INDIA ON FOUR WHEELS - ஆவணப்படம்

2016-02-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




“ India on Four wheels “ என்ற ஆவணப்படம் BBC தொலைக்காட்சி நிறுவனத்தால் 2011ல் வெளியிடப்பட்டது. கடந்த குடியரசு தின விழாவில் History சேனலில் ஒளிப்பரப்பினார்கள்.





அனிதா, ஜஸ்டின் என்ற இரு தொகுப்பாளர்களும் இந்தியாவை காரில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆவணப்படம் ஆரம்பிக்கிறது. அனிதாவிற்கு புது கார் Mahendra Bolero ஆர்டர் செய்கிறாள். ஜஸ்டின் பழைய அம்பாஸிடர் காரை அல்டர் செய்கிறான். இருவரும் டெல்லியில் கார்களின் உதிரி பாகங்கள் கிடைக்கும் இடத்திற்கு வருகிறார்கள். பழைய அம்பாஸிடருக்கு தேவையானவைகளை வாங்கிக்கொள்கிறார்கள். உதிரிபாகங்கள் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ளது. மூன்று, நான்கு அடுக்கு மாடிக்கட்டிடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. பின்னர் தனது பயணத்தின் பாதைகளை தேர்ந்தேடுக்கிறார்கள். அனிதா, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர், உதய்ப்பூர் வழியாக மும்பை சென்று அங்கிருந்து புனே, பெங்களூரு வழியாக சென்னை வந்தடைய வேண்டும். ஜஸ்டின், டெல்லியிலிருந்து ஆக்ரா, அலகாபாத், வாரணாசி வழியாக கல்கத்தா சென்று அங்கிருந்து ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னை வரவேண்டும். மிக சுவாரஸ்யமாக இருவரது பயணம் தொடர்கிறது.

அனிதா ஜெய்ப்பூர் வருகிறாள். ஜெய்ப்பூர் என்ற வரலாற்று நகரம் மிக மெல்லமாக வாகனங்களின் ஆக்கிரமிப்பால் மாறிவருகிறது. ஜெய்ப்பூர் நகரில் சாலைவசதிக்காக மட்டும் போடப்பட்ட மேம்பாலத்தின் அடியில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வசிக்கிறார்கள். பாதிக்கு மேல் சிறுவர்கள். எங்கிருந்தோ ஒடி வந்து இந்தப்பாலத்தினருகில் தஞ்சமடைகிறார்கள். இச்சிறுவர்களை மேம்படுத்துவதற்கு ஈடுபடும் ஒரு தொண்டு நிறுவனத்தின் செயல்களை விளக்குவதோடும் அச்சிறுவர்களின் ஏக்கங்களையும் கனவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். அனிதா ஜெய்ப்பூரிலிருந்து விடைபெற்று உதய்ப்பூர் வருகிறாள். உதய்ப்பூர் அரன்மணையின் தற்போது ராஜாவின் வாரிசை சந்திக்கிறாள். உதய்ப்பூர் ராஜாதான் இந்தியாவிற்கு முதன்முதலாக வெளிநாட்டிலிருந்து காரை இறக்குமதி செய்திருக்கிறார். அரன்மணையில் மிகப்பழைமையான கார்கள் அணிவகுப்பாக நிற்கிறது. இன்றும் புதுப்பொலிவுடன் ஓட்டுவதற்கு தயாராக வைத்திருக்கிறார்கள். அதன் பின் மும்பை நோக்கி பயணம். ஆறு வழிச்சாலைக்காரணமாக கோதுமை, பார்லி விளைந்த பூமியை இழந்தக்கதையை விவசாயிகளை சந்தித்து தெரிந்துக்கொள்கிறாள். மும்பை மாநகரம் வாகனப்பெருக்கத்தால் பிதுங்கி வழிகிறது. இந்தியாவின் குறைந்த விலைக் கார் என்ற டாடா நானோ தொழிற்சாலை செல்கிறாள். நடுத்திர இந்தியர்களின் கார் கனவை நாங்கள் நிறைவேற்றியதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் டாடா கம்பெனிக்காரர்கள். அப்படியே பெங்களூரு பயணம். சாலையில் டிராஃபிக் போலீஸிடம் நின்று இரவு ரோந்து செய்கிறாள். அங்கு எலக்ட்ரிக் காரில் பயணம் செய்து பார்க்கிறாள்.  பின்னர் ஸ்ரீபெரும்புதுர் ஹூண்டாய் கம்பெனிக்கு சென்று வெளிநாடுக்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்ப்படும் கார்களின் மேக்கிங்கை வியந்துக் காண்கிறாள். அங்கிருந்து மெரினாவை நோக்கி விரைந்து ஜஸ்டின் வருகைக்கு காத்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பழைய டெல்லியின் நெருக்கத்தில் மெதுமெதுவாக விடைப்பெற்று யமுனா விரைவுச்சாலையின் வழியாக ஆக்ரா வருகிறான். தாஜ்மஹாலை ரசிக்கிறான். அங்கு தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் மாறிவரும் காலநிலையைப்பற்றி ஆராய்ச்சி செய்துவரும் பேராசியரிடன் சிறு சந்திப்பு. தாஜ்மஹாலின் வெளிப்புறச்சுவர்களின் நிறங்கள் மாறிவருவதையும் வாகனப்பெருக்கத்தாலும் காற்றில் கலந்த மாசுக்களாலும் நிறங்கள் மாறிவருவதாக கூறுகிறார். அங்கிருந்து வாரணாசி என்னும் காசி நகரத்திற்கு வருகிறான். இந்தியர்களின் புனித நகரமான காசியின் பெருமையை கங்கைக்கரையில் வைத்து சொல்வதை கேட்கிறான். காசியின் கங்கைக்கரையில் இருக்கும் 60 படிக்கட்டுக்களில் இரண்டு படிக்கட்டுக்களில் பிணத்தை எரிக்கிறார்கள். காசியில் இறப்பு நிகழ்ந்தாலோ அல்லது இறந்தப்பின் எரியூட்டப்பட்டால் பிறவிபயன் அடைந்ததாக இந்தியர்களின் நம்பிக்கை. அரிசந்திரா காட்( படிக்கட்டு ), மணிக்கர்னிகா காட் இரண்டில் மட்டும் தினம் நூற்றுக்கு அதிகமான பிணங்கள் எரிக்கப்படுகின்றன. கடந்த வருடம் நானும் நண்பர் ராஜீவும்  காசிக்கு சென்றிருக்கும்பொழுது பிணங்கள் எரிவதை நேரில் நின்று பார்த்தோம். வாழ்க்கையின் மறுக்கரை என்னவென்று புரிய வைத்த நிகழ்வு அது.  ஜஸ்டினும் அவ்வாறே பிணம் எரிவதை பார்க்கிறான். மிகுந்த மனவலியுடன் காசியை விட்டு செல்கிறான். காசியில் வாகனப்பெருக்கம் அதிகம், மேலும் சீரான விதிகள் கிடையாது. சிறிய முடுக்குகளில் விரைவாக வண்டி ஒட்டுவார்கள். நகரம் முழுவதும் ரிக்சா சுற்றும். எங்கும் கோவில்களின் மணிச் சத்தம்.  ஒருவகையான மனதை மயக்கும் நகரம் காசி.

அங்கிருந்து கயா புறவழிச்சாலை வழியாக கல்கத்தா வருகிறான். இன்றும் கல்கத்தா நகரத்தில் அம்பாஸிடர் டாக்சிதான் அதிகம் இருக்கிறது. அம்பாஸிடர் கம்பனியான ஹிந்துஸ்தான் மோட்டர் கம்பெனி கல்கத்தாவில்தான் இருக்கிறது.  வழியில் கிராமத்தில் ஒரு கார் கம்பனி நடத்தும் கார் திருவிழாவில் கலந்துக்கொள்கிறான். கிராம மக்கள் ஆர்வமாக பழய கார்களை விலையை குறைத்து வாங்கிக்கொள்வதை காண்கிறான்.




அங்கிருந்து சுந்தர்பன் புலிகல் சரணாலயம் வருகிறான். கல்கத்தா நகரில் இருந்து சுமார் 200 கி.மீ தூரம் இருக்கும் சுந்தர்பன் சரணாலயம் தீவுகள் போல் அமைந்துள்ளது. கடலுக்குள் சரணாலயம் அமைந்துள்ளது. 2009ல் வந்த அய்லா புயலில் மிகுந்த சேதத்துக்குள் உள்ளாகியிள்ளது. மாறிவரும் வெப்பச்சலனம் காரணமாக தீவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டு வருகிறது. வெப்பச்சலனத்திற்கு பல காரணங்களில் ஒன்று வாகனப்பெருக்கம். மாங்க்ரோவ் மரங்களால் சுழ்ப்பட்ட அப்பகுதி அருமையாக இருக்கிறது.



 அங்கிருந்து ஒடிசா மாநிலத்தில் கலகண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நியாம்கிரி மலைப்பகுதிக்கு வருகிறான். அம்மலைப்பகுதிகளில் டோங்க்ரியா கோந்த என்ற பழங்குடியினர் மலைகளின் மீது வசிக்கிறார்கள். அவர்கள் ஆஸ்திரேலியா பழங்குடி இனவகைகளில் ஒருவர்கள். மலைகளின் அடியில் பாக்சைட் கனிமம் இருப்பதால் அம்மாநில அரசு ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியம் பிரித்தெடுக்கும் அக்கம்பனி, கார்களின் பல பாகங்கள் தயாரிக்க பயன்படுத்துகிறது. மலையை வெட்டி எடுக்கும் அனுமதியை கொடுத்த அரசை எதிர்த்து அப்பழங்குடியினர்  போராடி வருகின்றனர்.
இறுதியாக ஜஸ்டின் ஒடிசாவிலிருந்து ஆந்திர கிராமங்களில் வழியாக சென்னை மெரினாவை வந்தடைகிறான். இருவரும் பயண அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து சொல்லும் ஒரே செய்தி " இந்தியர்கள் இன்னும் நன்றாக வாகனங்கள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் ".


India on Four wheels என்றவுடன் இந்தியாவை காரில் சுற்றுவார்கள் என்றுதான் நான் நினைத்தேன். அப்படி இல்லாமல் அதற்கு வேறுவிளக்கத்துடன் இந்தியாவில் கார்களின் பெருக்கத்தால் உருவான பிரச்சினைகளையும், ஏற்பட்ட இழப்புகளையும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இந்த ஆவணப்படம் பேசுகிறது. இந்தியர்களின் கார் மோகத்தின் விளைவாக உருவான பன்னாட்டு சந்தைகளையும், வாகனப்பெருக்கத்தை ஈடுகட்ட சாலை விரிவாக்கத்தின் பெயரில் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், நள்ளிரவின் போதையில் கூடும் விபத்துக்களையும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமானியனின் வாகன மோகத்திற்கு பின்னால் இவ்வளவு இயற்கை  இழப்புகள் இருக்கிறது. அப்பெரிய நியாம்கிரி மலையை அது வீழ்த்துவிட்டது...



-- ஜெபா