நகர காம்பவுண்டின் அன்பு வாழ்க்கை...

2012-02-08

| | |
அதிகாலைப்பொழுதில் வீட்டு கதவை தட்டி " தண்ணீ வருதுக்கா...?" என்றழைக்கும் கணங்களிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது நகர காம்பவுண்டின் அன்பு வாழ்க்கை.. அச்சு பிசலாக அழுக்கேறி கிடக்கும் சிறு நகரங்களில் சொல்லப்படாத வாழ்க்கை இந்த காம்பவுண்ட் வாழ்க்கை. பக்கத்து வீட்டு நடையில் உட்கார்ந்துக்கொண்டு


" நீ என்னுடைய கீரையை அரி.. நான் உன்னுடையை வெங்காயத்தை உரிக்கிறேன்.." என்று சொல்லிக்கொண்டே தனது குடும்பங்களுக்கான உண்மைகளையும் உரித்துக்கொண்டிருப்பர். புதுசா வீட்டுக்கு குடி வருகிறவர்களில் பெண்களே அதிகம் பக்கத்து வீட்டுக்களில் ஒட்டிக்கொள்வர். அவர்களின் கள்ளகபடமற்ற பேச்சுகளிலே அறுந்துப்போன தன் வாழ்வின் வரலாறுகளை செதுக்கி கொண்டுவருவர்.

வாழ்வின் எதார்த்தமான மனிதர்களை இந்த காம்பவுண்டில் சந்திக்கலாம். சைக்கிள் கடையில் வேலை பார்ப்பவர், ஹோட்டலில் சப்ளையராக இருப்பவர், ரோட்டரத்தில் ரசவடை போடுபர், பைண்டிங்க் கடையில் கோந்து பசை ஒட்டுபவர் என எல்லாம் இந்திய சமுதாயத்தின் மூலை முடுக்களில் ஒழிந்திருக்கும் எச்சங்கள் இவை. இங்கு கறிவேப்பிலையும் மல்லி இலையும் இலவசமாகவே வாங்கப்படும்..

" இது ஆரெம்கேவி ல எடுத்தது " என்று காமபவுண்டில் உள்ள அனைத்து வீட்டிலும் ஏறி இறங்கும் அந்த துணிமணிகள், கசங்கிய பின்னே வீடு திரும்பும். .. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் பழைய காம்பவுண்ட் காரர்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சிக்கு இடையில் மகளை கட்டிகொடுத்த சம்பந்தி வரைக்கும் விசாரிக்கும் பண்பை அன்பை சொல்லி மாளாது. சின்னதாகிப்போன சட்டைகள் வீடு மாற்றிக்கொள்ளும்..

காம்பவுண்டில் குடியிருக்கும் சின்னபையன்களை கடைக்கு அனுப்பி விட்டு கையில் ஐம்பது காசை கொடுத்து ஆரஞ்சு வில்லை வாங்கிக்கோ என்று சொல்லும் அக்காமார்கள், அத்தைமார்கள் இன்னும் இருக்கிறார்கள்.

கிராமத்தில் நிலவும் சாதிவாரியான நட்புகள் இந்த நகர காம்பவுண்ட் வாழ்க்கையில் அடிப்பட்டு போயிரும்.

வீட்டு வேலைக்கு போகும் சாந்தி அக்கா , பெல்பின்ஸ் கம்பெனிக்கு போகும் பார்வதி அக்கா, சத்துணவு மாவு விற்கபோகும் குஷ்பு பாட்டி, பாதி விரல்களற்ற கையிருந்தும் பாளையங்கோட்டை வீதியில் பழைய பேப்பர், இரும்பு பொறுக்கும் அந்த பேர் தெரியாத பெரியவர் என நான் வாழ்ந்த காம்பவுண்டில் குடியிருந்து மறக்க முடியாதவர்கள். இன்னும் கூட வீடு மாறும்போது தன் பையன்களிடமே அப்பாமார்கள் கேட்கிறார்கள். ஏனெனில் சிறுவர்கள் அங்கு உருவாகி வைத்திருக்கும் நட்பு உலகமே வேறு. அவர்கள் தலையசைத்தால் மட்டுமே வீடுகள் மாற்றப்படுகிறது. பிறந்த நாட்களில் கொடுக்கப்படும் இருபத்தைந்து பைசா ஆசை சாக்லெட் , ஐந்து ரூபாய் பை ஸ்டாரா உயர்ந்து நிக்கும்.. தண்ணீ பிடிக்கும் சண்டை, கடன் சண்டை என பல சச்சரவுகள் பக்கத்து வீட்டுகாரங்களுடன் இருந்தாலும் ஒரு சிறுநகையால் அவை சரிப்பட்டு போய்விடும். காம்பவுண்டில் ஒரு சிறு குழந்தை இருந்தால் , அந்த காம்பவுண்டே சொர்க்கத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை கை மாறி, மாறி தன் தாயிடம் வருவதற்கு இரவாகிரும். கூட்டமாக சேர்ந்துக்கொண்டு செந்தில்வேல் தியேட்டருக்கும், டவுன் பொருட்காட்சிக்கும் ஒரு கூடை அழுக்கு தூணிகளை கட்டிக்கொண்டு வாய்க்கால், ஆற்றுக்கு போன கதை மறக்காது. பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு மாற்றப்படும் பண்டம் பலகாரங்களால் மதம் கூட மாறத்தோன்றும்..

சொந்த வீட்டுக்காரர்கள் அனுபவிக்க முடியாத சில வாழ்வின் அற்புத தருணங்களை வாடகை வீட்டுக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.,

இன்று அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழப்படும் வாழ்க்கையில் எல்லா உன்னதங்களையும் இழந்துகொண்டிருக்கிறோம். காரியத்துக்கு பக்கத்து வீட்டுகாரருக்கு வணக்கம் வைக்கிறோம். அவரு பேங்குல வேலை பார்க்கிறாரு, அவரு தாலுகா ஆபிஸுல இருக்காரு என்ற காரணத்தினால் மட்டுமே அந்த வணக்க விசாரிப்புகள்.. உண்மையான இந்தியா கிராமத்தில் மட்டுமல்ல, சிறு பெரு நகரங்களில் காம்பவுண்ட் வாழ்க்கையிலும் இருக்கிறது.. உண்மையான சமத்துவத்தை பிரதிபலிக்கின்றது..

இப்போது கூட என் கையில் எங்க அம்மா, செல்வி அக்காவிடம் வாங்கிய கறிவேப்பிலையும் மல்லி இலை வாசனையும் அடிக்கிறது..

பாளையங்கோட்டையில் பதினாறு வருடங்களில் பத்து வீடு மாறி, காம்பவுண்டில் குடியிருந்த எனது சின்ன அனுபவம் இது.

2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

anto said...

ஆஹா...! அற்புதமான நடை....என்னையும் எழுத தூண்டியுள்ளீர்கள்....நன்றி ஜெபா.... இதை போனில் சொல்வதை விட.... எழுத்தில் இன்னும் சந்தோஷமாய் இருக்கும் என்பதால் தான் இது!!!!! வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

இன்று எனக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சி, மன கசப்பு. அதற்கு பொருத்தமான உள்ளது நீ எழுதிய காம்பௌன்ட் அனுபவம். மனதை நெகிழ வைத்த கட்டுரை. வாழ்த்துக்கள் ஜெபா
jude

Post a Comment