அலைவாய்க் கரையில்--நாவல்

2012-08-24

| | | 2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


அலைவாய்க் கரையில்...
                                                ராஜம் கிருஷ்ணன்-- தாகம் பதிப்பகம்.





மறுபடியும் நெய்தல் நில நாவல்.

வண்ணநிலவனின் கடற்புரத்தில் நாவலில் மணப்பாட்டு கிராமத்தையும் , பிலோமியையும் , குரூஸ் பர்னாந்தையும், செபஸ்தியையும் மறக்க முடியாது.
ஜோ.டீ.குருஸின் ஆழி சூழ் உலகு நாவலில் உவரி என்னும் ஆமந்துறையையும், தொம்மந்திரையும், கோத்ராபிள்ளையும், காகு சாமியாரையும் இந்த இலக்கிய உலகு எளிதில் மறக்காது.

அலைவாய்க்கரையில் நாவலும் முழுக்க முழுக்க நெய்தல் நிலப்பரதவர்களைப் பற்றியது.  கடலிலும் கரையிலும் அவர்கள் நிகழ்த்தும் போராட்டத்தினையும், அதனுடையே செல்லும் அவர்களின் வாழ்க்கையையும் நேரில் கண்டு தொகுத்திருக்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்.

"  ஐந்திணை மாந்தரில் வாழிடம் சார்ந்து சாவை எதிர்க்கொள்கிற கட்டாயம் நெய்தல் நிலப்பரதவர்களுக்கே உண்டு. முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுதல்கள் எவையும் இல.  மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும் போது ஒ ருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனா தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. எனென்றால் மலை அசையாப்பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என்பது அதன் மெய்யம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அசையும் பொருள். சலம்( சலசலப்பது). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்யம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும்.  "  என்று கரு.ஆறுமுகத்தமிழன் தனது கட்டுரையில் நெய்தல் நில மக்களைப்பற்றி கூறிப்பிடுகிறார்.

நாவல் ஆரம்பம் தேவதேவனின் கவிதையை நினைவூட்டுகிறது.
"  காலியான கஞ்சிக்கட்டி
   வெற்றிலை புகையிலைப் பெட்டி
  வலைகள் வழியும் வலிய
  தோள்கள் உயர்த்திக் கொண்டு
 வட்டக்கார கமிஷன்கார 
 யாவாரிகள் மொய்த்துக் கிளப்பும்
 இரைச்சல்களைப்
பீ யென ஒதுக்கி விலகி
தத்தமது நிழல் சென்று
வலை பழுது பார்க்க அமரும்"

நாவலின் நாயகன் என அறியப்படும் மரியானும் அவனது நண்பன் நசரேனும் கடலுக்கு போயிட்டு வந்து மீனை இழுத்து கரையில் போட்டுவிட்டு ஏல வியாபாரிடம் காசை வாங்கிக்கொண்டு குடிசையை நோக்கி நடக்கின்றனர். பொதுவாக மீனவர்களுக்கு வியாபார தந்திரம் இருக்காது. அவன் மனம் வியாபாரத்தை நோக்கி இயங்காது. இந்த செயலையே அக்கவிதை விளக்கியிருக்கும்.

ராஜம் கிருஷ்ணன்


அக்கடற்கரை ஆண்மக்கள் கடலுக்கு போயிட்டு வரும் காசை சாராயம் குடிப்பதற்கும் செலவழிக்கின்றனர். ஒரு பழமொழி உண்டு.
"மச்சாது காசு , மிச்சம் இருக்காது " என்று.
இந்நாவல் இரண்டு பிரச்சினையை முன்வைக்கிறது. ஒன்று கட்டுமரத்துக்கும் விசைப்படகுக்கும் உள்ள தகராறு. மற்றொன்று தான் ஊறியிருந்த கிறிஸ்துவ மதத்தை விட்டுவிட்டு இந்து மதத்திற்கு மாறுவது. இப்பிரச்சினைகளை குவிந்த வண்ணமே இந் நாவல் செல்கிறது.

1970களில் சுறா தூவிப்பிரச்சினை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் பல கிறிஸ்துவ குடும்பங்கள் திருச்சபையை விட்டு விலகி இந்து குடும்பங்களாக மாறினர்.  இந்த நடந்த சம்பவம் நாவலில் மையமாக இடம்பெறுகிறது.

மீனவர்கள் பிடித் துவரும் சுறாவின் தூவியை ( செதில்கள்) கோவிலுக்கு வரியாக வழங்க வேண்டும். இதை எதிர்த்து மரியானும் அவனது கூட்டமும் குரல் கொடுக்கிறது.  ஏனெனில் அவர்கள் பிடித்து வரும் மீனை விட அந்த தூவி நல்ல விலைக்கு போகிறது. அந்த தூவியை கோவிலிடமிருந்து மட்டு விலைக்கு ஏலம் எடுத்து கொளை லாபம் பார்க்கிறான் சாயுபு.  அக்கோவிலின் பங்குதந்தை இதை ஏற்க மறுக்கிறார். இது சவேரியார் காலத்து பழக்கம் என்கிறார். அந்தக்காலத்தில் தூவி விலை கம்மி. இன்று அது வெளி நாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. என்ற காரணத்தையும் ஏற்க மறுக்கிறார்  கோவில் சாமியார். இவர்கள் தூத்துக்குடி சென்று ஆயரை பார்க்கின்றனர். அவரும் கையை விரிக்கிறார். அப்படியானால் நாங்கள் இந்து மதத்துக்கு மாறிவிடுவோம் என்கின்றனர்.  ஐ டோண்ட் கேர் என்று திட்டி அவர்களை அனுப்பி விடுகிறார் ஆயர். அதன் பின்னர் மரியான் சுப்பிரமணியாகிறான் , பெஞ்சமின் பஞ்சாட்சரமாகிறான். இவ்வாறு பத்து குடும்பங்கள் அக்கடற்கரையில் மதம் மாறிகின்றனர். ஒரு வினாயகர் கோவிலை கட்டி அதை வழிபடுகின்றனர். இதுவரை மாதாவை கும்பிட்ட கை, வினாயாகரை துதிக்கிறது.

****

மரியானுக்கும் ஏலிக்கும் உள்ள உறவு வேற எந்த நாவலில் இல்லாத அளவுக்கு கையாளப்பட்டிருக்கிறது.
ஏலி , தூத்துக்குடியிலிருந்து வாக்கப்பட்டு வந்து கணவணை இழந்து தன் குடிசையில் ஒண்டியா நிற்கிறாள். அந்த கடற்கரை ஆண்மக்களின் பார்வைக்கும் செயலுக்கும் இச்சையாகிறாள். ஊரார் அவளை வேசி என்றழைக்கின்றனர்.  ஏலிக்கு மரியானிடம் புது உறவு ஏற்படுகிறது.
எப்பொழுதும் சாராய வாடையும், கவிச்ச நாத்தத்துடன் காணப்படும் மற்ற ஆண்களை விட மரியான் வித்தியாசமாக தெரிகிறான். அவனிடம் தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கிறாள். தாய்மை அடைகிறாள்!. தன் சிசு வளர்வதை நினைத்து சந்தோசமடைகிறாள். அவன் கடலுக்கு சென்றிருந்த அன்று அவளுக்கு வயிற்று வலி வருகிறது. யாருமில்லாத அவள் வலியில் முனகுகிறாள். பக்கத்து வீட்டு மனுஷி, மரியானின் ஆத்தாவை பிரசவத்துக்கு அழைக்கிறாள். வேசி வீட்டுக்கு வரமாட்டேன் என்கிறாள் ஆத்தா. அவளை வழுக்கட்டாயாமாக இழுத்து செல்கிறாள் அந்த மனுஷி.  கடலுக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறான் மரியான். வரும் வழியில் நல்ல மழை. ஈரத்துடன் வந்து அமர்கிறான்.  ஆத்தாவை தேடுகிறான். தாமதாக வீட்டுக்குள் நுழையும் ஆத்தாவைப்பார்த்து எங்கே போயிட்டு வார என்கிறான். அவள் பதில் சொல்லாமல் அடுப்பங்கறைக்கு செல்கிறாள். ஏனெனில் ஏலிக்கும் மரியானுக்கும் உள்ள உறவு அவளுக்கு தெரியும். ஆற்றாமையால் கொட்டுகிறாள். "அந்த ஏலி முண்டைக்கு பிள்ள வெளிய வராம முக்கிட்டு நின்னுச்சு.. எடுத்துவுட்டு வாரேன்.." என்கிறாள். இதைக்கேட்ட மரியானின் ஈரம்பட்ட கை, மேலும் ஈரமாகிறது.  மனசு குளிர்கிறது. மெதுவாக வீட்டை விட்டு வெளியே வருகிறான்.ஏலிக்குடிசையை அடைகிறான். அந்த பக்கத்து வீட்டு மனுஷி " உனக்க சிங்க றால் பிறந்துருக்கு.." என்று வரவேற்கிறாள். அந்த பூஞ்சிசுவைப்பார்க்கிறான். தான் ஆத்தாதான் பிரசவம் பார்த்ததை நினைத்து கண்கலங்குகிறான். அதைப்பார்த்து ஏலி அழுகிறாள்.
"ஏனளுகா.. ! நாம கட்டிப்போம்... அழாத ஏலி.." என்று அவள் நெற்றியில் முத்தமிடுகிறான்.
எந்த இலக்கியத்திலும் , திரைப்படத்திலும் வராத காட்சி இது. என்னை உறைய வைத்தது.

****
கடற்புரத்தில் கல்வி என்பதே இல்லை. படித்தவர்கள் மேட்டுகுடியினர் என்ற மனப்பாங்கு அங்கு அதிகம் காணப்படுகிறது. இங்கிலீஸ் பேசும் நசரேன் பொண்டாட்டியைப் பார்த்து படிப்பு எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறான். தான் தம்பியை படிக்க வைக்க நினைக்கிறான். அவனும் பள்ளி பக்கமே போகாமல் கடல் மடிக்கு செல்ல ஆரம்பிக்கிறான்..
 மாதாவின் இருக்கும் பக்தியை விட கடலின் மேல் அவ்வளவு பக்தி வைத்திருக்கின்றனர் இம்மக்கள் . கடல் நாச்சி, கடலன்னை என்றே அழைக்கின்றனர்.
" நசரேனு  , கடலு மேல நின்னு பேசுறத மறந்துராத "என் று ஒரு வரி வரும். இதன் மூலம் இம்மக்கள் கடலை சத்தியத்துக்கு மேலாக மதிக்கின்றனர். தாய் மேல் சத்தியத்தை விட கடல் மேல் வைக்கும் சத்தியம் ஆழமானது.

****

இம்மக்கள் நாலு நூற்றாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவ மதத்தில் இருந்தாலும் மாய மந்திரங்களை நம்புகின்றனர். பக்கத்து ஊரு தொள்ளாளி (மந்திரவாதி) கட்டி கொடுக்கும் தாயத்தை படகில் கட்டினால் மீன் நல்லா மாட்டும் என்று நம்புகின்றனர்.
திருசெந்தூர் முருகனை மச்சான் என்றழைக்கின்றனர். தெய்வானை பரதவர் இனத்துப்பெண் என்று நம்புகின்றனர். சப்பரம் தூக்குகின்றனர். இவ்வாறு தன் மரபை இன்னும் மீட்டுக்கொண்டு இருக்கின்றனர்.


****
ஏலியின் குழந்தை நோய் வந்து இறக்கிறது. அந்த பிஞ்சுவை குழி தோண்டி புதைக்கின்றனர் மரியானும் ஏலியும்.
ஊர்க்கலவரம் ஏற்பட்டு போலீசு பாதுகாப்பு போட்டிருக்கும் போது ஏலி போலீசுகளின் இச்சைக்கு ஆளாகி தான் குடிசையில் அழுகி சாகிறாள். அழுகிய உடலோடு அவள் குடிசையை எரிக்கின்றனர். அவளின் பிரிவால் ஏங்குகிறான் மரியான். இந்துவாக மாறிய பின்பு புனிதாவை கட்டுகிறான். தன் இரண்டு மகன்களுக்கு கணேசு, முருகன் என்று பெயரிடுகிறான். குடும்ப பிரச்சினையில் ஆத்தா, அப்பன், தம்பி, தங்கை அனைவரையும் விட்டு பொண்டாட்டியுடன் தனியா இருக்கிறான்.
விசைப்படகுக்கும் நாட்டு படகு பிரச்சினை பெரிதாக கிளம்புகிறது. பல கடற்கரை கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மணப்பாட்டில்  நூறு விசைப்படகை கொளுத்துகின்றனர். பிரச்சினை பெரிதாகி போலீசு மரியான் தம்பி பீட்டறைக் கைது செய்கிறது.
இந்து மதம் மாறிய மரியானின் தந்தையின் இறுதிச்சடங்கு கிறிஸ்துவ முறைப்படி நடக்கிறது. ஃபாதர் செபம் செய்ய , அவரை மண்ணுக்குள் இறக்குகிறார்கள். மரியான் ஒரு பிடி மண்ணை எடுத்து போடுகிறான்.  விலகிய மதத்துக்கு மறுபடியும் வர  துடிப்பதாக இந்த முடிவு சொல்லப்படுகிறது.

****
கதை மரியானைச் சுற்றியே நிகழ்கிறது. அவனது ஏக்கங்களும் அவனது குடும்பச்சுழலும் நாவல் முழுவதும் கடல் மணல் போல் பரவியிருக்கிறது.  நாவலில் பல கதா மாந்தர்கள். மரியான் , அவனது அம்மை கத்தரினா, அப்பன் இருதயாராஜ், தங்கை மேரி, ஜெயமணி, தம்பி பீட்டர். நசரேன், அவனது தம்பி ஜான், பெஞ்சமின் என பல மனிதர்களை ரத்தமும் சதையுமாக படைத்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

இந் நாவலில் மற்றொரு சிறப்பு இதன் வட்டார மொழி.
 நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை மொழியில் தனியொரு சுவை உண்டு. அது நெல்லைத்தமிழ், மலையாளத்தமிழ், சிலோன் தமிழ், போர்ச்சுகீஸ் தமிழ்( திருச்சபையில் வரும் வார்த்தை எல்லாம் போர்ச்சுகீஸ் மொழியினை தமிழ்ப்படுத்தப்பட்டவை ) என  எல்லாம் கலந்தது. இம்மொழியை உள்வாங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். இம்மூன்று மாவட்ட கடற்கரை மீனவர்களுக்கு மட்டுமே இயல்பாக உரியது.  இம்மொழியினை அச்சுபிசுறாமல் உபயோகப்படுத்தியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

ஆழி சூழ் உலகு நாவலுடன் ஒப்பிட்டு கூறுவது நன்றன்று. அதனதன் சாரசமத்தில் எதுவும் குறையில்லை. ஆழி சூழ் உலகு நாவலில் சொல்லப்படாத பல விசயங்கள் அலைவாய்க்கரையில் நாவலில் இடம்பெற்றுள்ளது. கவிச்ச வாடையை விரும்பாத ஒரு சமூகத்தில் இருந்து வந்த ராஜம் கிருஷ்ணன் இதனை படைத்திருப்பது மற்றொரு சிறப்பு.

****
அலையைக்கடந்து கடலுடன் சவால் விட்டு வலை வீசும் இந்த மீனவர்கள் தன் கரை வாழ்வில் தோற்றுவிடுகின்றனர்.  தன் கையிலும் ஒன்றும் வைத்திருப்பதில்லை. மனதிலும் வைத்திருப்பதில்லை. பிரச்சினை ஒன்று வந்தால் அன்றே முடித்துக்கொள்ள முயலுகின்றனர். மனிதகுலத்தின் முதல் வேட்டைத் தொழிலை தொடங்கி வைத்த காரணதினால் என்னவோ இந்த மீனவர் தன் இனத்துக்குள்ளே சண்டையிடுகின்றனர். கொலை செய்கின்றனர். கொலையுண்டு சாகின்றனர். நாவல் முடிவும் ஒரு கொலையுடனே முடிகிறது. அது முடிவு அல்ல. இக்கடற்கரை மண்னின் தொடர் கதை அவை. இந்தக்கடற்கரை சுடுமணல் மீன் ரத்தத்தை மட்டுமல்ல, மனித ரத்ததையும் தன்  மடியில் ஏந்திக்கொண்டிருக்கிறது....!!!

--- ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி