அக்னி நதி நாவல்

2015-02-18

| | |

குர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி என்னும் உருது மொழிபெயர்ப்பு நாவலை படித்து முடித்தேன். காலமென்னும் நீண்ட நதியின் இருபது நூற்றாண்டு வாழ்க்கையை தான் கதையின் மையம். மதமென்னும் மாயையில் பேரரசுகள் சரிவையும், மனித ஆன்மாக்களின் நுட்பமான மனதையும் திறந்து காட்டுகிறது இந்நாவல்.
கொளதம நீலம்பாரன் என்னும் சிற்ப கலைஞனின் ஆசிரமக்கல்வியில் கதை ஆரம்பிக்கிறது.மிக நீண்ட சரயு நதியை நீந்தி வருகிறான்.ஆசிரமக்கல்வி பயில்வோர் யாரும் படகில் ஏற கூடாது. காலமோ கிமு ஒன்றாம் நுற்றாண்டு, புத்த மதம் ஆழமாக பரவிவரும் காலக்கட்டம். எங்கும் புத்த பிக்குகளாக மத மாற்றம் நடந்துக்கொண்டே இருக்கிறது. கொளதமனுக்கோ புத்த கோட்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் கலையின் உச்ச அடைய வேண்டும் கூடவே சம்பா என்னும் அரச பணிப்பெண்ணின் மீது மையல். குப்த பேரரசு மகத நாட்டு பாடலிபுத்திரம் என்னும் பாட்னாவை அபகரிக்க வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. கொளதமனோ எந்த தத்துவ நிலையை எதிர்த்தானோ அத்தத்துவ நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆட்சியின் பிடிக்கும் அதிகாரத்தின் போட்டியில் சாமானியனான கொளதமன் கரைந்து போகிறான்.கூடவே அவனுடைய காதலும்..
கால வெள்ளத்தில் நதி வேகமாக ஓடுகிறது. மீண்டும் அடுத்த கதை, அதே நதிக்கரையில் ஆரம்பம். காலமோ பதினாறாம் நுற்றாண்டு. கமாலுதீன் என்னும் இளைஞன். சுல்தான் சாம்ராஜ்ஜியத்தின் பணியாளன். பழமையான நூல்களை தேடி பயணத்தில் இருப்பவன். அவனுக்கு பாரத தேசம் புது வியப்பை தருகிறது. தன் தாய் நாடு பாக்தாத்தை விட இத்தேசம் அழகானது என்று கருத்துடையவன். கங்கை நதிக்கரையின் போக்கிலே இவன் பயணம் அமைகிறது. மீண்டும் மதத்தை புறந்தள்ளிவிட்டு ஆட்சி பிடிக்கும் அதிகாரம் உள் நுழைகிறது. மொகலாயர்கள் சுல்தான்களை வீழ்த்தி அதிகாரம் பெறுகிறார்கள். கமாலுதீன் மொகலாயர்களை எதிர்த்து போரிடுகிறான். போரினால்  வாழ்க்கை மாறுகிறது. நாடோடி இசையினை தேடி தேசமெங்கும் பயணிக்கிறான். காசியின் கங்கை கரையில் அலைகிறான். மீண்டும் நதியின் ஓட்டத்தில் கரைந்து போகிறான். கமாலுதீன் கதை நாவலின் அடர்த்தி பகுதிகள். தத்துவங்களும் விளக்கங்களுமாக நிறைந்தவை.  மீண்டும் ஒரு இளைஞன் வருகிறான், பெயர் சிரில் , காலமோ பதினெட்டாம் நூற்றாண்டு. கல்கத்தா கரையில் கதை நிகழ்கிறது. வியாபார செய்ய வந்த சிரில் ,அரசின் அங்கமாக மாறுகிறான். இவனும் கால வெள்ளத்தில் கரைந்து மீண்டும் கதை சுதந்திர இந்தியாவின் முன் காலகட்டத்தோடு முடிவடைகிறது.
காலம் முழுவதும் அதிகாரத்துக்கு மட்டுமே போட்டியும் சண்டையும், அமைதியாக ஒடிக்கொண்டிருக்கும் நதி அது பாட்டுக்கு சென்றுக்கொண்டே இருக்கிறது..காசி, பாட்னா,லக்னோ,அயோத்தி,கல்கத்தா,தில்லி போன்ற பழய இந்திய நகரங்களின் சித்திரங்கள் நாவலை படித்து முடித்தவுடன் நம்மில் இடம்பிடிக்கும். ஏராளமான வரலாற்று தகவலும் கதாமாந்தர்களின் ஆளுமையும் நாவலின் பலம்..
சொல்ல சொல்ல எவ்வளவோ இருக்கிறது மானுட வாழ்வியலைப்பற்றி. வரலாறு என்பது மீக நீண்ட நதியின் பயணம், நதியின் கசிவில் அவிழும் மனித வாழ்வின் கதைகள் ஏராளம். நதியில் மூழ்க மூழ்க மனசு நிறைகிறது. வாசிப்பின் முடிவில் வாசகனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்திய மொழிகளில் மிக முக்கிய நாவல்.

அக்னி நதி
நேஸனல் புக் டிரஸ்ட்

2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

tamtgm said...

அருமை

follourheart said...

நதியில் மூழ்க மூழ்க மனசு நிறைகிறது !!! அட்டகாசம்

Post a Comment