தமிழரைத் தேடி நூல் வாசிப்பு

2022-03-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

 



நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பாலம் புத்தக நிலையத்தில் தற்செயலாக கண்ணில் பட்டது எழுத்தாளர் தங்கவேல் எழுதிய " மீண்டும் ஆரியரைத் தேடி"  புத்தகம்.  நான் அப்பொழுது மனிதர்கள் இடப்பெயர்வு பற்றி  வாசித்தும், ஆராய்ந்தும் கொண்டிருந்தேன்.  தொல்லியல், மொழியியல் மட்டுமல்லாமல் DNA ஆராய்ச்சி மூலம் மனிதக்கூட்டத்தின் இடப்பெயர்ச்சிகள், இனக்கலப்புகள் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என தீவிரமாக தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு கட்டத்தில் நாமும் DNA Test எடுத்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து இந்தியாவிலே ஒரு கம்பெனியில் டெஸ்ட் எடுத்தேன். முடிவுகள் ஆச்சர்யமாக இருந்தது.


இரத்த வகைப் போல மரபணுவில் Haplogroup என்ற வகை உண்டு. ஆண் வழித் தொடர்புகளை  YDNA மூலமாகவும், பெண் வழித் தொடர்புகளை மைட்டோகான்ரியா mtDNA வழியாகவும் கண்டறியலாம். இண்டுக்கும் Haplogroupகள் உண்டு.  


எல்லா மனித இனத்தையும் இந்த வகைக்குள் அடக்கிடலாம். ஒவ்வொரு வகையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பல பகுதியில் மனிதர்களிடையே மரபணு பிறழ்வு ( Mutation ) மூலம் தோன்றியது. தமிழில் அவ்வளாக மரபணு ஆராய்ச்சி பற்றி எழுதாத சுழலில் " மீண்டும் ஆரியரைத் தேடி " புத்தகத்தில் இடம்பெற்றது ஆச்சர்யமளித்தது. மொத்தப் புத்தகம் அதைவிட புதிய தகவலை, வாசலை திறந்து வைத்தது.


ஆரியர்களின் வருகைக்கு பின்புதான் இந்திய துணைக்கண்ட வரலாறு ஆரம்பிக்கப்பட்டது என்ற வட இந்திய அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் கருத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்டதுதான் இப்புத்தகம். 


உண்மையில் ஆரியர் யார்?? அவர்களின் ஐரோப்பிய மூலத்திற்கு என்ன காரணம்? நார்டிக் இனத்தினர், அல்பைன் ஆரிமினாய்டு இனத்தினருக்கும் ஆரியருக்கும் உள்ள  தொடர்பு என்ன? மிட்டானி நாகரிம், ஹரியன் பண்பாடு, அனோடாலியா பண்பாடு, சுமேரிய நாகரிகம் என்று ஐரோப்பிய, மத்திய கிழக்கு வரலாற்றை ஆராய்ந்து எழுதியிருப்பார். 


இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் உண்மையான ஆரியர்களா? கருப்பு சிவப்பு பண்பாடு சிந்து சமவெளியில் மற்றும் தென்னிந்தியாவில் மட்டும் ஏன் கிடைக்கிறது? மகாபாரதம், ராமயாணம், வேதங்கள் உண்மையிலே ஆரியர்களால் படைக்கப்பட்டதா? ரிஷிக்கள் உண்மையில் ஆரியர்கள்தானா?? என ஆராய்ச்சி நூல் போல் இல்லாமல் திரில்லர் நாவல் போல் விரிந்திருக்கும். தமிழின் மிக முக்கிய ஆராய்ச்சி நூல் இது. 



தற்பொழுது புதிதாக வெளிவந்திருக்கும்

" தமிழரைத் தேடி" எழுத்தாளர் தங்கவேலின் அடுத்த  நூல். 

முதல் நூல் ஆரியரின் மூலத்தை தேடியவர், இதில் தமிழரின் ஆதி மூலத்தை தேடுகிறார். மிக முக்கியமாக இந்நூல் தொல்லியல், மொழியியல், மானுடவியல், மரபணுவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரின் வரலாறுகள் யூகங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட சுழலில் உண்மையான அறிவியல் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். 


தமிழரின் தோற்றுவாய் எங்கே ஆரம்பிக்கப்பட்டது?? தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழியா? ஆரியருக்கும் தமிழருக்கும் உள்ள மரபணு வேற்றுமையில் ஒற்றுமை, சடங்குகளின் வரலாறு, மொழியில் பின்புலத்தில் ஆராய்ச்சி,  இலக்கியச் சான்று, கருப்பு சிவப்பு பண்பாடு, பெருங்கற்கால பண்பாட்டு போர்க்குடிகள்,  இரும்பைதேடிய வணிக குழுக்கள்,  மத்திய தரைக்கடல் நாடுகளுடன் வாணிகம்,மினோயன் நாகரிகத்தின் தொடர்புகள், ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளுக்கு பின் உள்ள வரலாறுகள் என பத்தாயிரம் வருட வரலாற்றை தரவுகளுடன் நூல் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.


தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்திற்குரிய காரணக் கண்ணி இப்புத்தகத்தில் உள்ளது.


 ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டின் மூலமே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது  என்று அழுத்தமாக பல தகவல்களிம் மூலம் சொல்லுகிறார்.


முக்கியமான வரலாற்றாய்வு நூலாக தமிழரைத் தேடி பரிணமிக்கும்.

கெமும் ஆச்சே கொல்கத்தா ? பயணக்கட்டுரை

2021-12-18

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



 நண்பர் திருமுருகனின் முதலாவது கட்டுரை தொகுப்பு இது. தலைப்பு தனித்துவமாக ஈர்க்கிறது. 

தன் வங்கிப் பணி நிமித்தமாக கொல்கத்தா நகரில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தது மட்டுமல்லாமல் அந்நகரில் வாழ்ந்த அனுபவங்களை  மிகுந்த அக்கறையையுடன் நேர்த்தியான கட்டுரைகளாக உருவாக்கியிருக்கிறார். வாசிக்கும் போது  சிறந்த வாழ்வியல் அனுபவத்தை தந்தது. கல்கத்தா நகரில் சுற்றி வந்தது போல இருந்தது.  

பந்தல் என்னும் துர்கா பூஜையைப் பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் சிறந்ததாக எனக்கு பட்டது. மேலும் கல்கத்தா நகரின் கால்பந்து கிளப் மற்றும் அதன் உருவாக்கத்தின் வரலாற்றை விரிவாக பதிவு பண்ணியிருக்கிறார். 

உணவு, ரோட்டுகடை, டிராம், ரிக்‌ஷா, இனிப்புகள் என தான் அவதானித்த அனைத்தையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.  

நகரின் அனுபவத்தை சொல்லியது போல, அந்நகரின் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்கின்ற குறையைத் தவிர , முதல் படைப்பு போல் இல்லாமல் நல்ல அடர்த்தியான மொழி ஆளுமையுடன் , சுவாரஸ்யமான கட்டுரைகளுடன் சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுக்கிறது இப்புத்தகம். 


 

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவல்

2019-08-16

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவல்


மலையாள மொழியில் இயற்றப்பட்ட தமிழ் நாவல். மலையாளத்திலும் நாவல் பெயர் நிலம் பூத்து மலர்ந்த நாள் தான்.!

கதையின் களம் இரண்டாயிம் வருடம் முற்பட்ட சங்கக் காலம்.  தமிழ் நிலப்பரப்பு என்பது வங்கக்கடல் முதல் அரபிக்கடல் வரை பரவியிருந்த காலக்கட்டம் அது.  மலையாள மொழி தோன்றாத காலம். இன்றும் சமஸ்கிருதம் கலக்காத மலையாளம் தூய தமிழ்தானே..!!

வறுமையின் காரணமாக மன்னர்களிடம் சென்று அவர்களைப் புகழ்ந்து பாடலிசைந்து வெகுமதிப் பெற புறப்படும் பாணர் கூட்டத்தின் பயணக்கதையே இந்நாவல்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலத்தின் வழியே பயணப்படும் கதை அதன் சமூக பண்பாடுகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.  குறவர்கள், ஆயர்கள், உழவர்கள், பரதவர்கள், மறவர்கள், எய்னர்கள் என ஐவகை நில மக்களும் நாவலில் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.

பயணப்பட்ட பாணர் கூட்டம் சங்க காலப் புலவர்களான பரணர், கபிலருடன் உரையாடுகின்றனர். வேளிர் நில மன்னர் வேள் பாரியை சந்திக்கின்றனர்.
கதையில் அவ்வையும் வருகிறாள், அதியமான் மன்னனும் வருகிறான்.
நாவலின் பலமே சங்க கால மன்னர்களையும் புலவர்களையும் கதையின் மாந்தர்களாக உருவகப்படுத்தியதுதான்.
நாவலினுடே மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சதியினால் வீழ்த்தப்பட்ட வேளிர் மன்னர்களின் கதையும் சொல்லப்படுகிறது.

மேலும் பழங்குடி வாழ்க்கை முறை, நாட்டுபுற தெய்வங்கள், கூத்து, காதல், களவு என பழந்தமிழ் மரபு அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேள்பாரி மன்னன் வீழ்த்தப்படுவதும், நன்னன் மன்னனால் கொல்லப்படும் சிறுமி பின்னர் தொல் தெய்வமாக மாற்றப்படுவதும் நாவலின் சிறந்த
பகுதிகளாகும்.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் தமிழ் சங்க இலக்கியத்தின் மீது இருக்கும் மிகுந்த பற்றின் காரணமாகவே இந்நாவல் மிக பிரமாண்டக விரிந்து இருக்கிறது. கே.வி.ஜெயஸ்ரீ மூல மொழி சிதையாமல் சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளார்.
வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சங்கப்பாடல்களில் எத்தனையோ பாடல்களைப் பதிவு செய்த பாணர்களைப் பற்றிய சிறந்த நாவல்.

மனித இனப்பரவுதலில் மரபணு ஆராய்ச்சியும் எனது பரிசோதனை முடிவுகளும்(MY Ancestry DNA result Tamil ) Part I

2018-03-24

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




மனித இனம் முதன் முதலில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் பரிணாம வளர்ச்சி அடைந்து உலகம் முழுவதும் பரவியது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். தொல்லியல் ஆராய்ச்சி மூலமாகவும் மனித எலும்புகள், மண்டை ஓடுகள் ஆகியவற்றின் மூலமாகவும் ஆதி மனிதன் முதன் முதலில் 60000 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறி சவுதி அரேபிய கடற்கரை வழியாக இந்தி்யாவிற்கு நுழைந்து தமிழக மேற்கு கிழக்கு கடற்கரைகள் வழியாக பயணம் செய்து( ஒரு கூட்டத்தினர் இங்கே தங்கிவிட்டனர் ) ஆஸ்திரேலியா வரை சென்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. அதன் பின் இன்னொரு ஆதிமனிதக்கூட்டம் வெளியேறி மறுபடியும் வட இந்தியா, ஐரோப்பா, சீனா, கொரியா அமெரிக்கா வரை சென்றனர் என்று தெரிவிக்கின்றனர். அக்காலக்கட்டங்களில் பனியுகம் பல ஆண்டுகள் நீடிந்திருந்தன. இதன்காரணமாகவே கடல் மட்டம் தாழ்ந்து பயணம் செய்ய வசதியாக இருந்திருக்கிறது.

DNA ஆராய்ச்சியின் மூலமாக ஆதிமனிதன் மரபணு கூறுகள் தற்போது எந்தந்த நாடுகளில் பரவியுள்ளது என்றும் அவர்களின் பயணம் எந்த வழியாக சென்றிருக்கும் என்று Dr.Spencers wells என்பவர் National geographic project மூலமாக உலகின் எல்லா நாட்டு மக்களிடமும் DNA மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்து 2002ல் முடிவுகளை வெளியிட்டார். மரபணு மூலம் தந்தை வழியை YDNA( Y chromosome) மூலமாகவும் , தாய் வழியை   mtDNA( X chromosome ) வழியாகவும் கண்டறியலாம். இம்முடிவுகளும் தொல்லியலாராய்ச்சி முடிவுகளும் பல ஒத்திருக்கின்றன. அவருடைய The journey of man என்ற ஆவணப்படம் YouTubeல் காணக்கிடைக்கின்றது.  இதில்  தமி்ழகத்தில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் 20நிமிட காட்சி இடம்பெறுகிறது. M 130 என்ற DNA  haplogroup மதுரை அருகே விருமாண்டி என்பவரின் DNA வில் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள். ஆப்ரிக்காவின் முதல் ஆதி மனித பழங்குடியினரின்
M168 என்னும் DNA கூறுகளிலிருந்து மாறுதல் அடைந்த(   mutation) மரபணுக்கூறுதான் M130. இந்தகூறு ஆஸ்திரேலியா பழங்குடியினரிடமும் காணப்படுகிறது. இன்றும் தமிழக பழங்குடியினரில் 5% வரை காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


M168 மரபணுவிலிருந்து  M89 மாறுதல் அடைகிறது.
சுமார் 50000 வருடங்களில் ஈராக், ஈரான் பகுதியில் M9 மரபணுக்கூறு தோன்றுகிறது. இந்த M9 மரபணு மூலக்கூறு உலகின் வாழும் அனைத்து மக்களிடமும் கொஞ்சமாவது காணப்படுகிறது. இங்கே இருந்தே எல்லா மக்களினமும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். இங்குதான் தமிழ் மொழியின் மூல மொழி உருவாயிருக்கும் என்று கூறுகிறார்கள்.  M9 லிருந்து M20 உருவாகி தென்னிந்தியா முழுவதும் பரவுகிறார்கள். M45 உருவாகி ஐரோப்பா செல்கிறது. M175, M122,M119 உருவாகி மங்கோலியா, சீனா, கொரியா செல்கிறது. அதனால் இவ்வினங்களிடையே மொழி ஒற்றுமைகள் இன்றும் இருக்கிறது. 


கடந்த சில வருடங்களாக அமெரிக்கா மற்றும்  மேலை நாடுகளில் DNA Ancestry test என்னும் மரபணு ஆராய்ச்சி மூலம் தனது மூதாதையர்களை தேடுவது ஓரு பொழுதுபோக்காகவும் ஆராய்ச்சி செய்யவும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்காத ஆச்சர்யமான முடிவுகள் DNA test கொடுக்கிறது. அமெரிக்கர்கள் தங்களது ஐரோப்பிய மூலத்தை இந்த பரிசோதனை மூலம் தேடுகிறார்கள். இந்த பரிசோதனைகளில் பல கம்பெனிகள் செயல்படுகின்றன. முக்கியமானவைகளாக Ancestry.com, 23andme.com, my heritage.com, familytreeDna.com, wegene.com இன்ன்மும் பல இருக்கின்றன. மேலும் ஆராய்ச்சிக்காகவே சில இணையதளங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானது gedmatch.com . இவற்றில் பல இலட்சம் மாதிரி DNA உள்ளன. நமது DNA முடிவுகளை தொடர்புபடுத்தி நாம் எந்த மக்களின் மரபணுவுடன் ஒத்திருக்கிறோம் என்ற முடிவையும் உடனடியாக தருகிறது. நமது DNA வில் உள்ள cm( centimorgan) அளவை வைத்து நமக்கும், அதில் பதிவேற்றி உள்ளவர்களின்  cm அளவையும் ஒப்பிட்டு நாம் எந்த தலைமுறையில் siblings(அண்ணன்,தம்பி )ஆக இருந்திருப்போம் என்ற ஆச்சர்யமான முடிவுகளையும் தெரிவிக்கிறது.  பொதுவாக ஒரு  DNA  களில் 6600cm உள்ளது. தந்தையிடமிருந்தும் 50% தாயிடமிருந்தும் 50% பெறுகிறோம். நமக்கும் நமது தந்தைக்கும் 3400cm match இருக்க வேண்டும். நமது குழந்தைக்கும் அதேதான். அண்ணன், தம்பிகளுக்கு 1700cm இருக்க வேண்டும். ஒவ்வொரு உறவுகளுக்கும் cm அளவுகோல்கள் உள்ளன. இந்த அளவுகோலை வைத்தே உறவுகளை இந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. DNA testல் தந்தை மகன் உறுதி செய்யும் முறையும் இவ்வாறே செய்யப்படுகிறது.


என்னுடைய   DNA மரபணு ஆராய்ச்சி முடிவும்,எந்தந்த நாடுகளில் மக்களினங்களில் எனது  DNA கலந்திருக்கிறது என்று அடுத்தபதிவில் காணலாம்..

INDIA ON FOUR WHEELS - ஆவணப்படம்

2016-02-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




“ India on Four wheels “ என்ற ஆவணப்படம் BBC தொலைக்காட்சி நிறுவனத்தால் 2011ல் வெளியிடப்பட்டது. கடந்த குடியரசு தின விழாவில் History சேனலில் ஒளிப்பரப்பினார்கள்.





அனிதா, ஜஸ்டின் என்ற இரு தொகுப்பாளர்களும் இந்தியாவை காரில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆவணப்படம் ஆரம்பிக்கிறது. அனிதாவிற்கு புது கார் Mahendra Bolero ஆர்டர் செய்கிறாள். ஜஸ்டின் பழைய அம்பாஸிடர் காரை அல்டர் செய்கிறான். இருவரும் டெல்லியில் கார்களின் உதிரி பாகங்கள் கிடைக்கும் இடத்திற்கு வருகிறார்கள். பழைய அம்பாஸிடருக்கு தேவையானவைகளை வாங்கிக்கொள்கிறார்கள். உதிரிபாகங்கள் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ளது. மூன்று, நான்கு அடுக்கு மாடிக்கட்டிடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. பின்னர் தனது பயணத்தின் பாதைகளை தேர்ந்தேடுக்கிறார்கள். அனிதா, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர், உதய்ப்பூர் வழியாக மும்பை சென்று அங்கிருந்து புனே, பெங்களூரு வழியாக சென்னை வந்தடைய வேண்டும். ஜஸ்டின், டெல்லியிலிருந்து ஆக்ரா, அலகாபாத், வாரணாசி வழியாக கல்கத்தா சென்று அங்கிருந்து ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னை வரவேண்டும். மிக சுவாரஸ்யமாக இருவரது பயணம் தொடர்கிறது.

அனிதா ஜெய்ப்பூர் வருகிறாள். ஜெய்ப்பூர் என்ற வரலாற்று நகரம் மிக மெல்லமாக வாகனங்களின் ஆக்கிரமிப்பால் மாறிவருகிறது. ஜெய்ப்பூர் நகரில் சாலைவசதிக்காக மட்டும் போடப்பட்ட மேம்பாலத்தின் அடியில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வசிக்கிறார்கள். பாதிக்கு மேல் சிறுவர்கள். எங்கிருந்தோ ஒடி வந்து இந்தப்பாலத்தினருகில் தஞ்சமடைகிறார்கள். இச்சிறுவர்களை மேம்படுத்துவதற்கு ஈடுபடும் ஒரு தொண்டு நிறுவனத்தின் செயல்களை விளக்குவதோடும் அச்சிறுவர்களின் ஏக்கங்களையும் கனவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். அனிதா ஜெய்ப்பூரிலிருந்து விடைபெற்று உதய்ப்பூர் வருகிறாள். உதய்ப்பூர் அரன்மணையின் தற்போது ராஜாவின் வாரிசை சந்திக்கிறாள். உதய்ப்பூர் ராஜாதான் இந்தியாவிற்கு முதன்முதலாக வெளிநாட்டிலிருந்து காரை இறக்குமதி செய்திருக்கிறார். அரன்மணையில் மிகப்பழைமையான கார்கள் அணிவகுப்பாக நிற்கிறது. இன்றும் புதுப்பொலிவுடன் ஓட்டுவதற்கு தயாராக வைத்திருக்கிறார்கள். அதன் பின் மும்பை நோக்கி பயணம். ஆறு வழிச்சாலைக்காரணமாக கோதுமை, பார்லி விளைந்த பூமியை இழந்தக்கதையை விவசாயிகளை சந்தித்து தெரிந்துக்கொள்கிறாள். மும்பை மாநகரம் வாகனப்பெருக்கத்தால் பிதுங்கி வழிகிறது. இந்தியாவின் குறைந்த விலைக் கார் என்ற டாடா நானோ தொழிற்சாலை செல்கிறாள். நடுத்திர இந்தியர்களின் கார் கனவை நாங்கள் நிறைவேற்றியதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் டாடா கம்பெனிக்காரர்கள். அப்படியே பெங்களூரு பயணம். சாலையில் டிராஃபிக் போலீஸிடம் நின்று இரவு ரோந்து செய்கிறாள். அங்கு எலக்ட்ரிக் காரில் பயணம் செய்து பார்க்கிறாள்.  பின்னர் ஸ்ரீபெரும்புதுர் ஹூண்டாய் கம்பெனிக்கு சென்று வெளிநாடுக்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்ப்படும் கார்களின் மேக்கிங்கை வியந்துக் காண்கிறாள். அங்கிருந்து மெரினாவை நோக்கி விரைந்து ஜஸ்டின் வருகைக்கு காத்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பழைய டெல்லியின் நெருக்கத்தில் மெதுமெதுவாக விடைப்பெற்று யமுனா விரைவுச்சாலையின் வழியாக ஆக்ரா வருகிறான். தாஜ்மஹாலை ரசிக்கிறான். அங்கு தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் மாறிவரும் காலநிலையைப்பற்றி ஆராய்ச்சி செய்துவரும் பேராசியரிடன் சிறு சந்திப்பு. தாஜ்மஹாலின் வெளிப்புறச்சுவர்களின் நிறங்கள் மாறிவருவதையும் வாகனப்பெருக்கத்தாலும் காற்றில் கலந்த மாசுக்களாலும் நிறங்கள் மாறிவருவதாக கூறுகிறார். அங்கிருந்து வாரணாசி என்னும் காசி நகரத்திற்கு வருகிறான். இந்தியர்களின் புனித நகரமான காசியின் பெருமையை கங்கைக்கரையில் வைத்து சொல்வதை கேட்கிறான். காசியின் கங்கைக்கரையில் இருக்கும் 60 படிக்கட்டுக்களில் இரண்டு படிக்கட்டுக்களில் பிணத்தை எரிக்கிறார்கள். காசியில் இறப்பு நிகழ்ந்தாலோ அல்லது இறந்தப்பின் எரியூட்டப்பட்டால் பிறவிபயன் அடைந்ததாக இந்தியர்களின் நம்பிக்கை. அரிசந்திரா காட்( படிக்கட்டு ), மணிக்கர்னிகா காட் இரண்டில் மட்டும் தினம் நூற்றுக்கு அதிகமான பிணங்கள் எரிக்கப்படுகின்றன. கடந்த வருடம் நானும் நண்பர் ராஜீவும்  காசிக்கு சென்றிருக்கும்பொழுது பிணங்கள் எரிவதை நேரில் நின்று பார்த்தோம். வாழ்க்கையின் மறுக்கரை என்னவென்று புரிய வைத்த நிகழ்வு அது.  ஜஸ்டினும் அவ்வாறே பிணம் எரிவதை பார்க்கிறான். மிகுந்த மனவலியுடன் காசியை விட்டு செல்கிறான். காசியில் வாகனப்பெருக்கம் அதிகம், மேலும் சீரான விதிகள் கிடையாது. சிறிய முடுக்குகளில் விரைவாக வண்டி ஒட்டுவார்கள். நகரம் முழுவதும் ரிக்சா சுற்றும். எங்கும் கோவில்களின் மணிச் சத்தம்.  ஒருவகையான மனதை மயக்கும் நகரம் காசி.

அங்கிருந்து கயா புறவழிச்சாலை வழியாக கல்கத்தா வருகிறான். இன்றும் கல்கத்தா நகரத்தில் அம்பாஸிடர் டாக்சிதான் அதிகம் இருக்கிறது. அம்பாஸிடர் கம்பனியான ஹிந்துஸ்தான் மோட்டர் கம்பெனி கல்கத்தாவில்தான் இருக்கிறது.  வழியில் கிராமத்தில் ஒரு கார் கம்பனி நடத்தும் கார் திருவிழாவில் கலந்துக்கொள்கிறான். கிராம மக்கள் ஆர்வமாக பழய கார்களை விலையை குறைத்து வாங்கிக்கொள்வதை காண்கிறான்.




அங்கிருந்து சுந்தர்பன் புலிகல் சரணாலயம் வருகிறான். கல்கத்தா நகரில் இருந்து சுமார் 200 கி.மீ தூரம் இருக்கும் சுந்தர்பன் சரணாலயம் தீவுகள் போல் அமைந்துள்ளது. கடலுக்குள் சரணாலயம் அமைந்துள்ளது. 2009ல் வந்த அய்லா புயலில் மிகுந்த சேதத்துக்குள் உள்ளாகியிள்ளது. மாறிவரும் வெப்பச்சலனம் காரணமாக தீவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டு வருகிறது. வெப்பச்சலனத்திற்கு பல காரணங்களில் ஒன்று வாகனப்பெருக்கம். மாங்க்ரோவ் மரங்களால் சுழ்ப்பட்ட அப்பகுதி அருமையாக இருக்கிறது.



 அங்கிருந்து ஒடிசா மாநிலத்தில் கலகண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நியாம்கிரி மலைப்பகுதிக்கு வருகிறான். அம்மலைப்பகுதிகளில் டோங்க்ரியா கோந்த என்ற பழங்குடியினர் மலைகளின் மீது வசிக்கிறார்கள். அவர்கள் ஆஸ்திரேலியா பழங்குடி இனவகைகளில் ஒருவர்கள். மலைகளின் அடியில் பாக்சைட் கனிமம் இருப்பதால் அம்மாநில அரசு ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியம் பிரித்தெடுக்கும் அக்கம்பனி, கார்களின் பல பாகங்கள் தயாரிக்க பயன்படுத்துகிறது. மலையை வெட்டி எடுக்கும் அனுமதியை கொடுத்த அரசை எதிர்த்து அப்பழங்குடியினர்  போராடி வருகின்றனர்.
இறுதியாக ஜஸ்டின் ஒடிசாவிலிருந்து ஆந்திர கிராமங்களில் வழியாக சென்னை மெரினாவை வந்தடைகிறான். இருவரும் பயண அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து சொல்லும் ஒரே செய்தி " இந்தியர்கள் இன்னும் நன்றாக வாகனங்கள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் ".


India on Four wheels என்றவுடன் இந்தியாவை காரில் சுற்றுவார்கள் என்றுதான் நான் நினைத்தேன். அப்படி இல்லாமல் அதற்கு வேறுவிளக்கத்துடன் இந்தியாவில் கார்களின் பெருக்கத்தால் உருவான பிரச்சினைகளையும், ஏற்பட்ட இழப்புகளையும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இந்த ஆவணப்படம் பேசுகிறது. இந்தியர்களின் கார் மோகத்தின் விளைவாக உருவான பன்னாட்டு சந்தைகளையும், வாகனப்பெருக்கத்தை ஈடுகட்ட சாலை விரிவாக்கத்தின் பெயரில் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், நள்ளிரவின் போதையில் கூடும் விபத்துக்களையும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமானியனின் வாகன மோகத்திற்கு பின்னால் இவ்வளவு இயற்கை  இழப்புகள் இருக்கிறது. அப்பெரிய நியாம்கிரி மலையை அது வீழ்த்துவிட்டது...



-- ஜெபா

ஈரோடு புத்தகக் கண்காட்சி - 2015

2015-08-03

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



கொஞ்ச நாட்களாக மொழி பெயர்ப்பு நாவல்கள் மேல் அதீத ஈடுபாடு, நிறைய மொழிப்பெயர்ப்பு வாசித்திருந்தும் மிச்சமுள்ள நல்ல மொழிப்பெயர்ப்புக்களை வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்துதது. கடந்த இரு மாதங்களில் வாசித்த பாவ்லோ கொய்லாவின் பதினொரு நிமிடங்களும், ஹோமரின் ஒடிஸியும் அதற்கு முக்கிய காரணம். எந்த முன் ஏற்பாடு இல்லாமல்தான் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். ஓநாய் குலச்சின்னம் நாவல் மட்டும் கிடைக்கவில்லை. மற்றவை நிறையவே பொறுக்கிவிட்டேன்.
நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடமி குறைந்த விலையில் நிறைய புத்தகங்களை அளித்தார்கள். கொஞ்சம் சுற்றுச்சூழல் சார்ந்த புதினங்களை வாசிக்காலம் என்று நினைத்திருந்தேன். அதற்காக காடோடி, உப்புவேலி போன்ற நாவல்களை வாங்கினேன். இப்பொழுது ஒவ்வொன்றாக எடுத்துப்பார்க்கும் போது அதிகமாகத்தான் வாங்கியிருக்கோம் என்று தோன்றுகிறது. வாங்கினால் போதாது வாசிக்கனும். கண்டிப்பா வாசிப்பேன். நேரடி தமிழ்ப்படைப்பு கொஞ்சம் குறைவுதான். முடிந்தவகையில் நல்ல collectionஐ அள்ளியிருக்கிறேன்.

வாங்கியவை இதோ

சாகித்ய அகாடமியில்

ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய( தமிழில் குமாரசாமி )
அபராஜிதா- விபூதிபூஷண் ( தமிழில் திலகவதி )
சிதம்பர ரகசியம் - பூரணசந்திர தேஜஸ்வி ( தமிழில் கிருஷ்ணசாமி )
சாரஸ்வதக்கனவு - கோபால கிருஷ்ண பாய் ( தமிழில் இறையடியான் )-
பூமி - ஆஷா பகே( தமிழில் ராஜாராம்)
தட்டகம் - கோவிலன் ( தமிழில் நிர்மாலயா )

நேஷனல் புக் டிரஸ்டில்

மங்கியதோர் நிலவினிலே- குர்தயாள் சிங்க் ( தமிழில் ராஜீ)
கங்கவ்வா கங்கா மாதா - சங்கர் மோகாசி புணேகர்  ( தமிழில்  வெங்கட்ராம் )
கங்கைத்தாய் - ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா ( தமிழில் சரஸ்வதி ராம்னாத்)
வங்கச்சிறுக்கதைகள் - அருண்குமார் முகோபாத்தியாய் ( தமிழில் கிருஷ்ணமூர்த்தி )
வினை விதைத்தவன் வினையறுப்பான் - எம்.எஸ் புட்டண்ணா
ஏமாற்றப்பட்ட தம்பி - பலிவாடா காந்தாராவ் ( தமிழில் பாலசுப்பிரமணியன் )
கவிதாலயம் - ஜீலானி பானு ( தமிழில் முக்தார் )
உர்துக்கதைகள் - ( தமிழில் வீழி நாதன் )
ராதையுமில்லை ருக்குமிணியில்லை - அமிருதா பிரீதம்( தமிழில் சரஸ்வதி ராம்னாத்)

காலச்சுவடு பதிப்பகத்தில்

தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் மார்க்கேஸ் ( தமிழில் சுகுமாரன் )
திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர். இந்துக்கோபாலன் ( தமிழில் குளச்சல் மு.யூசப் )
என் பெயர் சிவப்பு - ஒரான் பாமுக் ( தமிழில் ஜி.குப்புசாமி )

மேலும்

மௌனவசந்தம் - ரெய்ச்சல் கார்சன் ( தமிழில் வின்செண்ட்) - எதிர்வெளியீடு
பிரான்ஸிஸ் இட்டிக்கோரா- ட்டி.டி.ராமகிருஷ்ணன் ( தமிழில் குறிஞ்சி வேள் )- உயிர்மை பதிப்பகம்
ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி( தமிழில் எத்திராஜீலு)-  சிந்தன் புக்ஸ்
எண்ணும் மனிதன் - மல்பா தஹான் ( தமிழில் கயல்விழி )- அகல் பதிப்பகம்
உப்புவேலி - ராய் மாக்ஸம் ( தமிழி சிறில் அலெக்ஸ் )- எழுத்து பதிப்பகம்
எங்கெத- இமயம் - க்ரியா பதிப்பகம்
விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் - சி.மோகன் - சந்தியா பதிப்பகம்
சயாம் மரண ரயில் - சண்முகம் - தமிழோசை பதிப்பகம்
காடோடி - நக்கீரன் - அடையாளம் பதிப்பகம்.

பி.கு : ஈரோடு புத்தகக்கண்காட்சி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.



ஜோ.டீ.குரூஸ் -- உவரியில் சந்தித்த அனுபவம்

2015-03-10

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

ஜோ.டீ.குருஸ் அவர்களுக்கு கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைத்த அன்று பேஸ்புக்கில் எழுதியது. மீள்பதிவு..

2011 ஏப்ரல் என்று
நினைக்கிறேன். ஊருக்கு சென்றிருக்கும்பொழுது நானும் நண்பர் சுப்பையாவும்
எழுத்தாளர் வண்ணதாசனை பார்க்க சென்றிருந்தோம். நான் அப்பொழுதுதான் ஆழி
சூழ் உலகு நாவலை வாசித்து முடித்திருந்தேன். ஒரு பிரமாண்ட வாசிப்பின்
சுவையை அந் நாவல் எனக்குக்கு அளித்திருந்தது. நான் அறிந்த  பரதவர்
இனத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாக எந்த சமரசமும் இல்லாமல் அவர்களின்
கலாச்சாரத்தையும் கடலுக்கும் கரைக்குமான முரண்பட்ட வாழ்க்கையையும் நெல்லை
மாவட்ட உவரி கிராமத்தை கதைக்களமாகக்கொண்டு வரலாற்றின் தகவலோடும்  நாவல்
படைக்கப்பட்டிருக்கும். வண்ணதாசனோடு உரையாடிக்கொண்டிருக்கும்போது பேச்சு
ஆழி சூழ் உலகு பற்றி வந்ததது. வண்ணதாசன் ஆழி சூழ் உலகு நாவலை விட  கொற்கை
தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். கொற்கை அப்பொழுது நான்
வாசித்திருக்கவில்லை. அவர்தான் இந்த ஈஸ்டர் லீவிற்கு தன் சொந்த
கிராமத்திற்கு ஜோ.டி.குரூஸ் வந்திருக்கிறார் என்றும் முடிந்தால் சென்று
பார்த்துவிட்டு வாருங்கள், அவ்வளவு அற்புதமான மனிதர் என்றார். அடுத்த
நாள் ஏதோ ஒரு முடிவில் நானும் சுப்பையாவும் பாளையங்கோட்டையில்
திசையன்விளைக்கு பஸ் ஏறினோம். உவரி அந்தோணியார் கோவில் மிக பிரபலமானது.
அவரை பார்க்கமுடியவில்லை என்றாலும் நாவலில் வரும் அந்தக்கடற்கரையையும்
கோவிலையும் தெருக்களையுமாவது பார்த்துட்டு வருவோம் என்று முடிவுடன்
கிளம்பினோம். திசையன்விளையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
உவரிக்கு டக்கர் பயணம் சுவாரஸ்யாமாக இருந்தது. ஏப்ரல் மாத வெயிலுக்கு
தூரத்தில் இருந்தது வரும் ஈரக்கடற்காற்று ரம்மியமாக இருந்தது. உவரியில்
இறங்கி கடற்மண்ணில் நடக்கும்பொழுது இனம்புரியாத சந்தோசம். நாவலின்
பக்கங்களில் வாசித்து பரசவமடைந்த பிரதேசங்களை நேரில் பார்க்கும்பொழுது
எப்பொழுதும் எனக்கு சந்தோசம்தான். வண்ண நிலவனின் பாளையங்கோட்டை வீதிகள்,
கண்மணி குணசேகரனின் விருந்தாச்சலத்தையும், இமயத்தின் கோவேறு கழுதை
நாவலின் கழுதூர் கிரமாமும் அப்படித்தான். எப்பொழுதும் ஈர்ப்பாக
இருக்கும்.
அப்படி இப்படி விசாரித்து அவர் வீட்டை கண்டடைந்தோம். வீட்டுக்கதவை
தட்டியதும் யாரென்று கேட்பவரிடம் நாங்கள் வாசகர் என்று சொல்வதில் ஒரு
பெருமை இருக்கத்தான் செய்தது. கதவை திறந்தது அவரின் தாய். நாங்கள் எங்களை
அறிமுகப்படுத்தியது உள்ளே அழைத்து உட்கார செய்தார்கள். அங்கு அவரின்
மூத்த அக்கா தேன்மொழி டீச்சரும் இருந்தார்கள். அவர் வீட்டில் இல்லை. ஒரு
படபடப்பாக இருந்த எங்களுக்கு தேன்மொழி டீச்சரின் பேச்சுதான் எங்களை
சகஜநிலைக்கு திரும்ப வைத்தது. எனது வாசிப்பின் அனுபவத்தை சொல்லி
முடித்ததும் தேன்மொழி டீச்சரின் அற்புதமான பேச்சு ஆரம்பித்தது. தன்
தம்பியின் பால்ய வரலாற்றில் ஆரம்பித்து சொல்லமுற்படாத அவர்களின் குடும்ப
ரகசிய கதைகளின் வழியாக நாவல் வந்ததும் அவர்களின் சமூகமே கொடுத்த
நெருக்கடிகளையும் சிரிப்பும் பெருமிதமும் கலந்து ஒரு தேர்ந்தேடுத்த
கதைச்சொல்லிப்போல் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே சென்றார். ஒரு மணி நேரம்
எப்படி போனது என்று எங்களுக்கே தெரியவில்லை. மொழி லாவகம் அவர்களுக்கு
இயல்பிலே அழகாக அமைந்திருந்ததுப்போல. இவர் நாவல் எழுதினால் ஜோ.டீ.குரூஸை
விட காத்திரமாக ஒரு படைப்பை படைக்கலாம். கொஞ்ச நேரம் கழிந்ததும் வெளிய
சென்றிருந்த ஜோ.டீ.குரூஸ் தன் குடும்பத்தினரோடு வந்தார். அவருடைய அக்கா
எங்களை அறிமுகப்படுத்த ஒரு கடற்கரை கிராமத்தான் உடல்மொழியிலே எங்களை
வரவேற்றார். பேச்சிலும் அப்படித்தான். தன் தாயை " ஏய் ஆத்தா, இங்க
பார்த்தியா.. பெரிய புக்க எழுதிட்டன்னு சொன்ன.. இப்ப பார்த்தியா என்ன
பார்க்க வந்திருக்காங்க.." என கேலியோடு " சொல்லுங்கய்யா..." என்றார்
வாஞ்சையாக.
நாவல் அனுபவத்தை நாங்கள் தெரிவிக்க எந்த வியப்பும் பெருமையும் கொள்ளாமல்
இயல்பாக எங்கள் பேச்சை கவனித்தார். மிக பெருமை அவரை வெட்கப்படவே வைத்தது.
நாவல் பற்றி நாங்கள் கேட்க அவர் பேச ஆரம்பித்தார்.  நான் ஒண்னும்
இலக்கியவாதியெல்லாம் கிடையாது, நான் எழுத வந்த விபத்துதான். தமிழினி
வசந்தகுமாரின் முயற்சியினாலே இது சாத்தியமாச்சு என்றார். ஆழி சூழ் உலகு
நாவல் ஒரு மாத காலத்தில் எழுதிமுடித்திருக்கிறார். இந்த நாவலின் கதை நான்
பார்த்து, கேட்டு, வியந்து இக்கிராமத்தின் உண்மைக்கதை என்றும், நாவலின்
கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை மாந்தார்கள்.தன் தாய் ஒரு கதாபாத்திரம்,
தந்தை, தாத்தா என அனைவரும். படித்து வியந்த கதாபாத்திரத்தை நேரில்
தரிசித்தோம். நாவலில் எஸ்கலின் என்ற கதாபாத்திரமே அவரின் தாய். நாவலின்
பிரதான மனிதன் தொம்மந்திரையே அவரின் தாத்தா. நான் ஒவ்வொரு
கதாபாத்திரத்தின் பேரைக்கேட்க கேட்க அவர் யார் யாரென்று சொல்லிக்கொண்டே
வந்தார். இருப்பிடங்களைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். இந்த
தெருவில்தான்  கதையின் முடிவு பெரும் சண்டையில் முடியும் என்றார். தான்
சார்ந்திருக்கும் சமூகத்தின் பெருமைகளைப்பற்றி பேசாமல் அவர்களின் ஒழுக்க
கேடுகளையும் திருச்சபையை விமர்சனம் செய்ததினாலும் ஊரே விட்டு  விலக்கி
வைக்கப்பட்டிருக்கிறார். மீனவசமுதாயத்தின் வாழ்வினை மற்ற நில மக்களும்
தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும், குலப்பெருமை பேசி
அழிந்துக்கொண்டிருக்கும் பரதவ சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்குமே ஆழி
சூழ் உலகு நாவல் படைக்கப்பட்டிருப்பதாக கூறினார். நான் அப்பொழுது கொற்கை
நாவல் வாசித்திருக்கவில்லை. கொற்கை நாவல் ஐந்தாண்டு உழைப்பில் பெரும்
ஆராய்ச்சிக்கிடையே உருவாக்கியிருக்கிறார். எல்லாரும் அவரவர்களின் சமூக
பிரதிநிதி, நான் என் சமூகத்தை மாற்ற முயல்கிறேன். மாற்றம் நிகழும்
கண்டிப்பா நிகழும் என்ற நம்பிக்கை மட்டுமே அவரின் பேச்சின் முழுவதும்
இருந்தது. சுமார் மூன்று மணி நேர சந்திப்பின் பின்பு கிளம்ப மனம்
இல்லாமல் விடைபெற்றோம். எந்த ஒப்பனைகளும் அற்ற ஒர் இயல்பான கலைஞனை
சந்தித்த சந்தோசம் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. சமூகப்போராளிகள்
இலக்கணத்துக்கு மறு வடிவம் கொடுத்திருக்கிறார் ஜோ.டீ.குரூஸ். மொழியையை
எந்த சமூகம் தனதாக்கி கொள்கிறதோ அச்சமூகமே முன்னேற்றுப்பாதையில் செல்லும்
என்பதே விதி. இந்த சாகித்ய விருதின் மூலம் ஜோ.டீ.குரூஸ் தன் சமூகத்தை தலை
நிமிர வைத்துள்ளார். கடற்கரைச்சமூகங்களுக்கு பெருமைத்தேடி
தந்திருக்கிறார். அவரின் ஆசைப்படி அவரின் சமூக மெல்ல மாறும். மொழியின்
பிடியில் அவர்களும் கரை ஒதுங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அவருக்கு
வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். வண்ணதாசன் சொல்லியதுப்போல அவர்
அற்புதமான மனிதர் மட்டுமல்ல, அதிசயமான மனிதர்...!!

- ஜெபா