துருக்கித்தொப்பி -- நாவல்

2012-07-30

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
துருக்கித்தொப்பி





கீரனூர் ஜாகிர் ராஜா




நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் வீட்டருகில் ஒரு முஸ்லீம்
குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு
குட்டி பையன் இருந்தான். மூத்த பெண்ணின் பெயர் ஃபாத்திமா, இவளும்
ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தாள். இரண்டாவது பெண் வஹிதா, மூன்றாவது
நிஷா. அந்த குட்டி பையனின் பெயர் மைதீன். அவனுக்கு அப்போது ஐந்து
வயதிருக்கும். துருதுருவென இருப்பான். எங்கள் காம்பவுண்டில் உள்ளவர்கள்
மைதீனிடம் விளையாடித்தான் நேரத்தை போக்கி கொள்வர். அவர்களது அப்பா
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இரும்பு கடை வைத்திருந்தார்கள். அவர்கள்
வீடு எப்பொழுதும் எனக்கு புதிராகவே இருக்கும். அந்த வீட்டில் இருந்து
மைதீன் மட்டுமே வந்து விளையாடுவான். காம்பவுண்டில் மற்ற பெண்பிள்ளைகள்
பாண்டி விளையாட்டோ மற்ற எந்த விளையாட்டோ விளையாடும்போது அம்மூவரும்
வெளியே வர மாட்டார்கள். தன் வீட்டு மாடிப்படிகளில் உட்கார்ந்து பாவம்போல்
முகத்தை வைத்துக்கொண்டு நாங்கள் விளையாடுவதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பர். அவர்கள் வெளியே வந்து எங்களிடம் பேசினாலே
அவர்களின் பாட்டி திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த பாட்டி சேலையை ஒரு
விதமாக கட்டியிருக்கும். தலையில் எப்பொழுதும் முக்காடு போட்டிருக்கும்.
இந்த அடக்குமுறை எதனால் என்று நான் குழம்பியது உண்டு. அவர்களின் மதமும்
அதன் நெறிமுறைகளும் எப்பொழுதும் என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தன.
அவர்களின் வீட்டின் உள் அமைப்பு எப்பொழுதும் அமைதியை
தொழுதுக்கொண்டிருப்பதாக எனக்கு பட்டது.  பின்னர் அவர்கள் புது வீடு கட்டி
காம்பவுண்டை விட்டு சென்றுவிட்டனர். நான் அறிய  நினைத்த அந்த இஸ்லாமிய
வாழ்க்கை கடைசியில் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற நாவல்
மூலமாகவே நிறைவேறியது. ஒரு இஸ்லாமிய கிராமத்தின் வாழ்க்கையோட்டத்தை
அழ்காக சொல்லியிருப்பார் சல்மா. அதில் ராபியா என்ற சிறுமிக்கும்
அடக்குமுறை நிகழ்கிறது. எனக்கு அதை வாசிக்க வாசிக்க என் வீட்டருகில்
இருந்த அந்த முஸ்லீம் குடும்பத்தின் சிறுமிகள் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
இரண்டாம் ஜாமங்களிம் கதைக்கு பின்னர்தான் இஸ்லாமிய குடும்ப
சூழ்நிலைகளும், அவர்களின் வாழ்க்கை முறையை அறியமுடிந்தது. நாவல் என்றால்
என்ன..? இந்த கேள்வியை நீண்ட நாட்கள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
கடைசியில் விடை தெரிந்தது.  நாம் வாழ்ந்து அனுபவிக்காத பல அனுபவத்தை ஒரு
நாவல் என்னுள் விதைக்கிறது. சிறு வயதில் நான் ஏங்கிய இஸ்லாமிய
வாழ்க்கைமுறை ஒரு நாவல் மூலமாக கொஞ்ச அறிய முடிந்தது. பின்னர் இஸ்லாமிய
நாவல்களான தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, கீரனுர்
ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை போன்றவை மூலம் அவர்களின் ஒட்டுமொத்த
வாழ்க்கையை ஒரளவு உணர்ந்துக்கொண்டேன். இந்த நாவல்களில் நான் பார்க்கும்
ஒரு ஒற்றுமை. ஒரு வலிமையான வீழ்ச்சியைத்தான் இவை கட்டமைக்கின்றன. நம்
சமூகம் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுகிறது,  தோல்வியை ஒருவித குரூர
புத்தியுடன் எள்ளி நகையாடுகிறது.

இப்பொழுது வருகின்ற நாவல்களில்  வீழ்ச்சிதான் கதையின் கருவாக இருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கித்தொப்பி நாவலும் அவ்வாறுதான்.
எட்டுக்கல் பதித்த வீட்டின் இறக்கத்தையும்,  கேபிஷேவின் வீழ்ச்சியும்தான்
ஜாகிர்ராஜா சொல்ல வருபவை.  காலமாற்றாத்தால் எட்டுக்கல்பதித்த வீட்டின்
சந்தோசங்கள் கலையப்படுகின்றன.  நாவலுக்கு நல்ல தலைப்பு,
துருக்கித்தொப்பி. துருக்கியிலிருந்து வந்தவர்களை துருக்கியர்கள் என்று
கூறி, பின்னர் அது துருக்கர்கள் என்று மருவி, பின்னர் துலுக்கர்கள்
என்றானது. இப்பொழுதும் நம் தமிழ்ச்சூழலில் இஸ்லாமியர்களை துலுக்கர்கள்
என்றே அழைத்து வருகிறோம்." துலுக்கன் திண்ணு கெடுத்தான்" என்ற பழமொழி
இன்றும் நம்மூரில் நடைமுறையில் உள்ளது.

நாவலினுள் ஒரு குழந்தை இலக்கியம் பொதிந்து கிடக்கிறது. அது ரகமத்துல்லா
வின் வாழ்க்கை. பிறை பார்க்க ஒடுவதும், தன் தம்பி பார்ப்பதற்குள் பிறையை
நாம் பார்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஒடி, பிறையை பார்த்தவுடன்
மனதுக்குள் இன்னைக்கே போய் வீட்ல நோம்புக்கஞ்சி சட்டியை கழுவி வைக்கனும்
என்று நினைத்துக்கொள்கிறான். இந்த வரியை வாசித்தவுடன் நான்
நோம்புகஞ்சிக்கு பள்ளிவாசலில் வரிசையில் நின்னதுதான் ஞாபகத்திற்கு
வந்தது. பள்ளிவாசல் எப்பொழுதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது. எங்க
வீட்டுக்கு வருடம் தோறும் பள்ளிவாசல் அட்டை கிடைக்கும். நோம்பு கஞ்சி
ஊற்றுகின்ற முதல் நாள் மட்டும் கறிவடை கொடுப்பார்கள். அது ருசியாக
இருக்கும். சின்ன கைலியும் தலையில் தொப்பியும் நிற்கிற பசங்களுக்கு
மத்தியில் டவுசருடன் நிக்க எனக்கு வெட்கமாக இருக்கும். அவர்களுக்கு
ஊற்றுவதை விட எனது தூக்குவாளிக்கு அதிக கஞ்சி ஊற்றி அனுப்புவார் அந்த
பள்ளிவாசல் தாத்தா...

குட்டி லெவை மகளாகிய பேரழகி நூர்ஜகான் எட்டுக்கல் வீட்டுக்கு மருமகளாக
வருகிறாள். எட்டுக்கல் வீட்டின் அதிகாரம் முழுவதும் மாமியார்
பட்டத்தாம்மள் கையில் இருக்கிறது. மாமானார் கேபிஷே எந்த அதிகாரம் இல்லாத
ஒரு பூச்சியாகத்தான் மாடியில் வசித்து வருகிறார். ஆர்மோனியம்
வாசிப்பதும், அரை நிர்வாண மர்லின் மண்றோ படத்தை ரசிப்பதுமாக அவர் உலகம்
இயங்குகிறது.  நூர்ஜகான் கணவனாகிய அத்தாவுல்லா பட்டபடிப்பு முடித்தவன்.
அதனால்தான் அழகின் சிலையான நூர்ஜகானை கருத்த அத்தாவுல்லாவுக்கு முடிச்சு
வைக்கிறார்கள்.

கேபிஷே துருக்கி தொப்பியை மதராஸில் போய் வாங்கிட்டு வந்ததிலிருந்து
அவரின் மரியாதை கூடுகிறது. அவரின் தலைமையிலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு
காணப்படுகிறது. சினிமா எடுக்க ஆசைப்பட்டு மதராஸில் போய் லட்ச பணத்தை
இழந்த கேபிஷேவை மனைவி இழக்காரமாக பார்க்கதுவங்கிலிருந்து அவரின் வீழ்ச்சி
தொடங்குகிறது. அவரின் கம்பீரமான வெல்வட் அரக்கு கலர் துருக்கித்தொப்பி
கடைசியில் வெறுமையாக வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தின் கொப்பில் தொங்கி
வெளறிக்கொண்டிருக்கிறது. இது வீழ்ந்ததன்  குறியீடாக ஜாகிர்ராஜ
வெளிப்படுத்துகிறார். தன் மருமகளை கள்ளத்தனமாக ரசிப்பதும், நூர்ஜகான்
குழந்தைக்கு பால் புகட்டும்போது ஜன்னலில் இருந்து பார்ப்பதும்  தனது
பேரன் ரகமத்துல்லாவை தனியே அழைத்து   கொஞ்சுவதுமாக தனது காம இச்சைகளுக்கு
இரை போடுகிறார்.
தனது பேரனின் குறியைப்பார்த்து " என்னடா, இவ்வளவு பெருசு " என்று
கேட்கும் பகுதிகள் தவிர்க்கப்படவேண்டியவை. இந்த மாதிரியான இலக்கிய
பதிவுகளில் பாலியல் வார்த்தை தேவையில்லாமல் திணிக்கப்படுவதாக தெரிகிறது.
ஆழிசூழ் உலகிலும் சூசைக்கும் டீச்சருக்கும் உள்ள உறவு கொஞ்சம்
மிகைப்படுத்தலாகத்தான் இருக்கும். இவை வலிய திணிக்கப்படுகிறதா இல்லை
கதையின் ஒட்டத்தினுள் எழுத்தாளனின் எண்ண பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

ரகமத்துல்லா சிறு வயதிலே விளைந்து காணப்படுகிறான். சுய இன்பம் செய்யும்
பழக்த்தை கற்றுக்கொள்கிறான் .அம்மா நூர்ஜகான் தம்பிக்கு பால் கொடுப்பதை
வெறித்து பார்க்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து கட்டை பீடி அடிக்கிறான்.
தனது அத்தைப்பெண் மல்லிகாவை காதலிக்கிறான். அவள் இவனை விட ஐந்து வயது
மூத்தவள். தண்ணீர்த்தொட்டியில் அம்மணமாக குளிக்கிறான். மல்லிகாவுக்கு
முத்தம் கொடுக்கிறான். தனது இன்னொரு அத்தை மகள் ஆஸ்துமாவால் இறந்ததும்
தன்னை மறந்து அழுகிறான். மரணததை தத்துவமாக எதிர்கொள்கிறான். தாத்தாவின்
அறையில் நிர்வாண மர்லின் மண்றோ படத்தை தேடுகிறான். குன்னுர் சொந்தக்காரப்
பெண்ணை நினைத்துப்பார்த்துக்கொள்கிறான். தலை வலிதைலம் தடவும் போது அவள்
ஞாபகம் வந்து அவனை தொலைக்கிறது.

விருத்த சேதனம் என்ற சடங்கு பைபிளில் வரும். அதுதான் இன்னும் இஸ்லாமில்
செய்து வரும் சின்னத் விழா. பைபிளில் மோசே விருத்த சேதனம் பண்ணாமல்
இருப்பார். விருத்த சேதனம் பண்ணுவது தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தம்.
ஒரு ஆளில்லாத வனாந்தரத்தில் கடவுளின் வார்த்தைக்கிணங்க கல்லைக்கொண்டு
முன் தோலை அறுத்து விருத்த சேதனம் பண்ணிக்கொள்வார் மோசே. பின்னர் யேசு
ஞானஸ்தானம் எடுத்ததில் இருந்து விருத்தசேதனம் கிறிஸ்துவத்தில்
நீக்கப்பட்டது. ஆனால் யூத மதமும் இஸ்லாமும் இன்னும்
பின்பற்றிவருகின்றனர். ரகமத்துல்லாவுக்கும் சின்னத் நிகழ்ச்சி
நடைபெறுகிறது. அவன் கெந்தி கெந்தி நடப்பதைப்பார்த்து நண்பர்கள்
கிண்டலடிக்கிறார்கள்.  நாவலின் பாதிக்கு மேல் ரகமத்துல்லாவே பக்கம்
முழுவதுமாக வருகிறான்.

நூர்ஜகான் அழகு சிலையாக வந்து அத்தாவுல்லாவைப் பார்த்து முதன்முதலில்
திகைக்கிறாள். பட்டத்தாம்மாளே மருமகளின் அழகைப்பார்த்து தான் ஆணாக
பிறந்திருக்ககூடாதா என்று எங்குகிறாள்.  அந்த எட்டுக்கல் பதித்த வீடு பல
மர்மங்கள் அடங்கியதாக அவள் நினைக்கிறாள். அவளின் மாமன் அப்பாஸையும்
அத்தாவுல்லாவையும் ஒப்பிட்டு பார்க்கிறாள். முதல்இரவுக்கு மறுநாள் தான்
எமாந்துட்டமோ என்று கிணற்று தண்னீர் எடுத்து புதுப்புடவையினுடையே தன்னை
நனைக்கிறாள். பிறகு அத்தாவுல்லாவை ஏற்றுக்கொன்டு  ரகமத்துல்லா வயிற்றில்
உருவானதும் ஆனந்தம் அடைகிறாள். குழந்தை பிறந்து தன்னை சின்னம்மை கண்டதால்
பிள்ளையை பிரித்துவைத்துவிடுகின்றனர். பாசத்தால் உருகுகிறாள். தன்
பிள்ளையை அடையை நிர்வாணமாக நடமாடுகிறாள். இது தாய்மையின் ஏக்கம்.
எட்டுக்கல் வீட்டிலிருந்து கணவனை பிரித்து தனி வீட்டில் குடியேற
வைக்கிறாள். திருமணத்திற்கு பின் அம்மாவுடன் நாகூருக்கு
சென்றிருக்கும்போது தன்னை மறந்து அழுகிறாள். ஏன் என்ற கேட்பதற்கு
அப்பாஸின் ஞாபகம் வந்ததாக சொல்கிறாள்.


நாவலின் இடையே ஆரம்பகால திராவிட கட்சியின் வளர்ச்சியையும், காங்கிரஸின்
வீழ்ச்சியும் வருகிறது. மூனாகானாவை வைத்து மீட்டிங்க போடனும், சிஎனஏ
இறந்துவிட்டார், முகமதுஅலிஜின்னா தனி பாகிஸ்தான் கேட்கும்போது தனி தமிழ்
நாடு கேட்கவேண்டும் என ராமசாமி நாயக்கர் முடிவெடுத்ததாகவும் வரும்
செய்திகள் ஒரு வரலாறை நயமாக புனைவுக்கு மத்தியில் கொடுக்கிறார்
ஜாகிர்ராஜா. அதில் சில சமயம் எள்ளலும் விளையாடுகிறது. ஊரின் முக்கிய
கட்சிப்புள்ளியின் பிள்ளைகளுக்கு திராவிட ராணி, கருணாநிதி, நெடுஞ்செழியன்
என்று பெயர். அந்தக்காலக்கட்டத்தின் திராவிட கட்சியின் ஈர்ப்பை அங்கங்கே
குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகம்த்துல்லா பழனி சர்ச் முன்னாடி நின்று ஜீசஸிடம் பேசுகிறான். தனக்கு
பாட்டி சொன்ன கதைகளை ஞாபகம் படுத்துகிறான். முகமது நபிக்கு முன்னாள் வந்த
இறைத்தூதர்தான் ஈசா என்ற யேசு. மேலும் இஸ்லாமில் மூசா என்றால்
கிறிஸ்துவதில் மோசே. இங்கு சுலைமான், சாலமோன்.. இப்ராகிம், ஆபிரகாம்,
யூசப், யோசெப்பு.. இஸ்லாமும் கிறிஸ்துவமும் எல்லாம் ஒண்ணுதான் என்று
டீச்சர் பையன் ரூபன் அம்மா நூர்ஜகானிடம் சொல்லும்போது
முறைத்துப்பார்த்துக்கொள்கிறான்.

நாவலின் ஒரு வரி வரும்.. கேபிஷே வுக்கு கல்யாண ஊர்வலம் போகும் போது ஒரு
கூட்டத்தினர் முனங்குவர். அவர்கள் இந்துமக்கள்.
"எல்லாம் அந்த நாகூரால வந்தது..." என்று.. தமிழகத்தின் பல பகுதிகளில்
வசிக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றம் அடைந்தே இம்மார்க்கத்தினுள்
வந்துள்ளனர் என்பதையும் நாவலில் பதிவு செய்துள்ளார். இந் நாவல்
இடம்பெறும் ஊரின் முன்னால் கவுண்டர்களின் ஆதிக்கமாக இருந்தது. ஆதனால்
கவுண்டர்களே இம்மதமாற்றம் அடைந்த முஸ்லீம்கள் என ஜாகீர்ராஜா கூறுகிறார்.


வீழ்ச்சியும் எழுச்சியும்தான் தமிழ் வாழ்க்கை. இங்கு அனைத்து  குடும்ப
கலாச்சாரமும் இப்படித்தான் இருக்கிறது. இதற்கு மதமும் ஜாதியும்
தடையில்லை.

எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சி, நூர்ஜகான் குடும்பத்தின்
வள்ர்ச்சியாக முன்னிருத்தப்படுகிறது...

****************************

ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி