கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் -- ஒர் நாடக இலக்கியம்

2012-04-09

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


நாடக இலக்கியம் நான் இதுவரை தொடாத ஒன்றாக இருந்தது.. சேக்ஸ்பியரை படித்தவர்கள் நாடக இலக்கியத்தைக் கொண்டாடுவார்கள். தமிழில் அவ்வளவாக நாடக இலக்கியங்கள் வரவில்லை என்பது எனது கருத்து... அண்ணாவும், கலைஞரும் எழுதியுள்ளார்கள்.. பின்னர் நாடகம் என்பது சினிமாவுக்காக மட்டுமே எழுதப்பட்டது... ஆறாவது ஏழாவது படிக்கும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறும், வ.வு.சி செக்கிழுத்த வரலாறும் பாட புத்தகத்தில் இருக்கும். தேவையற்ற வர்ணணைகள் எதும் இருக்காது. சொல்ல வந்ததை அதன் கதாபாத்திரங்கள் கூர்மையாக சொல்வது என்பது நாடக இலக்கியத்தின் சிறப்பு.

சுமார் ஆறுவருடங்களுக்கு முன்பு நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது நண்பன் சிவா அப்போது இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தான். அவனது தமிழ் பேப்பரில் கோமல் சுவாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" நாடகம் ஒரு பாடமாக இருந்துள்ளது. அதன் தலைப்பு எனக்கு பிடிக்கவே அதை எடுத்துட்டுப் போய் படித்தேன். நாடகம் ஒரு தண்ணீர் பிரச்சினையைப் பற்றியது என்று மட்டும் அப்போது உள்ள என் மனநிலையில் புரிந்தது. அந்த புத்தகம் என் புத்தக அலமாரியை இந்த ஆறு வருடங்கள் அலங்கரித்து, இரண்டு நாடகளுக்கு முன்பு கையில் கிடைத்தது.  இப்போது படித்துப் பார்க்கலாம் என்ற நினைப்பில் எடுத்துக்கொண்டேன்.

நாடகம் ஒரு விதமான புரட்சி மனநிலையை என்னுள் விதைத்தது. தண்ணீர் பிரச்சினை மட்டுமல்ல, மூட நம்பிக்கைகள், சாதிய பிரச்சினைகள், அரசியல் சூழ்ச்சிகள், மனிதநேயம், வணிக வியாபாரம் போன்ற சமுதாய பிரச்சினைகள் அனைத்தும் அலசப்பட்ட ஒரு கரிசல் பதிவு..


1980ல் நாடகமாக போடப்பட்ட இந்தக் கதை பின்னர் வானதி பதிப்பகத்தின் மூலமாக புத்தகமாக வெளியீடப்பட்டுள்ளது.  நாவல்களிலும் சிறுகதையிலும் உள்ள உணர்ச்சிமிக்க வர்ணணைகள் இதில் இல்லை.. சொல்ல வந்த கருத்தை கதையை வெள்ளச்சாமி வாயிலாகவும், வாத்தியார் வாயிலாகவும் சொல்லியிருப்பார். இந்தக்கதையை ஒரு நாவலாக கோமல் எழுதியிருந்தாலும் இது இந்த அளவுக்கு வெற்றி பெற்றுருக்குமா என்று தெரியவில்லை.  இம்மூலக்கதையை கே.பாலசந்தர் திரைப்படமாக எடுத்து தேசிய விருது வாங்கி தந்தார்.

சில காட்சிகள் மனதில் நிற்கின்றன.  ஊருக்குள்ளே நுழையும் வெள்ளைச்சாமி தண்ணீருக்காக ஒவ்வொரு வீடாக ஏறும் போது யாரும் கொடுக்காமல் இருக்க, செவ்வந்தி மட்டும் தண்ணீர் கோரி கொடுப்பாள். அதை மாதிரி  மாட்டு வண்டி கட்டி பக்கத்து குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரும் ஐடியாவை வெள்ளச்சாமி சொன்னதும், எதுவும் கேட்காமல் மாடு வாங்கவும் வண்டி செய்யவும் செவ்வந்தி தன் பங்காக இரண்டு ரூபாய் எடுத்து நீட்டுவாள். அதன் பின்னரே வாத்தியாரும் மண்டையை தட்டிக்கொண்டு எடுத்துக்கொடுப்பார்.
மொழி நடை படிப்பதற்கு சுவாராஸ்யமாக இருக்கும்... படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.. மோகமுள் மாதிரி இருக்க கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

கதை நடைபெறும் கிராமமான அத்திப்பட்டி கோவில்பட்டி அருகே இருக்கிறதாக கதையில் வருகிறது..
கோவில்பட்டி பக்கம் இன்னும் கரிசல் பூமியாகத்தான் இருக்கிறது. அதனால் தான் கோவில்பட்டி இன்றும் தமிழக்த்தின் தொழில்துறையில் முன்னேறி வருகிறது. சாத்தான்குளம் , நாங்குனேரி பகுதிகளும் இன்னும் கரிசல்தான்.. இங்கும் பல கதைகள் கிடக்கும்.. தேட வேண்டும்..

வட்டார மொழியும், கிராமத்தின் யதார்த்தமும் கதை முழுவதும் கொட்டிகிடக்கும்... பூசாரி மூட நம்பிக்கைகளை அவிழ்த்துவிட அதை எதிர்ப்பது கோபால் என்ற ஒரு கம்யூனியுச குரல்..  வண்டிக்கடை நாயக்கரை எதிர்த்து ஊரே தேர்தலை புறக்கணிப்பது, இன்னும் பல ஊர்களில் நடந்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அரசும் கண்டுகொள்ளுவதே இல்லை..

வெள்ளைசாமி கதாபாத்திரம் பொலியாவில் அந்நாட்டு மக்களுக்காக அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு அமெரிக்காவின் தந்திரத்தால் வீர மரணம் அடைந்த புரட்சியாளர் சேகுவேரா வை ஞாபகப்படுத்துகிறது.. தன் நாட்டுக்காக அல்லாமல் மற்ற நாட்டு எல்லாத்துக்கும் விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது சேகுவேராவின் கொள்கையாக இருந்தது. அவரை வீழ்த்திவிட்டால் போதும் என்றிருந்த அமெரிக்கா, அவரை கொன்றதும் கொக்கரித்தது. ஆனால் வரலாறு தலை கீழாக திரும்பி இன்றும் உலகம் முழுவதும் புரட்சியின் சின்னமாக சே மாறிப் போனதுக்கு அமெரிக்காவும் ஒரு காரணமாகிவிட்டது...
நீங்கள் கம்யூனிஸ்டா என்ற கேள்விக்கு ,  "  எழைக்காக யார் உதவி செய்தாலும் அவர்கள் கம்யூனிஸ்ட்தான் " என்கிறார் சே.

வெள்ளைச்சாமியும் தன் அண்ட வந்த ஊருக்காக பாடுபடுகிறான், இறுதியில் ஊரின் நனமைக்காக நடக்கும் போராட்டத்தில் உயிர் விடுகிறான், அவன் உதட்டிலிருந்து கடைசியாக வந்த வார்த்தையே " தண்ணீர்.. தண்ணீர்...!!!"