ஒரு கடலோர கிராமத்தின் கதை-- நாவல்

2012-01-18

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








 (  அலிப் முதல் லாம் மீம் வரை  )




இந்த பொங்கலை மிகவும் பயனுள்ளதாக கழித்தேன். மூன்று நாளும் கடலோர கிராமத்தின் கதையோடு கழிந்தது. தலித் இலக்கியம், கரிசல் இலக்கியம் போன்று நெய்தல் வாழ்க்கையை குறிக்கும் நாவல்களும் நம்மில் சேர்ந்துக் கொண்டே இருக்கிறது. கடற்புரத்தில், சிப்பியின் வயிற்றில் முத்து, செம்மீன், ஆழி சூழ் உலகு, கொற்கை, புயலிலே ஒரு தோணி, துறைமுகம், கன்னி அந்த வகையில் ஒரு கடலோர கிராமத்தின் கதையும் சேரும்.

இந்த நாவல் கடற்கரை மக்களைப் பற்றியவை அல்ல. மாறாக கடற்கரை ஒரத்தில் வாழும் ஒரு இஸ்லாமிய வாழ்க்கையை தோப்பில் முகமுது மீரான் கூறியுள்ளார். இஸ்லாமிய வாழ்க்கையைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த முதல் இஸ்லாமிய நாவல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை. அது கூட அந்த அளவுக்கு ஆழமாக பதியவில்லை என்பது கடலோர கிராமத்தின் கதையை படித்தவுடன் தெரிந்தது. இந்நாவலில் உள்ள மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இயல்பாக நம் முன்னால் நடமாடுகின்றனர்.

நாவலில் ஒரு கெட்டவன் தான் கதாநாயகன். அவனைச்சுற்றியே கதை நடக்கிறது. வடக்கு வீட்டு அகமதுகண்ணு முதலாளி என்பது அவனது பெயர். அவனது முதலாளித்துவம் அந்த கிராமத்தையே அடக்கி இருக்கிறது. கதை ஆரம்பிக்கும்போதே முதல் உலகப்போர் முடிவில் ஆரம்பிப்பதாக கூறி அதன் காலத்தை உணர்த்தாமல் உணர்த்தியிருப்பார் தோப்பில்.
ஊரில் கடல் மட்டுமல்ல, மள மளவென்று ஒடிவரும் ஆறும் ஒரு கதாபாத்திரம். அதன் வர்ணனைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

ஊரை அதிகாரம் செலுத்தும் முதலாளி வடக்கு வீட்டு அகமதுகண்ணு, அவரது வேலையாள் அவுக்கார், சிறு வயதிலே விதவையாகி முதலாளி வீட்டிலே வாழும் முதலாளியின் தங்கை பாத்திமா, அவளது மகன் பரீது, பரீதுவின் மேல் உயிரையே வைத்திருக்கும் முதலாளியின் மகள் ஆயிஷா. மேலும் முதலாளியியை தனது வறுமையினுடையே எதிர்க்கும் மஹ்மூது. பள்ளிக்கூட வாத்தியாராக வெளியூரிலிருந்து வரும் மெக்யூப்கான், அவனது மனைவி நூர்ஜகான் , கள்ளிகோட்டையிலிருந்து ஊருக்கு வரும் மதப்போதகர் தங்ஙள், சுக்கு கடை உசேன்பிள்ளை, பள்ளிவாசலின் வேலைக்காரன் அசனார் லெப்பை என நாவலில் குறைந்த கதாபாத்திரங்கள் ஆனாலும் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராமம் பழைய மதச்சடங்குகளாலும் மூட நம்பிக்கைகளிலும் ஆற்றில் மூழ்கி கிடக்கும் கூலாங்கல்லைப் போன்று மூழ்கி கிடக்கிறது.  அக்கிராமத்திற்கு அரசாங்கம் அமைத்து தரும் பள்ளிக்கூடத்திற்கும் இடம் கொடுக்காமல் பள்ளியையே எதிர்க்கிறார்கள். காரணம் அது காபிர்களின் கூடமாம். காபிர்கள் என்றால் முஸ்லிம் அல்லாதோர். ஆனாலும் துணிந்து பள்ளிக்கு இடம் கொடுக்கும் எழை மஹ்மது நாவலில் உயர்ந்து நிற்கிறான்.  தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த  இடத்தையே பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்டு தனது மகள் திருமணம் எப்படியாவது நடக்கும் என்று அலையும் மஹ்மது நம்பிக்கையின் அடையாளம். தோப்பிலின் வர்ண்ணைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் .
"மேற்கூரையை முட்டி நிற்கும் மூத்த மகள் " என்ற ஒரே வார்த்தையிலே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.




ஆசிரியராக வந்து அல்லல் படும் மெக்யூப்கான் வாகை சூட வா விமலின் கதாபாத்திரத்தின் மூலம்.  எந்த பிரச்சினை வந்தாலும், தனது சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டு செயல்படும் மெக்யூப்கான் மனதில் நிற்கிறார்.




பரீதுக்கும் ஆயிஷாவுக்கான காதல் தொடர்பான வரியில் இளமை கொட்டும். ஆயிஷாவுக்கு பெரிய செல்வந்தர் மாப்பிளை பார்த்து கட்டிகுடுத்துவிடுவார் முதலாளி. அங்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினையால் அங்கிருந்து தனது வீட்டிலே வந்து இருந்துவிடுவாள் ஆயிஷா.. தனது காதல் பிரிந்து மட்டுமல்லாமல் இப்போது ஆயிஷாவுக்கு வாழாமல் இங்கிருக்கிறாளே என்ற கவலையில் தாடியில் அலைவான் பரீது.
ஒரு நாள் ஆயிஷா அறையில் தனித்திருக்க, பரீது ஆயிஷா அறைக்கு சென்று
" ஆயிஷா...!!" மெல்லிய குரலில்
"யாரு.." அதனினும் மெல்லிய குரலில்
"நாந்தான்.."
இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை நோக்கினர்.
"மச்சான் தாடி எடுக்காதது ஏன்..? " ஆயிஷா மவுனத்தை உடைத்தாள்.
"நீ உன் மாப்ளே வீட்டுக்கு போகாது ஏன்..?"
"அது ஒரு கதை.."
"அந்த தொடர்ச்சியிலே உள்ள கதைதான் இது.."
என ஒவ்வொரு வசனத்திலும் காதலும் அதன் பிரிவின் வலியும் கொப்பளிக்கும்..  ஆயிஷா கதாபாத்திரத்தை நான் ஈரான் திரைப்பட நாயகி Golshifteh Farhani  யை உருவகம் செய்துக் கொண்டேன்.

மதப்போதகர் என்ற பெயரில் வந்து அவர் செய்யும் செயல்கள் இஸ்லாம் சமுதாயத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தில் அவர்கள் செய்யும் சேட்டைகளை அவிழ்த்து காட்டியிருப்பார்.
அகமது கண்ணு முதலாளியின் மிரட்லும், உருட்டலும் பதிவுசெய்யப்பட்ட அதேவேளையில் தன்னை விட்டு எல்லாரும் பிரிந்துசென்று பைத்தியமாகிவிடும் முதலாளியின்  வீழ்ச்சியும் எடுத்துகாட்டியிருப்பது நாவலின் இன்னொரு பக்க அடர்த்தி.

நாவலின் வட்டார மொழி இன்னொரு சிறப்பு. தமிழும் மலையாளமும்  கலந்த தமிழ். ஐஸ்கீரிமில் தேன் கலந்த மொழி.



இஸ்லாமிய சமூகம்  இறுகிப்போன  ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயைத் தமிழில் உடைத்தெறிந்த நாவல்.
மொத்தத்தில் நாவல் படித்தவுடன் ஒரு அழகிய ஈரான் திரைப்படம் பார்த்த திருப்தி.




தாமிரபரணி சிரிப்பு--சிறுகதை

2012-01-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
அன்று செல்வி அக்காவை பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை.
சூரியனும் நிலாவும் முத்தமிட்டுக் கொள்ளும் வேலையில்தான் அம்மா என்னை
மார்க்கெட்டுக்கு அனுப்பினாள். " இங்க இருக்கிற தெற்கு பஜார்ல எத்தனையோ
கடை இருக்கு, அத விட்டுட்டு அவ்வளவு தூரம் போகனுமா.." என்ற
கேள்வியோடுத்தான் சைக்கிளை வெளியே எடுத்து வைத்தேன். வெளி பம்புல தண்ணி
அடிச்சுக் கொண்டிருந்த பார்வதி அக்காவும் " எனக்கு ரெண்டு கூறு காய்கறி
வாங்கிட்டு வந்துருப்பா.." என்று உள்ளேப் போய் பையை எடுத்துக்கொண்டு
பையும் காசையும் நீட்டினாள். எதையும் முகத்தில் காட்ட முடியவில்லை.
சிரித்தப்படியே வாங்கிக்கொண்டேன். சைக்கிளை அழுத்த ஆரம்பித்தேன். பின்
வீலில் காற்று இல்லை. அப்படியே வீட்டில் ஓரம் கட்டிவிட்டு கூடையோடு நடக்க
ஆரம்பித்தேன். கூடையினும் பார்வதி அக்கா கொடுத்த மஞ்சள் பை மடங்கி
கிடந்தது. தெற்குப் பஜார் வரை வந்தேன். கோபால்சாமி கோவில் வழியாக
செல்லாமல் ஆயிரத்தம்மன் கோவில் நடக்க ஆரம்பித்தேன். அதற்கு ஒரு காரணம்
இருந்தது. சுந்தர்ராஜன் டாக்டர் வீட்டு முக்கு தெருவுல ஜெயந்தி வீடு
இருக்கு. ஒரு நப்பாசைக்கு அவள் அங்கு நிற்கமாட்டாளா.! அவள் பெயர் கூட
ஜெயந்திதானா என்று கூட தெரியாது. காண்வெண்ட் ஸ்கூலில் படிக்கிறாள்.
தோழிகள் படை சூழ எங்கள் தெரு வழியாத்தன் போவாள், வருவாள். அடிக்கடி ஒற்றை
கண்ணால் பார்ப்பாள். அவ்வளவுதான் அறிமுகம். அவளின் தரிசனத்திற்காகவே
காலையும், மாலையும் வாசலில் நிற்பேன். தலை குனிந்துதான் போவாள். ஜெயந்தி
வீட்டில் "இங்கு இட்லி, தோசை மாவு கிடைக்கும்" என்று சிலேட்டில்
சாக்பீஸில் எழுதி தொங்க விட்டிருந்தது. கண்டிப்பா அது அவளுடைய
கையெழுத்துதான்.
வயசுப் பொண்ணுக்கென்று உருவான கையெழுத்து..!! மார்க்கெட் தெருவில்
மனிதர்களுடையே மாடுகளும் நடந்துப் போயின. ஜவஹர் மைதானத்தில் ஏதோ
மீட்டிங்க வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு
சின்னப்பையன் கீழே போட்ட வெங்காயத்தை பொறுக்கிக் கொண்டிருந்தான். சின்ன
வெங்காயமோ.. பெரிய வெங்காயமோ..

சின்ன வாசல் வழியா மார்க்கெட் உள்ளே வந்தேன். அப்பத்தான் செல்வி
அக்காவைப் பார்த்தேன். தேங்காய் கடையின் அருகே நிறைவடைந்த கவிதையின்
கடைசி ஆச்சர்யக்குறிப் போல் நின்றுக் கொண்டிருந்தாள். பார்த்தவுடன்
சந்தோசத்தைவிட பயம்தான் வந்தது. இவ்வளவு நாள் என்னை ஏன் பார்க்க
வரவேவில்லை.. என்று கேட்பாள், திட்டுவாள், அப்புறம் மறந்துவிட்டு
சிரிப்பாள். வாங்கிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னாலே சென்றேன்.
எதிர்த்தாப்புல வருகிறவர்களெல்லாம் கூட ஒருமாதிரி பார்த்துட்டுப்
போனார்கள். தன் மேல் எதோ நிழல் படருவதாக அவள் தோல் உணர
திரும்பிப்பார்த்தாள். என்னைப்பார்த்துட்டு புருவத்தை உயர்த்தினாள். அது
கரு வில்லாக வளைந்தது.
"எப்படிடா இருக்க பரணி, ஆளே மாறிட்ட.. மறந்துட்ட.. பெரிய ஆளாயிட்ட.. "
என்று எல்லா வார்த்தையும் ஒரு சேர கேட்டாள். இப்போதுதான் சரியா என்
பார்வை அவள் முகத்தில் படும்படி நின்றாள். தலைமுடியின் நெற்றிப்
பார்டரில் ஒரு பொட்டு இருந்தது. என்ன நினைத்தாளோ புடவை மடிப்பை சரி
செய்துக்கொண்டாள்.
"என்னடா.. ஒன்னும் சொல்ல மாட்டுக்க.." என்று நெட்டினாள்.
"ஆங்க்.. தெரியும்.. நீ திட்டுவேன்னு.. அதான் பயந்துட்டு
வாரேன்..அப்புறம் எப்படி இருக்க.." என்று சொல்லிக்கொண்டே உருளைகிழங்கு
கூறு எடுக்க ஆரம்பித்தேன்.
அக்கா கொஞ்சம் மெழுகியதுப் போல இருந்தாள். முதன்முதலில் பார்த்த அக்கா
மாதிரி இல்லை. இன்றும் ஞாபகம் இருக்கு, அக்கா முதன்முதலில் எந்த
தோற்றத்தில் வந்தாள் என்று.
நான் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அக்காவுடைய அம்மாவும்
அக்காவும் காம்பவுண்டுக்கு வந்தார்கள்.
"தம்பி, இங்க வீடு காலியா இருக்காமே.. " என்று என்னைப்
பார்த்துக்கேட்டனர். நான் எங்க வீட்டைக்காட்டி அம்மாட்ட கேளுங்கன்னு
சொல்லிட்டு வெளியே போயிட்டேன். உள்ளே வரும்போது காலியாக கிடந்த வீட்டை
அம்மா காட்டிக்கொண்டிருந்தாள். அக்காவுக்கு வீடு எப்படியோ பிடித்துப்
போனது. அந்த இடத்திலே அட்வான்ஸ் கொடுத்தனர். நாளைக்கு வருவதாக
சொல்லிவிட்டு சென்றனர். சொன்ன மாதிரி வந்தார்கள். சாமான்கள் எதும்
அதிகமாக இல்லை. தள்ளுவண்டியிலே தள்ளிட்டு வந்துவிட்டனர். எடுத்து
வைக்கும் போது அம்மா என்னை அவளுக்கு கூட மாட வேலை செய்யச்சொன்னாள்.

அவங்க கூட சேர்ந்து நானும் வேலை செய்ய ஆரம்பித்தேன்.  அக்கா எடுத்தவுடனே
எப்.எம் ரேடியாவை ஒட விட்டாள். அவளுக்கு அது இல்லாமல் இருக்க முடியாதுப்
போல. அடுத்த அடுத்த  நாட்களில் ஸ்கூல் போகும் போது சிரிப்பாள். அந்த
சிரிப்பு அவள் முகத்தில் ஒட்டி வைத்ததுப் போல இருக்கும்.  அவள் என்னிடம்
என் பேரக் கேட்டது கூட கிடையாது.
ஒரு நாள்
 " தம்பி.. உன் பேரு என்ன..?" என்றாள்.
 " பரணி.. உங்க பேருக்கா..?"
"செல்வி.. நீ அடிக்கடி சீனி வீட்டுக்கு அடிக்கடி  வருவல்ல.. உன்ன அங்க
நான் பார்த்திருக்கேன்.."
"ஆமா.. ஆமா.. என் ப்ரெண்டுதான்... நீங்க அங்கத்தான் இருந்தீங்களா..?
"ஆமாபா..பக்கத்து காம்பவுண்டுலதான் குடி இருந்தோம்.."  அந்த உரையாடல்களை
முற்றுப் புள்ளி வைக்கிறமாதிரி தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு "சரி
பரணி.. நான் கிளம்புறேன்.." என்று கிளம்பினாள்.
நைட் அம்மாத்தான் சொல்லிக்கொண்டிருந்தாள. செல்வி அக்காவுடைய அப்பா
கோவில்பட்டியில வேலை பார்ப்பதாகவும். அக்காவுடைய அம்மா வீட்டு வேலை
பார்க்கிறதையும், அக்காவும் போஸ்ட் ஆபிஸ் தெருவுல உள்ள ஒரு ஜெராக்ஸ்
கடையில் வேலை பார்க்காங்கன்னு.. அன்றிலிருந்த அக்கா பிம்பம் ஒரு
பாவப்பட்டதாக என் மனதில் பதிந்தது.
அக்கா எப்போதும் கறுப்பு பாசி கழுத்தில் போட்டிருப்பாள். அடுத்தடுத்த
பேச்சுகளாலும், சிரிப்புகளாலும் நான் அக்காவுடன் நெருக்கமாகினேன். எங்க
வீட்டுக்குத்தான் டி.வி பார்க்க வருவாள். வந்தாலே ஒரே ரகளைத்தான் எதாவது
வம்பிழுத்துக்கொண்டிருப்பாள். அக்கா வேலை முடித்துவிட்டு ஏழு மணிக்குள்ள
வந்துருவாள். வந்ததும் ஒரு பாத்ரூமுக்கு போய் குளியலைப் போடுவாள்.
பாத்ரூமுக்கு மேல் டாப்பு கிடையாது. எங்களுக்கும் அந்த பாத்ரூமுதான்.
குளித்து முடித்துவிட்டு எங்க வீட்டுக்கு நுழையும் போதே குடிகுரா பவுடர்
வாசனை வீசும். பக்கத்து வீட்டு ராஜ ராம் அண்ணன் அக்காவை அடிக்கடி நோட்டம்
விடுவான்.
"இந்தப் பய அடிக்கடி முறைக்கிறான் பரணி..  கடை பக்கமும் அடிக்கடி
சுத்துதான்.. பார்க்கும் போது அப்படியே கண்ண புடுங்கனும்போல இருக்கு.."
வீட்டுத்திண்ணையில் என் பக்கத்தில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.
அக்கா அடிக்கடி " நீ எங்கே.. நீ எங்கே..பூ வைக்க ஆள் எங்கே.. தாலி கட்ட
கழுத்து அறுக்குதே.. " என்று முணுமுணுப்பாள். என்னைக் கண்டது கப்சிப்
ஆயிருவாள். ஒரு நாள் பழைய போட்டா எடுத்துட்டு வந்தாள். மேரி சார்ஜண்ட்
ஸ்கூல் போட்டா. அதில் அக்கா சுடிதாரில் ஒல்லிக்குச்சியாக இருந்தாள்.
" இங்கையாக்கா... நீங்க படிச்சிங்க.."
"உனக்கு தெரியாதுல.. நாங்க முதல்ல வண்ணார்ப்பேட்டையில்தான் இருந்தோம்.
அங்க வச்சுதான் நான் பிறந்தேன்.. என் முழு என்ன தெரியுமா..?"
"தமிழ்செல்வியா.."
"அட போடா... என் பேரு தாமிர செல்வி.. எங்க அப்பா வச்சாரு.. நம்ம ஆறு ஞாபகமா..!!"
"அட நல்லா இருக்கே.. காப்பர் செல்வி.. சூப்பர் பேரு.. " என்று நான்
நக்கலடிக்க அவள் என் தலையில் கொட்டினாள்.

"ஆற்றுக்குலாம் அடிக்கடி போவியா... " என்றாள்.
"அம்மா அதுலாம் விடாது.. எப்பவாது..ப்ரெண்ட்ஸ் கூட திருட்டுத்தனமா போனாதான்..."
"இந்த வாரம் போமா..?"
"ஆங்.. போவோம்.. எப்ப..?"
"ஞாயிற்றுக்கிழமை..?"
"கண்டிப்பா.. அம்மாட்ட சொல்லிருங்க.."
ஞாயிற்றுக் கிழமையை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு வாளி
அழுக்குத்தூணியை எடுத்துக்கொண்டு வாய்க்கால்பாலம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறி
வண்ணார்பேட்டைப் போய் இறங்கினோம். பேராச்சியம்மன் கோவில் போற வழியில
கேடிஸி பஸ் அடிக்கடி வந்துக்கொண்டிருந்தது. " இங்கத்தான் கேடிஸி டிப்போ
இருக்கு.. இங்க கொஞ்ச நாள் எங்க அப்பா டெம்ரவரியாக வேலை பார்த்தாரு.."
என்று நான் கேட்காமலே சொல்லிக்கொண்டு வந்தாள். அந்த வழியிலே பெரிய ஆல
மரம் ஒன்று இருந்தது.  பறவைகள் சத்தம் காதை கிழித்தது.  பேராச்சியம்மன்
கோவில் படித்துறைக்கு போகாமல், அதே வழியா நடந்து வட்டப்பாறைக்கு
கூட்டிட்டு வந்தாள். அவள் கையை பிடித்துக்கொண்டு வருவது வானவில்லின் கலரை
கையை விட்டு ஆட்டியதுப் போல் இருந்தது அந்த கணம்.
"பரணி நீ யாரு பின்னாடியும் சுற்றிதுயோ.. " என்று கேட்டு முடிப்பதற்குள்
ஒரு சகதியில் கால் வைத்துவிட்டேன்.
"பொறு பொறு.. ஆத்துல இறங்கி கழுவிக்கலாம்.."  என்றபடி ஆற்றுல கால் வைத்து
இறங்கினேன். வட்டப்பாறை ஆற்றுக்கு நடுவுல இருக்கும். கரையில் இருந்து
சட்டையை கையில் தூக்கிட்டு நடந்தேன். அவளும் சுடிதாரை நனைத்தப்படி
வந்தாள். மள மளவென்று வருகிற தண்ணில அப்பப்ப அமலையும் வந்தது.
வட்டப்பாறாய்க்கு தூணி துவைக்க ஆரம்பித்தாள். நான் பக்கத்தில்
உட்கார்ந்திருந்தேன். வெயில் முதுகில் சுள்ளுன்னு அடித்தது. பின்னாடி
திரும்பி ராம் முத்துராம் தியேட்டரின் கோபுரத்தை காண்பித்தாள்.
"சொல்லவே இல்லை.. நான் கேட்ட கேள்விக்கு..?"
"அப்படிலாம் இல்லை.." என்று வழிந்தேன்.
"பொய் சொல்லாத... உன்னையும் அந்த சீனிப் பையனும் அடிக்கடி கான்வெண்ட்
ஸ்கூலு பக்கம் பார்க்கிறதா ஒரு ஆளு சொன்னுச்சு.."
"ஒ.. அதுவா.. அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுற்றுறான்..அதான்.."
"அதான பார்த்தேன்.. எந்தம்பி நல்ல பையன்லாம்.. " என்று சோப்பு நூரையை
கண்ணத்தில் தடவினாள்.  நூரையைத்தேய்த்துக் கொண்டே ஆற்றில் இறங்கினேன்.
அக்கா என் சட்டைக்கும் சோப்பு போட்டாள். அந்த நுரையில் என்
மனக்கறையெல்லாம் போயிட்டு.
அக்கா கூட ஆற்றுக்கு போயிட்டு வந்ததை கொஞ்ச நாள் மறக்க முடியவில்லை.
இதுக்குள்ளே என் படிப்புக்கு அம்மா ரொம்ப இருக்கி பிடிக்க
ஆரம்பித்தார்கள். ஆறு மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும்.
வீட்டுக்குள் இருந்தால் டி.வி தான் பார்க்கத்தான் தோணும், மொட்டை
மாடியில் போய் படி என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.  அக்கா வந்து
குளிச்சிட்டு எங்க வீட்டுக்கு டி.வி பார்க்க வரும்போதுதான் வீட்டுக்குள்
வரவேண்டியதாயிருந்தது.
கடைக்கு போயிட்டு வந்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ராஜாராம் அண்ணன்
வந்துக்கொண்டிருந்தான்.
" என்னடே.. ஒரு அக்கா அக்கான்னு அலையுதே.. " என்றான். எனக்கு அவனுக்கு
திருப்பி பதில் சொல்ல விரும்பவில்லை.
"தெரியும் டா.. அவ குளிக்கும்போது.. நீ மேல நின்னு என்ன பண்ணுதன்னு..
எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா.." என்று சொல்லி முடிக்கவும்
 நான் அந்த இடத்தை விட்டு ஒடி வந்துவிட்டேன். மனசு குறுகுறுத்தது. மொட்டை
மாடிக்கு சென்று படிக்கத்தோணவில்லை. அம்மா சத்தம் போடவும் மாடிக்கு
சென்றேன். மனம் கட்டுகடங்காமல் குறுக்கும் நெருக்குமாக
ஒடிக்கொண்டிருந்தது. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம். மாடியில் நின்று
எட்டிப்பார்க்க ஆசை வருகிறது. இருந்தாலும் ஏதோ தடுத்தது. ராஜாராம் அண்ணன்
சொன்னது வேற மனசுல கிடந்து ஆசையை கிளப்புது. கொஞ்சம் நடந்து விளிம்புக்கு
வந்தேன். எட்டிப்பார்த்தால் குளிக்கிறது தெரியும். நெஞ்சு திக்
திக்குன்னு அடிக்குது. வேர்த்து வேற கொட்டுது. தண்ணீர் உற்றுகிற சத்தம்
கேட்டுக்கொண்டிருக்கிறது. துணிந்து முடிவெடுத்து எட்டிப் பார்த்தேன்.
அக்கா அப்பத்தான் கொண்டியை கழற்றிவிட்டு வெளியே போறாள். ஒரு வினாடி
சப்பென்று ஆகிவிட்டது. ஆனால் மனம் அப்பாடா என்றது.
அடுத்த நாள் முதல் அக்காவைப் பார்க்க பயமாக இருந்தது. அவள் கண்ணில்
படாமல் வெளியே சென்றுவிடுவேன். தீடிரென்று நான் இப்படி ஆனது அக்காவுக்கு
ஒரு மாதிரி ஆகிவிட்டது. எங்க வீட்டுக்கு டி.வி பார்க்கவும் வரமாட்டாள்.
அக்கா கடைக்கு ஒரு நாள் ஜெராக்ஸ் எடுக்க போயிருந்தேன்.
" என்னடா.. ரொம்ப ஒவரா பண்ற.. என்னடா பிரச்சினை.." என்றாள் கவலையாக.
அவளது உருக்கம் என்னை உலுக்கியது.

"அப்படிலாம் இல்லக்கா.. " என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக
இருந்தேன். உண்மையை சொல்லிவிடுவனோன்னு பயமாக இருந்தது.
" உஙக கூடவே இருக்கனும் போலவே தோணுது.. அந்த எண்ணத்தை மாற்றதுக்குத்தான்
இப்படி நடந்துக்கிட்டேன்.."
"அதுக்கென்னடா.. இரு.. என் கூடவே எப்போதும் இரு.. அப்புறம் ஒரு
முக்கியமான மேட்டர்.. " அதுக்குள் ஒரு கஸ்டமர் வர எழுந்துப் போனாள்.
திரும்பி வந்து,
" குற்றாலம் போயிருக்கியா..!"
"ம்ம்.. போயிருக்கேன்.."
"இந்த தடவை போவோமா...?"
" எப்போ..." ஆசை பீறிட்டது.
" சொல்லுறேன்.. எங்க ஒனர்தான் டூர் போடுறாரு.. கோபாலசாமிகோவில் தெரு,
தெற்குபஜார் எல்லாம் சேர்த்து இரண்டு பஸ் தேறும்.. எப்படி போலாமா.."
என்று கண் சிமிட்டினாள். அன்றிரவு வேலைக்கு போயிட்டு வவுசி கிரவுண்டுக்கு
போனோம். அங்கு பானி பூரி சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். ராமசாமி
கோவில் தெரு வழியா நடந்து வரும்போது நண்பன் சிவா கை காட்டினான்.
அக்காவுக்கு அவனை அறிமுகம் படுத்தினேன். இருவரும் சந்தோசமாக தெருக்களில்
நடந்து வந்துக்கொண்டிருந்தோம்.

****************************
என் நினைவுகளை கலைக்கிறது மாதிரி , அவள் போனை வைத்துவிட்டு என் பக்கம்
திரும்பினாள்.
"சாரிடா.. பரணி.. என் ப்ரண்டு குற்றாலத்தில் இருந்து கால் பண்ணினா..
அதான்... ரொம்ப நேரம் தனியா நடந்துட்ட.. சாரி.. வா.. இங்கத்தான்.. வீடு
போயிரலாம்" என்று அசோக் தியேட்டர் எதிர்த்த தெருவினுள் நடக்க
ஆரம்பித்தோம்.
பாதாளசாக்கடைக்காக தெருவெல்லாம் தோண்டிப்போட்டிருந்தனர். வீடுகளில் லைட்
போட ஆரம்பித்தனர்.  அவள் செல் மறுபடியும் ஒலிக்க  என்னைப்பார்த்து ஒரு
கெஞ்சலுடன் காலை அட்டெண்ட் பண்ணினாள்.
என் நினைவுகள் மறுபடியும் பின்னால் சென்றது.

*****************************


குற்றாலம் டூருக்கு போக அம்மாவுக்கு விருப்பமில்லை. அப்பாவும்
சம்மதிக்கவில்லை. அக்கா எவ்வளவோ பேசிப்பார்த்தும் முடியவில்லை. கிளம்புற
நாள் அன்றைக்கு வீட்டுக்கு வந்தாள்.
"பரணியை டூருக்குத்தான் அனுப்புல.. எங்கூட கோபாலசாமி கோவில் வரைக்காவது
அனுப்புங்க.. பஸ் அங்கத்தான் ஏறனும்.. " என்று அம்மாவிடம் கேட்டுவிட்டு
கூட்டிட்டுப் போனாள்.. அக்கா வீட்டில் சண்டை போட்டுருப்பா போல கொஞ்சம்
அழுத மாதிரி இருந்தாள்.
அவங்க அம்மாவும் தான்.
பஸ்ஸில் ஏறி சீட்டில் பையை வைத்தாள். கீழிறங்கி
" பரணி.. நீ இனிமேல் என்னை பார்க்க மாட்ட.. " குரல் தழுதழுத்தது.
"எதுக்குகா.." என்றேன் பதட்டமாக..
"நானும் எங்க ஒனரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அதுக்குத்தான் இந்த
குற்றால டூரு.. நீ இருந்தா நல்லா இருக்கும்னு நினைத்தேன்.. அது முடியாமல்
போயிடுச்சு.."
அவள் சொல்ல சொல்ல நான் வாயடைத்து நின்றேன்.. பஸ் புறப்பட தயாராக அக்கா
ஒனர் கடைசியில் வந்தார்.
அந்த அவசரத்திலும்
"இதான் எந்தம்பி.. பரணி.." என்று அறிமுகப்படுத்தினாள்.  அவரு என் தலையில்
கைவைத்து "மாப்ளே.. பார்க்கலாம்.. வா செல்வி பஸ் கிளம்புது.." என்று
இருவரும் ஏறிக்கொண்டனர். டூர் பஸ் இரண்டும் கிளம்ப அந்த இடம்
வெறுமையானது. அக்காவும் இல்லாமல் என் மனசும் வெறுமையாக இருந்தது.
எப்போதும்  கோபாலசாமி கோவிலில் இருந்து பார்த்தால் உச்சினிமகாளி அம்மன்
கோவில் தெரியும். அன்று எனக்கு அது மங்கலாக இருந்தது. சுய நனைவற்று
நடந்து வந்தேன். ஒரு வண்டி குறுக்க வந்து மோதுகிற மாதிரி போனது.

***************

"டேய் பார்த்துடா.. இதான் வீடு.. அதுக்குள்ள வண்டி வருவதுகூட தெரியாமல்
என்ன யோசனை.. வா.. " என்று அவள் வீட்டுக்கு அழைத்து சென்று சேரில் உட்கார
வைத்தாள்.  தண்ணி வேணும் என்று சைகையில் காட்ட கொண்டு வ்ந்துக்
கொடுத்தாள்.
"அம்மா, அப்பா எப்படி இருக்காங்க..."
"ம்ம்.. நல்லா இருக்காங்க.." என்றேன்.
அந்த தனிமையில் அக்காவுடன் பேசுக்கொண்டிருப்பது எனக்கு என்ன்மோ மாதிரி
இருந்தது. மறுபடியும் அந்த மொட்டை மாடி, பாத்ரூம் ஞாபகம் எல்லாம் வந்தது.
அங்கிருந்து போயிரலாம் என்று முடிவெடுத்து
"பாத்ரூம் எங்க.." என்று வழி கேட்டு சென்று வந்தேன். ஒரு திருப்தியா இருந்தது.
:நான் கிளம்புறேன்.."
"எதுக்குடா. அதுக்குல்ல.."
"இருக்கட்டும்.. பரவாயில்லை.. இங்கத்தான் இருக்க் போற.. அடிக்கடி
வாரேன்.. மறுபடியும் குற்றாலம், பாபநாசம்னு போக மாட்டல்ல.." என்றபடி
வாசலில் இறங்கினேன்.அவள் பல் ஈறு தெரிய சிரித்தாள். நான் திரும்பி
சிரித்தப்படி நடக்க ஆரம்பித்தேன். அக்காவுடைய வீட்டின் பாத்ரூமில் மேல்
டாப்பு இருந்தது. இதை நினைகும் போது மறுபடியும் சிரிப்பு வந்தது.
திரும்பிப்பார்த்தேன்.
வாசலில் நின்று அந்த தாமிரம் சிரித்தப்படியே ஒளிர்ந்துக் கொண்டிந்தது...!!


நன்றிகளுடன்
ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி.