நிழல் குறும்படப்பயிற்சி பட்டறை -- அனுபவம்

2012-02-22

| | |


மாற்றுசினிமாவுக்கான ஒரே களம் அது நிழல்தான்.
நிழல் குறும்படப் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மூன்று
வருடங்களுக்கு மேலாக இருந்துவந்தது. அந்த ஆசை இப்போது நாமக்கல் பரமத்தி
வேலூரில் நடைப் பெற்ற பட்டறை வகுப்பு நிஜமாக்கியது..
வகுப்புகள் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 24ம்
தேதியே மாலையே சென்றுவிட்டேன். நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசு
சிரித்தப்படியே வரவேற்றார். ஆகா எப்படியும் வகுப்புகள் நல்லாத்தான்
இருக்கும் என்று அப்பவே தெரிந்தது..
இரவு சாப்பாடு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அந்த இரவு சாப்பாடே இந்த ஏழு நாளும் பிரச்சினை இருக்காது என்று தெரிவித்தது..
பாதிபேர் அன்று இரவே வந்துவிட்டனர். அங்கேயே மண்டபத்திலே படுத்து உறங்கினோம்.
டிசம்பர் 25ம் தேதி முதல் நாள் வகுப்பு ஆரம்பானது. நிழல் ஆசிரியர்
திருநாவுக்கரசு அவர்கள் வகுப்பு எடுத்தார்.
சினிமாவின் வரலாறுகள், இந்திய சினிமா, தமிழ் சினிமா வரலாறுகள் பற்றி ஒரு
சின்ன குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பதுப் போல சொன்னார்.
சினிமா தன் முன்னால் உள்ள கலைகளான  ஒவியம், சிற்பம்,இசை,
நடனம்,இலக்கியம்,நாடகம் ஆகிய அனைத்து கலைகளையும் உள்ளடக்கியது என்றார்.
 1895 ம்  ஆண்டு டிசம்பர் 25ம் தேதி  லுமியன் பிரதர்ஸ் எடுத்த டிரெயின்
வருகை என்ற காட்சிதான் உலகத்தில் முதன்முதலில் எடுத்த சினிமா ஆகும்.
நமது வகுப்பின் முதல் நாள் தேதியும் டிசம்பர் 25, என்ன ஒரு ஒற்றுமை என்று
வியந்துக்கொண்டேன்.
உலகத்தில் எடுத்த முதன் முதலில் எடுத்த சினிமா அடுத்த வருடமே அதாவது 1896
ம் ஆண்டே பம்பாய் வந்துவிட்டது. 1897ல் சென்னை வந்துவிட்டது.
சினிமாவுக்கான அங்கிகாரம் ஐரோப்பாவிலே சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
உலகின் சிறந்த திரைப்பட விழா கேன்ஸ் திரைப்பட  விழா ஆகும். சினிமா என்பது
பிளாஸ்டிக் ஆர்ட், ஒரு வினாடியில் 24 ப்ரேம்ஸ் இருக்கிறது என்றும்,
உலகின் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருதுகள் பற்றியும் சிறப்புடன்
எடுத்துரைத்தார். வின்செண்ட் சாமிகண்ணு என்ற தமிழர்தான் இந்த சினிமாவை
இந்தியா, பர்மா முழுவதும் எடுத்து சென்றார் என்பதை எடுத்து கூறும் போது
கொஞ்சம் கர்வம் வந்தது.  மேலும் சினிமாவின் கோட்பாடுகள், அதன்
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சுவைப்பட கூறினார். பின்னர் குறும்படம் என்றால்
என்ன? அதன் தேவைகள், அதன் கால அவகாசங்கள், வகைகள், புகழ்பெற்ற
குறும்படங்கள் போன்றவை கூறப்பட்டது. யதார்த்தை பதிவு செய்வதுதான்
ஆவணப்படம் என்று கூறி அதன் வகைகள் ஒவ்வொன்றையும் தெளிவுடன்
எடுத்துரைத்தார். அதன் ஒவ்வொரு வகையும் ஆவணமாக எடுத்தாலே வாழ் நாள்
முழுவதும் எடுக்கலாம் என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு அடர்த்தி
மிகுந்ததாக இருந்தது.
மேலும் குறும்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள், நடத்தப்படும்
விழாக்கள் மேலும் இணையதளங்கள் என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மிக ஆர்வம்
தொற்றிக்கொண்டு வந்தது. அன்று இரவு புகழ்பெற்ற குறும்படங்களான பிளாக்
ரைடர், வாட் இஸ் தட், இஞ்சா, மிருககாட்சிசாலை  ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முதல் நாள் பல தேடல்களுடனே முடிவடைந்தது.

இரண்டாவது நாள் நடிப்பு பயிற்சி என்று சொன்னவுடனே மேடையில் கூப்பிட்டு
நடிக்க வைப்பார்கள் என்று எண்ணினேன். நான் நினைத்த விசயத்தை
தவிடுபொடியாக்கி நடிப்பு என்றால் என்ன? அது மனதுரீதியான விசயம் என்ற
நடிப்பின் தந்திரத்தை காலை வகுப்பு எடுத்த சுரேஸ்வரனும் மாலை வகுப்பு
எடுத்த தம்பி சோழனும் எங்களிடமிருந்து வெளிகொணர்ந்தனர். எங்களை
குழந்தைகளாகவும், பறவைகளாகவும். மிருகங்களாகவும் மாற்ற வைத்தனர். இரவு
டாம் டிக்மரின் " ரன் லோலா ரன் " என்ற ஜெர்மனிய படம் திரையிடப்பட்டது.
மேலும் குறும்படங்களான "சித்ரா" இது அ.முத்துலிங்கத்துடைய சிறுகதையை
தழுவி எடுக்கப்பட்டது. மேலும் "ஆழம் காத்து " என்ற படம் எங்கள் மொளனங்களை
உடைத்தது. என்னை வியப்பில் ஆழ்த்தியது.


மூன்றாம் நாள் திரைக்கதை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. கதை வேறு; திரைக்கதை
வேறு என்பதை ஆரம்பத்திலயே பாலுமணிவண்ணன் புரியவைத்துவிட்டார். அவரின்
எளியமையான சொற்றொடர்களால் திரைக்கதை கலை எங்கள் மூளைக்குள் பதிய
ஆரம்பித்தது. திரைக்கதை அடிப்படை என்ன?  அது எவ்வாறு இருக்கவேண்டும் ?
என்பதை எங்களுக்குள் விதைக்கப்பட்டது. பின்னர் எங்கள் அனைவருக்கும் ஒரு
வரியில் கதை சொல்லி அதற்கு திரைக்கதை எழுத வைத்தார். ஒரு சினிமாவுக்கு
திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வகுப்பில் நன்கு
கற்றுக்கொண்டோம்.


நான்காம் நாள் படத்தொகுப்பு பற்றி பொன்குமார் எளிமையாக புரிகிற முறையில்
கூறினார். ஒரு எடிட்டரின் பங்கு என்ன? பொன்குமார் படத்தொகுப்பு பற்றி
மட்டுமல்லாமல் ஒளிப்பதிவின் அம்சத்தை சொல்லி அதன் மூலம் படத்தொகுப்பை
விளக்கியது சிறப்பாக இருந்தது. பழைய முறை எடிட்டிங், அதன் மிஷின்
போன்றவைகளை காட்சிகள் மூலம் காட்டினார். பிலிம் சைஸ், அதன் ரெசொலுயுசன்,
இடிஎல், டைம்போர்டு, லினியர் எடிட்டிங் நான் லீனியர் எடிட்டிங்க அது
எங்கேயேல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது.  அதன் சாப்ட்வேர்கள், அதன்
தொழில்நூட்ப பார்மட்கள் என அனைத்தையும் சொல்லிகொடுத்தார். இன்னொரு நாளும்
இந்த வகுப்பு இருக்ககூடாதா என்று தோன்றுகிற அளவுக்கு இருந்தது.


ஐந்தாம் நாள் ஒளிப்பதிவு வகுப்பு எடுக்கப்பட்டது. கேமரா ஷாட்கள், கேமரா
கோணங்கள்,கேமரா நகர்தல் போன்றவை கற்றுகொண்டோம் அதன் ஒவ்வொரு விசயத்தையும்
எடுத்துகாட்டுடன் விளக்க்ப்பட்டது. அதன் பின்பு  நாங்கள் பார்த்த ஒவ்வொரு
திரைப்படத்தையும் இது இந்த ஷாட், இது டாப் அங்கிள் என பிரித்துபார்க்கும்
பக்குவத்தை இந்த வகுப்பு கற்றுகொடுத்தது.

பின்னர் சக்திவேல் அவர்கள் சினிமாவின் pre production,  post production
பற்றி அழகாக எடுத்து கூறினார். கதை தீர்மாணிப்பது, படம் தயாரித்து
முடித்ததும் அதை விளம்பரப்படுத்துவது, அதை விற்பது போன்ற நூணுக்களை
கூறினார். இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா என்று யோசிக்க வைத்தது.

                    

ஆறாவது நாள் நாங்கள் எற்கனவே பிரிக்கப்பட்ட குழுக்களாக படம் எடுக்க
கிளம்பினோம். இதுவரை படத்தை பார்க்க மட்டும் செய்த எங்களுக்கு இது ஒரு
புது அனுபவமாக இருந்தது. அதை அன்றிரவே எடிட்டிங் நாங்களே செய்தோம்.
மேலும் அன்று செந்தில் அவர்களின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வகுப்பு
எடுக்கப்பட்டது. அதன் தேவைகளையும், வருங்கால வாய்ப்புகளையும்
விளக்கினார்.
                                         
எழாவது நாள் நடைபெற்ற அனுபவ பகிர்வு உண்மையிலே மனம் நெகிழவைத்தது. ஒரு
வார எப்படி போனதென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்கள் நட்பு
மறக்கமுடியாதிருந்தது.
இறுதியில் டைரக்டர் களஞ்சியம் அவர்கள் சான்றிதழகளையும் நாங்கள் எடுத்த
குறும்பட சிடிக்களையும் வழங்கினார். இனிதாக நிறைவடைந்தது  நாமக்கல்
பயிற்சி பட்டறை.
    





இந்த நல்ல வாய்ப்பை அமைத்துக்கொடுத்த நிழல் திருநாவுக்கரசுக்கு என்
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Unknown said...

சுவாரஸ்யமான பதிவு...

Alaguraja said...

nice

Post a Comment