காசோலை - சிறுகதை

2011-09-24

| | |



கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை பச்சை என்று இருந்தது... நெல்லு
பச்சை இல்ல.. கரும்பு பச்சை...
ஏதோ ஒரு கரும்பு மூட்டுக்குள் இருந்து சத்தம் வந்தது..
" எப்பத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிப்ப... நானும் உன்னை நெனைச்சு
சின்னப்பட்டு கிடக்குறேன்.. கேட்டா..  இந்தா பண்ணிருதேன்னு
சொல்லிட்டுத்தான் நிக்குறியே தவிற... செயல்ல ஒன்னையும் காணோம்.." என்று
சலிச்சுக்கொண்டாள் சுகந்தி.
சுகந்தி மடியில் இருந்து அவ பேசுறத ரசித்துக்கொண்டே அவ தொடையில ஒரு
கிள்ளு கிள்ளினான் திருமலை.
" எதுக்கு இப்படி அடிச்சுகிடுத..முதல் கல்யாணமுன்னா தைரியமா வந்துக்
கேட்கலாம்... இப்ப எனக்கு பொண்டாட்டியும் புள்ளையும் இருக்கு
தெரியும்லா.." என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான்..
கரும்புக் காட்டுக்குள்ள அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருப்பது இது
புதுசு இல்லை.. அப்பப்ப நட்க்கிறதுதான்..
வீட்டுல ஜோதி தனியா இருப்பா, இவன் இங்க சுகந்தி கூட கொஞ்சிகொண்டிருப்பான்..
இங்க தனியா  கெடந்து நம்ம அல்லல் படுறோமே என்று அடிக்கடி நினைத்து
வருத்தப்பட்டுகொள்வாள் ஜோதி..

ஜோதியும் திருமலையும் காதலிச்சுத்தான் கல்யாணம்
பண்ணிக்கிட்டிங்காங்க..ஜோதிக்கு இவன் ஊருக்கு பக்கத்து ஊரு.. அடிக்கடி
டிராக்டர் ஒட்டப் போறேன்னு ஒவ்வொரு ஊரு காட்டுக்கும் உழவு ஒட்டப்
போவான்.. அங்க மயங்கினதுவள கொஞ்ச நாள் வச்சுகிட்டு இருப்பான்..அது
கல்யாணம் ஆனதா இருந்தாலும் சரி.. இல்லாட்டாலும் சரி... ஒரு பார்வை.. சில
பல சிரிப்பு.. அவ்வளவுதான்..எங்கயாவது ஒதுக்குபுறமா போயி காரியத்தை
முடிச்சிருவான்...கோபாலு கூட கேட்பான் எப்படிடா இப்படி
என்று...அதுக்கலாம் ஒரு மச்சம் வேணும்டா என்று பெருமை பீற்றிக்
கொள்வான்..

ஆனால் ஜோதியை மட்டும் அவனுக்கு கழட்டி விட மனசு வரவில்லை..
முதல் நாள் பார்த்தலிருந்தே அவனுக்கு படக்கு படக்குன்னு அடித்துகொண்டது..
எப்படியாவது இவளை கல்யாணம் பண்ணிக்கிட வேண்டும் என்று சபதம் கட்டிக்
கொண்டான்..
இரண்டு வருசம் வுடாபுடியா காதலிச்சு கொண்டுவந்துட்டான் ஜோதியை... வீட்டில
யாரும் ஒத்துக்கொள்ளல..




அப்புறம் எதோ ஒத்துகொண்டார்கள்.. இவனுக்கு வீட்டோடு இருக்கப்
பிடிக்கவில்லை.. கொல்லைப் பக்கத்துல உள்ள வீட்டுக்கு போறேன்னு ஜோதியை
கூட்டிட்டு வந்துட்டான்... அந்த வீடு முதல்ல ஜோதிக்கு புடிக்கவே
இல்லை..அது வீடு மாதிரியே இருக்காது.. பக்கத்தில் பேச்சு துணைக்கும்
ஆளுருக்காது. ஊருக்குள்ள போக அரை கிலோ மீட்டர் நடக்கனும்..வேற வழியே
இல்லன்னுத்தான் குடும்பம் நடத்த வேண்டியதாயிருந்தது.இவன் காலையிலே போனா
அடைஞ்சாத்தான் வருவான்..




ஜோதி ஊருக்குள்ளே போயி மாமியார் வீட்டில் உட்கார்ந்துக்கொள்வாள்..
மாமியார் தான் பையனைப் பற்றி புட்டு புட்டு வைப்பாள்.
மாமியார் திருமலையைப் பற்றி சொல்லும்போதெல்லாம் இவளுக்கு எதுக்குடா
கல்யாணம் பண்ணிட்டு வந்தோம் என்று இருக்கும்.. இன்னும் வாழ வேண்டிய
நாட்களை எண்ணிப்பார்ப்பாள்.. மலைப்பா இருக்கும்..

எங்க போவான்னு தெரியாது, நைட் வரும்போது தண்ணி அடிச்சுட்டு
வருவான்..வந்து சண்டைலாம் போட மாட்டான்.. அப்படியே தூங்கிருவான்.

சுகந்திக்கூட பழக்கம் எற்படுற வரைக்கும் ஜோதிகூட நல்லாத்தான் இருந்தான்..
எப்ப சுகந்தியை கரெக்ட் பண்ண ஆரம்பித்தானோ, அப்பவே ஜோதி மேல இருந்த ஆசை
எல்லாம் போயிருச்சு.. இந்த உடம்பை நினைக்கும் போது சிரிப்பா வரும்
திருமலைக்கு..

ஊருக்குள்ளே பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற வரும் சுகந்தியை அடிக்கடி
நோட்டம் விடுவான் திருமலை.. பால் சொசைட்டி நடத்துறது திருமலை நண்பன்
வெங்கடேசன்தான்.
பால் ஊற்ற வரும்போதெல்லாம் வெங்கடேசன் கூட நின்னுக்கிட்டு அவள கிண்டல்
அடிப்பான்.. டபுள் மீனிங்க்ல பேசிக்கிட்டு இருப்பான்.. சுகந்தி மட்டும்
விடுவாளாக்கும்.. இவ அவனை விட பச்சை பச்சையா பேசுவா..
குனிந்து பால் ஊற்றும் போது திருமலையப் பார்த்து கண்
சிமிட்டுவாள்..அந்தப் பார்வையிலே சொக்கிப்போவான் திருமலை.. அவளுக்கு வலை
விரிக்க காத்துட்டு இருந்தான்..
தீடிரென்று வீட்டுக்கு வந்து இந்த வீட்டுல இருக்க வேண்டாம் ஊருக்குள்ளே
போயிரல்லாம் என்று ஜோதியை தள்ளிட்டுப் போனான்.



ஜோதிக்கு ரொம்ப நிம்மதியாயிருந்தது.. ஊருக்குள்ளே ஜோதி வந்ததும்
சுகந்தியை அடிக்கடி காட்டுக்க்கொட்டாய் வீட்டுக்கு அழைத்துட்டுப் போய்
அவர்கள் தனிமையைப் போக்கிக்கொள்வர்..

இவளுக்கு வீட்டுல இருக்கிறதுக்கு போரடிக்கும் "நானும் வாரேன்  அத்தை"
என்று மாமியரோடு கிளம்பிருவாள் காட்டுக்கு..
வேலை எதுவும் செய்ய மாட்டாள், செஞ்சாலும் மாமியார் வுட மாட்டாள்.. சும்மா
வரப்புல உட்கார்ந்திருப்பாள்..
ஊர்ல உள்ள கதை எல்லாம் அங்க உட்கார்ந்து கேட்கலாம். எவன் எவளை
வச்சிகிட்டு இருக்கான், எவ எவனை வச்சிகிட்டு இருக்கா..
அந்த கதையில திருமலை பேரும் அடிபடும். திருமலைக்கும் சுகந்திக்கும் உள்ள
தொடர்பை அப்பத்தான் தெரிஞ்சிகிட்டாள்..
அழுதுகிட்டே மாமியாரிடம் கேட்டதுக்கு "அந்த பைய எப்போதும்
அப்படித்தான்..திருந்திருவான் திருந்திருவான் நினைச்சா.. கழுத சரி வர
மாட்டுக்கான்.. நீ அத எதும் நினைக்காத.. ஊர்ல உலகத்தில இல்லாததா..உனக்கு
ஒரு புள்ள பிறந்தா சரியாயிரும்.. உங்க மாமனாரே இப்படித்தான் ஆட்டம்
போட்டாரு இப்ப எப்படி அடங்கி போயி இருக்காரு பார்த்தியா.." என்று சர்வ
சாதரணமாய் சொல்லிட்டுப் போனாள்.

ஜோதி குழந்தை உண்டானாள். திருமலைக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தது. அதப்
பார்த்த ஜோதிக்கும் "அப்பாடா.. திருந்திருவான்" என்று நம்ப ஆரம்பித்தாள்.
சுகந்தியைப் பார்க்க போக மாட்டான். எப்போதும் ஜோதிக் கூடவே இருக்க
ஆரம்பிச்சான்..அதுலாம் கொஞ்ச நாள்தான். ஜோதியை அம்மா வீட்டுக்கு
அனுப்பனதுக்கு அப்புறம் மறுபடியும் சுகந்தியை தேடி போவான்.

சுகந்தியே எதுக்கு நம்ம தேடுறோம், அவகிட்டத்தான் அப்படி என்னத்தான்
இருக்கு. கழுதைய ஒழிச்சுக்கிட்டவும் முடியலையே.. ஜோதிக்கும்
தெரிஞ்சிருக்கும் அவளும் ஒரு வார்த்தை கேட்க மாட்டுக்கா.. குழந்தை
பிறக்குற வரைக்கும் சுகந்திக்கிட்ட போவோம் அதுக்கப்புறம் போகவே கூடாதுடா
சாமி என்று நினைத்துக் கொண்டான்.
நினைக்கிறதெல்லாம் எங்க நடக்குது.. எத செய்யவே கூடாது என்று
நினைக்கிறமோ.. அததான் செய்ய தோணுது..

ஜோதிக்கு குழந்தை பிறந்தது. திருமலை ஆசை ஆசையா போய் பார்த்தான்.
குழந்தையோடு ஜோதியை அழைத்துட்டு வந்தான்.




ஒரு நாள் திருமலை வெளியே போயிருந்தான். சுகந்தி, ஜோதி குழந்தையைப்
பார்க்க வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜோதிக்கு பத்திக்கிட்டு
எரிந்தது. குழந்தை பெற்ற உடம்போடு படுத்துகிடந்தவ எந்திரிச்சு சுகந்தி
கூட சண்டை போட ஆரம்பித்தாள்.
கூட மாமியாரும் சேர்ந்துக் கொள்ள சண்டை பெரும் சண்டையாகிவிட்டது..ஒரு
வழியா கடித்து குதறாத வழியா சுகந்தியை அனுப்பி வைத்தனர். அழுதுக்கொண்டே
போனாள் சுகந்தி. விசயம் கேள்விப்படும் போது திருமலை சுகந்திக்கிட்டத்தான்
கோபப்பட்டான்.
"எதுக்குப் போய் குழந்தையைப் பார்க்க போன..."
"பார்க்கனும் தோணுச்சு.. அதான் போனேன்.. ஆனா உன் ஆத்தாவும்
பொண்டாட்டியும் இப்படி இருப்பாளுவன்னு நான் நினைக்கவே இல்லை...யப்பா
சாமி.."
"சரி சரி வுடு..வுடு..." என்று வீட்டுக்கு கிள்ம்பினான்.. வாசலில் கால்
வைக்கவுமே ஜோதி கத்த ஆரம்பித்தாள்.
"எப்படி அவ இங்க வரலாம்..நானும் நீ திருந்திட்டன்னு நினைச்சா...அவ கூட
சுத்திட்டுத்தான் இருக்க...நான் எங்க ஆத்தா வீட்டுக்கே போறேன்.."
இவனுக்கு கோபம் தலைக்கேறி
"உங்க ஆத்தா வீட்டுக்கு போனா போ.. உன்னை யார் புடிச்சு வச்சிகிட்டு
இருக்கா.."என்று பதிலுக்கு பேசினான்.



குழந்தையோடு பிறந்த வீட்டுக்கு போயிட்டாள் ஜோதி. மாமியார் எவ்வளவு
தடுத்தும் போயிட்டாள். திருமலையும் சனியன் ஒழியது என்று இருந்துவிட்டான்.

அதுக்குள்ள குழந்தை பிறந்ததுக்கு காசு ஆஸ்பத்திரியில தாராங்கன்னு
கேள்விப்பட்டு மாமியார் திருமலையிடம்
" செக் குடுக்காங்கலாம்.. போய் அவளை கூட்டிட்டு வாடா.."
" ஒரு மயிரும் நான் போக மாட்டான்.. தேவைன்னா நீயே போயி கூட்டிட்டு
வா.."என்று கூறி எழுந்து போயிட்டான்.

                                              ********************************










கரும்பு காட்டுக்குள் இருந்து வெளிய வந்துக்கொண்டிருந்தான். பக்கத்தில்
உரசிக்கொண்டு சுகந்தி வந்தாள்.

"எதுக்கு ஒரு மாதிரி இருக்க.. உன் பொண்டாட்டி இல்லன்னு நினைச்சா.."
"இல்ல..இல்ல.. அந்த சிறுக்கிய யார் நினைக்கப் போறா.. "
"அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கோ.. பாண்டிச்சேரி போலாமா..? என்றாள் கனிவுடன்.
இவளை பார்க்கவும் பாவமா இருந்தது. என்ன பண்ணினாலும் நம்ம கூடவே வருது..
பேசாம இவளையே கட்டிக்கலாம் என்று யோசிச்சவாறு வந்துக்கொண்டிருந்தான்.
"என்ன யோசனை.."
"பாண்டிச்சேரி எதுக்கு...?"
"அங்கப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..பாண்டிச்சேரிய நானும்
பார்த்ததில்லை.. அப்படியே தாலியை கட்டிட்டு ஜாலியா இருந்துட்டு
வருவோம்.."
"வரலாம்.. ஆனா.. காசு இல்லையே...கொஞ்ச நாள் பொறு.."
"அப்படி என்னயா செலவு ஆகும்..ஒரு ஐயாயிரந்தான் ஆகும்.. உன்னால எற்பாடு
பண்ண முடியாது..?"
"இப்பலாம் ஒரு பயலும் கடன் கொடுக்க மாட்டான்...அதான் பொறுங்கிறன்...எங்க
அம்மாட்ட கேட்டாலும்.. என் பொண்டாட்டி போனதிலிருந்து எங்கிட்ட பேசகூட
மாட்டுக்கா..."என்றான்.

கொஞ்சம் நேரம் கழித்து
" நான் வேணா ஒரு ஐடியா சொல்லவா.. உனக்கு குழந்தை பிறந்ததுக்கு செக்
குடுப்பாங்கலா.. அந்த ஆறாயிரத்தை வாங்கிட்டு வந்துரு...எப்படி என்
ஐடியா.."
"நானும் அததான் யோசிச்சுகிட்டு இருந்தேன்... ஆனா அவளப் போய் மறுபடியும்
கூப்பிடுனுமே..."
"நான் வாரேன்... அவ பேர சொல்லிட்டு செக் வாங்கிட்டு வந்துரலாம்.."
"அதுலாம் வேண்டாம்..எங்க அம்மாக்கு எற்கன்வே செக் குடுக்கிறது
தெரியும்..நான் போய் அவளையே கூட்டிட்டு வரப் பார்க்குறேன்.." என்று
சொல்லி விட்டு வீட்டுக்கு போயிட்டான்.







ஜோதி வீட்டுக்குப் போய் அவளை கூப்பிடவும் அவளும் கிளம்பி வந்துட்டாள்.
நம்ம வேலை இவ்வளவு சுலபமா நடக்க்குன்னுதிருமலை நினைக்கவே இல்லை.
ஜோதியும் எப்படா திருமலை வந்து கூட்டிட்டு போவான்னு காத்திருந்தாள். இவன்
வரவும் கிளம்பிவிட்டாள்.






ஆசையாவும் பேசவில்லை.. ஒரிரு வார்த்தை மட்டும் பேசிக்கொள்வான்..
குழந்தையை மட்டும் கொஞ்சுவான்.
"உனக்கு ஒரு சித்தியை சீக்கிரன் கூட்டிட்டு வாரேன் "என்று குழந்தையைப்
பார்த்து மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.

அடுத்த நாளே ஆஸ்பத்திரிக்கு ஜோதியை கூட்டிட்டு போய் கையெழுத்துப் போட்டு
செக்கை வாங்கினான்.
செக்கை கொண்டுட்டு பேங்குக்கு போனா, செக்கை அக்கவுண்டில் போட்டுத்தான்
எடுக்கனும் என்றனர்.
அதுக்கு புதுசா அக்கவுண்ட் ஆரம்பிக்கனும் என்றனர். இந்த ஆறாயிரம்
வாங்குறதுக்குள் விடிஞ்சிரும் போலிருக்கு என்று ஊருக்கும் பேங்குக்கும்
ஜோதியை கூட்டிட்டு அழைந்தான். ஒரு வழியா அக்கவுண்ட் ஒபன் பண்ணி செக்
கலெக்சன் போட்டுட்டு வந்தான்.
பணம் எப்ப வரும் என்று கேட்டதுக்கு
"அது விருத்தாச்சல்ம் பேங்க் செக், அங்க போயிட்டுத்தான் வரும்.. ஒரு
வாரத்துக்கு மேல ஆகும்.. "என்றார் பேங்க் கிளார்க்.

பணம் எடுக்குற சீட்டுல முதலிலே விபரமா ஜோதிட்ட கையெழுத்து வாங்கி வச்சுகிட்டான்.
தினமும் பேங்குக்கு போயி பணம் வந்துட்டான்னு பார்த்துட்டு வருவான்.
திருமலை தினமும் வருவத பார்த்து நாளைக்கு வந்துரும் வந்து எடுத்துக்கோங்க
என்று வெடுக்குடன் கூறி விட்டார் பேங்க் கிளார்க்.

ஜோதிக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தது. திருமலை செக் வாங்குவதற்கு கூட்டிட்டு
போனதும், பேங்குல கணக்கு தொடங்குனதும் நம்ம மேல இவ்வளவு அக்கறையா
இருக்கான்,
அவனிடம் சிரிச்சு பேசி ரொம்ப நாளாச்சு, இனிமேல் அவனை நல்லா
கவனிச்சுகிடனும் என்று நினைத்துக்கொண்டாள்.
பணம் நாளைக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சுகந்தியிடம் நாளைக்கு
பத்து மணிக்கு கள்ளகுறிச்சி பஸ்டாண்டுல வெயிட் பண்ணச்சொன்னான். பணம்
வந்ததும் நான் வந்துருதேன் என்று சொல்லிட்டான்.

காலையிலே நல்லா டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான். எங்க போறிங்கன்னு
கேட்ட ஜோதியிடம் ஒரு பதிலும் சொல்லவில்லை.

பைக்கில வேகமா பேங்குக்கு போனான். பேங்க் இருக்குற ஊருக்கும் இவன்
ஊருக்கும் ஐந்து கிலோ மீட்டர் துரந்தான். இவனுக்கு அவசரம்.. வேகமா
போனான்.

பணம் எடுக்கறதுக்கு கணக்கு வச்சுக்கிற ஆள்தான் வரனும், அவங்களைப் போய்
கூட்டிட்டு வாங்கன்னு திருப்பி அனுப்பி வச்சுகிட்டாங்க..
இவனுக்கு டென்சன் தலைக்கு மேல் எறியது.. வண்டியை எடுத்துட்டு வேகமா வந்தான்.

வீட்டில் இருக்கும் ஜோதிக்கு போன் வந்தது.. அடித்து பிடித்து
கிளம்பினார்கள் ஜோதியும் மாமியாரும்...
அங்கப் போய் பார்த்தா திருமலையை ஆஸ்பத்திரியில்
சேர்த்திருந்தார்கள்..காலில் பலமா அடி பட்டிருந்தது.
மாமியார் அதுக்குள்ள அழ ஆரம்பித்து விட்டார்கள்.
திருமலை வேகமா வண்டியில் வரும் போது எதிர்த்தாப்புல வந்த வண்டியில்
மோதிவிட்டான். அப்புறம் பக்கத்தில் உள்ளவங்களெல்லாம் இங்க வந்து
சேர்ந்துட்டாங்க.
இது சின்ன ஆஸ்பிட்டல்தான். கள்ளகுறிச்சி கூட்டிட்டு போங்க என்று டாக்டர்
சொல்லி விட்டார். காலில் எதோ எலும்பு முறிந்த மாதிரி இருந்தது.

உடனே ஜோதி பேங்குக்கு ஒடிப் போய் ஆறாயிரம் பணத்தை எடுத்துட்டு திருமலையை
காரில் எற்றிக்கொண்டு கள்ளகுறிச்சிக்கு கிளம்பினாள்.

கள்ளகுறிச்சி பள்ஸடாண்டை கார் கடக்கும் போது ,சுகந்தி பஸ்டாண்டில் ஒர்
பையுடன் திருமலைக்காக நின்றுக்கொண்டிருந்தாள்...
கார் மெதுவா ஆஸ்பத்திரிக்குள் ஊர்ந்து சென்றது....!


---ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment