வாசிப்பனுபவம்..

2011-12-13

| | |
புத்தக வாசிப்பின் இனிமையை திரு. ராஜீமுருகன் இந்த வார ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போனேன். உண்மையான வாசிப்பனும் அடையும் பேரானாந்தத்தை அவர் எழுதிருப்பார்.


நாம் வாங்க நினைக்கும் புத்தகத்தை தேடி அலைந்து திரிந்து கடைசியில் கண்டடையும் போது எற்படும் மன எழுச்சி சொல்லி மாளாது.
வண்ணநிலவனின் காலம் என்ற நாவல் வாங்க நான் ஒரு வருடம் அலைந்தேன். அதைப் படித்துவிட்டு நெல்லையப்பனாக என்னை உருவகப் படுத்திக்கொண்டு பாளை வீதிகளில் அலைந்தேன்.
அதைப் போல் அவருடைய ரெய்னீஸ் ஐயர் தெரு என்ற நாவலும். முருகன்குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ள அந்த தெருவை பலமுறை கடந்திருந்தாலும், அந்த நாவல் வாசிப்பிற்கு பிறகு அந்த தெருவில் செல்வதை மிக பெருமையாக கருதிக் கொள்வேன். அந்த தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த தெருவைப் பற்றி ஒரு நாவல் வந்துள்ளது என்று தெரியுமா என்று தெரியவில்லை..!!


கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை என்ற நாவலில் போக்குவரத்து உழியர்கள் படும் வேதனையை அத்தனை அழகாக பதிவு செய்திருப்பார். அதை படித்த பின்னர் டிரைவர், கண்டெக்டர் மேல் மரியாதை கொஞ்சம் கூடியது. ஒரு நாள் இரவுப் பேருந்து பயணத்தில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டு சாகவாசமாய் என் அருகில் உட்கார்ந்த அந்த கண்டெக்டரிடம் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி கூறினேன்.
அவர் மிகவும் ஆர்வமுடன் கேட்டார்.
"எங்க பிரச்சினை பற்றிலாம் எழுதிருக்காரா சார், அந்த புக் எங்க சார் கிடைக்கும்... ப்ளீஸ் சொல்லுங்க.." என்று தன் பாதி மை தீர்ந்துப் போன பால் பாயிண்ட் பேனாவால் குறித்துக் கொண்டார் அந்த நீலச்சட்டை கண்டெக்டர். அவர் அதன்பின்னர் அந்த நாவலை வாங்கிருப்பாரா என்று தெரியவில்லை.
ஆனால் என்னை வாசகனாக பெருமைப்பட வைத்த இரவு அது.

எத்தனையோ இரவுப் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் தலை சாய்த்து படித்த பல நாவல்களை சிந்தித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு படித்துவிட்டு உவரி கடற்கரையில் போய் இறங்கினது எதற்காக...?
அந்த அந்தோனியார் கோவிலும், கடற்கரை மணலும், அந்த குளிர்ந்த காற்றும் நாவல் படிக்கும் போதும் உணர்ந்தேன்.

ஜெயமோகனின் காடு நாவல் படிக்கும் போது நீலி என்னை கொஞ்சம் பித்து பிடிக்க வைத்தாள்...

இன்னும் எத்தனையோ அனுபவங்கள் சொல்ல சொல்ல மனம் பொங்குகிறது

1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சித்திரவீதிக்காரன் said...

வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு வாசிக்க வேண்டும் என்று ஆசை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு ரெயினீஸ் ஐயர் தெரு, அஞ்ஞாடி எல்லாம் வாசிக்கணும். நல்ல பதிவு. வட்டியும் முதலும் இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூலாக வெளிவருகிறதாம்.

Post a Comment