மொட்டைக்கிறிக்கி -- சிறுகதை

2011-08-27

| | |


மூன்று நாளுக்கு மேலாக அவளைக் காணவில்லை. எத்தனை நாள்தான் லூர்து நாதன் சிலை பக்கத்தில் உள்ள பூங்காவில் நின்னுகிட்டு அவள் வருகிறாளான்னு பார்க்கிறது..?

எப்பொழுதும் உமா, பூர்ணிமா கூடத்தான் வருவாள். இந்த மூன்று நாளுமே
அவர்கள் இரண்டு பேருதான் வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கும் வெட்கமாயிருந்தது.

கிளாஸ்ல எல்லாருட்டயும் சொல்லி விடுவாங்கன்னு பயம்தான்..! நாளாவது நாளும் நின்று கொண்டிருந்தேன்.. அவள் அம்மாவுடன் வந்துக் கொண்டிருந்தாள். முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். கழுத்தில் தங்கம் மின்னியது. அழகாயிருந்தாள்..அழகான கொழுசு போட்டிருந்தாள். அந்த வெள்ளைச் சட்டையும், சிகப்பு பாவடையும் அவளுக்கு ரம்மியமாயிருந்தது.. இதற்கு முன்னால் எத்தனயோ தடவை பார்த்தவள்தான்..இன்று அதிகமாக அழகாயிருந்தாள். அவள் கிராப் தலையில் ரோஜா
ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அவளது அம்மா உம்மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மாவுடன் முருகன் கோவிலுக்கு போய் விட்டு ஸ்கூலுக்கு வந்தாள். நான் அதற்கு முன்பே ஸ்கூலுக்குப் போய்பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டேன். அவளுடய அம்மா பிரமிளா மிஸ்ஸிடம் எதோசொல்லிட்டு அவளை விட்டு சென்றாள். பிரமிளா மிஸ் சிரிச்சிக்கிட்டே அவளை அனுப்பி வைத்தார்கள். அவள் பெண்கள் பக்கம் போய் உட்கார்ந்ததும் தோழிகள்அவளைச் சூழ்ந்துக் கொண்டனர்.. பள்ளி இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஒவ்வொருத்தரா வந்துக்கொண்டிருந்தனர். சிவா இன்னும் வரவில்லை.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

" மக்கா, நம்ம மொட்டைக்கிறுக்கி இன்னைக்கு ஜோக்கா வந்திருக்கா
பார்த்தியா..?" என்று கூறிக்கொண்டே பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் மணி.
மொட்டைக்கிறுக்கினு பட்டப்பெயரை சொன்னதும் எனக்கு கோபம் வந்தது.
இருந்தாலும் வெளிக்காட்டவில்லை.

அவளுடய உண்மையான பெயர் ஜமுனா. ஆனால் பசங்க மத்தியில் மொட்டைக்கிறிக்கிதான். ஆறாவது படிக்கும் போது மொட்டை போட்டுட்டு வந்தாள். அதிலிருந்து அவளது பட்டப்பெயராகிவிட்டது. அப்புறமும் முடியை வளர்க்காமல் கிராப் கட்டிங்க்லதான் வருவாள். அது அவளுக்கு எடுப்பா இருக்கும். எத்தனயோ தெற்றுப்பல் பெண்களைப் பார்த்தாலும் அவளது தெற்றுப்பல் ஒரு அழகுதான்.
அந்த தெற்றுப்பல்லோடு அவள் சிரித்த சிரிப்பில்தான் நான் மயங்கினேன்.
இன்னும் ஞாபகம் இருக்கு அவளை முதன் முதல் பார்த்தது.
 
நான் புதுசாக ஸ்கூலுக்கு சேர வந்திருந்தேன். இரண்டு வருடம் கழித்து

மறுபடியும் அதே ஸ்கூலுக்கு வந்திருந்தேன். இரண்டு வருடம் அம்மா ஊர்ல
படித்தேன். அப்புறம் பாளையங்கோட்டை வந்ததும், நான் ஏற்கனவே படித்த
அஸ்போர்ன்ஸ் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க..இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவள் அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.
அட்மிஷன் போட்டுட்டு கிளாஸ் ரூம் உள்ளே வரும் போதே சிவா என்னைப் பார்த்து சந்தோசமா கையை ஆட்டினான். நான் எற்கனவே படித்ததால் எல்லா மிஸ்களையும் எனக்கு தெரியும். கிளாஸ் மிஸ் ஜோன்ஸ் என்னிடம் பேசிவிட்டு என்னை உட்கார
சொன்னார்கள். சிவா என் பக்கத்தில் அழைக்க நான் அவன் பக்கம் போய்
உட்கார்ந்தேன்.. அப்பொழுதுதான் அவளை பார்த்தேன்.. என்னையே
பார்த்துக்கொண்டிருத்தாள். "புதுசா வர்றவனுக்கு இவ்வளவு மரியாதயா..? என
அவள் பார்வையில் தெரிந்தது. அப்பொழுதுதான் அந்த தெற்றுப்பல்லை
பார்த்தேன்.

ஒவ்வொரு தடவையும் மிஸ் அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது அவள்
பெயர் வரும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் என்னைப்
பார்த்துக் கொண்டே ப்ரசண்ட் சொல்லுவாள். ஏனோ தெரியல அவள் மீது ஒரு ஈர்ப்பு தொற்றிக்கொண்டது. சிவா கூட பேசிட்டு இருக்கும் போது பக்கத்தில் வந்தாள், அன்று முதல் பேச ஆரம்பித்தோம். இருந்தாலும் சிவாட்ட பேசுற மாதிரி என்னிடம் பேச மாட்டாள். எனக்கு வருத்தமா இருக்கும். அவர்கள் இருவரும் அடித்துலாம் விளையாடுவார்கள். நான் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்... என்னால் வேற என்ன பண்ண முடியும்..!

தினமும் அவள் வீட்டுக்கு போகும் போது உமா, பூர்ணிமா கூடத்தான் போவாள். அவள் வீடு கோபால்சாமி கோவில் பின்னாடி.. என்னுடய வீடு தெற்குபஜார் சடகோபன் சந்து.. நான் தனியாதான் போவேன். சிவா வீடு ராமர்கோவில் தெருவில் இருந்தது. அதனால
எங்ககூட அவன் வர மாட்டான். நான் முன்னாடி நடந்து போயிட்டு இருக்கும் போது பின்னாடி இவர்கள் கிண்டல் பண்ணிக்கொண்டே வருவார்கள். எனக்கு அதில் விருப்பமதான் இருக்கும். ..சிவா இல்லாமல் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாத்தான் இருக்கும். எப்பொழுதும் விஷஷே பார்வையொடுதான் பேசுவாள்.
படபடவென பேசுவாள். அவள் என் மனதை முழுவதும் ஆக்கிரமித்தாள்..


சிவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
" ஜமுனா வந்துட்டாப் போல.. இந்தா போய் பார்த்துட்டு வாரேன் " என்று
எந்திரித்து போய் விட்டான். நான் எழும்புவற்குள் அவள் இருக்கும்
இடத்திற்கு சென்று விட்டான். நான் என் இடத்திலே உட்கார்ந்து விட்டேன்.அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி என்னை திரும்பி பார்த்துக்கொள்வாள் " நானும் உன்ன பார்க்றேண்டா..கவலைப்படாதே " என்று சொல்வது போல் இருக்கும் அவள் பார்வை. அவன் பேசிட்டு இருக்கும்போதே நம்மள பார்க்கிறாளுன்னா கண்டிப்பா நம்ம மேல ஆசை இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

தினமும் சாயங்காலம் வாடகை சைக்கிள் எடுத்திகிட்டு அவ வீட்டு முன்பு
ரவுண்டு அடிப்பேன். அவள் வீடு முன்னடி வந்தாள்னா கண்டிப்பா ஒரு சிரிப்பு சிரிப்பாள்..ஆனா ஒரு தடவை கூட வீட்டுக்குள் கூப்பிட்டதே இல்லை..அது எனக்கு எமாற்றமாய் இருக்கும்.. ஒரு நாள் சிவா வந்து ஜமுனா வீட்டுக்கு
போனதாகவும், அவள் அம்மா அவனிடம் நல்லா பேசினதாகவும் சொன்னான். எனக்கு அவன் மேல் பொறாமையாயிருந்தது. ஒருவேளை இவனும் ஜமுனாவை லவ் பண்ணுவாணோ என்று
சந்தேகப்பட்டேன்.. அதைப்பற்றி அவனிடம் கேட்கவேண்டும் என முடிவு பண்ணிணேன்.


ஒரு நாள் பொன்னையாபிள்ளை ஸ்டோர்ல எதோ மிஸ் வாங்கிட்டு வர சொன்னாங்கன்னு நானும் சிவாவும் வாங்கிட்டு தெற்குபஜார்ல வந்துகிட்டு இருந்தோம்.
நான் தான் வாய் திறந்தேன்

"சிவா, நான் ஒன்னு கேட்கலாமா...? "
" என்ன.. சொல்லு..!"
"ஜமுனாவ நீ லவ் பண்றியா..?" என்றேன். அவன் திருப்பி
" நீ பண்றியா..?" என்றான்.
"நீயே, முதல்ல சொல்லு.." என்றேன்.
"நீ சொல்லு, நான் சொல்றேன்" என்றான். கொஞ்சம் நேரம் யோசிச்சிகிட்டு
"ஆமா...!" என்று படக்கென்று உடைத்தேன்.
அவன் அதற்கப்புறம் ஒன்றும் பேசவில்லை விறுவிறுவென்று நடந்து ஸ்கூலுக்குள்
சென்று விட்டான்.
அதன்பின் அவன் என்னிடம் பேசவே இல்லை..எனக்கு சிவா பேசாமல் போனதுகவலையாயிருந்தது. இதற்குள் நாங்கள் இருவரும் பேசாமல் போனது ஜமுனாவுக்கு தெரிந்து விட்டது. என்னிடம் வந்து கேட்டாள். நான் மழுப்பினேன்.. அவள் எனக்கு எதுக்கு சண்டை போட்டிங்கன்னு தெரிந்தாகனும் என்றாள்.மேலும்

"நீங்க ரெண்டு பேரும் பேசுங்கப்பா.. ப்ளீஸ்..எனக்காக.. ப்ளீஸ்.." என்று
கெஞ்சினாள்.

பின்னர் அவளே சிவாவையும் கூட்டிட்டு வந்து இருவரையும்
சேர்த்து வைத்தாள். அதன்பின் நாங்கள் பேசினாலும் ஜமுனா விசயத்தில் சுய நலமாவே இருக்க ஆரம்பித்தோம்..ஒரு நாள் மணி சொன்னான்
"ஜமுனா, சிவாவதான் லவ் பண்ணுவான்னு நினைக்கேன்.." என்றான்.

அன்று முதல் ஜமுனா, சிவாவை லவ் பண்ணுவது போலவும், என்னை வெறுப்பது போலவும் கனவு காண ஆரம்பித்தேன். அந்த சுயபச்சாபத்தில் இனிமை காண முயற்ச்சித்தேன். அவளுடய பிறந்த நாளன்று என் காதலை சொல்ல முடிவெடுத்தேன்.


கிப்ட் வாங்குவதற்கு அம்மா பணம் வைத்திருக்கு அரிசி டப்பாவில் இருந்து 25 ரூபாய் எடுத்து சரஸ்வதி ஸ்டோரில் அழகான கிப்டை வாங்கினேன்.

கிப்டை ஸ்கூல்பேக்கில் வைத்திருந்தேன்.
அம்மா அரிசி டப்பாவை திறந்து பார்த்தாள். பணத்தை காணவில்லை என தெரிந்து

"வீட்டு வாடகைக் குடுக்க வைந்திருந்தேன்.. யார் எடுத்தான்னு தெரியலயே.."
என்றாள் கவலையோடு


நான் " அப்பா எடுத்தாலும், எடுத்திருப்பாரு..!" என்று பொய் சொன்னேன்.


உடனே அம்மா ஆவேசப்பட்டாள். அப்பா வேலைக்கு போயிட்டு வந்ததும் சண்டை போட ஆரம்பித்தாள். அப்பா தான் எடுக்கவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அம்மா
விடவில்லை. அது பெரிய சண்டையை உண்டு பண்ணிருமோன்னு பயமா இருந்தது...அம்மாட்ட உண்மையை சொல்லவும் பயமா இருந்தது. சொன்னா அந்த கோபம் என் மேல
திரும்பும். மேலும் கிப்ட் கொடுக்காம ஜமுனாட்ட லவ் சொல்ல முடியாது...
நான் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் சண்டை
போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா தீடீரென்று அம்மா செவிட்டில் அடித்து
விட்டார். அம்மா அப்படியே சுவர் ஒரமாய் சாய்ந்து விட்டாள்.


" இருடி, தண்ணீய போட்டு வந்து உன்ன வச்சிகிறேன்.."என்று அப்பா வெளிய
போய்விட்டார். அம்மா கவலையோடு உட்கார்ந்திருந்தாள். நான் கிப்ட்ட
தூக்கிக்கொண்டு சிவா வீட்டுக்கு போனேன்.


அவன் " என்னடா.. " என்று வெளிய வந்தான்.
கவரிலிருந்து கிப்ட்ட வெளிய எடுத்து
" இத வாங்கிக்கொடா.. வீட்ல பிரச்சினைடா.. இருபது ரூபாய் மட்டும் கொடுடா.." என்றேன்.
அவன் கிப்ட்ட எடுத்து பார்த்தான். அவனுக்கு பிடித்திருந்தது.
வீட்டுக்குள் சென்று இருபது ரூபாய் எடுத்துட்டு வந்து கொடுத்து, கிப்ட்ட வாங்கிக்கொண்டான்.


ஒரு பொட்டி கடைக்கு சென்று ஒரு மொய் கவரை வாங்கி அதில் இந்த இருபது ரூபாயை வைத்து என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.
வீட்டுக்கு சென்றேன். அப்பா வரவில்லை. அம்மா அழுதுக்கொண்டுதான்
இருந்தாள். அம்மாவிடம் சென்று பாக்கெட்டில் இருந்து மொய் கவரை எடுத்து
" அம்மா இங்க பாருமா.. இது அந்த பாலாஜி கல்யாண மண்டபம் கிட்ட கடந்ததுமா.. சிவா வீட்டுக்கு போயிட்டு வரும்போது கிடந்ததுமா.. எடுத்துப்பார்த்தா.. இருபது ரூபாய்.. அதான் கொண்டு வந்துட்டேன்...இங்க பாரு .." என்று
அம்மாவிடம் கொடுத்தேன்.

அம்மா வாங்கி பார்த்தாள்... சிரித்தாள்... கடவுளா
பார்த்து கொடுத்ததாக சொன்னாள்...

கொஞ்சம் நேரம் கழித்து அப்பா வந்தார்.
தண்ணீ அடித்திருக்கவில்லை. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கும் போது
அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அப்பாவும் திருப்பி
கேட்டுக்கொண்டார். இருவரும் நெருக்கமாயினர்.

எனக்கு சந்தோசமார்யிருந்தது.

அடுத்த நாள் ஜமுனா பிறந்த நாள். நான் லேட்டாதான் ஸ்கூலுக்கு போனேன்.
காதல் சொல்லும் முயற்ச்சியை கைவிட்டேன்.
அவளிடம் போய் வாழ்த்து சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே என் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தாள். அதை அப்படியே கொண்டு போய் என் பேக்கில் வைத்துக்கொண்டேன். சிவாவையும், ஜமுனாவையும் பார்த்தேன். இருவரும்
சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவள் கையில் நான் வாங்கிய கிப்ட் இருந்தது..எனக்கு அழுகையாய் வந்தது. அவள் கொடுத்த பொட்டலத்தை பிரித்து பார்த்தேன். அதில் 5ஸ்டார் சாக்லேட், கேர்பரிஸ்
சக்லேட் எல்லாம் இருந்தது. எனக்கு மட்டும் இப்படி கொடுத்துருக்கான்னா எதோ விசயம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருவேளை நம்மல லவ் பண்ணுவாளோ என்று நினைத்தேன்.

அப்படி நினைக்கும் போது சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்றேன்...


ஸ்கூல் விட்டு மணி கூட வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தேன்.


மணி கேட்டான்
" ஜமுனா உனக்கு சாக்லேட் கொடுத்தாளா...!" என்றான்.
"ஆமாம்.. குடுத்தா.." என்றான்.
" எத்தனை.. "
"நிறைய.." என்று பொட்டலத்தை எடுத்துக் காட்டினேன்.


"சிவாவுக்கு என்ன கொடுத்தா.. தெரியுமா..?


" என்ன.. " என்றேன் ஆச்சரியத்துடன்


"ஒரு சாக்லேட்.. அதுவும் ஆசை சாக்லேட்.." என்றான்.

எனக்கு குதுகலமாய் இருந்தது.." உண்மையாவா... ஒரு சாக்லேட்டா...!"" ஆமா.. ஆனா பாதி கடிச்சிக்கிட்டு குடுத்திருக்கா...!!" என்றான்..

இப்பொழுது எனக்கு ஜமுனா, மொட்டைகிறிக்கியாய் மாறியிருந்தாள்...


ஒவியம்-- இளையராஜா

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment