தமிழினி பதிப்பகம் வெளியிட்ட பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் இருந்து
"நற்கருணைப் பந்தியில் சாராவை சந்தித்தான். முற்றிலும் புது சாராவை. ஒரு கையணைப்புக்குள் ஒடுங்கிவிடக்கூடிய சாராவை. பகல் வெளிச்சம் எத்தனை குரூரமானதென்று தன்னுடைய இன்னொரு முகத்தை அது இளித்துக் காட்டியது. தன் கண்களை அவன் நம்பவில்லை. அவள் அவனுகிட்ட பார்வையில் தூக்கமற்ற கண்களில் நேற்றைய பின்னிரவு பந்து போல் சுருண்டிருந்தது. சிரம் தாழ்த்தி ஆமேன்று நா நீட்டி நற்கருணையைப் பெற்றுக்கொண்டு தன்னிடத்துக்குத் திரும்பினான். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் அவனுக்கு அப்பமாக வழங்கப்பட்டது."
"ஒரு காதலனின் நிலைமை வேறு. அவன் எப்போதும் காதலுக்கு உண்மையாக இருந்தாக வேண்டும். காதலியைக் கண்டடைவது, தொட்டு சிணுங்கி அளவளாவது என கற்பனையின் எல்லா ஊற்றுகளையும் திறந்துக் கொண்டே போகவேண்டும். நிராசைகளுக்கும் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டும். எடுத்த காரியங்களிலெல்லாம் தொற்று வியாதிபோலத் தோல்வி தொற்றினாலும் முடியாது, கிடையாது போன்ற வார்த்தைகளை கிடப்பில் போட்டுவ...ிட்டு முன்னேற வேண்டும். மனதின் கடினப் பக்கங்களை உடைந்து போகாமல் நெகிழ்வூட்டிப் புரட்ட வேண்டும். புதுப்புது கனவுகளைத் துரத்திப் பிடித்து இரவோ பகலோ அன்புக்குள் அதை இயங்கச் செய்யவேண்டும். அவன்தான் காதலன்.!! அவனால் மட்டுமே காதலில் நீடிக்க முடியும். அருமையான ஒரு நாளில் காதலை உலகறிய நிரூபிக்கவும் முடியும். உறங்கிவிடக் கூடாது..!!"
மேலும்
"அவன் சாராவின் கண்களை தன் கட்டுப்பாட்டையும் மீறி ஏக்கத்தோடு நோக்கினான். அவை எரேமியா பதினைந்தாம் அதிகாரம் ஆறாம் வசனத்தை ஆத்திரத்தோடு உரைத்தது.
' நீ என்னை விட்டுப் பின்வாங்கிப் போனாய்
ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி,
உன்னை அழிப்பேன்.
நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப் போனேன்..!'
அவள் அலட்சியப்பார்வை அவன் கைகளை முதுகுக்குப் பின்னே கட்டி குப்புறத் தள்ளி முகத்தைத் தரையில் மூர்க்கமா உரசியது போன்ற எரிச்சலும் வேதனையுமடைந்தான்."
கன்னி நாவலை வாசித்து முடித்துவிட்டேன். பெருந்துயர் என்னை சூழ்ந்துக்கொண்டது. யாருமற்ற கடலில் அலைகளுக்கிடையே போராடுபவன் போல. நான் அலைக்கழிக்கப் படுகிறேன். அதிலிருந்து விடுபட சில நாட்களாகும்..
உலகின் உண்மையான காதலை ருசிக்க வேண்டும்.. அது மனதோடு கிளர்ச்சியை ஏற்படுத்தி, கண்ணில் கண்ணீராய் வழிந்தோட வேண்டும்..
பரிசுத்தமான அமலாவும், சாராவும் கண் இமைகளில் வந்து தீண்டுகின்றனர். தூக்கத்தை தொலைக்க வைக்கின்றனர்.
தீக்குள்
விரலை வைத்த
காதல் இன்பம்
இப்புதினம்.!
0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:
Post a Comment