சிப்பியின் வயிற்றில் முத்து-- தமிழ் நாவல்

2011-06-02

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





போதிசத்வ மைத்ராய என்னும் வங்காள எழுத்தாளர் பணியின் நிமித்தமாக தூத்துக்குடி யில் 1960 ல் வசித்து வந்திருக்கிறார். அங்கு அவர் கண்ட மீனவர்களின் வாழ்க்கைப்பதிவை வங்காளத்திற்கு  சென்று  நாவலாக பதிவு பண்ணியிருக்கிறார். தூத்துக்குடி மீனவர் வாழ்க்கையை  மட்டுமல்ல , தென் தமிழகத்தின் வாழ் இயல்புகளையும் , தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் , அக்காலக்கட்டத்தில் நடைப்பெற்ற அரசியல் தளங்களையும் அழகாக பதிவு பண்ணியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில் இந்த அறிய படைப்பு தமிழில் வெளிவந்துள்ளது. நேஷனல் புக் டிரசட் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் மிகப்பெரிய மீனவ பணக்காரர், அவர் செல்வாக்கு இலங்கை வரை பரவிள்ளது ,எவ்வாரானால் அங்குள்ள மந்திரிகளை இவர் நியமிக்கும் அளவுக்கு.. அவருடைய மகன் அந்தோணி. அந்தோணி சிறு வயதிலே தூத்துகுடிய விட்டு ஓடி போய்,கல்கத்தாவில் படித்து லண்டனில்  இந்திய பாரின் கம்மிசனில் வேலை செய்கிறார். இவனுடைய பால்ய சிநேகிதன் பீட்டர். இவன் கடலில் போய் மீன் பிடிக்கும் கூலி மீனவன்.

அந்தோணி அப்பாவை தொழில் போட்டி காரணமாக யாரோ கொலை செய்ய, அப்பாவின் இறந்த செய்தி கேட்டு அந்தோணி லண்டனிலிருந்து தூத்துக்குடி வருகிறான்.
அவன் சிறு வயதில் பார்த்த தூத்துக்குடி இப்போது இல்ல. மிகவும் மாறி போயிருக்கிறது. தன ஜாதிக்குள்ளே போட்டி, பொறாமை என்று மாறியிருக்கிறது.. தன ஜாதிகுள்ளான சண்டைகளை மாற்ற முயல்கிறான்.

தஞ்சாவூர் காவிரிகரையில் பிறந்த வளர்ந்த ராமன் ,திருச்சியில் படித்து , பரத கலையில்  தேர்ச்சிப்  பெற்றவன்.  ராமனுடைய  கதையும்  பீட்டர் கதையும் இணைவது அருமை 

ராமன் கதையும், பீட்டர் கதையும் தனித்தனியாக  பயணம் செய்கிறது.

தமிழகத்தின் அனைத்து ஊரும் இந்த நாவலில் இடம் பெறுகிறது. அதன் மாதிரி அந்தந்த காலகட்டத்தில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்சிகளையும் இடம் பெறுகிறது. எடுத்துகாட்டாக  ஆஷஸ் துரை கொலை, சிதம்பரனார் பிள்ளை கப்பல் விட்டது, ராஜாஜி தமிழத்தை ஆண்டது  போன்றவை.

மீனவர்களான பரவர்களின் பழைய பாரம்பரியம், அவர்களுக்கும் இலங்கை, மற்ற நாடுகளுக்குண்டான   உறவுகளை சொல்கிறது. அவர்வளுக்குள்ளே மேசைகாரர்கள், கம்மகாரர்கள் என்ற பாகுபாடு, அவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய தோணி வியாபாரம், கப்பல் வியாபாரம் போன்றவற்றையும் விவரிக்கிறது.

கடைசியில் அந்தோணி தன அப்பாவை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் லண்டன் செல்ல , பீட்டர் அதை முடித்து வைக்கிறான்.

நாவல் பல வரலாறுடன், வரலாறுகளை பதித்து விட்டு செல்கிறது. முத்துகுளிதுரை மீனவர்கள் எவ்வாறு கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் , அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், முத்து குளித்தலில் தாங்கள் எவ்வளவு  பேர்பெற்றவர்கள் என்பதையும் சொல்கிறது

இந்த நாவல்.
படித்து முடித்தவுடன் எப்படிடா ஒரு வங்காள எழுத்தாளர் நம்முடைய கலாச்சாரத்தை அனுபவித்து, அதை பதிவு பண்ணினார்  என்பதை நினைத்து யோசித்துக்கொண்டிருந்தேன்.

மீனவர்களைப்பற்றி பதிவு செய்த நாவலான வண்ணநிலவனின் கடல் புரத்தில், ஜோ டீ குருஷின் ஆழி சூழ் உலகு, கொற்கை போன்றவற்றிற்கு முன்பாகவே சிப்பியின் வயிற்றில் நாவல் அவர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது.

கதைகள் நம் மண்ணில்தான் கொட்டி கிடக்கிறது.. நாம்தாம் அள்ளிக்கொள்ள வேண்டும்.

தமிழில் மிகச்சிறந்த நாவல்

யாமம்

2011-05-10

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

யாமம் -- நான் படிக்கும் ராமகிருஷ்ணனுடைய முதல் நாவல்.  இதற்கு முன்பு அவருடைய கட்டுரை தொகுப்புகளையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். புதிதாக படிக்கும் எவரையும் தன் பக்கம் இழுக்கும் எழுத்து அவருடையது..

யாமம் என்பது ஒரு வாசனை திரவியம். அதனை உடம்பில் பூசிக்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையும், இரவுக்கும் மனித இனத்துக்கும் உள்ள உறவையும் காலம் கடந்து இட்டு செல்கிறது இந்த நாவல்..
கதை சென்னையின் வரலாற்றை கூறுகிறது என்று பொத்தம் பொதுவாக சொன்னாலும், கதை அவ்வாறு இல்லாமல் பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணம் செல்கிறது..

பலதரப்பட்ட கதைகளின் வழியே நாவல்  செல்கிறது. வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமின் குடும்பம், நெல்லையிலிருந்து வந்து ஆங்கிலயரின் கீழ் வேலை பார்க்கும் பத்ரகிரி குடும்பம், லண்டனுக்கு  கணித மேல் படிப்புக்காக செல்லும்  பத்ரகிரி தம்பி திருச்சிற்றம்பலம் ,  நாயின் பின்னாலே வரும் சதாசிவ பண்டாரம் , மேல்மலையிலிருந்து வந்திருக்கும் கிருஷ்ணன் கரையாள்  இந்த கதா பாத்திரங்களின் வழியே கதை செல்கிறது..

இந்தியாவிற்குள் எப்படி வெள்ளைகாரர்கள் வந்தார்கள் , சென்னை நகரத்தை எவ்வாறு பிரான்சிஸ் டே வடிவமைத்தார் , இந்தியாவின் செல்வங்கள் எப்படி அவர்களால் திருடப்பட்டது.. மாஞ்சோழை, தென்மலை போன்ற இடங்களில் எப்படி தேயிலை தோட்டம் உருவானது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகள்  வழியே கதை செல்கிறது..

உணமையிலேயே நாவல் முடியும் போது அத்தர் மனம் நமக்கும் அடிக்கிறது...ஒரே நாளில் இந்த நாவலை படித்து முடித்தேன்.

இந்த நாவலுக்காக ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்துள்ளது..

குடி'மகன் '

2011-05-06

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
" என்னடே, உங்க அப்பா எப்படி இருக்காரு, இப்ப பரவாயில்லையா இல்ல இப்பவும் அதே குடிதானா..?" என்று சொந்தகார்களாலும் , தெரிந்தவர்களாலும்  கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு சிறிய பையனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்திருக்கீர்களா...? பதிலுக்கு அந்த பையன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் " இப்ப குடிக்கிறதில்லை " என்று நகர்ந்து செல்லும் போது அவன் தலை தாழ்ந்து இருக்கும்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள தத்தம் அப்பாவைப் பற்றி புகழ்ந்து பேசும் போது தன் அப்பாவை பற்றி ஏதும் கேட்பார்களோ, அப்படியே கேட்டாலும் அப்பாவை பற்றி பெருமையாக கூறிவிட்டு  ,  கூனி குறுகி எப்படா இந்த இடத்தை விட்டு நகலலாம் என்று அவன் மனம் துடிக்கும்...

"டேய் உங்க அப்பாவ  இன்னும் காணல, போய் பஜார்ல பார்த்துட்டு வாடா " என்று அம்மா சொல்லும் போது , பஜார்ல உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் லயும் தேடி, கடைசியில் ஒரு டாஸ்மாக்  பக்கத்தில் தன் சைக்கிள்  மேலே குடி போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவைத்தூக்கி ஒரு கையில் சைக்கிளையும் மறு கையில் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரும் போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என மனது பதைபதைக்கும்...

திருவிழா காலங்களில் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கும் போது ,அப்பா குடித்து விட்டு பிரச்சினை  பண்ணும் போது ,திருவிழா சந்தோசங்களை எல்லாம் துறந்து விட்டு  அவன் செல்லும் போது அவன் மனது எல்லாம் சந்தோசமும் கொஞ்ச நேரம் தான் என்ற தத்துவ நிலைக்கு வந்திருப்பான்..

இப்படி குடிகார தகப்பனால் வளரப்படும் பிள்ளை, நெறைய பிரச்சனைகளை சந்தித்து தேர்ந்தெடுத்த அனுபவசாலியயிருப்பான்...
இந்தக்குடியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் மேசை குடிகாரர்கள்...அவர்களின் பிள்ளைகளும் ஒரு குடிகாரர்கள் தான்..

அரசு தான் மக்களுக்கு கூலியாக காசு கொடுத்து, அதை தானே புடுங்கிற கேவலமான வேலை தான் இங்கு நடக்கிறது..

எல்லாம் குடிகாரர்களும் நல்லவர்கள்தான் குடிக்காதவரைக்கும்....

அவன்   அப்பா நல்லவர்தான்....!!!

தென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல் காற்று..

2011-01-26

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
தமிழ் சினிமா எத்தனையோ கிராம படங்களை தந்தாலும் ஒரு சில படங்களே மனதிலும், வரலாறிலும் இடம் பிடிக்கிறது. இப்ப நெறைய யதார்த்த படம் வர ஆரம்பிச்சிட்டு, இதுவும் நல்லதுக்குத்தான்.

திருவிழா பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மேலும் கஞ்சா கருப்பு இல்லாத கிராம கள்ளிக்காட்டின் வாசத்தை சொல்கிறது இந்த தென்மேற்கு பருவக்காற்று.


 



டைட்டில்ல வருகிற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலில் வருகிற ஒவ்வொரு வரியும், பெண்ணும் மனதில் அழுத்தமாக பதிகிறார்கள். பூ படத்திற்கு அப்புறம் இயல்பான கிராம படத்தில் நான் பார்த்து வியந்தது இந்த படத்திற்குதான்..
தாய் பாசம் சம்பத்தப்பட்ட படம்னு நாம் ஒரு வரையறுக்குள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் தாயில் அன்பு மட்டுமல்ல  அதையும் தாண்டி அவள் வீரமும், உழைப்பும், ஒரு நாட்டுபுற தாயின் அச்சு அசல் வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கு..

ஆடு மேய்க்கும் கதாநாயகன், ஆடு களவாண்டு அதை கறியாக்கும் குடும்பத்தில் கதாநாயகி, பொட்டல்  பூமி என  ரொம்ப எதார்த்தமான கதை..

படத்தில் அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக சரண்யா , இந்த படத்தில் அம்மாவாக  வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகனின் மாமா பொண்ணு, அவனது நண்பர் கணேஷ் என படம் முழுக்க நிஜ நாயகர்கள்.

கதாநாயகன் சேது அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். காதல் பொங்க கண்களால் பார்ப்பதும் சரி,  எதிராளியுடன்  சண்டை போடுவதும்  சரி அழகா செய்திருக்கிறார்.
கதாநாயகி வசுந்தரா தாவணியில் அழகாக  இருக்கிறார், பட்டிகாட்டு பொண்ணை போல அமைதியாக நடித்திருக்கிறார்.

கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ற ஆரம்பித்த படம், அதே பாடலுடன் முடிகிறது ,
சிறப்பான முடிவு.

ஒரு சிறுகதை படித்த அனுபவத்தை கொடுத்தது, குறிப்பாக அந்த பாடலை தொடர்ந்து நான்கு தடவை கேட்டேன், அவ்வளவு அழகான வரிகள், கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த வைரமுத்து இவ்வரிகளையும் படைத்துள்ளார்.

செழியனின் ஒளிப்பதிவு செம்மண் நிலங்களையும், ஆடு மந்தைகளையும் அழகான மனிதர்களையும் சிறப்பாக வர்ணம் தீட்டியுள்ளார்.

சீனு ராமசாமி பெரிய இயக்குனராக  வருவார், சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர் பார்க்கலாம்..

கண்டிப்பாக இதுவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று அதில் மாற்றமில்லை..



புத்தக கண்காட்சியில் நான்..

2011-01-15

| | | 3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
சென்னை புத்தக கண்காட்சி எனக்கு புதுசு, திருநெல்வேலியில் இருக்கும் போது சென்னை என்பது வெகு தூரம் மட்டுமல்லாமல் வெறும் புத்தக கண்காட்சிக்கா சென்னை போறன்னு கேள்வி வேற...? எனவே அது முடியாத காரியமாக இருந்தது.. இப்போது விருத்தாசலம் பக்கத்துல இருக்கிறதுனால இந்த தடவ பார்த்ருவோம்னு நண்பர் சுப்பையாவுடன் கெளம்பியாச்சு.. சுப்பையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேராவுரனியில் பணிபுரிகிறார்.. இருவரும் சென்னை வந்து இறங்கினோம்..


நிறைய புத்தகங்கள் கோவை மற்றும் நெய்வேலி யில் வாங்கியாச்சு எனவே குறிப்பிட்ட புக்ஸ் வாங்கலாம்னு முடிவு பண்ணி முதல்ல உயிர்மை பதிப்பகம் போனோம்.. செம கூட்டம், எல்லாம் இளைஞர்கள் , நானும் இளைஞன்தான் ( கலைஞரின் இளைஞன் அல்ல பா ).

அங்கு வா.மு.கோமுவின் சாந்தாமனியும் இன்ன பிற காதல் கதையும் வாங்கினேன், மேலும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நண்பருக்காக வாங்கினேன். அங்கு மனுஷ்யபுத்திரனை சந்தித்தோம்.

மேலும் தமிழினி வெளியிடான நெடுஞ்சாலை, ஜெயமோகனின் இரவு, வண்ணதாசனின் சின்னு முதல் சின்னு வரை, மேலும் சில சிறுகதை தொகுப்புகள் வாங்கினோம்.

ராமகிருஷ்ணன் காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற தொகுப்பில் சிப்பியின் வயிற்றில் முத்து என்கிற நாவலை அறிமுகபடித்திருப்பார், அந்த நாவலை நேஷனல் புக் டிரசட்ல் வாங்கினேன்.

இந்த புத்தக கண்காட்சி இனிமையாக அமைந்தது....

மாத்ருபூமி ( இந்தி திரைப்படம் )

2010-02-28

| | | 5 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


இந்தியாவில் வெளியான சில சமூகம் சார்ந்த படங்களில் மாத்ருபூமி மிகவும் முக்கியமானது.
மாத்ருபூமி கதை பெண் சிசுக்கொலை பற்றியது..
நம்ம ஊரு  பாரதிராஜா எடுத்த கருத்தம்மா மாதிரி இதில் கமர்சியல் அயிட்டங்களோ, மசாலா திரைக்கதையோ, தனியே வரும் பாடல்களோ கிடையாது...
கருத்தம்மா தமிழில் சிறந்த படம் தான் இருந்தாலும் மாத்ருபூமி சில தனித்தன்மை வாய்ந்தது.

திருநெல்வேலி மனன்மோனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில்  வருடம் தோறும்      " கரிசல் திரைவிழா " என்ற விழா மீடியா படிக்கும் மாணவர்களால் நடத்தப்படும், இந்த விழாவில்தான் இந்த படைப்பை பார்க்கும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது.

உலகத்தில் பெண்கள் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இப்படத்தின் கதை..!

இப்படத்தில் வரும் கிராமத்தில் பெண்களே இல்லை, அந்த ஊரில் இருக்கும் ஊர் தலைவருக்கு  ஐந்து பசங்க, இந்த பசங்களுக்கு பொண்ணு தேடி எல்லா ஊருக்கும்  அலைகிறார்கள்.
கடைசியாக ஒரு பெண் கிடைக்கிறாள், அந்த பெண்ணை இந்த ஐந்து பையன்களும் மற்றும் பசங்களுடைய அப்பாவும்  கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.


ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நாள் வீதம் என அந்த பெண்ணுடன்  குடித்தனம் நடத்துகிறார்கள்.
அந்த பெண்ணுக்கும் கடைசி சகோதரனிடம் மட்டும் அன்பு அதிகம் காட்டுகிறாள், இந்த இருவர் மட்டும் உண்மையாக அன்பு செய்கிறார்கள். இந்த விஷயம் மற்ற சகோதரர்கள் நான்கு பேருக்கு தெரிந்து அவனை கொலை செய்கிறார்கள்.

கடைசியில்  இவர்களுக்குள்ளே அடி புடி சண்டை வந்து ஒருவருக்கொருவர் சாவுகிறார்கள்.
அந்த பெண் வேலைக்கார சிறுவனுடன் ஊரை விட்டு செல்வதாக படம் நிறைவடைகிறது...

உண்மையில்  பெண் இல்லையென்றால் என்னவாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இன்றளவு பெண் சிசு கொலை என்பது குறைந்தாலும் பெண்கள் இல்லாத சமுதாயம் இருக்கவே முடியாது.

இந்த திரையிடல் விழாவில் நானும் கலந்து கொண்டு இப்படத்திற்கு விமர்சனம் எழுதி பரிசு பெற்றுகொண்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இதை விட கொஞ்சம் கருத்தொடுதான் எழுதினேன்.

இப்படம் பார்த்த பின்பு தான் மற்று திரைப்படம் குறித்த பல விசயங்களை கற்று கொண்டேன், அப்படி தேடி தேடி பார்த்த படங்கள் விரைவில் பதிவில் குறிப்புடுவேன்.

----- ஜெபா

மறுபடியும் ஒரு பயணம் தொடர்கிறது.....

2010-02-23

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
வணக்கம்...

கடைசியாக நான் எழுதி ஒரு வருடம் ஆகிறது, இந்த இடைப்பட்ட நாட்களில் எனது வாழ்க்கை மிகவும் மாறி விட்டது.....!

கல்லுரி படிக்கும் காலத்தில் தேடி தேடி படித்த இலக்கியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு சென்றது...

சமுகத்தின் மீது உள்ள பார்வையும் கொஞ்சம் குறைந்தது....

கல்லுரி படிக்கும் போதே வங்கி வேலை கிடைத்த காரணத்தினால் எனது இலக்கிய தாகம், சமுக சிந்தனைகளை கொஞ்சம் குறைந்தது....

கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் பரவாயில்லை....

நிறைய புத்தகங்கள் வாங்கி உள்ளேன்..

மறுபடியும் எனது இலக்கிய உலகத்துக்கு கொஞ்சம் கொஞ்சம் ஆக வந்து கொண்டிருக்கிறேன்...