கர்ணனின் கவசம் நாவல்- வாசிப்பனுபவம்

2014-12-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

கர்ணனின் கவசம் என்ற 250 பக்க நாவலை ஒரே நாளில் படித்து முடித்தேன். அந்த அளவுக்கு வேகமான நடை, விறுவிறுப்பான கதை. தமிழில் வெளிவந்த சயின்ஸ் பிக்ஸ் நாவல்களின் எண்ணிக்கை மிக குறைவு. கர்ணனின் கவசம் சயின்ஸ் பிக்ஸன் என்ற  வரையறுக்குள் வருமா என்று தெரியவில்லை.ஆனால் முழுக்க முழுக்க பேண்டஸி கதை. தமிழகத்தின் ஆதிக்கால வரலாறு , பாரத நாட்டு பூர்விகம் என நமக்கு தெரிந்த கதைகளை ஆதாரமாக கொண்டுள்ளதால் கர்ணனின் கவசம் தனித்து நிற்கிறது.

மகாபாரத கதையில் வரும் கர்ணன் அற்புதமான கதாபாத்திரம். அவனை குருச்சேத்திரப் போரில் வீழ்த்துவதற்காக கிருஷ்ணனின் திருவிளையாடலால் கர்ணனின் கவசத்தை இந்திரன் ஒரு அந்தணன் வேடமணிந்து வந்து கர்ணனிடம் வாங்கிச் சென்றுவிடுவான்.
இதனாலும் மேலும் பல சூழ்ச்சிகளினாலும் போரில் உயிர் துறப்பான் கர்ணன் என்பது மகாபாரதக் கதை. ஆனால் நாவல் வேறு தளத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

இந்திரன் அபகரித்த கவசம் எங்குள்ளது? கர்ணனின் உடல் எங்குள்ளது ? கர்ணனின் கவசத்தினில்தான் சூரியனை ஊடுருவும் தனிமம் உள்ளது என்று கவசத்தை தேட வரும் ஜெர்மனிகாரன், சீனாக்காரன், கவசத்தை பாதுகாக்கும் மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர்கள், மறுபடியும் போர் நடத்த தயாராக இருக்கும் கவுரவர்கள், சோழ மன்னன் ஆதித்ய கரிகாலன் என வரலாற்று நாயகர்களையும் நிகழ் கதைகளும் இணைத்து நாவல் படிக்க படிக்க சுவாஸ்யமாக இருக்கிறது.

மகாபாரத கதையும், பொன்னியின் செல்வன் நாவலும்,கொஞ்சம் தமிழக வரலாறும் தெரிந்தால் நாவலுடன் ரொம்ப ஒன்றிவிடலாம்.

நாவலில் எல்லாரும் வருகிறார்கள், எல்லா இடங்களும் வருகிறது. வியாசர் வருகிறார், கிருஷ்ணன், துரியோதனன்,சகுனி,குந்தி,திரளபதி, ஆதித்ய கரிகாலன், இந்திரன், பீஷ்மர் , நவகிரகங்கள்  மேலும் மதுரை கோவில், சிதம்பரம்,காஞ்சி கோவில்,தஞ்சை கோவில், சரஸ்வதி நதி, ஆதிச்சநல்லூர் , தூவாரகை, திரிசங்கு சொர்க்கம் , வைகுண்டம் போன்ற வரலாற்று இடங்களும் வருகிறது.
இதுமட்டும்தான என்று பார்த்தால் கணித சூத்திரங்கள், பிபனாசி எண்கள் தியரி, விட்டத்தின் சூத்திரம் மேலும் மேலும் இழுத்துக்கொண்டு செல்கிறது நாவல்.

குங்குமத்தில் தொடராக வந்து புத்தக வடிவம் பெற்றுள்ளது. இன்னும் கொஞ்சம் கவனமாக எடிட் செய்திருக்கலாம். கே.என்.சிவராமன் எல்லா தளத்திலும் ஆராய்ந்து நாவலை சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழக சிற்பக்கலைகள், கோவில் தள வரலாறு , அறிவியலின் கூறுகள், பழமையான சாஸ்திரங்கள் என தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது நாவலில்.

நம் மண்ணுக்கும் வரலாறு இருக்கிறது, நம்மிடமும் கதைகள் கொட்டிக்கிடக்கிறது. இம்மாதிரியான முயற்சியின் வழியே நிறைய படைப்புகள் வெளி வரவேண்டும்.

கர்ணனின் கவசம்
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
விலை 200

மிளிர் கல்

2014-06-08

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


மிளிர் கல் என்ற நாவலைப்பற்றி எனது சிறிய மதிப்புரை .
மிளிர் கல் :

கொங்கு நாட்டின் பகுதியில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள்
பிரஸ்யஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்ற
ரத்தினக்கற்கள் விளையும் பூமி. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று
அவ்விளைநிலங்களை ஆக்கிரமித்து கற்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கற்களை
ஏற்றுமதி செய்ய திட்டமிடுகிறார்கள். இதற்காக பழங்கால வணிகப்பாதைகள் பற்றி
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீகுமார் என்ற பேராசிரியரை அவருக்கே தெரியாமல்
இவ்வேலையில் ஈடுபடுத்துக்கிறது அந்நிறுவனம். வடமாநிலத்தில் வளர்ந்த
தமிழ்ப்பெண் முல்லை. தன் தந்தையின் மூலம் சங்ககால இலக்கியங்களை கற்றவள்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி மேல் கொண்ட மிகுந்த ஆர்வம்
காரணமாக சிலப்பதிகார கதை நிகழ்ந்த இருப்பிடங்களை ஆவணப்படமாக்க
வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரி இயக்க கொள்கையின் பிடிப்பில் அலையும் நவீன்
என்ற நண்பனுடன் பூம்புகார் வருகிறாள். அங்கு பேராசிரியருடன் ஒன்று
சேர்ந்து சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த சாலையில் பயணம் செய்து
சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பூம்புகார் காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டத்தில் நிறைவு செய்வதுதான் கதை. அதிக
விறுவிறுப்புடன், சுவாரஸ்யம் குறையாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன்
பதிவு செய்துள்ளார் முருகவேள். ஏற்கனவே எரியும் பனிகாடு நாவலை
தமிழ்ப்படுத்தியவர். மிளிர்கலில் சிலப்பதிகாரத்தை
எளிமைப்படுத்தியுள்ளார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏற்றுவோர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம்
உணர்த்தும் மூன்று அறநெறிகளாகும். இதன் அர்த்தத்தை மாணவன் ஆசிரியரிடம்
வினவுவதுப் போல் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வினவ வைத்து
இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தம் தெரிவிப்பதாக நாவலில் பல
காட்சிகள் வரும். நாவலின் பலமான பகுதிகள் அவை. குறிப்பாக கோவலனும்
கண்ணகியும் சோழ நாட்டை விட்டு சென்றதும் மிகப்பெரிய வணிக குடும்பத்தில்
பிறந்த அவர்களைத்தேடி யாரும் வராததும், கண்ணகியை ஏன் சேர மன்னன்
தெய்வமாக்கினான் ? உண்மையில் சிலப்பதிகாரம் நம் நிலத்தில் நடந்ததா ? என்ற
வினாக்கள் இக்காப்பியத்தை படிக்கும் எல்லாருக்கும் ஏற்படும் ஐயங்கள்.
இதற்குப்பதில் நாவலில் இருக்கிறது. பதில் வெறும் ஒற்றை வார்த்தையாக
இல்லாமல் தனிக்கவனத்துடன் ஆராயப்பட்ட பதில்களாக இருக்கும்.

பூம்புகாரின் ஏழுநிலை மாடங்களையும் கரைபுரண்டு ஓடும் காவேரியையும்
எதிர்ப்பார்த்து வந்த முல்லைக்கும் தற்போது இருக்கும் பூம்புகாரின்
தற்கால நிலையைக் கண்டு கலங்கும் நேரத்தில் ' உண்மையான வரலாறு
வேண்டுமென்றால் மக்களிடம் கேள் ' என்று பேராசிரியரின் பதில் கள ஆய்வு
எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதாகும். பேராசிரியருக்கும்
முல்லைக்கும் உண்டான நிறைய உரையாடல்கள் நாவலின் உவப்பனதாகும். ஏன் சார்,
எதுக்கு சார், இப்படி இருந்திருக்கலாமோ என்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் முல்லை சீக்கிரம் நம் மனதில் இடம்பெற்றுவிடுகிறாள்.

கோவலன் என்ற பெயர் கோவலர்கள் என்ற இனத்தின் பெயராக இருக்கலாம். கொங்கு
நாட்டில் வாழ்ந்த ஆடு மேய்க்கும்
பழங்குடி இனத்தின் பெயர் கோவலர்கள் என்றும், அவர்கள்
சேரப்புமலைப்பகுதியில் வாழ்ந்ததாகவும் அந்தமலைதான் இப்போது காங்கேயம்
அருகில் உள்ள சிவன்மலை என்றும், பதிற்றுப்பத்தில் கூட கோவலர்கள் என்ற
சொல் இடம்பெற்றிருக்கிறதாகவும், கொற்றவை கோவிலில் கண்ணகியைப் பார்த்து
கொங்கர் செல்வி என்று எய்னர்களால் பாடப்படுகிறாள். கோவலன் கண்ணகி
மூதாதையர் ரத்தின வியாபாரம் காரணமாக சோழ நாட்டுக்கு
இடம்பெயர்ந்திருக்கலாம், உண்மையில் அவர்கள் கொங்கு நாட்டுப்பகுதியை
சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியிலும் முருகவேள் ஆராய்ச்சி
நடத்தியுள்ளார்.

அவர்கள் பயணம்தான் எவ்வளவு சிறப்பானது. வடகரை காவேரி, உறையூர்,
நெடுங்குளம் சிறுமலை, மேலூர், மாங்குளம் சமணக்குன்றுகள், அழகர் மலை,
மதுரை மூதூர், கோவலன் பொட்டல், கம்பம் கண்ணகி கோவில், திருச்சுர்,
கொடுங்களூர் பகவதி கோவில் என நாவல் பல பிரதேசங்களின் பகுதிகளை தொட்டு
இட்டுச் செல்கிறது.

சமண இரவுத்தங்கலில் ஏற்படும் உரையாடல்களாக இருக்கட்டும் , மத வரலாறு,
இனவரையியல் பற்றிய பேச்சுகளாகட்டும், வணிக வரலாறு, இடதுசாரிக்கொள்கையின்
கருத்துக்கள், நிகழ்கால அரசியல் விம்ர்சனம், ராஜஸ்தான் கல்பட்டை
தீட்டுபவர்கள் பற்றி, உயிர்ப்பலிகள் பற்றி, அரவான் வழிபாடு,அடிமை
வரலாறுகள், ஆரிய திராவிட தோற்றம், சமண கழுவேற்றம், கோசோம்பி
கருத்துக்கள், தாய்தெய்வ வழிப்பாட்டு நம்பிக்கைகள், கொடுமணல் நாகரிகம்,
சங்ககால இலக்கியங்கள்
ர், கொடுங்களூர் கண்ணகி கோவில் வெளிச்சப்பாடுகள் என ஒட்டுமொத்த தர்க்க
கருத்துக்களின் வழியே நாவல் புதுபுது பரிமாணம் எடுத்து மிளிர்கல்லா
ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறது.

ஓர் படைப்பிலக்கியத்தின் வெற்றி எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது
என்றால் வாசிப்பின் முடிவில் ஏற்படும் வெறுமையா? அல்லது அதன்பின்
உருவாகும் அக எழுச்சியா என்று சொல்லிவிட முடியாது. எந்தப்புள்ளியில்
படைப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியிட்டு கூறமுடியாது.
படைப்பின் மீறல்களையும் தர்க்க ரீதியாக ஆராயவும், கதையின்
இருப்பிடங்களையும் கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் வாசகனை தேடத்தொடங்க
வைக்க வேண்டும். அந்த வகையில் இளங்கோவடிகள் வெற்றி பெற்றுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை ஒர் வாசகன் மனநிலையில் ஆராய்ந்து, கதை
நிகழ்ந்த தற்கால இருப்பிடங்களை தேடி அலைந்து, கண்ணகி ஏன் தெய்வமானாள் ?
என்ற ரீதியுலும் சிலப்பதிகாரம் என்ற படைப்பை விமர்சித்து சிறந்த படைப்பை
தந்துள்ளார் முருகவேள்.

-- ஜெபஸ்டின் ரொட்க்ஸ்.பி

மிளிர் கல்
இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை 200

பாளையங்கோட்டை வவுசி மைதானம்

2013-12-11

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தை நான் முதன்முதலில் பார்த்தது மூன்றாவது படிக்கும்போதுதான் என்றுதான் நினைக்கிறேன். இதற்கும் நான் படித்த பள்ளி மைதானத்தின் அருகிலேதான் இருக்கிறது. ஒரு நாள் பள்ளி முடிந்ததும் ஒருவன் கத்தினான்
 " யோழ், வவுசி கிரவுண்டுல சூட்டிங்க நடக்குல.. சரத் வந்திருக்கானாம்...பார்க்க வாங்கல..."
"என்ன படம்ல... " என்று கேள்விக்கு பதில் கூறாமல் முருகன் கோவிலைத்தாண்டி பறந்துட்டான். அந்த பெயர் தெரியாத நண்பன் சரத்குமார் ரசிகன். அப்போது சரத்குமாருக்கும் கார்த்திக்கும்தான் எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும். நான் தனியா ஆளாக அரக்கு கலர் டவுசரோடு ஒடினேன். கையில் புத்தகப்பை வேற சுமையா இருந்துச்சு. அடிச்சு பிடிச்சு ஒடினேன். அந்த ரோடு பூராவும் ஜனக்கூட்டம்.  மைதானத்தின் நடுவில் பெரிய மேடைப்பந்தல் போட்டுருந்தார்கள். மைதானம், கேலரி முழுவதும் தலைகள் நிரம்பி வழிந்தது. நான் கூட்டத்தின் நடுவே புகுந்து மேடையருகே நின்றுக்கொண்டு அண்ணாந்துப்பார்த்தேன். மேடையில் விசு, நக்மா, ஊர்வசி, ஆனந்தராஜ், வெள்ளை வேட்டியில் சரத்குமார் நின்றுக்கொண்டிருந்தனர். சரத்குமார் மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க தீடிரென்று நெஞ்சில் யாரோ சூட , ரத்தம் வந்து சாய்ந்து விழ, நக்மா வந்து பிடிக்க, கூட்டம்  மிரண்டு ஒடுகிறார்கள். நானும் கீழே விழுந்து டவுசர் கிழிச்சு ஏறிக்குதித்து ரோட்டுக்கு வந்து மறுபடியும் மேடையை எட்டிப்பார்த்தேன். சரத்குமார் நக்மாவிடம் சிரிச்சு குலாவிட்டு இருக்காரு, ஊர்வசி கண்ணுல கிளிசிரின் போடுது. மறுபடியும் மைதானம் முழுவதும் கூட்டம் அதே மாதிரி நிக்குது. பக்கத்துல இருக்குற ஒருத்தன் சொல்றான் "சவத்து பயலுவ, இத எத்தன தடவதான் எடுப்பானுவோ..வேற வேல மயிரு இல்ல.. வால போலாம்.." நான் அந்த அண்ணனிடம் " என்ன படம்னே இது.." என்றேன். அவரு என்னை சட்டை செய்யாமல் நடையைக்கட்டினார். அடுத்த நாள் தந்தி பேப்பர்ல அரவிந்தன்னு படம் பேர் வந்துருந்துச்சு.
நான் மேடைக்கிட்டத்தான் நின்னுட்டு இருந்தேன். எப்படியும் படத்துல வருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். பின்னர் ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்க்கும்போதுதான் நான் அந்த காட்சியில் இல்லை என்று தெரிஞ்சது. டவுசர் கிழிஞ்சதுக்கு வீட்டுல அடிலாம் வாங்கினேன். எனக்கும் வவுசி கிரவுண்டுக்கும் முதன்முதலில் உருவான  நினைவு இதுதான். 1900ங்களில் கர்சன் மைதானமாக அழைக்கப்பட்டு  பின்னர் பாளையங்கோட்டை நகர சேர்மன் மகாராஜ பிள்ளை அவர்களால் வ.வு.சி மைதானம் என 1966 இல் மாற்றப்பட்டது. ஹாக்கி கிரவுண்ட் மாதிரியில் செவ்வகமாக இருக்கும். சுதந்திர தினத்துக்கு கலெக்டர் இங்கத்தான் கொடி ஏற்றுவார்.  இருபக்கமும் சேர்த்து ஆறு கேலரிகள் . இரு மைதானமாக இருக்கும். மைதானத்தின்  இன்னொரு பக்கத்தில் இப்பொழுது இறகு பந்து உள் தளம், உடற்பயிற்சி தளம், பள பளக்கும் வவுசி சிலை எல்லாம் வந்துட்டு. முன்னாடிலாம் கருப்பு வவுசி சிலை மட்டும்தான் காக்கா எச்சத்தோடு நிப்பாரு. சிலை மேல ஏறி நின்னுட்டு சிலை தலையை தடவிகிட்டு பயலுவ நிப்பார்கள். பெரிய கிரவுண்ட்ல மேட்ச்சுக்கு பிட்ச் கிடைக்கலன சின்ன கிரவுண்ட்டுக்குதான் வரனும். இங்க அடிக்கிற சிக்ஸ் எதிர்த்தாப்புல இருக்குற எல்ஐசி ஆபிஸுக்கு ஈசியா போகும். ஆஃப் சைட் அடிச்ச திருவனந்தபுரம் ரோட்டுல இருக்குற தேவி டீகடையின் கண்ணாடியை உடைக்கும். அதனால எப்பொழுதும் பெரிய மேட்ச்சுன்னா பெரிய கிரவுண்ட் பிட்ச் பிடிக்க பெரிய போட்டி நடக்கும். காலையில் பத்து மணிக்கு பெட் மேட்ச்சுன்னா ஏழு மணிக்குலாம் வந்து ஸ்டிக்க நடனும், ஒருத்தன் காவல் நிக்கனும். கிரவுண்ட் பக்கத்துலதான் சிவா வீடு. அங்கத்தான் ஸ்டிக், பேட், பால் எல்லாம் இருக்கும். நான் காலையிலேயே போய் ஸ்டிக் நட்டி , கூவை மாதிரி பிட்ச் காவலுக்கு கேலரியில் உட்கார்ந்திருந்த காலம்லாம் உண்டு.

வேற எந்த ஊரிலும் இந்த மாதிரி விளையாடுவார்களா என்று தெரியவில்லை, பாளையங்கோட்டை வவுசி கிரவுண்டில் மட்டும் விட்டா அவுட் என்று சொல் மிகவும் பிரபலம். பொதுவாக இரண்டு டீமுக்கு ஒவர் மேட்ச்னா மட்டும்தான் ஸ்டிக் நட்டு விளையாடுவோம்.  மத்தப்படி விட்டா அவுட்தான்.
விட்ட அவுட்னா பேட் கீழே வைத்து இரு பக்கத்திலும் கல் வைத்துவிடுவோம். இரு கல்லுக்கு நடுவில்தான் பேட்டிங்க். உடம்பில் பட்டாலும் அவுட், இரு கல்லுக்கும் நடுவில் பந்தை விட்டாலும் அவுட். ரன்லாம் ஒடி எடுக்க முடியாது, ஃபோர், சிக்ஸ் மட்டும்தான். ரொம்ப நல்லா இருக்கும். வெறிக்கொண்டு ஆடுவோம். இந்த மாதிரி விளையாடி பயிற்சி எடுத்ததினால் என்னவோ எந்த ஸ்டிக் மேட்ச் நடந்தாலும் ஒரு பந்தையும் உள்ளே விடாமல் ஆடுவார்கள் வவுசி மைதானத்தின் வீரர்கள். மைதானம் முழுவதும் குழு குழுவாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். பந்து எந்த மூலைக்கு போனாலும் " பாஸ், பால் " என்று கத்தினால் போதும் பந்து கிளீன் த்ரோவில் நம் கைக்கும் வரும்.

பௌலிங்க் போட்டு விளையாடுவதற்கு முன்பு த்ரோ மேட்ச்சில் நான் சிறந்த காட்டான். நல்ல சுத்துவேன். எல்லாம் பந்துகளும் பறக்கும். எல்லாரும் என்னை காட்டான் என்றுதான் சொல்லுவார்கள்.
எட்டாவது படிக்கும் வரை நேருஜி கிரவுண்டில் விளையாடுவோம். வவுசி கிரவுண்டில் இடம் இல்லனா இங்கத்தான் மேட்ச் நடக்கும். இது கிரவுண்ட் மாதிரி அமைப்பா இருக்காது. பாளையங்கோட்டை நகராட்சி அலுவலகம் நேருஜி கிரவுண்ட்க்கு பக்கத்துல இருக்கு. நல்ல மரம் நிழலா இருக்கும். தண்ணி குடிக்க கடை கடையா அலைய வேண்டாம். நகராட்சி சுவரைத்தாண்டி ஏறிக்குதித்து தண்ணி குடிச்சிட்டு வருவோம். அதுக்கு பின்னால் எங்கள் பள்ளி. மதியம் சாப்பிடறதுக்கும் இந்த நகராட்சி அலுவலகம்தான்.
புளிய மரமும், கொடுக்காபுளி மரம் அதிகமா நிக்கும். புளிப்பு சுவையுடன் கிரிக்கெட் விளையாடுவது தனிசுகம்.  இன்னொரு பக்கம் நூற்றாண்டு மண்டபம். அங்கேயும் சில நேரம் அடிக்கிற பந்து போயிரும். நூற்றாண்டு மண்டபம் 1870களில் கட்டப்பட்டதுன்னு நினைக்கிறேன். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கால்டுவேல் இப்படி சொன்னாராம் " தமிழ் நாட்டில் இருக்கிற மொத்தம் இருக்கிற கிறிஸ்துவர்களில் அறுபதுக்கு சதவீதம் பேர் தின்னேல்வேலி( திருநெல்வேலி ) மாவட்டத்தில் இருக்கிறார்கள். இன்னும் இது அதிகமாக வேண்டும் என்று" . நேருஜி கிரவுண்டில் இப்பொழுது அடிக்கடி கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றில் பாளையங்கோட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. இன்னும் பல இடுக்குகளில் ஒளிர்ந்திருக்கும் வரலாற்று நிகழ்வின் இடங்கள் பாளையங்கோட்டையில் நிறைய உண்டு. பொதுவாக பாளையங்கோட்டை கிறிஸ்துவ நகரம் என்று அழைத்தாலும் பல தாய் தெய்வ வழிபாட்டு எச்சங்கள் இன்றும் இருக்கிறது. தசரா விழாவிற்கு பாளையங்கோட்டை களைகட்டிரும். மைசூருக்கு அப்புறம் இங்கத்தான் தசரா பிரபலம். சுமார் பதினைந்து அம்மன் கோவில் சப்பரங்கள் பாளையங்கோட்டை நகரை அழகாக வலம் வந்து , சூரசம்ஹாரத்துடன் நிறைவேறும். மேலும் ஆயிர வருடங்களான வைணவக் கோயில் இருக்கிறது. கோபாலசாமி கோவில் என்று அதனை அழைப்போம். கோபாலசாமி கோவில் பக்கத்திலும் மைதானம் உண்டு. அங்கேயும் விளையாடுவோம். இன்னொரு மைதானம் அண்ணா ஸ்டேடியம். அங்கு விளையாட்டு வீரர்கள் விடுதி உண்டு. மேலும் இன்னொன்று கேம்பஸ் கிரவுண்ட். இது ஜான்ஸ் காலேஜ் எதிர்த்தாப்பில் இருக்கிறது. இங்கு வருடம் தோறும் பேட்ரியாட் டிராபி நடக்கும். காரட் பால் மேட்ச். இங்கு கேம்பஸ் டீம் ஒன்றுடன் நாங்கள் அடிக்கடி மேட்ச் விளையாடுவோம்.
இந்த கிரவுண்ட் இரு வரலாற்று நிகழ்வின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ளது. மைதானத்தின் மேற்புரம் மாவட்ட மியூசியம் இருக்கிறது. இங்குத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை சிறையில் அடைத்த இடம். ஆங்கிலேய காலக்கட்டத்தில் பழைய சிறைச்சாலை இது. பின்னர் பாளையங்கோட்டையின் தாலுகா அலுவலகமாக இருந்தது. பின்னர் மாவட்ட மியூசியமாக்கப்பட்டது.
இன்னொரு வரலாறு நிகழ்வு , கேம்பஸ் கிரவுண்டுக்கு எதிர்த்தாப்பில் இருக்கிறது கிளாரிந்தா ஆலயம். இங்குத்தான் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷஸ் துரை அவர்களின் கல்லறை அமைந்துள்ளது. இன்றும் இங்கிலாந்தில் இருந்து அவர்களின் வாரிசுகள் நினைவுதினத்துக்கு இங்கு வருகை புரிவர். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேம்பஸ் கிரவுண்டில் நடந்த ஒரு கொலை காரணமாக , கிரவுண்ட் மூடப்பட்டது. பாவம் பந்துக்கள் , அவைகளுக்கு பின்னாலும், முன்னாலும் உள்ள வரலாற்று இடத்துக்கு சென்று வர கொடுத்து வைக்கவில்லை.

2003ம் வருடம் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் " மார்ச் 10ல் நெல்லையில் சூரியன் 106.4"  என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தாமிரபரணி ஆத்துப்பாலம் அருகே, டவுன் மேம்பாலம் அருகே, நெல்லையப்பர் கோவில் அருகே, மார்க்கெட், சமாதானபுரம், பாளை பஸ்ஸ்டாண்டு என முக்கிய இடங்களில் அனைத்திலும் கட் அவுட் வைத்திருந்தனர். வவுசி கிரவுண்ட் அருகேயும் ஒரு கட் அவுட்.  " சித்திரையிலதான அக்னி வரும், மார்ச்லயே என்னல சூரியன் 106 ன்னு போட்டுருக்கான், ஒரு எழவும் புரிய மாட்டுக்குன்னு " நாங்க புலம்பிக்கிட்டு இருந்தோம். அதே நாளில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உலககோப்பை மேட்ச் ஒன்று இருந்துச்சு. அதுவா இருக்குமோ என்று கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாளையங்கோட்டையில் கடல் இல்லை , எனவே எங்களைப்பொறுத்த வரை வவுசி மைதானமே பீச். இரவு கூட்டம் கலை கட்டும். புது புது மனிதர்கள். "வீட்டுல கிடந்து என்னத்த பண்றது , அப்படியே செத்த நேரம் நடந்துட்டு வரலாம்லா " என்று தாத்தாவை கைத்தாங்கலா பிடித்து வரும் ராமசாமி கோவில் தெரு மாமி, தன் அக்கா குழந்தைகளையோ, அண்ணன் குழந்தைகளையோ நண்பர்களுடன் வரும் பெரிய அண்ணன்மார்கள், கல்யாணம் முடிந்த இளசுகள், ஊரே பார்த்துட்டு இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி கடலை போடும் லவ்வர்ஸ், தனிமை தீவிரமாகி தற்சமயம் பேச ஆள் இல்லாமல் வெற்று வெளியை பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்கள்,
அரட்டை அடிக்கும் நண்பர்கள், கடலை விற்கும் இள நரை பையன் என இரவில் சில பல கதாபாத்திரங்களால் மைதானம் கேலரி நிரம்பும். மைதானத்தில் இரவொளியில் கால்பந்து விளையடுவார்கள். நெல்லைக்கு  மார்ச் 10 சூரியன் 106.4 வந்தது. அதாவது சூரியன் எஃப் எம். அதே நாளில்தான் நான் வவுசி மைதானத்தில்  இரவு கால்பந்து விளையாடும்போது என் தாடை கிழிந்தது.
அன்று சூரியன் எஃப் எம் என்ற புதிர் அவிழ்ந்த நாள், இந்தியா இலங்கையை கிரிக்கெட் மேட்ச்சில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாள். மிகுந்த சந்தோசத்துடன் இரவு விளையாடிக்கொண்டிருந்தேன். வண்டி ஒட்டி பழகும் ஒருத்தரின் மேல் மோதி கீழே விழுந்தேன். தாடை தோல் சதை கிழிந்தது. சிவா வீட்டுக்கு ஒடினோம். அவங்க அக்கா சல்பனா பவுடர் போட்டுவிட்டார்கள். பின்னர் ஆஸ்பிட்டல் போனால் சல்பனா பவுடர் போட்டதுக்கு நாலு திட்டும்  நாலு தையல் போட்டார்கள். திட்டுக்கும் சேர்ந்து காசு வாங்கினார்கள். வீட்டில் பயங்கர கெடுபடி. விளையாட போக வேண்டாம் என்று. மைதானம் முழுவதும் செம்மண். வீட்டுக்கு தெரியாமல் விளையாடிவிட்டு சிவா வீட்டில் பைப் அடித்து நல்லா காலையும், செருப்பையும் கழுவிட்டுத்தான் வீட்டுக்கு போவேன். அதே வருடம் செப்டம்பர் 10 மறுபடியும் கால்பந்து விளையாடும்போது கீழே விழுந்து என் இடது கையை உடைத்தேன். இரு எலும்புகளும் உடைந்த சத்தம் கேட்டது. சிறிது ரத்தம் வழிந்து மைதானத்தில் சிதறியது. அந்த செம்மண் பூமியில் இரு தடவை என் செங்குருதியை வடித்தேன். கை சரியாகி ஆறு மாதம் கழித்து அதே கேலரியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். என் இடது கையை வைத்து பேட்டை தூக்க முடியாது. மறுபடியும் திரும்பி போய் கேலரியில் உட்காருவேன். மனம் உளைச்சாலா இருக்கும். தினமும் பயிற்சி எடுத்து முதன் முதலில் ஒரு பந்தை எதிர்க்கொண்டேன். பேட்டில் பந்து பட்டதும் கை வலித்தது. பேட்டை போட்டுவிட்டு கேலரியில் உட்கார்ந்துவிடுவேன். போராடி போராடி மறுபடியும் காட்டானாக மாறினேன். சில நேரம் என்னை அறியாமலே பேட் என் கையை விட்டு உருவிவிடும். இதனால் அருகில் ஃபீல்டிங்க் நிக்க பயப்படுவார்கள். பின்னர் எல்லாம் சரியானது. சிக்ஸ் பிபிஎல் கல்யாண மண்டத்துக்கும், ஈகிள் புக் செண்டருக்கும் பறந்தது. கிரிக்கெட் மட்டும் விளையாடவில்லை என்றால் என் கை கோணியிருக்கும். நிமிர்ந்ததுக்கு காரணம் கிரிக்கெட்தான்.

வவுசி மைதானத்தில் அடிக்கடி இந்திய அளவில் கபடி , கால்பந்து , ஹாக்கி மேட்சுகள் நடைபெறும். ஜனவரி மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கிடையே நடைபெறும் மகளிர் கபடி போட்டிகள் தென் மாவட்டம் முழுவதும் பிரபலம். நகர முழுதுமிருந்து வவுசி மைதானத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பார்கள்.  எல்லா மாநிலத்தில் இருந்தும் மகளிர் அணிகள் வரும். மின்னொளியில் போட்டி நடைபெறும். கேலரி முழுவதும் பல்லு தெரிய உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ரைட் போகும் போது கிரவுண்ட் முழுவதும் சத்தம் போடுவர். தமிழ் நாட்டு அணி விளையாடுவது என்றால்
அதிக சத்தம் வரும். போட்டி தொடங்குவதற்கு முன்பு விருந்தினருக்கு வீரர்கள் கை கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரையும் எண்ணையும் சேவியர்ஸ் பள்ளி வாத்தியார் கமெண்ட் கொடுப்பார். ரவி சாஸ்திரி லாம் தோத்துருவான். குரல் கம்பீரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். " நம்பர் ஒன், பூஜாஜாஜா....." என்று புனே டீம் ஒருத்தியை சொன்னதும் கேலரி முழுவதும் அசையும். ஆர்ப்பரிக்கும். அந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட். தமிழ் நாட்டு டீம் பொண்ணுங்கள் விளையாடும் போது கிண்டல் அதிகமாக வராது, வெளியூர் டீம் விளையாடும்போதுதான் அதிக கிண்டலும் ,சத்தமும். மேடைக்கும் பின்னால் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதை பார்க்க அதிக கூட்டம் நிக்கும். லூசான டவுசர் போட்டுருக்குற டீமை விட டைட்டாக டவுசர் போட்டுருக்கிற டீமுக்குதான் அதிக மௌசு.

வவுசி கிரவுண்டில் அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெற்ற சமயம். சீன முக அமைப்பைக் கொண்ட இருவர் தெற்கு பஜாரில் சுற்றிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் அவர்களிடம் தானாக சென்று பேசினான். அவன் ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறான். ஆங்கிலம் சரளமா வந்துச்சு. அவர்கள் மிசோரம் மாநில அணியைச்சேர்ந்தவர்கள். என்னையும் அவர்களுக்கு அறிமுகம் பண்ணினான். அவர்கள் எனக்கும் கைகொடுத்தனர். சிறு கண்கள். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தார்கள். மிசோரம் என்பது அப்பொழுது என்னைப்பொறுத்தவரை வேற நாடு. என் நண்பன் அவனுடைய பாக்கெட் டைரியில் அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குகிறான். அவர்களும் வெட்கப்பட்டுக்கொண்டே போட்டனர். நாங்கள் விடைபெற்று நடக்க ஆரம்பித்தோம். பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கு வந்த ராமசாமி கோவில் சப்பரத்தின் அருகே நின்று விபூதியை மாறி மாறி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள், ஒருவித நாணத்துடன். அவர்கள் விளையாடும்  ஆட்டங்களை ஒடிச்சென்று பார்ப்போம்.  இப்பொழுது அவர்கள் எப்படி, எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கையெழுத்து வாங்கின என் பால்ய நண்பனும் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அதன் பின்பு மிசோரம் என்ற வார்த்தை கேட்டாலே அந்த  சப்பர வெளிச்சத்தில் நாணத்துடன் கூடிய அந்த இரு முகங்கள் என் முன்னால் விரியும்.

***
கல்லூரிக்காலங்களில் அதிகம் வவுசி மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால் எங்கள் கனவுகளையும், ஏக்கங்களையும் மைதானத்தில் காற்றுடன் கலந்துவிடுவோம். நான், சிவா, மணி எல்லாரும் கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பிரச்சினையினாலும் " வாங்கல,  கிரவுண்டுக்கு போயிட்டு வருவோம் " என்ற வார்த்தை சொல்ல முடியாத நம்பிக்கை கொடுக்கும்.  விமர்சனம் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாமல் அப்பொழுது வெளிவரும் படங்களை விமர்சிப்போம். மிஸ்கின் படங்களில் வருகிற மஞ்சள் ஒளி லைட் போன்று ஒரு கேலரி அருகில் மஞ்சள் லைட் இருக்கும் . அதன் அருகில் அமர்ந்திருப்போம். பிறந்த நாள் விழா, அடிதடி என்று ஒவ்வொரு கேலரிலும் ஒவ்வொரு நிகழ்வுகள்.   என் பால்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பாளையங்கோட்டை நகர வீதிகளும், இந்த மைதானமும் முக்கிய இடம்பெறுபவை. நாங்கள் எப்பொழுதும் அமரும் கேலரியில் இருந்து பார்த்தால் ஈகிள் புக் செண்டர் மேல் ஜீசஸ் சேவ் அஸ் என்று ஆங்கிலத்தில் எல்லா வார்த்தையும் சிகப்பு லைட் எரியும். சில நேரம் ஜீசஸ் என்று வார்த்தை மட்டும் லைட் எரியாது. அந்த கோடிட்ட இடத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொள்வர். நான் என்னை நிரப்பினேன். ..!!!





யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்

2013-03-08

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


யௌவனத்தின் கடல் - மொழிப்பெயர்ப்புக்கதைகள் - குளச்சல் மு.யூசுப்



**





மொழிப்பெய்ர்ப்பு கதைகளின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. குறிப்பாக சாகித்ய அகாடமி பதிப்பகமும், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகளை ஒரளவு வாசித்திருக்கிறேன். வாசிப்பின் முதற்படியில் சுழியிடும் போது  மொழிபெய்ர்ப்பு பக்கமே  சென்றதில்லை. அதில் ஒர் அந்நிய தன்மை இருப்பதாக எனக்குப்பட்டது. பின்னர் வாசிக்கும் போதை அதிகமானதும் எல்லாவற்றையும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் முதன்முதலின் வாசித்த மொழிபெயர்ப்பு செம்மீன் நாவல். சுந்தர ராமசாமி மொழியாக்கத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். பின்னர்தான் மொழிபெய்ர்ப்பு நாவல்/சிறுகதைகளிலும் அடர்த்தி இருக்கிறது என்ற உண்மை உரைத்தது. அன்று முதல் பல மொழிபெயர்ப்புகளை கடந்து வந்துவிட்டேன். தற்பொழுது குளச்சல் மு.யூசப் தமிழ் மொழிப்படுத்திய "யௌவனத்தின் கடல்" என்ற மலையாள சிறுகதை தொகுப்பு வாசிக்க நேர்ந்தது. மலையாள இலக்கியம் எப்பொழுதும் காட்சி வகைப்படுத்துதலிலும் அகம் சார்ந்த உரையாடல்களிலும் வாசகனை சொக்க வைக்கும்.  யௌவனத்தின் கடல் தொகுப்பும் மிக மெல்லிய புழுக்கத்தை கிளப்பி விட்டது. பெரும் மழைக்கு முன்னால் வருவதுப் போல்.
தொகுப்பில் மலையாள எழுத்தாளர்களின் 22 சிறுகதை அடங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு வகை என்று எடுத்துக்கொண்டாலும், வாசிப்பின் பின் இவை அனைத்தும்  மனதை வெற்றிடமாக்கியது என்று கொள்ளலாம். கதைகள் ஒவ்வொன்றும் பல சரடுகளையும் அடுக்குகளையும் தன்னுள் கொண்டு கதையின் நீட்சியை அடுக்கிக்கொண்டே செல்கிறது.

**

பாபு குழிமற்றம் எழுதிய " கருத்த மருவில் இரண்டு ரோமங்களுடைய யுவதி " என்ற கதையில் பெண் மீதான ஆணின் குரூரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண் என்பவள் ஆணிடம் தோற்றாலும் பெண்தான் அந்தத்தில் வெற்றி கொள்கிறாள். மெல்வின் எழுதிய மொபிடிக்கையும் பாப்பியோன் எழுதியதை வாசிக்கும் ஒர் பெண்ணை எதார்த்த சந்திப்பில் பழகியபின்  கட்டிலில் வீழ்த்தும் ஆணின் மனம் எப்பொழுதும் அவளை தனக்கு கீழானவள் என்ற மனப்பாங்குடையே அவளிடம் போகிக்கிறான். அவளது தாடையின் மருவில் உள்ள ரோமங்களை பிடிக்கவில்லை என்று சொல்லும் அவனை அலட்சியம் செய்கிறாள். தன் தொடையை காண்பித்து அதில் இருக்கும் வடுக்களை காண்பித்து இது உனக்கு பிடிக்குமே என்கிறாள். அந்த காயங்களுக்கு பின்பு ஒரு கதை இருக்கிறது என்று அந்தக்கதையையும் சொல்ல ஆரம்பிக்கிறாள். கங்கையின் உற்பத்தி மூலத்தை தேடி தனியாக சுற்றியலையும்போது கோமுக் பயணத்தில் கட்வாள் கிராமத்தில் காட்வாளிவாசி அவளை முதுகில் ஏற்றி மலை உச்சியில் கொண்டு விடுகிறான். பயணம் முடிந்து இறங்கி வரும்பொழுது உடற் சூடேறி இருந்த கட்வாளி பனிக்கட்டியாயிருந்த இவளை அணைத்து அக்னி கோளமாக மாற்றுகிறான். அவன் பிடிக்கும் கஞ்சா பீடியைக்கொண்டு வைத்த சூடுதான் இது என்று கதையை நிறுத்துகிறாள். இவனால் தாங்க முடியவில்லை. அதுவும் உற்பத்தி மூலத்தை தேடி அலைபவள் இவள். கட்வாளியை பலசாலி என்று உபயோக்கிறாள் என்ற பொறாமையால் அவள் மீது தீவிரமாக இயங்குகிறான். அடுத்த நாள் காலையில் ஒரு குறிப்பு வைத்துவிட்டு செல்கிறாள். எனக்கு வேலை இருக்கிறது. உன் பர்ஸில் அதிகம் பணம் இல்லை என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் செலவுக்கு வைத்துள்ளேன். தயவு செய்து ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா..? என்று. அவன் கால் மடக்கி உட்கார்ந்து அவளால் வீழ்த்தப்பட்டதை உணரத்தொடங்குகிறான். உன் பெயர் என்ற உரையாடலில் உனக்கு பிடித்த எந்தப்பெயரில் வேண்டுமானாலும் அழைத்துகொள் என்கிறாள். ஆக்ரா சந்திப்பின் பின் அவளின் அக உலகத்தையும் அவளது அகத்தை ஏற்க மறுக்கும் ஆண் உலகத்தையும் இக்கதை மிக யதார்த்தமாக இட்டுச்செல்கிறது. மது சாப்பிடுகிறாய என்ற கேள்விக்கு, இல்லை நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். நான் நாகரீக வாழ்க்கைக்கு உட்பட்டாலும் அதன் சில அம்சங்கள் என்னிடமிருந்து விலகாமலிருக்கின்றன எனக்கூறும் வலுவான பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.
" அம்மாளு வம்மாவின் வீட்டுக்காரர் " என்ற சிறுகதையிலும் தன் கணவர் இறந்துப்போனாலும் அவர் இருப்பதாக ஊரை நம்ப வைத்து வாழும் பெண்ணைப்படைத்திருக்கிறார் பாபு குழிமாற்றம்.

**
மதுபால் எழுதிய  " வெளிச்சம் நிழலுக்குத்தெரியும் " கதையில் ஒர் ஆண் விபச்சாரியின் மன பிம்மங்களையும் அதன் பின் செல்லும் வாழ்க்கையும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். ராஜேஸ் அலெக்சாண்டர் என்னும் விபச்சாரன், ஃபாதர் மேத்யூசின் என்பவரின் மனைவி ஆக்னசின் அழைப்பை ஏற்று ஒர் இரவு செல்லுவதையும் அவள் இவன் மீது  மிகுந்த ஆசை வைத்திருந்தாலும் தான் ஒர் விபச்சாரன் தான் என்ற அகன்று நிற்கும் மனப்பான்மையுடன் மற்றொரு அழைப்பு வந்ததும் அவனது மனம் பதைபதைத்து மற்றொரு நிர்வாணத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான். ஒர் விபச்சாரனுக்கு மன  நிறைவே அவளுடன் இருக்கும் பெண்ணின் குரலிருந்து வரும் பரிவில் நீ மட்டும்தான் சிறந்தவன் என்ற ஒற்றைச்சொல். இது போன்ற உரையாடல்களையும், விகாரமில்லாத விபச்சாரனின் உலகத்தை மிகச்சிறிய சிறுகதையில் தொகுத்திருக்கிறார் மதுபால்.
"ஜெபக்கூடத்தில் வியாகுலமாதா " என்ற கதையில் டிவைன் செண்டருக்கு இட்டு வரும் ஒர் சிறுமியின் பால்ய நாட்களின் அவளுக்கு நடந்த ஒர் துர்சம்பவத்தையும் அதன் பின் வாழ்க்கை மாறுவதையும் அவளை துன்புறுத்திய நான்கு பேரை பின்னர் எப்படி தன்னையறியாமல் கண்டடைகிறாள் என்பதையும் இக்கதையில் தொகுத்திருக்கிறார் மதுபால். வன்கொடுமையின் மெல்லிய அதிர்ச்சியை தாங்காத ஃபிலோமினா புத்தி சுவாதினம் இல்லாமல் ஆகிறாள். டிவைன் செண்டருக்கு வரும் வழியில் வரும் ஆட்டோக்காரனும் , டிவைன் செண்டரில் உள்ள ஃபாதரும் " எங்கே பார்த்தேன் கர்த்தாவே " என்று முழிக்கிறார்கள். நம்பிக்கையின் பெயரால் அதே டிவைன் செண்டரில் விட்டுச்செல்லப்படுகிறாள் ஃபாத்திமா. பெண் என்பவள் மீது நடத்தப்படும் வேட்டைகளையும் வேட்டை நடத்துப்பவனே பின்னால் பெண்களை காக்க வந்த ரட்சர்களாக காட்டிக்கொள்வதும் இவ்வேடிக்கை உலகத்தின் தொலி உறிந்த கதையாகும்.

**

இ.சந்தோஷ்குமாரின்  " கண் பார்வையற்ற மூன்று பேர் யானையை விவரிக்கிறார்கள் " என்ற கதையில் கண்பார்வையற்ற மூன்று பேரிடம் ஊடகச்செயல்பாட்டின் மீது மிகுந்த ஆர்வமுடைய  இளைஞன் ஒருவன் நேர்காணல் பண்ணுகிறான். அவனது நிலைப்பாட்டில் குருடர்கள் யானையைப்பார்த்ததுப் போல என்ற பழமொழியின் பின்னால் இருக்கும் குருடர்களைப்பற்றிய கேலி, கிண்டல்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அவர்கள் மூன்று பேரிடமும் யானையைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ற கேள்வியை முன்வைக்கிறான். சேகரன் என்பவர் முதலில் வாய்திறக்கிறார். அவர் சிறுவயதில் திருவிழாக்கு சென்றிருந்த போது ஒர் மதம் பிடித்த யானை அத்திருவிழாவை அலைக்கழிக்கிறது. எல்லாரும் ஒடிவிடுகிறார். இவர் கீழே விழுந்து மாட்டிக்கொள்கிறார். பெரும் சுறாவளியைப்போல் யானை பெரும் சத்தம் இடுகிறது. பூமி குழுங்கும் சத்தம் கேட்கிறது. சேகர் மேலும் சொல்கிறார்.
" என்னைப்பொறுத்தவரை யானையென்பது பெரியதோரு சலனம்தான். அதற்கென்று தனியொரு வடிவம் கிடையாது. அது நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்சி, திடீரென்று நின்று போன வாத்ய கோசங்கள், கீழே விழுவது, தடுமாறி விலகியோடுபவர்கள். பயமுறுத்தும் நிசப்தத்தின் மீதான அந்தச் சத்தங்கள்.. யாருமில்லாமல் நான் விழுந்து கிடந்தபோது என்னைக்கடந்து சென்ற ஒரு உலகத்தின் பேரோசை.." என்று.

ரகுராம் என்பவர் யானை என் கனவில் வருமென்றும் அது எனக்கு எப்பொழுதும் பயத்தை உண்டாக்காது என்கிறார். வினாயகரை எனக்கு பிடிக்கும் என்கிறார்.
சந்திரன் என்பவர் யானையை நான் தொட்டிருக்கிறேன். கல் யானையை என்கிறார். கல் யானையின் மீது ஈடுபாட்டால் தன் தொடையால் யானையை பச்சை குத்தி வைத்திருக்கிறார் சந்திரன்.
ஒவ்வொருவரும் யானை பற்றி கருத்தை முன்வைத்ததைப்போல் அந்த இளைஞனிடமும் கேட்கிறார்கள். அவன் சொல்ல தெரியாமல் தவிக்கிறான். கருப்பாக இருக்கும். தந்தம் வெள்ளையாக இருக்கும். பஸ் மாதிரி பெருசா இருக்கும் என்று சமாளிக்கிறான்.  ஒரு விசயத்தை உள் மனதால் உணராத வரைக்கும் அவற்றை பெருசாக வெளிப்படுத்தமுடியாது. அந்த இளைஞனும் சமாளிக்கிறான். பார்வையில்லாதவர்கள் கூறிய யானை அனுபவத்தை விட நம்முள் பரவி இருக்கும் யானைப்  பற்றிய  அனுபவம் மிக குறைந்ததுதான் என்பது நிதர்சனமான உண்மை..!

**

சந்தோஷ் ஏச்சிகானம் எழுதிய " கொமல " என்ற கதை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியில் வந்த "பீப்ளி லைவ்" என்ற திரைப்படத்தின் கதையை ஒத்திருந்தது. திரைப்படம் வருவதற்கு முன்பாகவே இக்கதை வந்திருக்கிறது. வங்கியில் தன் நண்பன் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்திடுகிறார் விசுவன் என்பவர். நண்பர் கடனை கட்ட தவறியதால்  விசுவனது வீட்டை ஜப்தி பண்ணுவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறது உள்ளூர் கூட்டுறவு வங்கி. இதனால் மனமுடைந்த விசுவன் ஆக்ஸ்ட் பதினைந்தாம் தேதி குடும்பத்துடன் தற்கொலை பண்ணப்போவதாக வீட்டு முன்னால் எழுதி வைத்து ஊடக கவனத்தை ஈர்க்கிறார். தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கையிலும் விசுவனது தற்கொலை முடிவு பற்றி கடும் விவாதம் நடைபெறுகிறது. விமர்சகர்களும் சமூகப் பொறுப்பில் இருப்பவர்களும் தத்தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் தனது கோணத்தில் தற்கொலையைப்பற்றி பேசுகிறார். வழக்கறிஞர்கள் தற்கொலைக்கு முயற்ச்சிப்பது குற்றமாகும் என்கின்றனர். தற்கொலையைப்பற்றி தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவர் சொன்ன மெக்சிகன் நாவலில் வரும் கொமல என்னும் கிராமம்  தற்கொலைகளால் நிரம்பியிருக்கிறது என்கிறார். இதைக்கேட்ட விசுவன் வாசக சாலைக்கு வந்து ' பெட்ரோபராமோ' என்னும் அந்த நாவலை இரவல் வாங்கிச்சென்று ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் எல்லாரும் உறங்கிய பிறகு  வாசிக்க தொடங்குகிறான். ப்ரேசியாதோ எனும் இளைஞன் பெட்ரோபராமோ என்னும் தந்தையைத்தேடி கொமால கிராமத்திற்கு வருகிறான். வறண்ட கிராமம் முழுவதும் இறந்தவர்களின் சத்தம் எதிரொலிக்கிறது. தேடி வந்தவனும் இறக்கிறான். நாவலின் ஒரு வரி விசுவனை தாக்குகிறது. " இங்கே எதுவுமில்லை, எங்கு பார்த்தாலும் வீச்சமடிக்கும் அந்த கெட்ட, புளித்த நாற்றத்தை தவிர. இது ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தக் கிராமம்."
வாசித்து முடித்த விசுவன் ஒருகணம் திகைக்கிறான். இறப்பு பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான். மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இனிய காலங்களை நினைக்கிறான். மனம் தெளிவு பெறுகிறது. நல்ல புத்தகம் அதைத்தான் செய்யும். ஒடிப்போன தன் நண்பனை தேடி செல்கிறான்.  இரண்டாம் நாள் முடிவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒர் விபத்து நடைபெறுகிறது. அடிப்பட்டவன் ஊளையிடுகிறான். விசுவன் அவனை ஒடிச்சென்று அரவணைத்து மருத்துவமணைக்கு கொண்டுச்செல்ல வாகனங்களை தேடுகிறான். எவரும் முன்வருவதில்லை.  ஒருவன் முன்வந்து ஏற்றிக்கொண்டு விரைந்து செல்ல முயற்சிக்கிறான். மனசாட்சியில்லாத இம்மக்களை பார்க்கும்போது அவனுக்கு பின்னரவில் படித்த கொமல கிராமம்  ஞாபகம் வருகிறது. அடிப்பட்டவன் தண்ணீர் தண்ணீர் என்று பிதற்றுகிறான். டிரைவர் வெற்று பாட்டில்களை காட்டுகிறான். மரங்களடர்ந்த காட்டுப்பாதையில் வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. எங்கோ சிறு நீரோடை உயிர் போய்க்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்காக சென்றுக்கொண்டிருக்கிறது. விசுவன் நீரைப்பிடித்து இளைஞனின் உதட்டில் ஒத்துகிறான். மார்பில் தெளிக்கிறான். அவன் இறக்கிறான். கண் முன்னால் இறப்பைப் பார்த்து திகைக்கிறான். விசுவன் யோசிக்கிறான். "தன்னைபோலவே இவனும் எங்கெல்லாமோ சஞ்சரித்தான்.யாரிடமெல்லாமோ பேசினான். போட்டியிட்டான். தோற்றிருக்கிறான், அழுதிருக்கிறான், வெற்றியும் மகிழ்ச்சியுமடைந்திருக்கிறான். நாமளும் இந்த இரண்டு சொட்டு தண்ணீரைப்போல் யாருடைய கருணை நம்மில் படாதா என்றுதான் இந்த தற்கொலை நாடகமெல்லாம் நடத்தியிருக்கிறோம்."  அவனது தற்கொலைப்பலகை அவனுக்கே அபத்தமாக தெரிகிறது. சீக்கிரம் எடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நடக்க ஆரம்பிக்கிறான்.
மனித மனமும் எதாவது கருணைக்காகவும், வாஞ்சைவார்த்தைக்காகவும் அலைந்துக்கொண்டிருக்கிறது. அது தடை படும் இடத்தில்தான் பாவங்கள் தோன்றுகிறது. எல்லாருமே பாவத்தையும் ஒரு கையிலும் நன்மைகளையும் இன்னொன்றிலும்தான் வைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எதன் எடை கூடுவதைப்பொறுத்தே அவனது கதாபாத்திரங்கள் இச்சமூகத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மனித நேயம் என்ற ஒற்றை வார்த்தை பின்னால் இருந்து  அழகாக விவரிக்கப்பட்ட மிகச்சிறந்த சிறுகதை இது.



" புத்தகங்கள் உலகம் " என்ற சிறுகதையில் தேர்ந்தெடுத்த வாசகனின் இறப்பிற்க்கு பின்பு அவனது உடலைக் காணாமல் அவனது நண்பர்கள் தேடுகிறார்கள். அந்த உடலை எடுத்த சென்றது யார் என்று அறியும் போது  ஆளேயே தூக்கிப்போட்டது போன்ற பதற்றத்தை உள்வாங்குகிறார்கள். தூக்கிச்சென்றது யாருமில்லை. ஃபியதோர் மிகெய்லோவிச் தஸ்தாயேவ்ஸ்கி.
மிகுந்த கற்பனையுடன் புனைந்துள்ளார் சந்தோஷ் ஏச்சிகானம்.

**

கே.வி.அனூபு எழுதிய  " உருவகம் " கதையில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு தலை வேறு உடல் வேறு என்று கிடக்கும் பிணத்தை இரவில் காக்கும் பொறுப்பில் இரு போலீஸ்காரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த முண்டத்தின் நிர்வாணத்தை ஒருவன் ரசிக்கிறான். இன்னொருவனுக்கு அந்த நிர்வாணத்தின் பின்னாலிருந்து அவளுக்காக அனுதாபம் படுகிறான். இவனின் பால்யகாலத்தில் முதல் நிர்வாணத்தை பார்த்த கதை மிக வேகமாக விவரிக்கப்படுகிறது. உள்ளூர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கடல் கன்னி வேடமிட்ட ஒருத்தியை பார்க்க ஆசைப்பட்டு கூடாரத்துக்குள் ஏறி குதித்து பார்த்தப்பொழுது அந்த கடல் கன்னி வேடமிட்டவள் முழு நிர்வாணத்தில் இருக்கிறாள். மிகப்பயந்து மறுபடியும் கூடாரம் ஏறிகுதித்து வீடு திரும்புகிறான். மிகுந்த பயத்திலும் அந்த நிர்வாணக்காரியை நினைத்து பரிதாபப்படுகிறான். நினைவுகள் திரும்புகையில் அந்த முண்டத்தை நாய் ஒன்று கவ்வி செல்கிறது. உடலைத்தேடி நாய் பின்னால் ஒடுகிறான் என்று முடிகிறது கதை.  எளிதில் சீரணிக்கமுடியாத களத்தை பிடித்து வார்த்தை விவரணங்களால் விவரித்திருப்பார் கே.வி. அனூபு. எந்த அளவுக்கு நிர்வாணம் போதை தருகிறதோ, அந்த அளவுக்கு பயத்தையும் அளிக்கும்..!!

**


வினு ஆப்ரஹம் எழுதிய  " குருவிளைசார் உலகச்சந்தையில்" என்னும் சிறுகதை மிகுந்த நேர்த்தியுடன் எழுதப்பட்ட  திரைக்கதை வடிவத்துடன் ஒத்துப்போகிறது. குறும்படமாக எடுக்கலாம்.

இரண்டாம் பதிப்புக்கூட வராத புத்தகங்களை எழுதிய குருவிளை என்ற எழுத்தாளரைப்பற்றி கதை இது.
குருவிளை சாரை இலக்கிய உலகு மதிப்பதே இல்லை. அவர் மனைவி கூட நீங்கள் மலையாள மனோரமா இதழில் வருகிற கதையை மாதிரி ஏன் எழுவதில்லை என்று கேட்டு அவர் சங்கடப்படுத்திருக்கிறார். அவர் எழுதிய எல்லா புத்தகங்களையும் சொந்த செலவிட்டே வெளியீடுகிறார்.
என்றாவது ஒரு நாள் சிறந்த படைப்பை படைப்போம் என்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
அந்த படைப்பின் கரு உதிக்கிறது. அந்த மல்லம்பள்ளி கிராமத்தின் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த எஸ்தர் என்ற பெண்மணி வாழ்க்கையை எழுத நினைக்கிறார். எஸ்தர் கல்கத்தாவிலிருந்து இந்த மலையாள தேச மண்ணுக்கு பழக்கப்படுவது என்ற பார்வையில் குருவிளை யோசிக்க யோசிக்க இதுதான் சிறந்த படைப்பு மனம் பூரிப்படைகிறது. எஸ்தர் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரின் கதைகளை கேட்டு அறிந்துக்கொள்கிறார். திரட்டப்பட்ட எல்லா தகவல்களை வைத்து எழுத ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை வருகிறது. சர்வதேச புகழ் பெற்ற ஆங்கில நாவல் எழுதும் மலையாள பெண் எழுத்தாளர் குருவிளை சார் வீட்டுக்கு வந்து அந்த நாவலை எழுதப்போவதாகவும், எஸ்தர் பற்றி குறிப்புகளை எனக்கு கொடுங்கள் என்கிறாள். அதற்காக லட்சங்களை அள்ளி வீசுவதாகவும், நன்றியுடன் என்று குருவிளை சார் பெயரை போடுவதாக வாக்குறுதி கொடுக்கிறாள். எதற்கு அசையாத குருவிளை சார் அவர்களை அனுப்பிவிடுகிறார். மனம் லயித்த ஒரு நாளில் எஸ்தர் அவர்களின் வாழ்க்கையை வட்டார மொழியில் எழுதி முடிக்கிறார். இரண்டாம் பதிப்பு வராத தன் புத்தகங்களை எடுத்து உச்சி நுகர்கிறார். இந்த விவரணையுடன் கதை முடியும் போது மிகுந்த மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தான் எழுதிய எழுத்து யாராவது படித்துப்பார்த்துவிட்டு எதாவது சொல்வார்களா என்று அலையாத மனமே கிடையாது. குருவிளை சார் போல சிறந்த படைப்புகளை படைத்தாலும் படைப்பு அரசியல் ஒன்று இருக்கிறதே. அதில் பிழைத்தால்தான் நம்மை கொண்டு சேர்க்க முடியும். தீவிர இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் குழுமனப்பான்மையுடன் கூட்டம் சேர்த்துக்கொண்டு அலைந்தால்தான் தன்னை மெய்பிக்க முடியும். இல்லையெனில் குருவிளை சார் கதிதான் நமக்கும்...!!

பல கதைகள் இருந்தும் எனக்கு மிகப்பிடித்த கதைகளை மட்டுமே என்னால் எழுத முடிந்தது. தமிழிலும் இப்பலதரப்பட்ட கதைக்களங்களில் செறிவான சொல்லாடல்களின் சிறுகதைகள் வந்துக்கொண்டிருக்கின்றன. இம்மொழிபெய்ர்ப்பு சிறுகதைத்தொகுப்பு மிகுந்த வாசிப்பனுபவத்தை நிரப்பும் என்பதில் சந்தேகமில்லை.

யௌனவத்தின் கடல்
மலையாள மொழிப்பெயர்ப்பு சிறுகதை
தொகுப்பு : குளச்சல் மு.யூசப்
அம்ருதா பதிப்பகம்
விலை 180

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

உப்பு நாய்கள் - நாவல் வாசிப்பனுபவம்

2013-01-22

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





சில நாவல்களை படித்துமுடித்தவுடன் நம்மையறியாமல் மனம் கட்டவிழ்த்து விடப்பட்டு  தீவிரமாக தனது இருப்பிடத்தை தேடும். அதனூடே நமது தர்க்க ஞாயங்களை முன்வைத்து அந் நாவலை பொருத்திப்பார்க்கும். மனதின் அலைபாயும் தருணங்களை அந் நாவல் பூர்த்தி செய்யுமானால் அவை நமக்கு சிறு சந்தோச உணர்வையும், நீங்காத துக்கத்தையும் நம்மில் பரவ விட்டு அவை சென்று விடும். 

அவை சென்ற பின்னும் நம்மில் அந்த கதைக்களத்தின் எச்சம் நீடித்து நம்மை துரத்திக்கொண்டிருக்கும்.
லஷ்மி சரவணகுமாரின்  " உப்பு நாய்கள் " நாவலை வாசித்து முடித்த தருணங்களில் இருந்து நீங்கா துயரம் என்னுள் எழுந்துக்கொண்டிருக்கிறது.

பெருநகர வாழ்வு என்பது எல்லாருக்கும் கிடைக்காத வாழ்வு. அந்நகரத்தில் பணம் இருக்கும். சந்தோசம் இருக்கும். சுதந்திரம் இருக்கும். நினைத்ததை முடிக்கும் வாய்ப்பை அது கொடுக்கும்.
இருந்தாலும் அந்த நகரத்துக்கென்று ஒரு அந்தரங்க வாழ்வு இருக்கும். சென்னையும் அவ்வாறே.
சென்னையின் இன்னொரு முகம். மிதமிஞ்சிய பயம்.

நாவல் பேசும் விசயம் என்னவெனில் எல்லாருக்கும் தெரிந்தும், எல்லாரும் பேச முற்படாத கதையை.
நாவலில் மதுரையிலிருந்து திருட்டு தொழில் செய்ய சென்னை வரும் செல்வி மற்றும் அவளின் குடும்பம்,  சிறுவயதிலிருந்தே தவறை தனது தொழிலாக செய்து பின்னால் சிறு பெண்பிள்ளைகளை கடத்தும் சம்பந்த், ராஜஸ்தானிலிருந்து தொழில் செய்ய வந்த மார்வாடி குடும்பத்தில் உள்ள ஷிவானி என்ற பெண்,
ஆந்திராவிலிருந்து சென்னையை அண்ணார்ந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை கட்ட வரும் சிறுமி ஆதம்பாவின் குடும்பம்.  இவர்களை மையாமாக வைத்தே கதையின் போக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் செயல்பட ஆரம்பித்ததும் அதனை சுற்றி பார்க்க வரும் கட்டிடத்தொழிலாளிகளின் குழந்தைகளை உள்ளே பார்க்கத் தடை செய்கிறார்கள். நாங்கள் கட்டியது சார் என்று கண் கலங்க கூறும் சிறுமி ஆதம்பாவின் கனவுகளும் எண்ணங்களும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. கடப்பாவிலிருந்த வெக்கை,  சென்னையில் இல்லை என்றும்  சென்னையில் கடல் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே சென்னையை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.  கட்டிடத்தொழிலாளிகளின் கதை  தமிழ் நாவல்களில் இன்னும் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை. அதுவும் இடம்பெய்ர்ந்து வந்து பொருந்தாத நகரத்துடன் தன்னைப்பொருத்தி தன் வயிற்றுப்பிழப்பிற்காக அடிமைகளாகும் இத்தொழிலாளிகளைப் பற்றி நிறைய எழுத வேண்டும். இந்நாவல் அவர்களின் வலியை ஒரளவு பதிவு செய்கிறது.


நாவல் பின்புலமாக காமம் வழிந்தொடுகிறது. எல்லாருமே காமத்தின் முன்னால் மண்டியிட்டு மடிய முற்படுகின்றனர். தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் இப்பெருநகரத்தின் மீது காமம் பெரும் மழையாக பெய்துக்கொண்டிருக்கிறது. அதனை விட்டு விலகவும் முடியாமல், நனையவும் முடியாமல் இந் நாவலின் மாந்தர்கள் தவிக்கிறார்கள்.

திருடுவதும், வேசித்தொழில் பண்ணுவதும், கஞ்சா கடத்துவதும் தவறானத் தொழிலாக இச்சமூகம் போதித்து வருகிறது. ஆனால் இத்தொழிலை வேறு வழியில்லாமல் செய்பவர்களைப் பொறுத்தவரை இத்தொழிலே இவர்களை வாழவைக்கிறது. இவர்களை இந்த வழிக்கு விரட்டிவிட்டதும் இந்த சமூகமே.!

சென்னையின் இன்னொரு வாழ்க்கையையும், தொழில்நுட்பத்தின் காரணமாக பாலியல் வழித்தவறுதலையும், அறியாத இன்னும் சில வாழ்க்கையும் இந் நாவல் கண்டிப்பாக நம் மனதில் பதிவிடும் என்பது நிச்சயம்..!!

தடதடக்கும் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்றவுடன் இருளில் வெறுமையாக நீண்டு  கிடக்கும் தண்டவாளங்களின் தனிமை இந்நாவல்.

உப்பு நாய்கள்
லஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம்.

-- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி--சிறுகதை

2012-12-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




நீலக்கடலின் பிரமாண்டத்தின் முன் வெண் பிறை சற்று மந்தமாக தெரிந்தது.
அடிக்கும் குளிர்க்காற்று உடலுக்குள் ஊசி குத்திக்கொண்டிருந்தது. நுரை
சேரும் குருமணல்கள் ஈர பிழம்பாய் இருந்தது. இறுக்கி பிடித்து
மூடிக்கொண்டிருந்த இமை ரெண்டும் அதி உன்னதமான வாடைக்காற்றால் திறந்தது.
கண்கள் ரெண்டையும் கசக்கி விட்டுக்கொண்டேன். தூரத்தின் தெரிந்த நிலவு,
தற்பொழுது தலைக்கு மேல் கோபுரத்தின் ஊடே தெரிந்தது. தூரத்திலிருந்து
சினம் கொண்டு வந்த அலை, சிறுமணல் குன்றின் மீது ஏறாமல் அமைதியாக
திரும்பியது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எழுந்து நடந்தேன்.
கரையின் நுனியில் கால் நனைத்தேன். கோவிலின் முன்னால் உள்ள மண்டபத்தில்
பலர் படுத்திருந்தனர். நேரம் மூன்றாம் சாமத்தை கடந்துவிட்டது. வளர்
பிறையின் உதவியால் மண்டபத்தின் அருகில் உள்ள வேப்பமரத்தனடியில் வந்து
அமர்ந்தேன். வேம்பு தன் கிளைகளை வேகமாக ஆட்டி என்னை வரவேற்றது.  தூக்கம்
வரவில்லை. சிறிது நேரத்தில் தூரத்தில் சிலர் கரையில் கிடந்த கட்டுமரங்களை
கடலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தனர். காலைப்பாடு செல்கிறவர்கள்.  கழுத்தில்
கல்வாரியில் தொங்கிய யேசு இடம்பிடிந்திருந்தார். மறுபடியும் தூக்கம் தழுவ
மனம் பிதற்ற ஆரம்பித்தது. கடல் கெழு செல்வி, பாண்டியன், கொற்கை, மன்னார்
முத்துக்கள், தெய்வானை, சள்ளை, சம்பை, போர்ச்சுகீஸ், கிறிஸ்துவம், மாதா,
மேசைக்காரர்கள், மெனக்கடர்கள், கம்மாகாரர்கள். பிதற்றலின் முடிவில் வாய்
கசந்தது. உதட்டோரத்தில் உப்பு உலர்ந்தது.  காலம் தெரியாத அந் நாளில் என்
தொல் வேரின் மூத்தவனாகிய செழியன் என்பவன் இக்கடலை விட்டுச்சென்றான். அவன்
 எச்சத்தைத் தேடியே நான் இக்கடற்கரைக்கு வந்திருந்தேன். அவனின்
பரிபாடல்கள் என் நினைவில் பத்திரமாய் இருந்தது. அவனின் கதைகளை நாங்கள்
தலைமுறை தலைமுறையாக தெரிந்துக்கொண்டோம். கடலின் ஓயாத இரைச்சலில் அவனின்
கதை என் கண் முன்னால் படிய ஆரம்பித்தது.
***

" பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவர்
  இருங்கழிச் செறுவின் உழா அது செய்த
  வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி..."

சுடுமணலைத்தோண்ட தோண்ட தரை தட்டுப்படவேயில்லை. ஒரு வேம்பை நட இவ்வளவு
பிரச்சினையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. குடிசையின் முன்னால் நன்றாக
இருக்கும்னு நினைச்சு புடுங்கிட்டு வந்தது. அம்மை கத்த ஆரம்பித்தாள்.
"ஏம்ல, செழியா... மூசு மூசுன்னு வார.. அங்கன்ன முடியலன்னா.. பொறத்தால  நட
வேண்டியதுதானே..  அது என்ன கண்ணு...?"
"இரும்மா.. கத்தாத.. வேப்பங்கண்ணு... கொடி மரத்துக்க புடுங்கிட்டு
வந்தேன்..ஒரு நல்ல எடம் பார்த்து நட வேண்டியதுதான்.. நடர வரைக்கும்
சும்மா கத்திகிட்டு இருக்காத...!"
" பெரிய பாண்டிய மகராசா வம்சம்.. வேம்பு கேட்குதோ.. " அம்மை எடத்த விட்டு
நகர்ந்தாள். கையில் சம்பைக் கூடை.
ஒரு வழியா தரை தட்டுப்பட்டு வேம்பை நட்டு, புடிச்ச மண்ணைக்கொண்டு மூடி,
தண்ணீ தெளிச்சு, கையில் பட்ட மண்ணை சாரத்தில் துடைத்துக்கொண்டு
மாதாக்கோவில் பக்கம் ஒடினேன்.  வேம்புவின் சிறிய இலை என்னை பார்த்து தலை
ஆட்டியது.

***

கரையில் உள்ள மரம் கடலுக்குள் இறங்க மறுத்தது. ஒரு பெரிய கூட்டமே
தள்ளிக்கொண்டிருந்தது.  மரத்துக்கு சொந்தக்காரன் பலமா தள்ளினான். கையில்
புஜம் உயர்ந்து இறங்கியது. என் கையை மடக்கி புஜத்தை தொட்டுப்பார்த்தேன்.
சிறியதா இருக்கிற வரைக்கும் கடலுக்கு போக முடியாது. சீக்கிரம் கடலுக்கு
போகனும் வெறி வந்தது. ஒரு வேகத்தில் கூட்டத்துடன் நானும் சேர்ந்து
கட்டுமரத்தை தள்ளினேன். என் கைப்பட்டவுடன் மரம் கடலுக்குள் இறங்கியது.
ததும்பி வந்த சந்தோசம் அலையை விட ஆர்ப்பரித்தது. ஓவென்று கத்திக்கொன்று
கரையில் ஒடினேன். பெரிய கம்புத்தட்டி விழுந்தேன். முன் பல் உடைந்து
குருதி வழிந்தது. தட்டுன கம்பின் மீது பெருங்கோபம் வந்தது. பெருவிரல்
திரும்பியதால் நொண்டி நொண்டி முயற்சித்தேன். முடியவில்லை. பெருங்கம்பு
பக்கத்தில் சிறு கம்பு ஒன்று கிடந்தது. சிறுகம்பின் உதவியால்
அலைத்தண்ணீரினால் ஒடைந்த பல்லை கழுவினேன். பல்லை தூக்கி கடலுக்குள்
எறிந்தேன். அது சுறாக்கு பல்லாக மாறக்கடவது என்று வேண்டிக்கொண்டு
குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். சிறு கம்பு எனக்கு பெரும்பலத்தைக்
கொடுத்தது. கொஞ்ச நாள் கம்பின் உதவியால்தான் நடக்க முடிந்தது.
பின்னாட்களில் கம்பை விட மனசு வரவில்லை. கையில் வைத்துக்கொண்டே
அலைந்தேன். கம்பை வேல் மாதிரி சீவிக்கொண்டேன். மீனைக்குத்தி
பிடிப்பதற்காக. வேல் கம்பு எனக்கு உற்ற தோழனாக மாறினான். நானும் அவனும்
கரைக்கு பக்கத்திலே நின்றுக்கொண்டே வேட்டையாடினோம். வலை வீசும் படலத்தை
விட வேலுடன்  வேட்டையாடுவது பிடித்திருந்தது. ஓட்டைப்பல் முளைத்து
விட்டது. கையில் வேலோடு சுத்துவதால் என்னை எல்லாரும் வேலா என்றும்
அழைத்தனர். செழியனை விட எனக்கு அந்தப்பெயர் பிடித்திருந்தது.
***

   " கடலில் இறங்கிய  முதல் பெண்.. தென் குமரி.."

எல்லாரும் அவளை ஊமைக்கிறுக்கி என்றுதான் சொல்வார்கள்.  அவளைப்பற்றி
பலக்கதைகள் உண்டு. பேய் பிடித்ததால் பக்கத்து ஊரிலிருந்து கோவிலில்
விட்டுச் சென்றுவிட்டதாக கூறுவர். ஒரு சிலர் அவள் பேயோ பிசாசோ இல்லை.
அவள்தான் நம்மக்க ஊரு காவல் அன்னை என்று. எங்களுக்கு அவள் எப்பொழுதும்
ஊமையன்னை.  அவளுக்கு மீன் அதிகம் பிடிக்கும். எல்லார் வீட்டிலும் மீன்
வாங்கி சாப்பிடுவாள். மீன் மட்டும்தான். தாகம் எடுத்தால் கடல் நூரையுடன்
கூடிய நீரை அருந்துவாள். தாகம் அடங்கியது பெருமூச்சு விட்டு அழுவாள்.
சிறு கண்ணீர் திவளைகள் மார்பு வழியாக இறங்கும். கோவில் மணி அடிக்கும்
பொழுது காதை பொத்திக்கொண்டு ஒடுவாள். சிறு உளறல் மட்டும் கேட்கும். பெரு
அலையைக்கண்டு கைத்தட்டுவாள். இவ்வளவு அழகானவளா என்று நினைக்கத்தோன்றும்.
பெரு அலையின் மேல் அவளுக்கு இருந்த ஆர்வம் ஊர்மக்களுக்கு வியப்பை தரும்.
கன்னி மரியாளின் உருவச் சிருவத்தை கெபியின் முன் நின்று பார்ப்பாள். அவளை
அறியாமல் முனகல் வரும். நான் ஒரு நாள் அவளிடம் பேச முற்பட்டேன். என்
தலையைத் தொட்டு ஆசிர்வதித்தாள். கடலைக் கை காட்டி என்னிடம் ஏதோ சொல்ல
முன்வந்தாள். அவளால் வார்த்தை வரவில்லை. ஆ,உ,ம் என்ற சத்தத்தை தவிர எதும்
வரவில்லை. என்னுடன் பேசிய சில நாட்களுக்கு பிறகு ஊமை அன்னையை காணவில்லை.
அந் நாட்களில் மட்டும் அலை தனது ஆர்ப்பரிப்பை நிறுத்தி வைத்தது. சில
பெரியவர்களுக்கு வருத்தம். நம்ம தெய்வம் நம்மை விட்டு போயிட்டது என்று.
அவள் போனதிலிருந்து எங்களூர் மாதா சுரூபம் மிக பிரகாசமாக மாறியது. எங்கள்
மாதாவின் மகிமை எல்லா ஊருக்கும் பரவியது. மெல்லிய புன்னகையுடன் கன்னி
மாதா எங்களூரில் மிகவும் பிரகாசிக்க ஆரம்பித்தது ஊமை அன்னை
மறைந்துப்போனதுக்கு அப்புறம்தான். கடல் கொந்தளிக்காத பொழுதெல்லாம் அரிசி
மாவை இடித்து கன்னி மாதாவுக்கு படைத்தோம். எங்கள் கானலம் பெருந்துறைக்கு
அவள் தெய்வமானாள்...

***
    "நாள்வலை முகந்த கோன்வல் பரதவர்"

கடல் முழுவது குருதி வழிந்தோடியது மாதிரியிருந்தது. பெரிய சுறா ஒன்று தன்
குருதியை கொட்டி தீர்த்ததாக நான் நினைத்தேன். அந்த அளவுக்கு செங்கடலின்
வியப்பு என்னை ஆழ்த்தியது. கரையில் ஆட்டம் போடும் அலை. நடுக்கடலில் குளம்
போல் காட்சியளித்தது. முதல் கடல் பயணம். பெரு வலையின் சிறு முனை என்
கையில் கொடுக்கப்பட்டிருந்தது. மறு கையில் என் வேல்.
வேலைக்கொண்டு கடல் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த திருக்கயை
குத்தினேன். என் வேலில் மாட்டிக்கொண்டது. அலைக்கடல் தன் ஆர்ப்பரிப்பை
நிப்பாட்டி விட்டு என்னை வாழ்த்தியது. எங்கிருந்தோ வந்த ஊதக்காற்றின்
சத்தம் ஆ,உ,ம் சத்தத்தை உண்டு பண்ணியது. ஆம் என் ஊமை அன்னை என்னை
வாழ்த்தினாள்.
***

" பழந்திமில்  கொன்ற புதுவலைப்பரதவர் "

" ஆண்டவனே உன்ன நம்பி
  ஏலேலோ
அலைக்கடல் ஏறி வந்தோம்
 ஏலேலோ
பெருமாளே உன்ன நம்பி
 ஏலேலோ
பெருங்கடல் ஏறி வந்தோம் "

அம்பா பாட்டு பாடிக்கொண்டே கொண்டல் காற்றுக்கு ஒத்துசைந்து நீலக்கடலை
கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தோம். கட்டுமரத்தினுள் வலை,
தூண்டில்,உளி  போன்றவை கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. சில மீன் களை
உளியைக்கொண்டு எறிந்து பயன்படுத்தலாம். நான் என் வேல் கம்பை கரையில்
வைத்து வந்துவிட்டேன். உளியை  எடுத்துப்பார்த்தேன். கூடவே பனை
ஓலைப்பெட்டி. இதை நாங்களே முடைந்துக்கொள்வோம். மீன்கள் ஓலைப்பெட்டிக்குள்
துடிப்பதை ரசித்துப்பார்த்துக்கொள்வேன். என் பெரியப்பன் தான் எங்கள்
நடைக்கு தலைமை. கொடிய முடிச்சுக்களை உடைய ஒருவிதமான நாரினால் ஆன வலையை
என் பெரியப்பன் கடல் நீவாட்டுக்கு ஏற்ப கடலில் வீசிக்கொண்டே வந்தான்.
விடி வெள்ளி உச்சியில் இருந்தது. சிறிது நேரத்துக்கு நானும் என்னைப்போன்ற
கையாட்கள் தூங்குவோம். பின்னர் ஒரு வெள்ளி கிழக்கே சாய்ந்ததும் என்
பெரியப்பன் எழுப்புவான். மட மடவென்று வலையை உள் வாங்குவோம். கூட்ட
கூட்டமாக மச்சாதுகள் எங்கள் மரத்துக்கு தாவும். மன நிறைவுடன்
பாயைத்திருப்பி கரை விட்டோம்.  ஒரு நாள் படகை திருப்பி விட்டு பாசி,
கழிப்பு போன்றவற்றை எடுத்து பழுதுச்சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது
உயர்ந்த மணல் குன்றின் அலையால் ஒதக்கப்பட்ட சுறா மீன் ஒன்று வந்து
ஒதுங்கியது. அதைப்பார்த்த நான் ஒடிச்சென்று பார்த்தேன். என்னைப்போன்ற
கடலாடிகளுக்கு சுறாவை உளியால் வீசி உயிரோடு பிடிப்பது ஒரு பெரும்வீரம்.
ஆனால்  இந்தமாதிரி கரை ஒதுங்கிய சுறாவை கொன்று பங்கு போடுவது
வீரமல்லாததுதான். இருந்தாலும் எனக்கு ஒரு பங்கு கிடைத்தது. எடுத்துகொண்டு
குடிசையை நோக்கி நடந்தேன். பாதி சுறா கோவிலுக்கு தசம பாகமாக
கொடுக்கப்பட்டது.

***



" அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே."

திருமந்திரை  நகரில் சித்திரை மாதங்களில் முத்துக்குளித்தல் நடைபெறும்.
எங்க கடற்கரையிலிருந்து சிலர் செல்வர். திருச்சீரலைவாய் தாண்டும்போது
தெய்வானையை வல்லத்தில் நின்றுக்கொண்டே வேண்டுவர். இதை மாதிரி மலையாள
நடைக்குச் செல்லும்போதும் குமரி அன்னைக்க்கு ஒரு வேண்டுதல் இருக்கும்.
தெய்வானைக்க்கும் குமரி அன்னைக்கும் நடுவேத்தான் எங்கள் வாழ்க்கை. எங்கள்
ஊரின் கன்னி மரியாள் இவர்களின் மறுபிரதிபலிப்புதான் என்பது எங்கள்
நம்பிக்கை. நாங்கள் எங்களூரில் சங்கு குளிப்போம். புரட்டாசியிலிருந்து
சித்திரை வரை குளிப்போம். கரையிலிருந்து ஏழு முழம் தூரத்தில் கடலில்
ஐந்து முழம் ஆழத்திலிருந்து முப்பது அடி ஆழம் வரைக்கும் சங்குகள்
காணப்படும். சங்கு குளித்தல் முடித்த பின் பிடிக்கப்பட்ட சங்குகளை
கரைக்கு கொண்டு வருவோம். அவைகளை இரண்டு அங்குலம் குறுக்களவு கொண்ட மரத்தா
ஆன ஒரு கருவியால் பரிசோதிக்கப்போம். அதன் தூவாரத்தில் வழியாக நுழையும்
சங்குகள் பிரயோசனமற்றவையாகக் கருதப்பட்டு கடலுக்குள் திருப்பி
எறிந்துவிடுவோம். வரும் வழியிலே சங்கின் உள் சதைகளை அறுத்து விடுவோம்.
சங்கு கறியை அம்மைக்கு கொண்டு கொடுப்பேன். அவை ஆகாரத்துக்க்கு நன்றாக
இருக்கும். சங்கு அறுத்து வளையல் செய்வோம். சங்கு வளையலை
மச்சுவந்தினிக்கு கொண்டு கொடுப்பேன். கருத்த கைகளில் வெண் சங்கு அழகா
இடம்பிடிக்கும்.
எனக்கு இக்கடற்துறைகளில்  மிகப்பிடித்த பெண் மச்சுவந்தினி. எனக்கும்
அவளுக்கு உண்டான அன்பு சிறு வயதிலே ஏற்பட்டது. உப்புக்காற்று பட்டு
காய்ஞ்சுப் போன என் தலை முடியை அன்பாக கோதி விடுவாள். ஒரு விடியறையில்
மெல்லிய வெளிச்சத்தில் அவள் உதட்டை கடித்தேன். உப்பு கச்சி கிடந்தது.
மெல்லிய உவர்ப்பு இனிமையாக இருந்தது.  மச்சுவந்தினி அப்பா ஒரு மீன்
வியாபாரி. அவர் கடலுக்கெல்லாம் செல்ல மாட்டார். அவளுடைய அம்மை மிஞ்சிய
மீனை கருவாடாக்கி பக்கத்து ஊருக்கு சென்று விற்றுவருவாள். என் அம்மையும்
அவளும் எப்போதும் கருவாட்டை காய வைக்க சண்டை போட்டுக்கொண்டே
இருப்பார்கள். ஆளுக்கு ஒரு உள் ஊரைப் பிடித்துக்கொண்டு வியாபாரம்
பண்ணுவார்கள். மச்சுவந்தினி அப்பா சாஸ்தான் குளம் தாண்டி மாட்டுவண்டியில்
சென்று மீனையும் கருவாடையும் விற்றுவருவார். அந்த உள்ளூரிலே குடிசையைப்
போட்டு உட்கார்ந்துருலாம் என்று யோசித்தார். இந்த விசயத்தை மச்சுவந்தினி
என்னிடம் சொன்னதும் அவளை நான் பிரிஞ்சிருவமோன்னு பயமா இருந்தது. ஒரு
நாள் நான் நினைத்த மாதிரியே அவர்கள் அந்த உள்காட்டுக்கு குடிபெயர்ந்தனர்.
அவள் போன மாட்டுவண்டியை தேரிக்காடு வழியா ஒடிப்போய் வழிமறிக்கலாமுன்னு
ஒடினேன். தேரிக்காடு முழுவதும் ஓடியும் மாட்டுவண்டியைக் காணவில்லை.
அலைக்கடல் பாறை மேல் மோதி பாறை கரைந்ததுப் போல் மச்சுவந்தினியை ஏங்கி என்
மனம் கரைந்தது. சுட்ட மீனும் கள்ளுமாக என் பகல் பொழுது கழிந்தது.
மச்சாதுகள் ஒரு பொழுதும் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்துக்கொண்டேதான்
கடலுக்குள் தூங்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என் உரமேறிய
உடல், அவள் பிரிவால் இறங்கத்தொடங்கியது.
" வருவாள் நல்ல அல்லில்லா வருவாளெண்டு
  வழிகாத்து அல்லில்லா நானிருந்தேன்
  நடக்க நல்ல அல்லில்லா முடியுதில்லை
  நாயகியே அல்லில்லா பழக்கமில்லை "
என் அம்மைக்கு ஏதோ உரைத்திருக்க வேண்டும். மச்சுவந்தினி அப்பா  மீன்
எடுக்க வரும்போது பேசினாள்.
" கடலுக்கு போறவனுக்கு உயிர் உத்தரவாதமில்லை.  அவன வேணாம் பாடு போறத
நிப்பாட்டி என் கூட உள் காட்டுக்கு வரசொல்லு... இந்த வியாபாரத்தை
பார்க்கச்சொல்லு.. அங்க ஒரு புஞ்சையை வாங்கிட்டேன்.. எத்தன
நாளுக்குத்தான் ஒளக்க சள்ளைக்கு ஒளக்க நெல்லு வாங்குவது... நானும் நெல்லு
சம்பாதிக்க போரேன்.. உனக்க விருப்பமிருந்தா சொல்லு.. பேசிப்பார்ப்பும்.."
அம்மை பதில் சொல்லாமல் திருப்பி வந்தாள். எனக்கு என் அம்மையை விட
கடல்தான் பெரிய அம்மை.
கடலம்மையின் மடியை விட்டு விலகி செல்ல விருப்பமில்லை. கடற்கரையில் எவனாது பாடுவான்.
" வேளாக் கடலில்
  விள மீன் பிடிப்பேன்
  வீட்டில வந்தா
  விளக்கெண்ணெய் எரிப்பாள்
  சாய்வாள் சரிவாள்
  சந்தணம் தருவாள் "
இன்னொருத்தன் எசப்பாட்டு எடுப்பான்.
" நானெடுப்பான் பருமரக்கோல்
 அவளிருப்பாள் கும்பனிலே
 கும்பத்து அழகியவள்
 குணமான செல்லியவள்"
இதைக்கேட்கும்போது மச்சுவந்தினி ஞாபகம் வந்து மீட்டும். மச்சுவந்தினியின்
உடம்பு வாசனையை   நுகர்ந்ததை நினைக்குபோது அவளையும் அவள் உடம்பயையும்
தேடும்.  ஒரு நாள் நானும் அவளும் கடற்கரையில் உறவாடிக்கொண்டிருந்தோம்.
காதல் வேகத்தில் என் கை அவள் சிறு மார்பில் பட்டுவிட்டது. அவள் பயந்து
ஒதுங்குகிறாள். நான் ரோசம் வந்தவனாய் அவளை இறுக்கி அணைக்கிறேன். எங்கள்
மூச்சுக்காற்று  அலைக்காற்றுடன் போட்டி போடுகிறது. தீடிரென்று
திமிறிவிட்டு  அப்பாவுக்கு பயந்து ஒடிவிட்டாள். என் தொண்டையிலிருந்து
குரல் பிறீடுகிறது.
" மருகனைய குழல் சரிய
  மகுடகும்பம் தன்மசைய
  தனத்தை தொட்டா உனக்கென்னடி
  தமயன் கண்டா வரச்சொல்லடி
 மார்பைத் தொட்டா உனக்கென்னடி
 மாமன் கண்டா வரச்சொல்லடி."
ஒடிச்சென்றவள் திரும்பி வந்து உதட்டணைக்கிறாள். பிண்ணி பிணைகிறோம்.

***
" கல்பொரு சிறு நுரை போல
  மெல்ல  மெல்ல இல்லாகுதுமே.."

எளிய திருப்பலியுடன் மச்சுவந்தினியுடன் இணைந்தேன். இருவரும் மெல்லிய
அலங்காரத்துடன் ஊருக்குள் ஊர்வலமாகச் சென்று மாதா சுரூபத்தில்
விளக்கேத்தினோம். என் மனசுக்குள் நெருடல். இனி கடலுக்கு செல்ல முடியாதே
என்று.  மீன் விருந்துடன் ஊரே எங்களை வழியனுப்பியது. கடல்
பெருங்கொந்தளிப்பில் இருந்தது. அம்மையும் கூட வந்தாள். வண்டிகட்டி
சென்றோம். உள் காடு பனைமரங்களால் சூழ்ந்து இருந்தது. அந்த ஊருக்கு
தோமையார்புரம் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஒரு சிறு தோமையார் கோவில்.
கடல் காற்றுக்கு பழக்கமான உடல், வெப்பக்காத்துக்கு கொஞ்ச நாளில் பழகியது.
அவள் அப்பாவுடன் சேர்ந்து பல ஊருக்கு சென்று கருவாடு விற்றோம். நீரில்
நின்ற கால், நிலத்தில் நிக்க முடியாதா  என்று மாமனார் அடிக்கடி சொல்வார்.
கொஞ்ச கொஞ்சமாக நில வாழ்வு எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. கடலை மறக்க
ஆரம்பித்தேன். கடலன்னை ஞாபகம் வரும்போதேல்லாம் மச்சுவந்தினியுடன்
பிணைந்தேன். ஒரு நாள் என் மாமனாருடன் கோட்டை நகருக்கு வந்தேன். அங்கே
சம்ப கடை என்று ஒரு பெரிய தெருவே இருந்தது. எல்லாம் கருவாடு வியாபாரம்.
அங்கு ஒரு கடையை முடித்து என்னை உட்கார வைத்தார். மச்சுவந்தினியுடன்
நான் அவ்வூர் வந்தேன். பல வெள்ளைக்காரர் அவ்வூரில் அலைந்தனர். அருகிலே
அந்தோணியார் இருந்தது. அங்குள்ளவர் அனைவரும் கடலை துறந்துவிட்டு வந்தவர்
என்றனர். கோட்டை என்ற பெயரிட்ட அவ்வூரில் என் முதல் விழுது பிறந்தது. "
உன் சந்ததிர்களை  கடற்கரையில் உள்ள மணல் போலவும், வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் போலவும் பலுகிப்பெருகப்பண்ணுவேன். " இது கடவுள்
யூதாவுக்கு கூறிய வாக்குதத்தம். என் சந்ததியெல்லாம் கடல் வாழ்க்கையே
அறியாத அக்கோட்டையூரிலே வாழத்தொடங்கினர். கடைசியில் நான் மரிக்கும வரை
கடற்கரைப்பக்கம் செல்லவில்லை. கடல் என்னை மன்னிக்காது என்று தெரியும்.

****


  " பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே"

செழியனின் நினைவு மீண்டதும் விடியல் ஆரம்பமானது.  ஒரு கிறுக்கி
என்னருகில் வந்து " நீ செழியன் வாரிசா.." என்றாள். நான் அதிர்ச்சியுட்டு
தலையை ஆட்டுவதற்குள் அந்த கிறுக்கி ஒடிவிட்டாள். அவள் விட்ட பாதச்சுவட்டை
பின்பற்றி சென்றேன். ஒரு மணற்பாக்கத்தை சென்றடைந்தது. கடலலைகள் கோபமா
என்னருகில் வந்துசென்றது. கடல் குமுறிக் கொந்தளித்து சீறிச் சினந்தது.
நிலத்தை விழுங்க துடித்தது. ஓயாதா ஆட்டம் போட்டது.  நான் கடல் மடியில்
செல்ல ஆயத்தமானேன். என் மூதாதையரில் ஒருவனான செழியன் செய்த தவறுக்கு
பிராயசித்தமாக. நான் கடலோடு கலந்தபோது உலகு புரக்க எழுந்த ஞாயிறு ஒளி
வீசினான்..

------ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.

தெய்வம் என்பதோர் ---தொ.பரமசிவன்

2012-11-25

| | | 6 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





நாம் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலும் , தமிழ் மக்கள் பின்பற்றி வரும் சமயச்சடங்குகளும் எவ்வாறு நம்மை கடந்து வந்துள்ளது என்பதை வரலாறு ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் திரும்பிப் பார்த்தால் மிகுந்த ஆர்வமே மேலிடுகிறது.

நெல்லை மாவட்டத்துக்கு தொ.பரமசிவன், தூத்துக்குடிக்கு ஆ.சிவசுப்ரமணியன், குமரி மாவட்டத்துக்கு அ.கா. பெருமாள். இவர்கள் அனைவருமே வரலாறு என்பது அடித்தள மக்களிடமிருந்தும் அவர்களின் வாக்குகளின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாறே உண்மையான சனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்துடையவர்கள்.

தொ.பரமசிவன் அவர்களின் தெய்வம் என்பதோர் என்னும் நூலின் முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.
  "  எல்லாரும் புத்தகங்களிருந்தும் தத்துவங்களிருந்தும் வாதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தொ.பரமசிவன் மட்டும் தமிழ் நாட்டுத்தெருக்களின் கோவில் வாசல்களிலும் பிரகாரங்களிலும் ஆற்றங்கரையிலும் கிணற்றடியிலும் சாவு வீட்டு முற்றத்திலும் நாட்டார் தெய்வப்பீடங்களின் முன் நின்று நம் தமிழ் மண்ணின் புழுதி படிந்த வார்த்தைகளின் பேசுகிறார் "

நம் சமூகத்தின் எச்சங்களையும், அதன் தரவுகளையும் ஆராயும் போது களப்பணி என்பது எவ்வளவு முக்கியம் என தொ.ப கட்டுரைகளை படிக்கும்போது உணரலாம்.

   " கோத்த பொய் வேதங்களும்- மதக்
        கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
     மூத்தவர் பொய் நடையும் -சில
        மூடர் தம்......................."
                                 --- பாரதி

வரலாறு என்பது மதக்கொலைகளும் அரசர்களின் கூத்துக்களால் ஆனது. வேதங்களில் பொய் வேதங்களும் உண்டு. மூத்த தலைமையினரில் பொய் நடைக்காரர்களும் இருப்பர் என்பது பாரதியின் கருத்தாகும்.

இப்பொழுதுள்ள சிவன் வழிபாடும் , வைணவ வழிபாடும் வேண்டுமென்றே தமிழகத்தின் கலந்த ஒன்றாகும். அரசர் எவ்வழி அவ்வழியே மக்கள் என்ற கூற்றுக்கிணர்ங்க அரசர்களை குறிவைத்து கலக்கப்பட்ட மதம் சைவம் ஆகும்.  கிறிஸ்தவமும், இஸ்லாமும் எப்படி மக்களை கவர்ந்ததோ அவ்வாறே பௌத்த, சமண, சைவ, வைணவ வழிப்பாடுகளும் தமிழகமெங்கும் பரவியது.( இதனை சமய அரசியல் நூலில் தொ.ப வும், கோபுரத்தாக்குதல் நூலில் ஆ.சிவசுப்பிரமணியமும் மேலும் ஆய்வுப்படுத்தி எழுதியுள்ளனர் )
அவ்வாறு இந்த வைதீக வழிபாடுகள் பரவும் பொழுது நம் தொல் வழிப்பாடுகளான தாய்த்தெய்வ சடங்குகளையும் வழிப்படுதல் முறைகளையும் ஒரளவுக்கு சிதைத்தது.

தொ.ப தனது முதல் கட்டுரையில் தாய்தெய்வ வழிப்பாட்டை பற்றி விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரியும், வார்த்தையும் நம்மை தீவிரமாக யோசிக்க வைக்கும்.



தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார்.  பழைய தமிழகம் எனபது கேரளத்தையும் சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு  திசை நோக்கி தன் மக்களை காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.

பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர். உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும். இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும் இவற்றின் தனிக்கூறுகளாகும்.

தமிழ் நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில்தான் பக்தி இயக்கங்கள் என்னும் சைவ, வைணவ மதங்கள் பெருக ஆரம்பித்தன. 11ம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரள் மக்கள் தாய் வழிப்பாட்டையே பின்பற்றி வந்தனர். பின்னர் வந்த பக்தி இயக்கங்களும் ஆண் வழிப்பாட்டை விடவும் பெண் தெய்வத்தை வீரியமிக்கதாக காட்டியது. பார்வதியை உலகை ஆளும் சக்தியாக அடையாளப்படுத்தியது. இந்த முறை நமது தாய் வழிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

கிறிஸ்துவ மதமும் நம் மக்களிடம் பரவும் பொழுது நம் மக்களிடம் வழங்கி வந்த தாய் வழிப்பாட்டை அறிந்த மதம் பரப்புனர் இயேசுவின் தாயை பிரதானப்படுத்தினர். தூய சவேரியார் ஐரோப்பாவில் இருந்து மாதா சிலையை வரவழைத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயம் சிறியதாக பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  வீரமா முனிவரும் பெரிய நாயகி என்னும் மாதா கோவிலை உருவாக்கி நம் மக்களிடம் மதத்தை பரப்பினார். அதன் காரணமாகவே ஊரேங்கும் மாதா கோவில் அமைக்கப்பட்டது.

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலின் உரிமை சங்கராச்சாரியின் மடத்திற்கு செல்வதற்கு முன்பு அவை தமிழக பொற்கொல்லர் சாதியான விஸ்வகர்மா என்னும் சாதியினரிடமே இருந்துள்ளது. இன்றும் தமிழக பொற்கொல்லரின் குலத்தெய்வம் காமாட்சியம்மன் தான். அதைபோல் நாடார்களுக்கு பத்ர காளியம்மன்.
அந்தக்காலத்தில் குமரி அம்மனை கடல் கெழு செல்வி என்றழைப்பார்களாம். இவள் தான் அங்குள்ள மீனவ சாதிகளுக்கு காவல் தெய்வம்.  இவ்வாறு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனித்தெய்வ வழிப்பாடு இருந்துள்ளது. நாட்டார்தெய்வங்களின் வழிப்பாடுகளை ஆராயும் பொழுது மறைந்திருக்கும் மிக முக்கியமான தரவுகள் வெளிவரும். உதாரணத்திற்கு மீனாட்சி அம்மன் என்பது அரசியராக இருந்த தெய்வமாகும். நவ நாட்களின் ஒரு நாளில் மீனாட்சிக்கு வேம்பு மாலை இட்டு வழிப்பாடு நடக்குமாம். அதற்கு இருக்கும் பின்புலம் வேம்பு என்பது பாண்டிய வம்சத்தின் குல குறி. பாண்டிய மன்னனுக்கு வேம்பன் என்று பெயரும் உண்டு. பாண்டிய வம்சம் கடல் அருகே தோன்றிய வம்சம் ஆனதால் மீன் கொடியையும் அதன் பெயருள்ள அம்மனையும் வழிப்பட்டு வந்துள்ளனர்.
பெருந்தெய்வ வழிப்பாடுகளுடன் சிக்கும்போது அதன் வரலாறுகள் அழிக்கப்படுகிறது.

முன்பு காலத்தில் மரித்துப்போன அரசியரின் கல்லறைக்கு பள்ளிப்படை அமைத்து வழிப்படுவார்கள். வெம்மை நோய் வந்து இறந்துப்போன பள்ளிப்படைத்தான் சமயபுரம் மாரியம்மன் என்கிறார் தொ.ப.
இவ்வாறே பல தெய்வங்கள் முளைத்துள்ளது. மணமாகி சுமங்கலியாக இறக்கும் பெண்களையே தெய்வமாக்குகிறார்கள். மாலையம்மன் சுமங்கலியாக இறந்த ஒரு சாமானிய பெண் ஆவாள். ஆண் தெய்வ வழிப்பாடுகள் கருப்புசாமி, சுடலை, அண்ணமார், கருப்புசாமியுடன் நின்றுப் போய்விடுகிறது. பூமணியின் அஞ்ஞாடி நாவலில் கருத்தையன் என்பவன் காவல் தெய்வமாக மாறுவதை அழகாக சித்தரிப்பார். நம் கூடவே வாழ்ந்தவர்களே நாட்டார் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார். கொலையால் பழியுண்டவர், மக்களுக்காக உயிர் நீத்தவர்களே இவ்வழியில் அடங்குவர்.


சமண மதம் விட்டு சென்ற ஒரு தெய்வத்தை இன்னும் தமிழ்மக்கள் தமது தாய் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர். சமண மதத்தில் "அம்பிகா யட்சி" என்னும் புராணத்தில் வரும் இசக்கி , நெல்லை, குமரி மாவட்டத்தில் பயந்து வழிப்பட்டு வரும் தெய்வமாகும். மேலும் பகவதி அம்மனும் சமண மதத்தின் எச்சங்கள்.  நெல்லை மாவட்டத்தில் சிங்கிகுளம் அருகே மலைக்கோயில் சமணப்பள்ளி ஒன்று உள்ளது. சமண மதத்தில் பள்ளி என்பது கோவில் ஆகும். இங்கு சமண கடவுளான தீர்த்தங்கரர் மற்றும் பகவதி அம்மன் உள்ளது.  இம்மக்கள் இது சமண கோவில் என்று அறியாமல் தீர்த்தங்கரரை முனீஸ்வரர் என்று பெயரிட்டு வழிப்பட்டு வருகின்றனர். கி.பி ஏழாம் நூற்றாண்டில்  மதுரையில் திரு ஞானசம்பந்தரால் கழுவேற்றப்பட்ட சமண மதம் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே இருந்துள்ளது.  இதன் தொடர்ச்சியாகவே சமண வழிப்பாடு  இன்னும் நம் வழக்கத்தில் சமண கடவுள் என்று தெரியாமல் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது.

" எழுதிய வரலாற்றை திருப்பி எழுதுவோம் " என்கிறார் கோசமோ. மேற்கிந்தியப்பகுதியில் தாய்தெய்வ வழிப்பாட்டை எல்லாரிடமும் எடுத்துச் சென்றவர்.
தாய் தெய்வ வழிப்பாடு  நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உள்ளடக்கியது. அதனை அளந்தரியவும் ஆராயவும் எழுதிக்காட்டவும் பலர் ஈடுபடவேண்டும். அதன் பின்னரே தமிழ் சமுதாய வரலாறு உறுதியான அழுத்தமாக கட்டமைக்கப்பெறும் என்பதில் ஐயமில்லை என்று வேண்டுகோள் விடுக்கிறார் தொ.ப.

*****
வள்ளி கட்டுரையில்

தமிழகக்கடவுளான முருகனின் மனைவிகளான தெய்வானையைப் பார்த்து வள்ளி கேட்கிறாள்.
" ஒழக்கு நெல்லுக்கு ஒழக்கு சள்ளை உணர்த்தி விக்கிறது
     ஒங்க அண்ணணா எங்க அண்ணணா.."
உழக்கு நெல்லுக்கு மாற்றாக உழக்கு கருவாடு விற்றவர்கள் தெய்வானையின் சகோதரர்கள் என்று ஏளனம் செய்கிறாள் வள்ளி.  தெய்வானை ஒரு மீனவப் பெண் என்பதை இந் நாட்டார் பாடல் விளக்குகிறது. இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் விசேஷங்களில் பக்கத்து மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செய்யப்படுகிறார். அங்குள்ள மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடவேண்டியது. அங்குள்ள மீனவர்கள் முருகனை மச்சான் என்றழைக்கின்றனர். தெய்வானை இனத்துப்பெண் என்று உரிமை கொண்டாடுகின்றனர். ஜோ.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலிலும் கொற்கை நாவலிலும் ராஜம் கிருஷ்ணத்தின் அலைவாய்க்கரையில் நாவலிலும் இந்த தெய்வானை மீனவ பெண் என்ற வரி வருகிறது.

தெய்வானை வள்ளியைப்பார்த்து  திருப்பி சொல்கிறாள்
 " பூனைக்குத்தி விருந்து வைப்பான்
   புனைக்குறவன் உங்கண்ணன்."
வள்ளி குறவ இனத்துப்பெண் என்பதை தெய்வாணை ஏளனம் செய்கிறாள். இவ்வாறு முருகக்கடவுளின் மனைவி இருவரும் தமழ் தொல்குடிகளின் பெண்கள் என்பதால் முருகனும் தமிழ் நாட்டார் தெய்வமாக இருந்திருக்கவேண்டும் என்பது பலர் கருத்து.  பக்தி இயக்கத்தின் வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முருக வழிப்பாடு சிவ வழிப்பாடுடன் இணைந்தது.  முருகன் சிவனின் மகன் என்னும் அடையாளப்படுத்தி மேலும் சிவ வழிப்பாடு பரவியது. வட இந்தியாவில் சிவ வழிப்பாட்டில் முருகனுக்கு பதிலாக கார்த்திகேயன் மாற்றப்பட்டது.
இவ்வாறு பெரிய மதத்தின் முன்னால் சிறு கடவுள் வழிப்பாடு வேறு வழியில்லாமல் இணைத்து விட்டது. கேரளத்தில் ஐயப்பனும் அவ்வாறே.
******

பழயனுர் நீலி கட்டுரையில் வணிக கணவனால் கைவிடப்பட்டு கொலை செய்யப்பட்டு மறுபடியும் பெண் வேடம் அணிந்து வந்து கண்வனை பழிவாங்கிய நீலியைப்பற்றி விரிவாக பேசுகிறார். இன்னும் நம் வழக்கத்தில் நீலிக்கண்ணீர் என்ற சொற்றொடர் பொய் அழுகையை வர்ணிக்கும் சொல்லாக இருந்து வருகிறது. இந்தக்கதை தென்மாவட்டங்களில் இசக்கியம்மனோடு சேர்க்கப்பட்டு வில்லுப்பாட்டில் பாடப்பட்டு வருகிறது.

சித்திரகுப்தனுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கோவில் இருக்கிறது. போடிக்கு அருகில் சிறு கோவிலும், திருச்செந்தூர் அருகே ஆற்றுர்ச் சோக நாதர் கோவில் உள்ளேயும், காஞ்சிப்புரத்தில் தெற்கு ரதவீதி என்றழைக்கப்படும் நெல்லுக்கார தெருவில் தனிக்கோவில் இருக்கிறது. சித்ரகுப்தன் எமனின் கணக்குப்பிள்ளை. குப்தா என்பது வட நாட்டு பெயர். சித்ரகுப்தன் வடக்கிலிருந்து வந்த தெய்வமாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வர் சித்திரகுப்தனை பதிவு செய்திருக்கிறார்.
மரணப்பயத்தை முன்னிறுத்தி இத்தெய்வம் நம்மில் தோன்றியுள்ளது.

****

பாரதியின் கண்ணன் பாட்டையும் ஆழ்வார் பாட்டையும் ஆய்வு செய்யும் தொ.ப. வைணவ சமயத்தில் பிறக்காத பாரதி , கண்ணன் பாட்டை படைத்தது ஆச்சர்யமான ஒன்று என்கிறார்.
ஆண்டாளின் பாடல்களில் எருக்கம்பூக்கள் வரி இடம் பெறுவதால் ஆண்டாளின் பெரிய இடத்துப்பிள்ளை. அவள் சிந்தனையில் சாதாரணபெண்கள் வாழ்வில் இடம்பெறும் எருக்கம்பூக்கள் பற்றி இடம்பெறுவதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் பாடல்களில் ஒரு பண்பாட்டுக்கலப்பு உள்ளது என்கிறார்.

****
 பார்ப்பனுக்கு முன் பறையன்  என்ற வார்த்தை உண்டு. பார்ப்பனர்களுக்கு முன்பு இவர்களே கோவில் வழிப்பாடுகளை நடத்தி வந்துள்ளனர். தாலி கட்டும் சடங்கில் ஈடுபடும் பார்ப்பனர்கள் ஆனால் தாலி அறுக்கும் சடங்குகளில் வண்ணார்கள் ஈடுபடுகிறார். ஒரு காலத்தில் சடங்குகளால் முன்னின்றவர்கள் இன்று ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
பெரிய கோவில்கள் சுற்று வீதிகளில் பிராமணர்களும், ரதவீதிகளில் வேளாளர்களும், தெருக்களில் பிற்படுத்தப்பட்டவர்களும், வயல்வெளிகளில் ஒடுக்குப்பட்டவர்களும் வாழும் இடமாக இருக்கிறது. இக்கோவில்களில் மேல் சாதியினர் மட்டுமே அனுமதி.
ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கோவில்களில் எல்லாருக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
****

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து பல தரவுகளை தொ.ப முன் வைத்துள்ளார். பல ஆய்வுகளுக்கு இந் நூல் முன்மாதிரியாக அமையும்.
நம் வாழும் சமூகம் பல வந்தேறிகளால் கட்டமைக்கப்பட்டது. நாம் பொருளாதர சுரண்டலுக்கு மட்டுமல்ல, சமயச்சுரண்டலுக்கு ஆட்கொண்டிருக்கும் என்பதை தொ.ப வின் கட்டுரைகளை படிக்கும்பொழுது உணர முடிகிறது.

தெய்வம் என்பதோர்..
தொ.பரமசிவன்
யாதுமாகி பதிப்பகம்
பாளையங்கோட்டை.
விலை ரூ50.

--ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி