ என்று நக்கலடித்தார். அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவரைப்பற்றி தேடல்தான் பல நல்ல எழுத்தாளர்களை அவனுக்கு அறிமுகப்படுத்தியது. வண்ணநிலவன், கல்யாண்ஜி, நாஞ்சில் நாடன் போன்றவர்களை. மேலும் மேலும் தேடத் தொடங்கினான். இலக்கிய வாசிப்பில் மூச்சுமூட்ட மூழ்கினான். அக்கரை, இக்கரை என்று பாராமல் நீந்த தொடங்கினான். வாழ்க்கையைப்பற்றி நல்ல பிடிமானம் கிடைத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகே அவருக்கு கடிதம் எழுதினான். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முப்பது பக்கத்திற்கு எழுதி அனுப்பினான். இரண்டு வாரம் கழித்து அவரிடம் இருந்து கடிதம் வந்தது. இரு பக்க க்டிதம்.
அதில் கடைசி வரி இவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது
“ வாசிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல.. கொஞ்சம் நிஜ உலகத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்..!! “ என்று எழுதியிருந்தார்.
சில நாட்கள் அந்த கடிதம் அவனை பாதித்தாலும், அதன் பின்னர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவருக்கும் இவனுக்கும் வயது வித்தியாசம் நாப்பதுக்கு மேல் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நம்மை அடையாளம் கண்டுகொண்டதே பெருசு மேலும் நமக்கு பிடித்தமானவர்களின் அறிவுரைப் போல் நினைத்துக்கொண்டு இலக்கிய கடலில் முத்து எடுக்க ஆரம்பித்தான்.
பல விசயங்களில் வாழ்க்கையை சமரசம் செய்ய ஆரம்பித்தான். சின்னதாக ஒரு வேலை தேடிக்கொண்டான். இலக்கிய கூட்டம் திருநெல்வேலியில் எங்கு நடந்தாலும் தேடிதேடி பார்க்க ஆரம்பித்தான். ஆனால் தான் என்றைக்கும் எழுதக் கூடாது என்று முடிவில் இருந்தான். எழுத்து ஒரு கலை, அது சில பேருக்குத்தான் வரும் நமக்கு அது வராது என்ற மன நிலையில் காலத்தை ஓட்டினான். எழுத்தாளர் சிவராமகிருஷ்ணன் போட்ட கடிதத்திற்கு பிறகு அவருக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று முடிவில் இருந்தான். அவரது நாவலில் வரும் இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பான்.
“இங்கத்தான் சுந்தரி, வள்ளியப்பனை செவிட்டில் அடிப்பாள்... “ என்று திருச்செந்தூர் கடலில் வைத்து நினைத்துக்கொ்ண்டான். அவரிடம் இருப்பிடம் தெரிந்தும் அவரைப் போய் பார்க்க தோணவில்லை. கடவுளை யாரும் நேரில் சென்று பார்க்க செல்வார்களா. அவர் மேல் மிகுந்த பாசம் கலந்த மரயாதை வைத்திருந்தான். தனது இலக்கிய வாசிப்புக்கு திறவுக்கோலே அவர்தான் என்பான்.
பஸ் ஒரு குலுக்கு குலுக்கிட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் நின்றது. அந்த குலுக்கலில் இவன் நினைவு மீண்டது. அவன் இறங்க வேண்டிய ஊர் வந்துவிட்டது. இறங்கி மதியம் சாப்பிட்டு விட்டு, அவரது வீட்டு முகவரி தேடி நடக்க ஆரம்பித்தான். தமிழின் மிகப்பெரிய எழுத்தாளர்க்கு மௌன அஞ்சலி செய்வதுப் போல ஊர் அமைதியாய் கிடந்தது. ஒவ்வொருத்தரிடமும் விசாரித்து வீட்டை அடைந்தான். இறந்த வீட்டுக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒருவேளை இறந்துவிட்டார் என்பது பொய்யாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. வீடு பெரிய வளவுப் போல இருந்தது. பக்கத்து வீட்டில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்கலாம் என்று தொண்டையைச் செறுமிக்கொண்டே
“ஐயா, பெரியவரே... சிவராம கிருஷ்ணன் சார் வீடு எங்க இருக்கு...” என்றான்.
பெரியவரும் கண்ணை கசக்கியப் படியே
“நீ எதுக்கு வந்துருக்கிங்க...அவரைப் பார்க்கிறதுக்கா..”
“ஆமாம் சார்..!!” கொஞ்சம் நம்பிக்கையோடு சொன்னான்.
"அவரையெல்லாம் பார்க்க முடியாது.. அவரு இறந்துட்டாரு.. “
நேரில் இந்த வார்த்தையை கேட்டவுடன் கொஞ்சம் கலக்கம் வந்தது.
“தெரியும் சார்.. அதான் வந்துருக்கேன்.. “
அவர் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே
“நீங்க எழுத்தாளரா...?”
“இல்லை...சார்..!!”
“அப்படினா..? சொந்தக்காரங்களா..?”
“இல்லைங்க ஐயா...நான் வெறும்...!!” அடுத்த வார்த்தை சொல்வதற்கு உள்ளே இருந்து குரல் வர "ஒரு நிமிசம் "என்று உள்ளே சென்றான்.
சிறிது நேரத்தில் வந்தார். கையில் சொம்பு நிறைய தண்ணீர் இருந்தது.
குடிக்க குடித்தார்.
“சொல்லுங்க... நீங்க...”
“நான் ஒரு வாசகன்... “என்றான்.
அவர் கண் அகல விரிந்தது. ரொம்ப ஆச்சரியத்துடன்
“வாசகரா..? ஆச்சர்யமாயிருக்கு.. அவரு எழுதுற நிப்பாட்டி.. ரொம்ப நாளாச்சே.. இப்பவும் வாசகரா...!! நீங்க எதுவும் அவரைப் பற்றி ஆய்வு எதும் பண்றீங்களா.. தம்பி ?”
எல்லாரும் என் இந்த கேள்வியே கேட்காங்கன்னு நொந்துக்கொண்டான்.
“இல்லை சார்.. அவர் எழுத்து எனக்கு ரொம்ப புடிக்கும்.. “
" நல்லது தம்பி..அவர் வீடு இதுதான்.ஆனால் அவர் பூர்விக வீடு இங்கிருந்து முப்பது கிலோ மீட்டரில் இருக்கிற குக்கிராமத்தில் இருக்கிறது.. அங்கத்தான் அவரை வச்சிருக்கு... நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கிளம்புவேன்.. எப்படி நீங்க கிளம்புரிங்களா.. என் கூட வாரிங்களா..” என்றார்.
“இல்லை சார்.. நான் பார்த்துக்கிறேன். . உங்களுக்கு ஏன் சிரமம்.. நான் போயிருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வெளிய வந்தான். பஸ் ரூட்டு அவர் கூறி இருந்ததால் அந்த டவுன் பஸ்ஸை புடித்தான்.. மறுபடியும் பயணம் ஆரம்பித்தது.
*********************
அந்த பஸ்ஸில் போகிறவருக்கு தெரியுமா, ஒரு சாகித்திய அகாடமி வாங்கின ஒருவர் இந்த பஸ் போகிற ஊரில்தான் இருக்கிறார் என்று.
எதேதோ சிந்தனை மனதில் வந்து ஆழ்த்தியது. கண்டெக்டர் கூட எந்த ஊரு என்று மட்டும்தான் கேட்டார், எதுக்கு போறிங்கன்னு கேட்கவே இல்லை என்று நொந்துக்கொண்டான். பக்கத்தில் இருந்தவர்கள் யாருமே இவனை கண்டுகிடவே இல்லை. இவனாகவே பக்கத்தில் இருந்தவரிடம் அந்த ஊர் எப்ப வரும் என்று கேட்டான்.
“நான் இறங்கினதுக்கு அடுத்த ஊரு..”என்று சாதரணமாய் சொன்னார்.
யாரைப்பார்க்க போறிங்க என்று கேட்பார் என்று எதிர்பார்த்தான். அவரும் கேட்க்வில்லை. ஒரு மணி நேரத்தில் போயிரலாம் என்று எதிர்ப்பார்த்த பஸ், போய் சேர இரண்டு மணி நேரத்திற்கு மேல ஆச்சு.
பஸ் விட்டு இறங்கினான். ஊர் ரொம்ப பட்டிக்காடாக இருந்தது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெட்டிக்கடையில் விசாரிச்சு அவர் வீடு செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். வயல் வரப்ப்புக்கிடையே நடந்தான். இந்த வரப்பில் உட்கார்ந்துலாம் எழுதிருப்பாருல என்று யோசிச்சுப் பார்த்தான்.
வானம் ஒரளவு கருத்துருச்சு. விறு விறுவென்று நடந்து அவரின் தெருவை அடைந்தான். தெரு சின்னதாக இருந்தது. வழி நடுக கிரேந்தி பூ்க்கள் துவப்பட்டிரு்ந்தது. ஒரு வேளை பாடியை எடுத்துருப்பாங்களோ என்று நினைத்துக்கொண்டே தெருவில் அந்த வழியே வந்த ஒருவரிடம் கேட்டான்.
“எடுத்துட்டுப் போயாச்சு..” என்று பதில் வந்தது. மயானம் எங்கே என்று விசாரித்து போக ஆரம்பித்தான். கண்ணுகெட்டின தூரத்தில்தான் வண்டி போயிட்டு இருந்தது. தகன மேடையில் எடுத்து வைக்கவும் பக்கத்தில் போய்விட்டான். தூர நின்னு பார்த்தான் அவர் முகத்தை....பக்கத்தில் பேர் தெரிந்த எழுததாளர்கள் நின்றனர். வாயில் துண்டை வைத்து பொத்திக்கொண்டு அழுதுனர். அவனும் அவ்வாறு தன் துக்கததை வெளிப்படுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. அவரது உடலுக்கு தீபம் ஏற்றப்பட்டு தகதகன்னு எரிய ஆரம்பித்தது. அதனை பார்க்க புடிக்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
வழியில் கிடந்த கிரேந்தி பூக்களை அள்ளிக்கொண்டான். உடனடியாக ஒரு சிறுகதை எழுதவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. அநத வயற்பரப்பிலே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு கிரேந்தி பூக்களையும் அவரது ஒவவொரு நாவலிலும் சொருகிக்கொண்டான். அது காய்ந்து சருகாவதற்குள் எழுதி முடிக்கவேண்டும் எனறு வேகமாக எழுத ஆரம்பித்தான். அநத சிறுகதை தான் " முடிவுரையிலிருந்து முன்னுரை..!”
************************
1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:
super!!!!
Post a Comment