பாளையங்கோட்டை வவுசி மைதானம்

2013-12-11

| | |



பாளையங்கோட்டை வ.வு.சி மைதானத்தை நான் முதன்முதலில் பார்த்தது மூன்றாவது படிக்கும்போதுதான் என்றுதான் நினைக்கிறேன். இதற்கும் நான் படித்த பள்ளி மைதானத்தின் அருகிலேதான் இருக்கிறது. ஒரு நாள் பள்ளி முடிந்ததும் ஒருவன் கத்தினான்
 " யோழ், வவுசி கிரவுண்டுல சூட்டிங்க நடக்குல.. சரத் வந்திருக்கானாம்...பார்க்க வாங்கல..."
"என்ன படம்ல... " என்று கேள்விக்கு பதில் கூறாமல் முருகன் கோவிலைத்தாண்டி பறந்துட்டான். அந்த பெயர் தெரியாத நண்பன் சரத்குமார் ரசிகன். அப்போது சரத்குமாருக்கும் கார்த்திக்கும்தான் எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும். நான் தனியா ஆளாக அரக்கு கலர் டவுசரோடு ஒடினேன். கையில் புத்தகப்பை வேற சுமையா இருந்துச்சு. அடிச்சு பிடிச்சு ஒடினேன். அந்த ரோடு பூராவும் ஜனக்கூட்டம்.  மைதானத்தின் நடுவில் பெரிய மேடைப்பந்தல் போட்டுருந்தார்கள். மைதானம், கேலரி முழுவதும் தலைகள் நிரம்பி வழிந்தது. நான் கூட்டத்தின் நடுவே புகுந்து மேடையருகே நின்றுக்கொண்டு அண்ணாந்துப்பார்த்தேன். மேடையில் விசு, நக்மா, ஊர்வசி, ஆனந்தராஜ், வெள்ளை வேட்டியில் சரத்குமார் நின்றுக்கொண்டிருந்தனர். சரத்குமார் மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க தீடிரென்று நெஞ்சில் யாரோ சூட , ரத்தம் வந்து சாய்ந்து விழ, நக்மா வந்து பிடிக்க, கூட்டம்  மிரண்டு ஒடுகிறார்கள். நானும் கீழே விழுந்து டவுசர் கிழிச்சு ஏறிக்குதித்து ரோட்டுக்கு வந்து மறுபடியும் மேடையை எட்டிப்பார்த்தேன். சரத்குமார் நக்மாவிடம் சிரிச்சு குலாவிட்டு இருக்காரு, ஊர்வசி கண்ணுல கிளிசிரின் போடுது. மறுபடியும் மைதானம் முழுவதும் கூட்டம் அதே மாதிரி நிக்குது. பக்கத்துல இருக்குற ஒருத்தன் சொல்றான் "சவத்து பயலுவ, இத எத்தன தடவதான் எடுப்பானுவோ..வேற வேல மயிரு இல்ல.. வால போலாம்.." நான் அந்த அண்ணனிடம் " என்ன படம்னே இது.." என்றேன். அவரு என்னை சட்டை செய்யாமல் நடையைக்கட்டினார். அடுத்த நாள் தந்தி பேப்பர்ல அரவிந்தன்னு படம் பேர் வந்துருந்துச்சு.
நான் மேடைக்கிட்டத்தான் நின்னுட்டு இருந்தேன். எப்படியும் படத்துல வருவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். பின்னர் ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்க்கும்போதுதான் நான் அந்த காட்சியில் இல்லை என்று தெரிஞ்சது. டவுசர் கிழிஞ்சதுக்கு வீட்டுல அடிலாம் வாங்கினேன். எனக்கும் வவுசி கிரவுண்டுக்கும் முதன்முதலில் உருவான  நினைவு இதுதான். 1900ங்களில் கர்சன் மைதானமாக அழைக்கப்பட்டு  பின்னர் பாளையங்கோட்டை நகர சேர்மன் மகாராஜ பிள்ளை அவர்களால் வ.வு.சி மைதானம் என 1966 இல் மாற்றப்பட்டது. ஹாக்கி கிரவுண்ட் மாதிரியில் செவ்வகமாக இருக்கும். சுதந்திர தினத்துக்கு கலெக்டர் இங்கத்தான் கொடி ஏற்றுவார்.  இருபக்கமும் சேர்த்து ஆறு கேலரிகள் . இரு மைதானமாக இருக்கும். மைதானத்தின்  இன்னொரு பக்கத்தில் இப்பொழுது இறகு பந்து உள் தளம், உடற்பயிற்சி தளம், பள பளக்கும் வவுசி சிலை எல்லாம் வந்துட்டு. முன்னாடிலாம் கருப்பு வவுசி சிலை மட்டும்தான் காக்கா எச்சத்தோடு நிப்பாரு. சிலை மேல ஏறி நின்னுட்டு சிலை தலையை தடவிகிட்டு பயலுவ நிப்பார்கள். பெரிய கிரவுண்ட்ல மேட்ச்சுக்கு பிட்ச் கிடைக்கலன சின்ன கிரவுண்ட்டுக்குதான் வரனும். இங்க அடிக்கிற சிக்ஸ் எதிர்த்தாப்புல இருக்குற எல்ஐசி ஆபிஸுக்கு ஈசியா போகும். ஆஃப் சைட் அடிச்ச திருவனந்தபுரம் ரோட்டுல இருக்குற தேவி டீகடையின் கண்ணாடியை உடைக்கும். அதனால எப்பொழுதும் பெரிய மேட்ச்சுன்னா பெரிய கிரவுண்ட் பிட்ச் பிடிக்க பெரிய போட்டி நடக்கும். காலையில் பத்து மணிக்கு பெட் மேட்ச்சுன்னா ஏழு மணிக்குலாம் வந்து ஸ்டிக்க நடனும், ஒருத்தன் காவல் நிக்கனும். கிரவுண்ட் பக்கத்துலதான் சிவா வீடு. அங்கத்தான் ஸ்டிக், பேட், பால் எல்லாம் இருக்கும். நான் காலையிலேயே போய் ஸ்டிக் நட்டி , கூவை மாதிரி பிட்ச் காவலுக்கு கேலரியில் உட்கார்ந்திருந்த காலம்லாம் உண்டு.

வேற எந்த ஊரிலும் இந்த மாதிரி விளையாடுவார்களா என்று தெரியவில்லை, பாளையங்கோட்டை வவுசி கிரவுண்டில் மட்டும் விட்டா அவுட் என்று சொல் மிகவும் பிரபலம். பொதுவாக இரண்டு டீமுக்கு ஒவர் மேட்ச்னா மட்டும்தான் ஸ்டிக் நட்டு விளையாடுவோம்.  மத்தப்படி விட்டா அவுட்தான்.
விட்ட அவுட்னா பேட் கீழே வைத்து இரு பக்கத்திலும் கல் வைத்துவிடுவோம். இரு கல்லுக்கு நடுவில்தான் பேட்டிங்க். உடம்பில் பட்டாலும் அவுட், இரு கல்லுக்கும் நடுவில் பந்தை விட்டாலும் அவுட். ரன்லாம் ஒடி எடுக்க முடியாது, ஃபோர், சிக்ஸ் மட்டும்தான். ரொம்ப நல்லா இருக்கும். வெறிக்கொண்டு ஆடுவோம். இந்த மாதிரி விளையாடி பயிற்சி எடுத்ததினால் என்னவோ எந்த ஸ்டிக் மேட்ச் நடந்தாலும் ஒரு பந்தையும் உள்ளே விடாமல் ஆடுவார்கள் வவுசி மைதானத்தின் வீரர்கள். மைதானம் முழுவதும் குழு குழுவாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். பந்து எந்த மூலைக்கு போனாலும் " பாஸ், பால் " என்று கத்தினால் போதும் பந்து கிளீன் த்ரோவில் நம் கைக்கும் வரும்.

பௌலிங்க் போட்டு விளையாடுவதற்கு முன்பு த்ரோ மேட்ச்சில் நான் சிறந்த காட்டான். நல்ல சுத்துவேன். எல்லாம் பந்துகளும் பறக்கும். எல்லாரும் என்னை காட்டான் என்றுதான் சொல்லுவார்கள்.
எட்டாவது படிக்கும் வரை நேருஜி கிரவுண்டில் விளையாடுவோம். வவுசி கிரவுண்டில் இடம் இல்லனா இங்கத்தான் மேட்ச் நடக்கும். இது கிரவுண்ட் மாதிரி அமைப்பா இருக்காது. பாளையங்கோட்டை நகராட்சி அலுவலகம் நேருஜி கிரவுண்ட்க்கு பக்கத்துல இருக்கு. நல்ல மரம் நிழலா இருக்கும். தண்ணி குடிக்க கடை கடையா அலைய வேண்டாம். நகராட்சி சுவரைத்தாண்டி ஏறிக்குதித்து தண்ணி குடிச்சிட்டு வருவோம். அதுக்கு பின்னால் எங்கள் பள்ளி. மதியம் சாப்பிடறதுக்கும் இந்த நகராட்சி அலுவலகம்தான்.
புளிய மரமும், கொடுக்காபுளி மரம் அதிகமா நிக்கும். புளிப்பு சுவையுடன் கிரிக்கெட் விளையாடுவது தனிசுகம்.  இன்னொரு பக்கம் நூற்றாண்டு மண்டபம். அங்கேயும் சில நேரம் அடிக்கிற பந்து போயிரும். நூற்றாண்டு மண்டபம் 1870களில் கட்டப்பட்டதுன்னு நினைக்கிறேன். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கால்டுவேல் இப்படி சொன்னாராம் " தமிழ் நாட்டில் இருக்கிற மொத்தம் இருக்கிற கிறிஸ்துவர்களில் அறுபதுக்கு சதவீதம் பேர் தின்னேல்வேலி( திருநெல்வேலி ) மாவட்டத்தில் இருக்கிறார்கள். இன்னும் இது அதிகமாக வேண்டும் என்று" . நேருஜி கிரவுண்டில் இப்பொழுது அடிக்கடி கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் கிறிஸ்துவம் வளர்ந்த வரலாற்றில் பாளையங்கோட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. இன்னும் பல இடுக்குகளில் ஒளிர்ந்திருக்கும் வரலாற்று நிகழ்வின் இடங்கள் பாளையங்கோட்டையில் நிறைய உண்டு. பொதுவாக பாளையங்கோட்டை கிறிஸ்துவ நகரம் என்று அழைத்தாலும் பல தாய் தெய்வ வழிபாட்டு எச்சங்கள் இன்றும் இருக்கிறது. தசரா விழாவிற்கு பாளையங்கோட்டை களைகட்டிரும். மைசூருக்கு அப்புறம் இங்கத்தான் தசரா பிரபலம். சுமார் பதினைந்து அம்மன் கோவில் சப்பரங்கள் பாளையங்கோட்டை நகரை அழகாக வலம் வந்து , சூரசம்ஹாரத்துடன் நிறைவேறும். மேலும் ஆயிர வருடங்களான வைணவக் கோயில் இருக்கிறது. கோபாலசாமி கோவில் என்று அதனை அழைப்போம். கோபாலசாமி கோவில் பக்கத்திலும் மைதானம் உண்டு. அங்கேயும் விளையாடுவோம். இன்னொரு மைதானம் அண்ணா ஸ்டேடியம். அங்கு விளையாட்டு வீரர்கள் விடுதி உண்டு. மேலும் இன்னொன்று கேம்பஸ் கிரவுண்ட். இது ஜான்ஸ் காலேஜ் எதிர்த்தாப்பில் இருக்கிறது. இங்கு வருடம் தோறும் பேட்ரியாட் டிராபி நடக்கும். காரட் பால் மேட்ச். இங்கு கேம்பஸ் டீம் ஒன்றுடன் நாங்கள் அடிக்கடி மேட்ச் விளையாடுவோம்.
இந்த கிரவுண்ட் இரு வரலாற்று நிகழ்வின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ளது. மைதானத்தின் மேற்புரம் மாவட்ட மியூசியம் இருக்கிறது. இங்குத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை சிறையில் அடைத்த இடம். ஆங்கிலேய காலக்கட்டத்தில் பழைய சிறைச்சாலை இது. பின்னர் பாளையங்கோட்டையின் தாலுகா அலுவலகமாக இருந்தது. பின்னர் மாவட்ட மியூசியமாக்கப்பட்டது.
இன்னொரு வரலாறு நிகழ்வு , கேம்பஸ் கிரவுண்டுக்கு எதிர்த்தாப்பில் இருக்கிறது கிளாரிந்தா ஆலயம். இங்குத்தான் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷஸ் துரை அவர்களின் கல்லறை அமைந்துள்ளது. இன்றும் இங்கிலாந்தில் இருந்து அவர்களின் வாரிசுகள் நினைவுதினத்துக்கு இங்கு வருகை புரிவர். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு கேம்பஸ் கிரவுண்டில் நடந்த ஒரு கொலை காரணமாக , கிரவுண்ட் மூடப்பட்டது. பாவம் பந்துக்கள் , அவைகளுக்கு பின்னாலும், முன்னாலும் உள்ள வரலாற்று இடத்துக்கு சென்று வர கொடுத்து வைக்கவில்லை.

2003ம் வருடம் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் " மார்ச் 10ல் நெல்லையில் சூரியன் 106.4"  என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தாமிரபரணி ஆத்துப்பாலம் அருகே, டவுன் மேம்பாலம் அருகே, நெல்லையப்பர் கோவில் அருகே, மார்க்கெட், சமாதானபுரம், பாளை பஸ்ஸ்டாண்டு என முக்கிய இடங்களில் அனைத்திலும் கட் அவுட் வைத்திருந்தனர். வவுசி கிரவுண்ட் அருகேயும் ஒரு கட் அவுட்.  " சித்திரையிலதான அக்னி வரும், மார்ச்லயே என்னல சூரியன் 106 ன்னு போட்டுருக்கான், ஒரு எழவும் புரிய மாட்டுக்குன்னு " நாங்க புலம்பிக்கிட்டு இருந்தோம். அதே நாளில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உலககோப்பை மேட்ச் ஒன்று இருந்துச்சு. அதுவா இருக்குமோ என்று கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாளையங்கோட்டையில் கடல் இல்லை , எனவே எங்களைப்பொறுத்த வரை வவுசி மைதானமே பீச். இரவு கூட்டம் கலை கட்டும். புது புது மனிதர்கள். "வீட்டுல கிடந்து என்னத்த பண்றது , அப்படியே செத்த நேரம் நடந்துட்டு வரலாம்லா " என்று தாத்தாவை கைத்தாங்கலா பிடித்து வரும் ராமசாமி கோவில் தெரு மாமி, தன் அக்கா குழந்தைகளையோ, அண்ணன் குழந்தைகளையோ நண்பர்களுடன் வரும் பெரிய அண்ணன்மார்கள், கல்யாணம் முடிந்த இளசுகள், ஊரே பார்த்துட்டு இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி கடலை போடும் லவ்வர்ஸ், தனிமை தீவிரமாகி தற்சமயம் பேச ஆள் இல்லாமல் வெற்று வெளியை பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்கள்,
அரட்டை அடிக்கும் நண்பர்கள், கடலை விற்கும் இள நரை பையன் என இரவில் சில பல கதாபாத்திரங்களால் மைதானம் கேலரி நிரம்பும். மைதானத்தில் இரவொளியில் கால்பந்து விளையடுவார்கள். நெல்லைக்கு  மார்ச் 10 சூரியன் 106.4 வந்தது. அதாவது சூரியன் எஃப் எம். அதே நாளில்தான் நான் வவுசி மைதானத்தில்  இரவு கால்பந்து விளையாடும்போது என் தாடை கிழிந்தது.
அன்று சூரியன் எஃப் எம் என்ற புதிர் அவிழ்ந்த நாள், இந்தியா இலங்கையை கிரிக்கெட் மேட்ச்சில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாள். மிகுந்த சந்தோசத்துடன் இரவு விளையாடிக்கொண்டிருந்தேன். வண்டி ஒட்டி பழகும் ஒருத்தரின் மேல் மோதி கீழே விழுந்தேன். தாடை தோல் சதை கிழிந்தது. சிவா வீட்டுக்கு ஒடினோம். அவங்க அக்கா சல்பனா பவுடர் போட்டுவிட்டார்கள். பின்னர் ஆஸ்பிட்டல் போனால் சல்பனா பவுடர் போட்டதுக்கு நாலு திட்டும்  நாலு தையல் போட்டார்கள். திட்டுக்கும் சேர்ந்து காசு வாங்கினார்கள். வீட்டில் பயங்கர கெடுபடி. விளையாட போக வேண்டாம் என்று. மைதானம் முழுவதும் செம்மண். வீட்டுக்கு தெரியாமல் விளையாடிவிட்டு சிவா வீட்டில் பைப் அடித்து நல்லா காலையும், செருப்பையும் கழுவிட்டுத்தான் வீட்டுக்கு போவேன். அதே வருடம் செப்டம்பர் 10 மறுபடியும் கால்பந்து விளையாடும்போது கீழே விழுந்து என் இடது கையை உடைத்தேன். இரு எலும்புகளும் உடைந்த சத்தம் கேட்டது. சிறிது ரத்தம் வழிந்து மைதானத்தில் சிதறியது. அந்த செம்மண் பூமியில் இரு தடவை என் செங்குருதியை வடித்தேன். கை சரியாகி ஆறு மாதம் கழித்து அதே கேலரியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். என் இடது கையை வைத்து பேட்டை தூக்க முடியாது. மறுபடியும் திரும்பி போய் கேலரியில் உட்காருவேன். மனம் உளைச்சாலா இருக்கும். தினமும் பயிற்சி எடுத்து முதன் முதலில் ஒரு பந்தை எதிர்க்கொண்டேன். பேட்டில் பந்து பட்டதும் கை வலித்தது. பேட்டை போட்டுவிட்டு கேலரியில் உட்கார்ந்துவிடுவேன். போராடி போராடி மறுபடியும் காட்டானாக மாறினேன். சில நேரம் என்னை அறியாமலே பேட் என் கையை விட்டு உருவிவிடும். இதனால் அருகில் ஃபீல்டிங்க் நிக்க பயப்படுவார்கள். பின்னர் எல்லாம் சரியானது. சிக்ஸ் பிபிஎல் கல்யாண மண்டத்துக்கும், ஈகிள் புக் செண்டருக்கும் பறந்தது. கிரிக்கெட் மட்டும் விளையாடவில்லை என்றால் என் கை கோணியிருக்கும். நிமிர்ந்ததுக்கு காரணம் கிரிக்கெட்தான்.

வவுசி மைதானத்தில் அடிக்கடி இந்திய அளவில் கபடி , கால்பந்து , ஹாக்கி மேட்சுகள் நடைபெறும். ஜனவரி மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கிடையே நடைபெறும் மகளிர் கபடி போட்டிகள் தென் மாவட்டம் முழுவதும் பிரபலம். நகர முழுதுமிருந்து வவுசி மைதானத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பார்கள்.  எல்லா மாநிலத்தில் இருந்தும் மகளிர் அணிகள் வரும். மின்னொளியில் போட்டி நடைபெறும். கேலரி முழுவதும் பல்லு தெரிய உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ரைட் போகும் போது கிரவுண்ட் முழுவதும் சத்தம் போடுவர். தமிழ் நாட்டு அணி விளையாடுவது என்றால்
அதிக சத்தம் வரும். போட்டி தொடங்குவதற்கு முன்பு விருந்தினருக்கு வீரர்கள் கை கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரையும் எண்ணையும் சேவியர்ஸ் பள்ளி வாத்தியார் கமெண்ட் கொடுப்பார். ரவி சாஸ்திரி லாம் தோத்துருவான். குரல் கம்பீரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். " நம்பர் ஒன், பூஜாஜாஜா....." என்று புனே டீம் ஒருத்தியை சொன்னதும் கேலரி முழுவதும் அசையும். ஆர்ப்பரிக்கும். அந்த அளவுக்கு அந்த பொண்ணுக்கு சப்போர்ட். தமிழ் நாட்டு டீம் பொண்ணுங்கள் விளையாடும் போது கிண்டல் அதிகமாக வராது, வெளியூர் டீம் விளையாடும்போதுதான் அதிக கிண்டலும் ,சத்தமும். மேடைக்கும் பின்னால் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதை பார்க்க அதிக கூட்டம் நிக்கும். லூசான டவுசர் போட்டுருக்குற டீமை விட டைட்டாக டவுசர் போட்டுருக்கிற டீமுக்குதான் அதிக மௌசு.

வவுசி கிரவுண்டில் அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெற்ற சமயம். சீன முக அமைப்பைக் கொண்ட இருவர் தெற்கு பஜாரில் சுற்றிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன் அவர்களிடம் தானாக சென்று பேசினான். அவன் ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறான். ஆங்கிலம் சரளமா வந்துச்சு. அவர்கள் மிசோரம் மாநில அணியைச்சேர்ந்தவர்கள். என்னையும் அவர்களுக்கு அறிமுகம் பண்ணினான். அவர்கள் எனக்கும் கைகொடுத்தனர். சிறு கண்கள். இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தார்கள். மிசோரம் என்பது அப்பொழுது என்னைப்பொறுத்தவரை வேற நாடு. என் நண்பன் அவனுடைய பாக்கெட் டைரியில் அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குகிறான். அவர்களும் வெட்கப்பட்டுக்கொண்டே போட்டனர். நாங்கள் விடைபெற்று நடக்க ஆரம்பித்தோம். பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கு வந்த ராமசாமி கோவில் சப்பரத்தின் அருகே நின்று விபூதியை மாறி மாறி நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள், ஒருவித நாணத்துடன். அவர்கள் விளையாடும்  ஆட்டங்களை ஒடிச்சென்று பார்ப்போம்.  இப்பொழுது அவர்கள் எப்படி, எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் கையெழுத்து வாங்கின என் பால்ய நண்பனும் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை. அதன் பின்பு மிசோரம் என்ற வார்த்தை கேட்டாலே அந்த  சப்பர வெளிச்சத்தில் நாணத்துடன் கூடிய அந்த இரு முகங்கள் என் முன்னால் விரியும்.

***
கல்லூரிக்காலங்களில் அதிகம் வவுசி மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால் எங்கள் கனவுகளையும், ஏக்கங்களையும் மைதானத்தில் காற்றுடன் கலந்துவிடுவோம். நான், சிவா, மணி எல்லாரும் கேலரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பிரச்சினையினாலும் " வாங்கல,  கிரவுண்டுக்கு போயிட்டு வருவோம் " என்ற வார்த்தை சொல்ல முடியாத நம்பிக்கை கொடுக்கும்.  விமர்சனம் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாமல் அப்பொழுது வெளிவரும் படங்களை விமர்சிப்போம். மிஸ்கின் படங்களில் வருகிற மஞ்சள் ஒளி லைட் போன்று ஒரு கேலரி அருகில் மஞ்சள் லைட் இருக்கும் . அதன் அருகில் அமர்ந்திருப்போம். பிறந்த நாள் விழா, அடிதடி என்று ஒவ்வொரு கேலரிலும் ஒவ்வொரு நிகழ்வுகள்.   என் பால்ய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பாளையங்கோட்டை நகர வீதிகளும், இந்த மைதானமும் முக்கிய இடம்பெறுபவை. நாங்கள் எப்பொழுதும் அமரும் கேலரியில் இருந்து பார்த்தால் ஈகிள் புக் செண்டர் மேல் ஜீசஸ் சேவ் அஸ் என்று ஆங்கிலத்தில் எல்லா வார்த்தையும் சிகப்பு லைட் எரியும். சில நேரம் ஜீசஸ் என்று வார்த்தை மட்டும் லைட் எரியாது. அந்த கோடிட்ட இடத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொள்வர். நான் என்னை நிரப்பினேன். ..!!!





1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Anonymous said...

அரவிந்தன் பட ஷூட்டிங்க்கு நானும் வந்திருந்தேன், புகைப்படம் எடுக்க. நீங்கள் என் பழைய நினைவுகளை நினைவூட்டி உள்ளீர்கள். நன்றி நண்பரே.
அன்புடன்..R.குமார்
rrcctvl@gmail.com

Post a Comment