ஈரோடு புத்தகக் கண்காட்சி - 2015
ஜோ.டீ.குரூஸ் -- உவரியில் சந்தித்த அனுபவம்
ஜோ.டீ.குருஸ் அவர்களுக்கு கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைத்த அன்று பேஸ்புக்கில் எழுதியது. மீள்பதிவு..
2011 ஏப்ரல் என்று
நினைக்கிறேன். ஊருக்கு சென்றிருக்கும்பொழுது நானும் நண்பர் சுப்பையாவும்
எழுத்தாளர் வண்ணதாசனை பார்க்க சென்றிருந்தோம். நான் அப்பொழுதுதான் ஆழி
சூழ் உலகு நாவலை வாசித்து முடித்திருந்தேன். ஒரு பிரமாண்ட வாசிப்பின்
சுவையை அந் நாவல் எனக்குக்கு அளித்திருந்தது. நான் அறிந்த பரதவர்
இனத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாக எந்த சமரசமும் இல்லாமல் அவர்களின்
கலாச்சாரத்தையும் கடலுக்கும் கரைக்குமான முரண்பட்ட வாழ்க்கையையும் நெல்லை
மாவட்ட உவரி கிராமத்தை கதைக்களமாகக்கொண்டு வரலாற்றின் தகவலோடும் நாவல்
படைக்கப்பட்டிருக்கும். வண்ணதாசனோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது பேச்சு
ஆழி சூழ் உலகு பற்றி வந்ததது. வண்ணதாசன் ஆழி சூழ் உலகு நாவலை விட கொற்கை
தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். கொற்கை அப்பொழுது நான்
வாசித்திருக்கவில்லை. அவர்தான் இந்த ஈஸ்டர் லீவிற்கு தன் சொந்த
கிராமத்திற்கு ஜோ.டி.குரூஸ் வந்திருக்கிறார் என்றும் முடிந்தால் சென்று
பார்த்துவிட்டு வாருங்கள், அவ்வளவு அற்புதமான மனிதர் என்றார். அடுத்த
நாள் ஏதோ ஒரு முடிவில் நானும் சுப்பையாவும் பாளையங்கோட்டையில்
திசையன்விளைக்கு பஸ் ஏறினோம். உவரி அந்தோணியார் கோவில் மிக பிரபலமானது.
அவரை பார்க்கமுடியவில்லை என்றாலும் நாவலில் வரும் அந்தக்கடற்கரையையும்
கோவிலையும் தெருக்களையுமாவது பார்த்துட்டு வருவோம் என்று முடிவுடன்
கிளம்பினோம். திசையன்விளையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
உவரிக்கு டக்கர் பயணம் சுவாரஸ்யாமாக இருந்தது. ஏப்ரல் மாத வெயிலுக்கு
தூரத்தில் இருந்தது வரும் ஈரக்கடற்காற்று ரம்மியமாக இருந்தது. உவரியில்
இறங்கி கடற்மண்ணில் நடக்கும்பொழுது இனம்புரியாத சந்தோசம். நாவலின்
பக்கங்களில் வாசித்து பரசவமடைந்த பிரதேசங்களை நேரில் பார்க்கும்பொழுது
எப்பொழுதும் எனக்கு சந்தோசம்தான். வண்ண நிலவனின் பாளையங்கோட்டை வீதிகள்,
கண்மணி குணசேகரனின் விருந்தாச்சலத்தையும், இமயத்தின் கோவேறு கழுதை
நாவலின் கழுதூர் கிரமாமும் அப்படித்தான். எப்பொழுதும் ஈர்ப்பாக
இருக்கும்.
அப்படி இப்படி விசாரித்து அவர் வீட்டை கண்டடைந்தோம். வீட்டுக்கதவை
தட்டியதும் யாரென்று கேட்பவரிடம் நாங்கள் வாசகர் என்று சொல்வதில் ஒரு
பெருமை இருக்கத்தான் செய்தது. கதவை திறந்தது அவரின் தாய். நாங்கள் எங்களை
அறிமுகப்படுத்தியது உள்ளே அழைத்து உட்கார செய்தார்கள். அங்கு அவரின்
மூத்த அக்கா தேன்மொழி டீச்சரும் இருந்தார்கள். அவர் வீட்டில் இல்லை. ஒரு
படபடப்பாக இருந்த எங்களுக்கு தேன்மொழி டீச்சரின் பேச்சுதான் எங்களை
சகஜநிலைக்கு திரும்ப வைத்தது. எனது வாசிப்பின் அனுபவத்தை சொல்லி
முடித்ததும் தேன்மொழி டீச்சரின் அற்புதமான பேச்சு ஆரம்பித்தது. தன்
தம்பியின் பால்ய வரலாற்றில் ஆரம்பித்து சொல்லமுற்படாத அவர்களின் குடும்ப
ரகசிய கதைகளின் வழியாக நாவல் வந்ததும் அவர்களின் சமூகமே கொடுத்த
நெருக்கடிகளையும் சிரிப்பும் பெருமிதமும் கலந்து ஒரு தேர்ந்தேடுத்த
கதைச்சொல்லிப்போல் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே சென்றார். ஒரு மணி நேரம்
எப்படி போனது என்று எங்களுக்கே தெரியவில்லை. மொழி லாவகம் அவர்களுக்கு
இயல்பிலே அழகாக அமைந்திருந்ததுப்போல. இவர் நாவல் எழுதினால் ஜோ.டீ.குரூஸை
விட காத்திரமாக ஒரு படைப்பை படைக்கலாம். கொஞ்ச நேரம் கழிந்ததும் வெளிய
சென்றிருந்த ஜோ.டீ.குரூஸ் தன் குடும்பத்தினரோடு வந்தார். அவருடைய அக்கா
எங்களை அறிமுகப்படுத்த ஒரு கடற்கரை கிராமத்தான் உடல்மொழியிலே எங்களை
வரவேற்றார். பேச்சிலும் அப்படித்தான். தன் தாயை " ஏய் ஆத்தா, இங்க
பார்த்தியா.. பெரிய புக்க எழுதிட்டன்னு சொன்ன.. இப்ப பார்த்தியா என்ன
பார்க்க வந்திருக்காங்க.." என கேலியோடு " சொல்லுங்கய்யா..." என்றார்
வாஞ்சையாக.
நாவல் அனுபவத்தை நாங்கள் தெரிவிக்க எந்த வியப்பும் பெருமையும் கொள்ளாமல்
இயல்பாக எங்கள் பேச்சை கவனித்தார். மிக பெருமை அவரை வெட்கப்படவே வைத்தது.
நாவல் பற்றி நாங்கள் கேட்க அவர் பேச ஆரம்பித்தார். நான் ஒண்னும்
இலக்கியவாதியெல்லாம் கிடையாது, நான் எழுத வந்த விபத்துதான். தமிழினி
வசந்தகுமாரின் முயற்சியினாலே இது சாத்தியமாச்சு என்றார். ஆழி சூழ் உலகு
நாவல் ஒரு மாத காலத்தில் எழுதிமுடித்திருக்கிறார். இந்த நாவலின் கதை நான்
பார்த்து, கேட்டு, வியந்து இக்கிராமத்தின் உண்மைக்கதை என்றும், நாவலின்
கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை மாந்தார்கள்.தன் தாய் ஒரு கதாபாத்திரம்,
தந்தை, தாத்தா என அனைவரும். படித்து வியந்த கதாபாத்திரத்தை நேரில்
தரிசித்தோம். நாவலில் எஸ்கலின் என்ற கதாபாத்திரமே அவரின் தாய். நாவலின்
பிரதான மனிதன் தொம்மந்திரையே அவரின் தாத்தா. நான் ஒவ்வொரு
கதாபாத்திரத்தின் பேரைக்கேட்க கேட்க அவர் யார் யாரென்று சொல்லிக்கொண்டே
வந்தார். இருப்பிடங்களைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். இந்த
தெருவில்தான் கதையின் முடிவு பெரும் சண்டையில் முடியும் என்றார். தான்
சார்ந்திருக்கும் சமூகத்தின் பெருமைகளைப்பற்றி பேசாமல் அவர்களின் ஒழுக்க
கேடுகளையும் திருச்சபையை விமர்சனம் செய்ததினாலும் ஊரே விட்டு விலக்கி
வைக்கப்பட்டிருக்கிறார். மீனவசமுதாயத்தின் வாழ்வினை மற்ற நில மக்களும்
தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும், குலப்பெருமை பேசி
அழிந்துக்கொண்டிருக்கும் பரதவ சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்குமே ஆழி
சூழ் உலகு நாவல் படைக்கப்பட்டிருப்பதாக கூறினார். நான் அப்பொழுது கொற்கை
நாவல் வாசித்திருக்கவில்லை. கொற்கை நாவல் ஐந்தாண்டு உழைப்பில் பெரும்
ஆராய்ச்சிக்கிடையே உருவாக்கியிருக்கிறார். எல்லாரும் அவரவர்களின் சமூக
பிரதிநிதி, நான் என் சமூகத்தை மாற்ற முயல்கிறேன். மாற்றம் நிகழும்
கண்டிப்பா நிகழும் என்ற நம்பிக்கை மட்டுமே அவரின் பேச்சின் முழுவதும்
இருந்தது. சுமார் மூன்று மணி நேர சந்திப்பின் பின்பு கிளம்ப மனம்
இல்லாமல் விடைபெற்றோம். எந்த ஒப்பனைகளும் அற்ற ஒர் இயல்பான கலைஞனை
சந்தித்த சந்தோசம் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. சமூகப்போராளிகள்
இலக்கணத்துக்கு மறு வடிவம் கொடுத்திருக்கிறார் ஜோ.டீ.குரூஸ். மொழியையை
எந்த சமூகம் தனதாக்கி கொள்கிறதோ அச்சமூகமே முன்னேற்றுப்பாதையில் செல்லும்
என்பதே விதி. இந்த சாகித்ய விருதின் மூலம் ஜோ.டீ.குரூஸ் தன் சமூகத்தை தலை
நிமிர வைத்துள்ளார். கடற்கரைச்சமூகங்களுக்கு பெருமைத்தேடி
தந்திருக்கிறார். அவரின் ஆசைப்படி அவரின் சமூக மெல்ல மாறும். மொழியின்
பிடியில் அவர்களும் கரை ஒதுங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவருக்கு
வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். வண்ணதாசன் சொல்லியதுப்போல அவர்
அற்புதமான மனிதர் மட்டுமல்ல, அதிசயமான மனிதர்...!!
- ஜெபா
அக்னி நதி நாவல்
குர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி என்னும் உருது மொழிபெயர்ப்பு நாவலை படித்து முடித்தேன். காலமென்னும் நீண்ட நதியின் இருபது நூற்றாண்டு வாழ்க்கையை தான் கதையின் மையம். மதமென்னும் மாயையில் பேரரசுகள் சரிவையும், மனித ஆன்மாக்களின் நுட்பமான மனதையும் திறந்து காட்டுகிறது இந்நாவல்.
கொளதம நீலம்பாரன் என்னும் சிற்ப கலைஞனின் ஆசிரமக்கல்வியில் கதை ஆரம்பிக்கிறது.மிக நீண்ட சரயு நதியை நீந்தி வருகிறான்.ஆசிரமக்கல்வி பயில்வோர் யாரும் படகில் ஏற கூடாது. காலமோ கிமு ஒன்றாம் நுற்றாண்டு, புத்த மதம் ஆழமாக பரவிவரும் காலக்கட்டம். எங்கும் புத்த பிக்குகளாக மத மாற்றம் நடந்துக்கொண்டே இருக்கிறது. கொளதமனுக்கோ புத்த கோட்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் கலையின் உச்ச அடைய வேண்டும் கூடவே சம்பா என்னும் அரச பணிப்பெண்ணின் மீது மையல். குப்த பேரரசு மகத நாட்டு பாடலிபுத்திரம் என்னும் பாட்னாவை அபகரிக்க வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. கொளதமனோ எந்த தத்துவ நிலையை எதிர்த்தானோ அத்தத்துவ நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆட்சியின் பிடிக்கும் அதிகாரத்தின் போட்டியில் சாமானியனான கொளதமன் கரைந்து போகிறான்.கூடவே அவனுடைய காதலும்..
கால வெள்ளத்தில் நதி வேகமாக ஓடுகிறது. மீண்டும் அடுத்த கதை, அதே நதிக்கரையில் ஆரம்பம். காலமோ பதினாறாம் நுற்றாண்டு. கமாலுதீன் என்னும் இளைஞன். சுல்தான் சாம்ராஜ்ஜியத்தின் பணியாளன். பழமையான நூல்களை தேடி பயணத்தில் இருப்பவன். அவனுக்கு பாரத தேசம் புது வியப்பை தருகிறது. தன் தாய் நாடு பாக்தாத்தை விட இத்தேசம் அழகானது என்று கருத்துடையவன். கங்கை நதிக்கரையின் போக்கிலே இவன் பயணம் அமைகிறது. மீண்டும் மதத்தை புறந்தள்ளிவிட்டு ஆட்சி பிடிக்கும் அதிகாரம் உள் நுழைகிறது. மொகலாயர்கள் சுல்தான்களை வீழ்த்தி அதிகாரம் பெறுகிறார்கள். கமாலுதீன் மொகலாயர்களை எதிர்த்து போரிடுகிறான். போரினால் வாழ்க்கை மாறுகிறது. நாடோடி இசையினை தேடி தேசமெங்கும் பயணிக்கிறான். காசியின் கங்கை கரையில் அலைகிறான். மீண்டும் நதியின் ஓட்டத்தில் கரைந்து போகிறான். கமாலுதீன் கதை நாவலின் அடர்த்தி பகுதிகள். தத்துவங்களும் விளக்கங்களுமாக நிறைந்தவை. மீண்டும் ஒரு இளைஞன் வருகிறான், பெயர் சிரில் , காலமோ பதினெட்டாம் நூற்றாண்டு. கல்கத்தா கரையில் கதை நிகழ்கிறது. வியாபார செய்ய வந்த சிரில் ,அரசின் அங்கமாக மாறுகிறான். இவனும் கால வெள்ளத்தில் கரைந்து மீண்டும் கதை சுதந்திர இந்தியாவின் முன் காலகட்டத்தோடு முடிவடைகிறது.
காலம் முழுவதும் அதிகாரத்துக்கு மட்டுமே போட்டியும் சண்டையும், அமைதியாக ஒடிக்கொண்டிருக்கும் நதி அது பாட்டுக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது..காசி, பாட்னா,லக்னோ,அயோத்தி,கல்கத்தா,தில்லி போன்ற பழய இந்திய நகரங்களின் சித்திரங்கள் நாவலை படித்து முடித்தவுடன் நம்மில் இடம்பிடிக்கும். ஏராளமான வரலாற்று தகவலும் கதாமாந்தர்களின் ஆளுமையும் நாவலின் பலம்..
சொல்ல சொல்ல எவ்வளவோ இருக்கிறது மானுட வாழ்வியலைப்பற்றி. வரலாறு என்பது மீக நீண்ட நதியின் பயணம், நதியின் கசிவில் அவிழும் மனித வாழ்வின் கதைகள் ஏராளம். நதியில் மூழ்க மூழ்க மனசு நிறைகிறது. வாசிப்பின் முடிவில் வாசகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்திய மொழிகளில் மிக முக்கிய நாவல்.
அக்னி நதி
நேஸனல் புக் டிரஸ்ட்
கர்ணனின் கவசம் நாவல்- வாசிப்பனுபவம்
கர்ணனின் கவசம் என்ற 250 பக்க நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன். அந்த அளவுக்கு வேகமான நடை, விறுவிறுப்பான கதை. தமிழில் வெளிவந்த சயின்ஸ் பிக்ஸ் நாவல்களின் எண்ணிக்கை மிக குறைவு. கர்ணனின் கவசம் சயின்ஸ் பிக்ஸன் என்ற வரையறுக்குள் வருமா என்று தெரியவில்லை.ஆனால் முழுக்க முழுக்க பேண்டஸி கதை. தமிழகத்தின் ஆதிக்கால வரலாறு , பாரத நாட்டு பூர்விகம் என நமக்கு தெரிந்த கதைகளை ஆதாரமாக கொண்டுள்ளதால் கர்ணனின் கவசம் தனித்து நிற்கிறது.
மகாபாரத கதையில் வரும் கர்ணன் அற்புதமான கதாபாத்திரம். அவனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துவதற்காக கிருஷ்ணனின் திருவிளையாடலால் கர்ணனின் கவசத்தை இந்திரன் ஒரு அந்தணன் வேடமணிந்து வந்து கர்ணனிடம் வாங்கிச் சென்றுவிடுவான்.
இதனாலும் மேலும் பல சூழ்ச்சிகளினாலும் போரில் உயிர் துறப்பான் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால் நாவல் வேறு தளத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
இந்திரன் அபகரித்த கவசம் எங்குள்ளது? கர்ணனின் உடல் எங்குள்ளது ? கர்ணனின் கவசத்தினில்தான் சூரியனை ஊடுருவும் தனிமம் உள்ளது என்று கவசத்தை தேட வரும் ஜெர்மனிகாரன், சீனாக்காரன், கவசத்தை பாதுகாக்கும் மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர்கள், மறுபடியும் போர் நடத்த தயாராக இருக்கும் கவுரவர்கள், சோழ மன்னன் ஆதித்ய கரிகாலன் என வரலாற்று நாயகர்களையும் நிகழ் கதைகளும் இணைத்து நாவல் படிக்க படிக்க சுவாஸ்யமாக இருக்கிறது.
மகாபாரத கதையும், பொன்னியின் செல்வன் நாவலும்,கொஞ்சம் தமிழக வரலாறும் தெரிந்தால் நாவலுடன் ரொம்ப ஒன்றிவிடலாம்.
நாவலில் எல்லாரும் வருகிறார்கள், எல்லா இடங்களும் வருகிறது. வியாசர் வருகிறார், கிருஷ்ணன், துரியோதனன்,சகுனி,குந்தி,திரளபதி, ஆதித்ய கரிகாலன், இந்திரன், பீஷ்மர் , நவகிரகங்கள் மேலும் மதுரை கோவில், சிதம்பரம்,காஞ்சி கோவில்,தஞ்சை கோவில், சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் , தூவாரகை, திரிசங்கு சொர்க்கம் , வைகுண்டம் போன்ற வரலாற்று இடங்களும் வருகிறது.
இதுமட்டும்தான என்று பார்த்தால் கணித சூத்திரங்கள், பிபனாசி எண்கள் தியரி, விட்டத்தின் சூத்திரம் மேலும் மேலும் இழுத்துக்கொண்டு செல்கிறது நாவல்.
குங்குமத்தில் தொடராக வந்து புத்தக வடிவம் பெற்றுள்ளது. இன்னும் கொஞ்சம் கவனமாக எடிட் செய்திருக்கலாம். கே.என்.சிவராமன் எல்லா தளத்திலும் ஆராய்ந்து நாவலை சிறப்பாக எழுதியுள்ளார்.
தமிழக சிற்பக்கலைகள், கோவில் தள வரலாறு , அறிவியலின் கூறுகள், பழமையான சாஸ்திரங்கள் என தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது நாவலில்.
நம் மண்ணுக்கும் வரலாறு இருக்கிறது, நம்மிடமும் கதைகள் கொட்டிக்கிடக்கிறது. இம்மாதிரியான முயற்சியின் வழியே நிறைய படைப்புகள் வெளி வரவேண்டும்.
கர்ணனின் கவசம்
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
விலை 200
மிளிர் கல்
மிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை .
மிளிர் கல் :
கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள்
பிரஸ்யஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்ற
ரத்தினக்கற்கள் விளையும் பூமி. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று
அவ்விளைநிலங்களை ஆக்கிரமித்து கற்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கற்களை
ஏற்றுமதி செய்ய திட்டமிடுகிறார்கள். இதற்காக பழங்கால வணிகப்பாதைகள் பற்றி
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீகுமார் என்ற பேராசிரியரை அவருக்கே தெரியாமல்
இவ்வேலையில் ஈடுபடுத்துக்கிறது அந்நிறுவனம். வடமாநிலத்தில் வளர்ந்த
தமிழ்ப்பெண் முல்லை. தன் தந்தையின் மூலம் சங்ககால இலக்கியங்களை கற்றவள்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி மேல் கொண்ட மிகுந்த ஆர்வம்
காரணமாக சிலப்பதிகார கதை நிகழ்ந்த இருப்பிடங்களை ஆவணப்படமாக்க
வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரி இயக்க கொள்கையின் பிடிப்பில் அலையும் நவீன்
என்ற நண்பனுடன் பூம்புகார் வருகிறாள். அங்கு பேராசிரியருடன் ஒன்று
சேர்ந்து சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த சாலையில் பயணம் செய்து
சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பூம்புகார் காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டத்தில் நிறைவு செய்வதுதான் கதை. அதிக
விறுவிறுப்புடன், சுவாரஸ்யம் குறையாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன்
பதிவு செய்துள்ளார் முருகவேள். ஏற்கனவே எரியும் பனிகாடு நாவலை
தமிழ்ப்படுத்தியவர். மிளிர்கலில் சிலப்பதிகாரத்தை
எளிமைப்படுத்தியுள்ளார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏற்றுவோர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம்
உணர்த்தும் மூன்று அறநெறிகளாகும். இதன் அர்த்தத்தை மாணவன் ஆசிரியரிடம்
வினவுவதுப் போல் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வினவ வைத்து
இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தம் தெரிவிப்பதாக நாவலில் பல
காட்சிகள் வரும். நாவலின் பலமான பகுதிகள் அவை. குறிப்பாக கோவலனும்
கண்ணகியும் சோழ நாட்டை விட்டு சென்றதும் மிகப்பெரிய வணிக குடும்பத்தில்
பிறந்த அவர்களைத்தேடி யாரும் வராததும், கண்ணகியை ஏன் சேர மன்னன்
தெய்வமாக்கினான் ? உண்மையில் சிலப்பதிகாரம் நம் நிலத்தில் நடந்ததா ? என்ற
வினாக்கள் இக்காப்பியத்தை படிக்கும் எல்லாருக்கும் ஏற்படும் ஐயங்கள்.
இதற்குப்பதில் நாவலில் இருக்கிறது. பதில் வெறும் ஒற்றை வார்த்தையாக
இல்லாமல் தனிக்கவனத்துடன் ஆராயப்பட்ட பதில்களாக இருக்கும்.
பூம்புகாரின் ஏழுநிலை மாடங்களையும் கரைபுரண்டு ஓடும் காவேரியையும்
எதிர்ப்பார்த்து வந்த முல்லைக்கும் தற்போது இருக்கும் பூம்புகாரின்
தற்கால நிலையைக் கண்டு கலங்கும் நேரத்தில் ' உண்மையான வரலாறு
வேண்டுமென்றால் மக்களிடம் கேள் ' என்று பேராசிரியரின் பதில் கள ஆய்வு
எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதாகும். பேராசிரியருக்கும்
முல்லைக்கும் உண்டான நிறைய உரையாடல்கள் நாவலின் உவப்பனதாகும். ஏன் சார்,
எதுக்கு சார், இப்படி இருந்திருக்கலாமோ என்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் முல்லை சீக்கிரம் நம் மனதில் இடம்பெற்றுவிடுகிறாள்.
கோவலன் என்ற பெயர் கோவலர்கள் என்ற இனத்தின் பெயராக இருக்கலாம். கொங்கு
நாட்டில் வாழ்ந்த ஆடு மேய்க்கும்
பழங்குடி இனத்தின் பெயர் கோவலர்கள் என்றும், அவர்கள்
சேரப்புமலைப்பகுதியில் வாழ்ந்ததாகவும் அந்தமலைதான் இப்போது காங்கேயம்
அருகில் உள்ள சிவன்மலை என்றும், பதிற்றுப்பத்தில் கூட கோவலர்கள் என்ற
சொல் இடம்பெற்றிருக்கிறதாகவும், கொற்றவை கோவிலில் கண்ணகியைப் பார்த்து
கொங்கர் செல்வி என்று எய்னர்களால் பாடப்படுகிறாள். கோவலன் கண்ணகி
மூதாதையர் ரத்தின வியாபாரம் காரணமாக சோழ நாட்டுக்கு
இடம்பெயர்ந்திருக்கலாம், உண்மையில் அவர்கள் கொங்கு நாட்டுப்பகுதியை
சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியிலும் முருகவேள் ஆராய்ச்சி
நடத்தியுள்ளார்.
அவர்கள் பயணம்தான் எவ்வளவு சிறப்பானது. வடகரை காவேரி, உறையூர்,
நெடுங்குளம் சிறுமலை, மேலூர், மாங்குளம் சமணக்குன்றுகள், அழகர் மலை,
மதுரை மூதூர், கோவலன் பொட்டல், கம்பம் கண்ணகி கோவில், திருச்சுர்,
கொடுங்களூர் பகவதி கோவில் என நாவல் பல பிரதேசங்களின் பகுதிகளை தொட்டு
இட்டுச் செல்கிறது.
சமண இரவுத்தங்கலில் ஏற்படும் உரையாடல்களாக இருக்கட்டும் , மத வரலாறு,
இனவரையியல் பற்றிய பேச்சுகளாகட்டும், வணிக வரலாறு, இடதுசாரிக்கொள்கையின்
கருத்துக்கள், நிகழ்கால அரசியல் விம்ர்சனம், ராஜஸ்தான் கல்பட்டை
தீட்டுபவர்கள் பற்றி, உயிர்ப்பலிகள் பற்றி, அரவான் வழிபாடு,அடிமை
வரலாறுகள், ஆரிய திராவிட தோற்றம், சமண கழுவேற்றம், கோசோம்பி
கருத்துக்கள், தாய்தெய்வ வழிப்பாட்டு நம்பிக்கைகள், கொடுமணல் நாகரிகம்,
சங்ககால இலக்கியங்கள்
ர், கொடுங்களூர் கண்ணகி கோவில் வெளிச்சப்பாடுகள் என ஒட்டுமொத்த தர்க்க
கருத்துக்களின் வழியே நாவல் புதுபுது பரிமாணம் எடுத்து மிளிர்கல்லா
ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது.
ஓர் படைப்பிலக்கியத்தின் வெற்றி எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது
என்றால் வாசிப்பின் முடிவில் ஏற்படும் வெறுமையா? அல்லது அதன்பின்
உருவாகும் அக எழுச்சியா என்று சொல்லிவிட முடியாது. எந்தப்புள்ளியில்
படைப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியிட்டு கூறமுடியாது.
படைப்பின் மீறல்களையும் தர்க்க ரீதியாக ஆராயவும், கதையின்
இருப்பிடங்களையும் கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் வாசகனை தேடத்தொடங்க
வைக்க வேண்டும். அந்த வகையில் இளங்கோவடிகள் வெற்றி பெற்றுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை ஒர் வாசகன் மனநிலையில் ஆராய்ந்து, கதை
நிகழ்ந்த தற்கால இருப்பிடங்களை தேடி அலைந்து, கண்ணகி ஏன் தெய்வமானாள் ?
என்ற ரீதியுலும் சிலப்பதிகாரம் என்ற படைப்பை விமர்சித்து சிறந்த படைப்பை
தந்துள்ளார் முருகவேள்.
-- ஜெபஸ்டின் ரொட்க்ஸ்.பி
மிளிர் கல்
இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை 200
பாளையங்கோட்டை வவுசி மைதானம்
பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தை நான் முதன்முதலில் பார்த்தது மூன்றாவது படிக்கும்போதுதான் என்றுதான் நினைக்கிறேன். இதற்கும் நான் படித்த பள்ளி மைதானத்தின் அருகிலேதான் இருக்கிறது. ஒரு நாள் பள்ளி முடிந்ததும் ஒருவன் கத்தினான்
" யோழ், வவுசி கிரவுண்டுல சூட்டிங்க நடக்குல.. சரத் வந்திருக்கானாம்...பார்க்க வாங்கல..."
"என்ன படம்ல... " என்று கேள்விக்கு பதில் கூறாமல் முருகன் கோவிலைத்தாண்டி பறந்துட்டான். அந்த பெயர் தெரியாத நண்பன் சரத்குமார் ரசிகன். அப்போது சரத்குமாருக்கும் கார்த்திக்கும்தான் எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும். நான் தனியா ஆளாக அரக்கு கலர் டவுசரோடு ஒடினேன். கையில் புத்தகப்பை வேற சுமையா இருந்துச்சு. அடிச்சு பிடிச்சு ஒடினேன். அந்த ரோடு பூராவும் ஜனக்கூட்டம். மைதானத்தின் நடுவில் பெரிய மேடைப்பந்தல் போட்டுருந்தார்கள். மைதானம், கேலரி முழுவதும் தலைகள் நிரம்பி வழிந்தது. நான் கூட்டத்தின் நடுவே புகுந்து மேடையருகே நின்றுக்கொண்டு அண்ணாந்துப்பார்த்தேன். மேடையில் விசு, நக்மா, ஊர்வசி, ஆனந்தராஜ், வெள்ளை வேட்டியில் சரத்குமார் நின்றுக்கொண்டிருந்தனர். சரத்குமார் மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க தீடிரென்று நெஞ்சில் யாரோ சூட , ரத்தம் வந்து சாய்ந்து விழ, நக்மா வந்து பிடிக்க, கூட்டம் மிரண்டு ஒடுகிறார்கள். நானும் கீழே விழுந்து டவுசர் கிழிச்சு ஏறிக்குதித்து ரோட்டுக்கு வந்து மறுபடியும் மேடையை எட்டிப்பார்த்தேன். சரத்குமார் நக்மாவிடம் சிரிச்சு குலாவிட்டு இருக்காரு, ஊர்வசி கண்ணுல கிளிசிரின் போடுது. மறுபடியும் மைதானம் முழுவதும் கூட்டம் அதே மாதிரி நிக்குது. பக்கத்துல இருக்குற ஒருத்தன் சொல்றான் "சவத்து பயலுவ, இத எத்தன தடவதான் எடுப்பானுவோ..வேற வேல மயிரு இல்ல.. வால போலாம்.." நான் அந்த அண்ணனிடம் " என்ன படம்னே இது.." என்றேன். அவரு என்னை சட்டை செய்யாமல் நடையைக்கட்டினார். அடுத்த நாள் தந்தி பேப்பர்ல அரவிந்தன்னு படம் பேர் வந்துருந்துச்சு.
நான் மேடைக்கிட்டத்தான் நின்னுட்டு இருந்தேன். எப்படியும் படத்துல வருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். பின்னர் ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்க்கும்போதுதான் நான் அந்த காட்சியில் இல்லை என்று தெரிஞ்சது. டவுசர் கிழிஞ்சதுக்கு வீட்டுல அடிலாம் வாங்கினேன். எனக்கும் வவுசி கிரவுண்டுக்கும் முதன்முதலில் உருவான நினைவு இதுதான். 1900ங்களில் கர்சன் மைதானமாக அழைக்கப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை நகர சேர்மன் மகாராஜ பிள்ளை அவர்களால் வ.வு.சி மைதானம் என 1966 இல் மாற்றப்பட்டது. ஹாக்கி கிரவுண்ட் மாதிரியில் செவ்வகமாக இருக்கும். சுதந்திர தினத்துக்கு கலெக்டர் இங்கத்தான் கொடி ஏற்றுவார். இருபக்கமும் சேர்த்து ஆறு கேலரிகள் . இரு மைதானமாக இருக்கும். மைதானத்தின் இன்னொரு பக்கத்தில் இப்பொழுது இறகு பந்து உள் தளம், உடற்பயிற்சி தளம், பள பளக்கும் வவுசி சிலை எல்லாம் வந்துட்டு. முன்னாடிலாம் கருப்பு வவுசி சிலை மட்டும்தான் காக்கா எச்சத்தோடு நிப்பாரு. சிலை மேல ஏறி நின்னுட்டு சிலை தலையை தடவிகிட்டு பயலுவ நிப்பார்கள். பெரிய கிரவுண்ட்ல மேட்ச்சுக்கு பிட்ச் கிடைக்கலன சின்ன கிரவுண்ட்டுக்குதான் வரனும். இங்க அடிக்கிற சிக்ஸ் எதிர்த்தாப்புல இருக்குற எல்ஐசி ஆபிஸுக்கு ஈசியா போகும். ஆஃப் சைட் அடிச்ச திருவனந்தபுரம் ரோட்டுல இருக்குற தேவி டீகடையின் கண்ணாடியை உடைக்கும். அதனால எப்பொழுதும் பெரிய மேட்ச்சுன்னா பெரிய கிரவுண்ட் பிட்ச் பிடிக்க பெரிய போட்டி நடக்கும். காலையில் பத்து மணிக்கு பெட் மேட்ச்சுன்னா ஏழு மணிக்குலாம் வந்து ஸ்டிக்க நடனும், ஒருத்தன் காவல் நிக்கனும். கிரவுண்ட் பக்கத்துலதான் சிவா வீடு. அங்கத்தான் ஸ்டிக், பேட், பால் எல்லாம் இருக்கும். நான் காலையிலேயே போய் ஸ்டிக் நட்டி , கூவை மாதிரி பிட்ச் காவலுக்கு கேலரியில் உட்கார்ந்திருந்த காலம்லாம் உண்டு.
வேற எந்த ஊரிலும் இந்த மாதிரி விளையாடுவார்களா என்று தெரியவில்லை, பாளையங்கோட்டை வவுசி கிரவுண்டில் மட்டும் விட்டா அவுட் என்று சொல் மிகவும் பிரபலம். பொதுவாக இரண்டு டீமுக்கு ஒவர் மேட்ச்னா மட்டும்தான் ஸ்டிக் நட்டு விளையாடுவோம். மத்தப்படி விட்டா அவுட்தான்.
விட்ட அவுட்னா பேட் கீழே வைத்து இரு பக்கத்திலும் கல் வைத்துவிடுவோம். இரு கல்லுக்கு நடுவில்தான் பேட்டிங்க். உடம்பில் பட்டாலும் அவுட், இரு கல்லுக்கும் நடுவில் பந்தை விட்டாலும் அவுட். ரன்லாம் ஒடி எடுக்க முடியாது, ஃபோர், சிக்ஸ் மட்டும்தான். ரொம்ப நல்லா இருக்கும். வெறிக்கொண்டு ஆடுவோம். இந்த மாதிரி விளையாடி பயிற்சி எடுத்ததினால் என்னவோ எந்த ஸ்டிக் மேட்ச் நடந்தாலும் ஒரு பந்தையும் உள்ளே விடாமல் ஆடுவார்கள் வவுசி மைதானத்தின் வீரர்கள். மைதானம் முழுவதும் குழு குழுவாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். பந்து எந்த மூலைக்கு போனாலும் " பாஸ், பால் " என்று கத்தினால் போதும் பந்து கிளீன் த்ரோவில் நம் கைக்கும் வரும்.
பௌலிங்க் போட்டு விளையாடுவதற்கு முன்பு த்ரோ மேட்ச்சில் நான் சிறந்த காட்டான். நல்ல சுத்துவேன். எல்லாம் பந்துகளும் பறக்கும். எல்லாரும் என்னை காட்டான் என்றுதான் சொல்லுவார்கள்.
எட்டாவது படிக்கும் வரை நேருஜி கிரவுண்டில் விளையாடுவோம். வவுசி கிரவுண்டில் இடம் இல்லனா இங்கத்தான் மேட்ச் நடக்கும். இது கிரவுண்ட் மாதிரி அமைப்பா இருக்காது. பாளையங்கோட்டை நகராட்சி அலுவலகம் நேருஜி கிரவுண்ட்க்கு பக்கத்துல இருக்கு. நல்ல மரம் நிழலா இருக்கும். தண்ணி குடிக்க கடை கடையா அலைய வேண்டாம். நகராட்சி சுவரைத்தாண்டி ஏறிக்குதித்து தண்ணி குடிச்சிட்டு வருவோம். அதுக்கு பின்னால் எங்கள் பள்ளி. மதியம் சாப்பிடறதுக்கும் இந்த நகராட்சி அலுவலகம்தான்.
புளிய மரமும், கொடுக்காபுளி மரம் அதிகமா நிக்கும். புளிப்பு சுவையுடன் கிரிக்கெட் விளையாடுவது தனிசுகம். இன்னொரு பக்கம் நூற்றாண்டு மண்டபம். அங்கேயும் சில நேரம் அடிக்கிற பந்து போயிரும். நூற்றாண்டு மண்டபம் 1870களில் கட்டப்பட்டதுன்னு நினைக்கிறேன். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கால்டுவேல் இப்படி சொன்னாராம் " தமிழ் நாட்டில் இருக்கிற மொத்தம் இருக்கிற கிறிஸ்துவர்களில் அறுபதுக்கு சதவீதம் பேர் தின்னேல்வேலி( திருநெல்வேலி ) மாவட்டத்தில் இருக்கிறார்கள். இன்னும் இது அதிகமாக வேண்டும் என்று" . நேருஜி கிரவுண்டில் இப்பொழுது அடிக்கடி கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றில் பாளையங்கோட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. இன்னும் பல இடுக்குகளில் ஒளிர்ந்திருக்கும் வரலாற்று நிகழ்வின் இடங்கள் பாளையங்கோட்டையில் நிறைய உண்டு. பொதுவாக பாளையங்கோட்டை கிறிஸ்துவ நகரம் என்று அழைத்தாலும் பல தாய் தெய்வ வழிபாட்டு எச்சங்கள் இன்றும் இருக்கிறது. தசரா விழாவிற்கு பாளையங்கோட்டை களைகட்டிரும். மைசூருக்கு அப்புறம் இங்கத்தான் தசரா பிரபலம். சுமார் பதினைந்து அம்மன் கோவில் சப்பரங்கள் பாளையங்கோட்டை நகரை அழகாக வலம் வந்து , சூரசம்ஹாரத்துடன் நிறைவேறும். மேலும் ஆயிர வருடங்களான வைணவக் கோயில் இருக்கிறது. கோபாலசாமி கோவில் என்று அதனை அழைப்போம். கோபாலசாமி கோவில் பக்கத்திலும் மைதானம் உண்டு. அங்கேயும் விளையாடுவோம். இன்னொரு மைதானம் அண்ணா ஸ்டேடியம். அங்கு விளையாட்டு வீரர்கள் விடுதி உண்டு. மேலும் இன்னொன்று கேம்பஸ் கிரவுண்ட். இது ஜான்ஸ் காலேஜ் எதிர்த்தாப்பில் இருக்கிறது. இங்கு வருடம் தோறும் பேட்ரியாட் டிராபி நடக்கும். காரட் பால் மேட்ச். இங்கு கேம்பஸ் டீம் ஒன்றுடன் நாங்கள் அடிக்கடி மேட்ச் விளையாடுவோம்.
இந்த கிரவுண்ட் இரு வரலாற்று நிகழ்வின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ளது. மைதானத்தின் மேற்புரம் மாவட்ட மியூசியம் இருக்கிறது. இங்குத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை சிறையில் அடைத்த இடம். ஆங்கிலேய காலக்கட்டத்தில் பழைய சிறைச்சாலை இது. பின்னர் பாளையங்கோட்டையின் தாலுகா அலுவலகமாக இருந்தது. பின்னர் மாவட்ட மியூசியமாக்கப்பட்டது.
இன்னொரு வரலாறு நிகழ்வு , கேம்பஸ் கிரவுண்டுக்கு எதிர்த்தாப்பில் இருக்கிறது கிளாரிந்தா ஆலயம். இங்குத்தான் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷஸ் துரை அவர்களின் கல்லறை அமைந்துள்ளது. இன்றும் இங்கிலாந்தில் இருந்து அவர்களின் வாரிசுகள் நினைவுதினத்துக்கு இங்கு வருகை புரிவர். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேம்பஸ் கிரவுண்டில் நடந்த ஒரு கொலை காரணமாக , கிரவுண்ட் மூடப்பட்டது. பாவம் பந்துக்கள் , அவைகளுக்கு பின்னாலும், முன்னாலும் உள்ள வரலாற்று இடத்துக்கு சென்று வர கொடுத்து வைக்கவில்லை.
2003ம் வருடம் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் " மார்ச் 10ல் நெல்லையில் சூரியன் 106.4" என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தாமிரபரணி ஆத்துப்பாலம் அருகே, டவுன் மேம்பாலம் அருகே, நெல்லையப்பர் கோவில் அருகே, மார்க்கெட், சமாதானபுரம், பாளை பஸ்ஸ்டாண்டு என முக்கிய இடங்களில் அனைத்திலும் கட் அவுட் வைத்திருந்தனர். வவுசி கிரவுண்ட் அருகேயும் ஒரு கட் அவுட். " சித்திரையிலதான அக்னி வரும், மார்ச்லயே என்னல சூரியன் 106 ன்னு போட்டுருக்கான், ஒரு எழவும் புரிய மாட்டுக்குன்னு " நாங்க புலம்பிக்கிட்டு இருந்தோம். அதே நாளில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உலககோப்பை மேட்ச் ஒன்று இருந்துச்சு. அதுவா இருக்குமோ என்று கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாளையங்கோட்டையில் கடல் இல்லை , எனவே எங்களைப்பொறுத்த வரை வவுசி மைதானமே பீச். இரவு கூட்டம் கலை கட்டும். புது புது மனிதர்கள். "வீட்டுல கிடந்து என்னத்த பண்றது , அப்படியே செத்த நேரம் நடந்துட்டு வரலாம்லா " என்று தாத்தாவை கைத்தாங்கலா பிடித்து வரும் ராமசாமி கோவில் தெரு மாமி, தன் அக்கா குழந்தைகளையோ, அண்ணன் குழந்தைகளையோ நண்பர்களுடன் வரும் பெரிய அண்ணன்மார்கள், கல்யாணம் முடிந்த இளசுகள், ஊரே பார்த்துட்டு இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி கடலை போடும் லவ்வர்ஸ், தனிமை தீவிரமாகி தற்சமயம் பேச ஆள் இல்லாமல் வெற்று வெளியை பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்கள்,
அரட்டை அடிக்கும் நண்பர்கள், கடலை விற்கும் இள நரை பையன் என இரவில் சில பல கதாபாத்திரங்களால் மைதானம் கேலரி நிரம்பும். மைதானத்தில் இரவொளியில் கால்பந்து விளையடுவார்கள். நெல்லைக்கு மார்ச் 10 சூரியன் 106.4 வந்தது. அதாவது சூரியன் எஃப் எம். அதே நாளில்தான் நான் வவுசி மைதானத்தில் இரவு கால்பந்து விளையாடும்போது என் தாடை கிழிந்தது.
அன்று சூரியன் எஃப் எம் என்ற புதிர் அவிழ்ந்த நாள், இந்தியா இலங்கையை கிரிக்கெட் மேட்ச்சில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாள். மிகுந்த சந்தோசத்துடன் இரவு விளையாடிக்கொண்டிருந்தேன். வண்டி ஒட்டி பழகும் ஒருத்தரின் மேல் மோதி கீழே விழுந்தேன். தாடை தோல் சதை கிழிந்தது. சிவா வீட்டுக்கு ஒடினோம். அவங்க அக்கா சல்பனா பவுடர் போட்டுவிட்டார்கள். பின்னர் ஆஸ்பிட்டல் போனால் சல்பனா பவுடர் போட்டதுக்கு நாலு திட்டும் நாலு தையல் போட்டார்கள். திட்டுக்கும் சேர்ந்து காசு வாங்கினார்கள். வீட்டில் பயங்கர கெடுபடி. விளையாட போக வேண்டாம் என்று. மைதானம் முழுவதும் செம்மண். வீட்டுக்கு தெரியாமல் விளையாடிவிட்டு சிவா வீட்டில் பைப் அடித்து நல்லா காலையும், செருப்பையும் கழுவிட்டுத்தான் வீட்டுக்கு போவேன். அதே வருடம் செப்டம்பர் 10 மறுபடியும் கால்பந்து விளையாடும்போது கீழே விழுந்து என் இடது கையை உடைத்தேன். இரு எலும்புகளும் உடைந்த சத்தம் கேட்டது. சிறிது ரத்தம் வழிந்து மைதானத்தில் சிதறியது. அந்த செம்மண் பூமியில் இரு தடவை என் செங்குருதியை வடித்தேன். கை சரியாகி ஆறு மாதம் கழித்து அதே கேலரியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். என் இடது கையை வைத்து பேட்டை தூக்க முடியாது. மறுபடியும் திரும்பி போய் கேலரியில் உட்காருவேன். மனம் உளைச்சாலா இருக்கும். தினமும் பயிற்சி எடுத்து முதன் முதலில் ஒரு பந்தை எதிர்க்கொண்டேன். பேட்டில் பந்து பட்டதும் கை வலித்தது. பேட்டை போட்டுவிட்டு கேலரியில் உட்கார்ந்துவிடுவேன். போராடி போராடி மறுபடியும் காட்டானாக மாறினேன். சில நேரம் என்னை அறியாமலே பேட் என் கையை விட்டு உருவிவிடும். இதனால் அருகில் ஃபீல்டிங்க் நிக்க பயப்படுவார்கள். பின்னர் எல்லாம் சரியானது. சிக்ஸ் பிபிஎல் கல்யாண மண்டத்துக்கும், ஈகிள் புக் செண்டருக்கும் பறந்தது. கிரிக்கெட் மட்டும் விளையாடவில்லை என்றால் என் கை கோணியிருக்கும். நிமிர்ந்ததுக்கு காரணம் கிரிக்கெட்தான்.
வவுசி மைதானத்தில் அடிக்கடி இந்திய அளவில் கபடி , கால்பந்து , ஹாக்கி மேட்சுகள் நடைபெறும். ஜனவரி மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கிடையே நடைபெறும் மகளிர் கபடி போட்டிகள் தென் மாவட்டம் முழுவதும் பிரபலம். நகர முழுதுமிருந்து வவுசி மைதானத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மாநிலத்தில் இருந்தும் மகளிர் அணிகள் வரும். மின்னொளியில் போட்டி நடைபெறும். கேலரி முழுவதும் பல்லு தெரிய உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ரைட் போகும் போது கிரவுண்ட் முழுவதும் சத்தம் போடுவர். தமிழ் நாட்டு அணி விளையாடுவது என்றால்
அதிக சத்தம் வரும். போட்டி தொடங்குவதற்கு முன்பு விருந்தினருக்கு வீரர்கள் கை கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரையும் எண்ணையும் சேவியர்ஸ் பள்ளி வாத்தியார் கமெண்ட் கொடுப்பார். ரவி சாஸ்திரி லாம் தோத்துருவான். குரல் கம்பீரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். " நம்பர் ஒன், பூஜாஜாஜா....." என்று புனே டீம் ஒருத்தியை சொன்னதும் கேலரி முழுவதும் அசையும். ஆர்ப்பரிக்கும். அந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட். தமிழ் நாட்டு டீம் பொண்ணுங்கள் விளையாடும் போது கிண்டல் அதிகமாக வராது, வெளியூர் டீம் விளையாடும்போதுதான் அதிக கிண்டலும் ,சத்தமும். மேடைக்கும் பின்னால் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதை பார்க்க அதிக கூட்டம் நிக்கும். லூசான டவுசர் போட்டுருக்குற டீமை விட டைட்டாக டவுசர் போட்டுருக்கிற டீமுக்குதான் அதிக மௌசு.
வவுசி கிரவுண்டில் அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெற்ற சமயம். சீன முக அமைப்பைக் கொண்ட இருவர் தெற்கு பஜாரில் சுற்றிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் அவர்களிடம் தானாக சென்று பேசினான். அவன் ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறான். ஆங்கிலம் சரளமா வந்துச்சு. அவர்கள் மிசோரம் மாநில அணியைச்சேர்ந்தவர்கள். என்னையும் அவர்களுக்கு அறிமுகம் பண்ணினான். அவர்கள் எனக்கும் கைகொடுத்தனர். சிறு கண்கள். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தார்கள். மிசோரம் என்பது அப்பொழுது என்னைப்பொறுத்தவரை வேற நாடு. என் நண்பன் அவனுடைய பாக்கெட் டைரியில் அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குகிறான். அவர்களும் வெட்கப்பட்டுக்கொண்டே போட்டனர். நாங்கள் விடைபெற்று நடக்க ஆரம்பித்தோம். பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கு வந்த ராமசாமி கோவில் சப்பரத்தின் அருகே நின்று விபூதியை மாறி மாறி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள், ஒருவித நாணத்துடன். அவர்கள் விளையாடும் ஆட்டங்களை ஒடிச்சென்று பார்ப்போம். இப்பொழுது அவர்கள் எப்படி, எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கையெழுத்து வாங்கின என் பால்ய நண்பனும் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அதன் பின்பு மிசோரம் என்ற வார்த்தை கேட்டாலே அந்த சப்பர வெளிச்சத்தில் நாணத்துடன் கூடிய அந்த இரு முகங்கள் என் முன்னால் விரியும்.
***
கல்லூரிக்காலங்களில் அதிகம் வவுசி மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால் எங்கள் கனவுகளையும், ஏக்கங்களையும் மைதானத்தில் காற்றுடன் கலந்துவிடுவோம். நான், சிவா, மணி எல்லாரும் கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பிரச்சினையினாலும் " வாங்கல, கிரவுண்டுக்கு போயிட்டு வருவோம் " என்ற வார்த்தை சொல்ல முடியாத நம்பிக்கை கொடுக்கும். விமர்சனம் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாமல் அப்பொழுது வெளிவரும் படங்களை விமர்சிப்போம். மிஸ்கின் படங்களில் வருகிற மஞ்சள் ஒளி லைட் போன்று ஒரு கேலரி அருகில் மஞ்சள் லைட் இருக்கும் . அதன் அருகில் அமர்ந்திருப்போம். பிறந்த நாள் விழா, அடிதடி என்று ஒவ்வொரு கேலரிலும் ஒவ்வொரு நிகழ்வுகள். என் பால்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பாளையங்கோட்டை நகர வீதிகளும், இந்த மைதானமும் முக்கிய இடம்பெறுபவை. நாங்கள் எப்பொழுதும் அமரும் கேலரியில் இருந்து பார்த்தால் ஈகிள் புக் செண்டர் மேல் ஜீசஸ் சேவ் அஸ் என்று ஆங்கிலத்தில் எல்லா வார்த்தையும் சிகப்பு லைட் எரியும். சில நேரம் ஜீசஸ் என்று வார்த்தை மட்டும் லைட் எரியாது. அந்த கோடிட்ட இடத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொள்வர். நான் என்னை நிரப்பினேன். ..!!!
