செவத்தியின் பிஞ்சு காதல்--சிறுகதை

2011-09-27

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்




கோடை வெயிலின் தாக்கத்தால் பி்ள்ளைகளெல்லாம் தோமையார் கோவிலுக்குள்ளே விளையாடிக்கொண்டிருந்தனர். கோவிலை சுற்றி பெரிய சுவருகள். நாலு அடிக்கு ஒரு வேப்ப மரம் இருந்தது. அதன் கொப்பு சூரியனை மறைத்தப்படி நிழலாய் விழுந்தது. அந்த நிழலுக்குள் அடியில் இருந்து வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா பாட்டி.
கோடை காலமென்றால் இவளுக்கு இதுதான் வேலை. பிள்ளைகள் சப்பரக்குடில் கிட்ட விளையாடினர். காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தனர்.
பசங்க ஒருபுறமும் பொண்ணுங்க ஒருபுறமும் கண்ணாபூச்சி விளையாட்டும், பாண்டி விளையாட்டும் விளையடினர்.

கண்ணாபூச்சி விளையாட்டுக்காக பாட்டி பின்னால் உள்ள மரத்தின் பின்னால் ஒழிய வந்தான் செவத்தியான் என்ற செவத்தி.

ஏல.. என்னல காட்டு கத்து கத்துரிங்க.. அமைதியா விளையாட முடியாதா..உங்காத்தாட்ட சொல்லனுமா...”
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திரு திருன்னு முழித்துக்கொண்டே
ஆச்சு.. சும்மா இரு... காட்டுகொடுத்திராத... “
என்னல.. காட்டிகொடுத்திராத...போ போ.. ஒழிஞ்சுக்கோ...” என்று கொட்டை பொறுக்க ஆரபித்தாள்.

கண்ணைப்பொத்துன ஜோசு மரத்து பின்னால் ஒழிஞ்சுருந்த செவத்தியை பார்த்துட்டு ஐஸ்பால் சொல்ல ஒடினான் அதுக்குள்ள ஒடிவந்து கோழிகுஞ்சு பிடித்தான் தம்பான். கோழிகுஞ்சு அம்புகிட்டுச்சு என்று கத்த பாதர் பங்களாவில் ஒழிந்திருந்த பீட்டர், சப்பரகுடிலில் இருந்து அமுல், கோவில் பின்னாடி இருந்து அண்டன் எல்லாரும் ஒடிவந்து ஜோசுவை தம்பான் கூட சேர்ந்து கட்டிப்பிடித்து" கோழி குஞ்சு அம்புட்டுகிச்சு..” என்று தாறுமாறு கத்தினர். ஜோசு கையை உதற தம்பான், ஜோசு காலை வாரி விட்டான். எல்லாரும் மொத்தமா விழுந்தனர். புழுதியா கிளம்பியது. கீழ விழுந்த சத்தம் கேட்டு ஒரமா பாண்டி விளையாடிக்கொண்டிருந்த பொம்பளை பிள்ளைகளும் ஒடி வந்து வேடிக்கை பார்த்தனர்.

ஏல...மூதிகளா.. கை,காலு ஒடிஞ்சுருமா... மடத்தனமா விளையாடுதிங்க..
உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே...” என்று கத்தினாள் பாட்டி.

கீழ விழுந்து டவுசரில் ஒட்டிய தூசியை தட்டிக்கொண்டே தம்பான் கேட்டான். அவன்தான் இந்த கூட்டத்திலே பெரிய பையன். ஏழாப்பு படிக்கிறான்.
உட்கார்ந்துட்டு என்னத்த விளாட...?”

இந்தா, பொட்டை புள்ளைகளும் இருக்கிங்க.. நீங்களும் இருக்கிங்க.. கல்யாண விளாட்டு விளையாட வேண்டியதுதானே... “





இப்படி பாட்டி சொல்லும் போது தம்பான், ஜோசு, பீட்டர், செவத்தி, அமுல், அண்டன், பாத்திமா, சுதா, ஜெயந்தி, டீனா எல்லாரும் சுற்றி நின்னார்கள்.
செவத்தி மட்டும் பாத்திமாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.


கல்யாண விளாட்டு அப்படினா...?” என்று பெரிய ஆள் தோரணையில் கேட்டான் அண்டன்.

அதாம்ல.. அப்பா, அம்மா விளையாட்டு... “என்று சிணுங்கிகிட்டே சொன்னான் ஜோசு. ஜோசு எப்போதும் வால்தான்.

பார்த்தியா.. இந்த கல்லப்பயலுக்கு தெரியுது..” என்று சொல்லிக்கொண்டே ஒரு வேப்பங்காயை எடுத்து ஜோசு மேல வீசினாள் பாட்டி.
அவன் சிரிச்சுகிட்டே நின்னான். வேப்பங்காய் ஜோசு டவுசர் மேல பட்டு கீழ விழுந்தது. “அத எடுத்து இங்கப் போடு..” என்று மறுபடியும் வேப்பங்காயை வாங்கிக்கொண்டாள். அவளுக்கு ஒரு கொட்டை இழப்பு எற்பட கூடாதுலா..

எல்லாரும் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தனர். தம்பானுக்கு இந்த விளாட்டுல ரொம்ப சந்தோசம்.
நான் ரெடிப்பா...” என்று முதல் ஆளா கையை தூக்கினான்.
பசங்களுக்கு எல்லாருக்கும் விருப்பம்தான். பொட்டை பிள்ளைகளில் பாத்திமா வர அடம் பிடித்தாள்.
நான் வரலப்பா.. வீட்டுல தெரிஞ்சா திட்டுவாங்க..” என்று சுதாட்ட கிசுகிசுத்தாள்.
அதுலாம் திட்ட மாட்டாங்க.. பாரு உன் ஆளு பீட்டருலாம் வந்திருக்கான்.. சேருப்பா.. ப்ளீஸ்..” என்று அவளுக்கு பீட்டர் ஆசையைக் காட்டி தூண்டி விட்டாள் சுதா.
பாத்திமா பீட்டரைப் பார்த்தான். அவன் கெஞ்சும் கண்களாலே கூப்பிட்டான்..
பாத்திமா ஒரு வழியா வரேன் என்று சொல்லி விட்டாள். பாத்திமா ஒகே சொன்னதுக்கு அப்புறம்தான் பொண்ணுங்க பக்கம் சந்தோசம் வந்தது.
பொண்ணுங்க சைடுல பாத்திமா மட்டும்தான் நல்ல கலரா இருப்பாள். ஸ்டிக்கர் பொட்டும், ரப்பர் சடையுமா சூப்பரா இருப்பாள். அதுக்கு மேல அவள் புருவம் ரெண்டும் கருப்பா மூக்கு மேல சேர்ந்துருக்கும். அத பார்க்க அழகாய் இருக்கும். மத்ததெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை. டீனா கொஞ்சம் மாநிறமாய் இருப்பாள். கலையா இருப்பாள். சுதா ரொம்ப அட்டை கருப்பியா இருப்பாள். ஜெயந்தியும் அப்படித்தான். சுதா மேல ஜோசுக்கு ஒரு கண். எப்பவும் அவளையே வம்பிழுப்பான்.

சரி சரி.. எல்லாரும் விளாட்டுக்கு ரெடியா...” என்று கத்தினான்.
ரெடி.......!!” என்று உரக்க கத்தினர். கத்துன கத்துல வேப்ப மரத்துல கூடு கட்டுன காக்கா பறந்துப் போச்சு.







எல்லாரும் ஒரு வேப்ப மரத்து அடியில் வந்து ரவுண்டா உட்கார்ந்தனர்.
செவத்தி பார்வை பாத்திமா மேல் இருந்தது. பாத்திமா பார்வை பீட்டர் மேல் இருந்தது.

தம்பான்தான் ஆரம்பித்தான்

இப்ப கல்யாண விளாட்டு விளாடப் போறோம்... யாரு மாப்பிளையாக இருக்க ஆசை படுறிங்க..

தம்பானுக்கு எப்போதும் நடுஆளா இருக்கத்தான் விருப்பமா இருக்கும். அதனாலே தம்பான்தான் கல்யாண விளாட்டை முன்னின்று நடத்த ஆரம்பத்தான்.
கேள்வி கேட்டவுடன் பசங்க எல்லாரும் கையை தூக்கினர். செவத்திக்கு பாத்திமா பொண்ணா வரனும் என்று தோமையாரிடம் வேண்டிக்கொண்டான்.

வேற வழியே இல்லை. சீட்டு குழுக்க வேண்டும். அமுல் ஒரே ஒட்டமா வீட்டுக்கு ஒடி ஒரு பென்சிலும், பேப்பரும் எடுத்துட்டு வந்தான்.

எல்லார் பேரும் எழுதப்பட்டது. மாப்பிளையைத் தேர்ந்தெடுக்க தனியாகவும், பொண்ணுக்கு தனியாகவும் எழுதப்பட்டது. பாத்திமாத்தான் எழுதினாள். அவள் கையெழுத்து அச்சில் அடித்தால் போல் இருக்கும்.

எல்லார் பேரும் எழுதி முடித்து, முதலில் பொண்ணைத் தேர்ந்தெடுக்க குலுக்கி போட்டனர். தம்பான் எடுத்தான். எல்லாரும் பாத்திமாத்தான் பொண்ணா வரனும் என்று நினைத்தனர். ஜோசு மட்டும் சுதா வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

கடைசியில் பாத்திமா பேர்தான் வந்தது. பாத்திமா வெடகப்பட்டு சிரித்துக்கொண்டாள். மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க குலுக்கி போட்டனர்.

பீட்டர் பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கடைசியில் செவத்தி பேர்தான் வந்தது. செவத்திக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. தை தைன்னு குதித்தான். அவனை பார்த்து எல்லாரும் சிரித்தனர். பாத்திமாவும் கொஞ்சம் சிரித்துக்கொண்டாள். அவளுக்கு பீட்டர் பேரு வராதது கொஞ்சம் எமாற்றம்தான். இருந்தாலும் இது விளையாட்டுத்தானே..

முதலில் நிச்சயதார்த்தம் பண்ணுவதெற்கு முடிவெடுக்கபப்ட்டது.
ஜோசு குடுகுடுன்னு வீட்டுக்கு ஒடினான்.
எம்மா.. தண்ணி கொடு.. விளாட போனும்.. சீக்கிரம்...” என்றான் சத்தம் கொடுத்தான்.





பெரிய இவரு.. “என்று சொல்லிக்கொண்டே தண்ணிக்கொண்டுவந்து வைத்துட்டுப் போனாள். மடக்கு மடக்கு குடித்துட்டு

எம்மா.. நிச்சயநார்த்தம்.. வைக்கலமா..?”
எதுக்குடா... அது என்னடா நிச்சயநார்த்தம்..?”
இல்ல.. இன்னைக்கு நல்ல நாளா...”
எதுக்கு கேட்குற..”
சும்மாத்தான்.. சொல்லும்மா... நான் போகனும்...”
நல்ல நாளுந்தாண்டா...”
சரி வாரேன்...” என்று கோவிலுக்குள் ஒடினான்.


டேய் தம்பான் இன்னைக்கு நல்ல நாளுந்தாண்டா.. எங்கம்மாட்ட கேட்ட... நிச்சயநார்த்தம் பண்ணிருலாம்டா..” என்று மூச்சிரைக்க கூறினான்.
நிச்சயநார்த்தம் என்ற வார்த்தையை கேட்டு எல்லாரும் சிரித்தனர்.

எல்லாரும் பாட்டிட்டப் போய் " ஆச்சு.. இன்னைக்கு நல்ல நாளா..”என்றான் தம்பான்.
யாருக்கு தெரியும்...எந்த மாசம்டா இது..”என்று திருப்பி கேட்டாள்.
மே மாசம் ..” என்றான் அமுல்.
தமிழ் மாசம் சொல்லுடா..”
தெரியல..”
எந்த நாளா இருந்தா என்ன... கல்யாணத்தை பண்ணி விளாடுங்க.. போங்க..” என்று அனுப்பி வைத்தாள்.

ஒரு இடத்தில் ஒன்னு கூடி உட்கார்ந்தனர். நிச்சயத்திற்கு முன்பு எல்லாருக்கும் டிரெஸ் எடுக்கனும் என்றான் பீட்டர்.
திருநெல்வேலி போலாமா.. இல்ல சாத்தான்குளம் போலாமா..”
அட நீ வேறப்பா.. திருநெல்வேலிக்கே போவும்...”என்று சொல்லிவிட்டு பஸ் மாதிரி நின்றுக்கொண்டான்.
திருநெல்வேலி.. திருநெல்வேலி...” என்று கத்தினான்.
டவுன்ல போய் இறங்கி போத்தீஸ்ல டிரெஸ் எடுத்த மாதிரி நடித்தனர்.
ஜோசுதான் பஸ் டிரைவர், பீட்டர் கண்டெகடர்.
செவத்தியும் பாத்திமாவும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டனர்.
அதே பஸ்ல ஊர் வந்தனர்.

***************




பாதி பாதியா பிரிந்து எதிர் எதிரா கோவில் மணலில் உட்கார்ந்துக்கொண்டனர். மாப்பிளை பக்கம் கொஞ்ச பேரு.. பொண்ணு பக்கம் கொஞ்ச பேரு..

தம்பான் தான் வாசித்தான்.





வியாகுலத்தின் மகனாகிய செவத்தியானுக்கும், சகாயத்தின் மகளாகிய பாத்திமாவுக்கும் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு திருமணம் நிச்சயக்கப்படுகிறது.”

செவத்தியானுக்கு பதிலா, ஜேம்ஸுன்னு வாசிப்பா...” என்று கெஞ்சினான் செவத்தி.

"அதுலாம் வாசிக்க முடியாது. செவத்தி செவத்திதான்.. "என்று வாசித்து முடித்தான் தம்பான்.
செவத்திக்கு எப்போதும் தன் பெயரை பிடிப்பதில்லை. ஜேம்ஸ் என்றே எல்லாரையும் கூப்பிட சொல்வான்.

கல்யாண வேலைகள் மும்முரமா நடக்க ஆரம்பித்தது.
ஜோசுக்கு அவசரமா ஒன்னுக்கு வந்தது. கோவிலுக்கு பின்னாடி போயி ஒன்னுக்கு அடிச்சுட்டு வந்தான். கையில் பட்டதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுதா பாவாடையில் துடைச்சுக்கொண்டான். அவ அதைப்பார்த்துட்டு திட்ட ஆரம்பித்தாள்.
அறிவு இல்ல... ச்சீ... ச்சீ.. பாவாடையில போய் துடைக்க.. நாய...”
நீ வேணா இருந்துட்டு வந்து என் மேல துடைச்குக்கோ...” என்றான் சர்வசாதரணமா.
ஜோசு தலையில் நங்குன்னு ஒரு கொட்டு வைத்தாள் சுதா..
தலையை தடவிக்கொண்டே
வலிக்கிலயே... எப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்... இந்த மாதிரி...”
ஆங்... இச்சுக்கு.. போய் வேலையைப்பாரு...உன் காதுல போட்டுருக்க வாளிய எப்ப கழத்துவ...”
அது உவரி அந்தோணியார் கோவிலுக்கு போ்ட்டது.. நான் ஒன்பதாப்பு படிக்கும் போதுதான் கழற்றமுடியும்... அப்ப பண்ணிக்கலாமா...”
அப்ப வேணா பார்ப்போம்..” என்று சிரிச்சிக்கொண்டே சொன்னாள்.
அப்படினா..சரி..”என்று சொல்லிட்டு ஒடிவிட்டான் ஜோசு,
சுதா திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.

கோவில் கேட்டில் இருந்து சத்தம் வந்தது.
ஏல தம்பா... வந்து சாப்பிட்டுட்டு போ...” என்று.
சரிப்பா.. எல்லாரும் சாப்பிட்டு வந்து விளாடலாம்...” என்று எழுந்து போயிட்டான்.
செவத்திக்கு எமாற்றமாகிவிட்டது. எல்லாரும் கலைந்து சென்றனர்.
வீட்டுக்குப்போய் அவசரமாய் சாப்பிட்டுவிட்டு வந்துப்பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. கொஞ்சம் நேரம் உட்கார்ந்துப்பார்த்தான். ஜோசு மட்டும் வந்தான். மத்தவங்கெல்லாம் எங்கடா என்று கேட்டதற்கு உதட்டை பிதுக்கினான்.
போய்.. கூப்பிடுட்டு வரலாமா..” என்று ஆசையா கேட்டான் செவத்தி.






அதுலாம் வேண்டாம்டா.. அதுலாம் வருவாங்க..வா கோலிக்காய் விளாடும்..” என்று டவுசர் பாக்கெட்டில் இருந்து கோலிக்காய் எடுத்து விளையாட ஆரம்பித்தனர். டப்பா கோலிக்காய்தான் விளையாண்டனர்.
செவத்திக்கு கவனமெல்லாம் இங்கில்லை. கல்யாணம் முடியாம போச்சே என்று வருத்தப்பட்டான்.
வுடுடா.. நாளைக்கு அத விளையாடலாம்...” என்றான் ஜோசு.


ராத்திரி ஜெபத்துக்கு எல்லாரும் கோவிலுக்கு வந்திருந்தனர். முன்னாடி முட்டங்காள் போட்டு உட்கார்ந்திருந்தாள் பாத்திமா. செவத்தி பக்கத்தில் அமுல் இருந்தான். ஒருவனும் மத்தியான விளையாடின விளையாட்டை யாருமே பேசவேவில்லை. பீட்டர்தான் ஜெபம் வாசித்தான். ஜெபம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்தனர். நாளைக்கு பார்க்கலாம் என்று பிரிந்து சென்றனர்.
செவத்தி ராத்திரி புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வரவேயில்லை. எழுந்துப் போய் பழைய சாமான் போட்டுருக்கிற பையை எடுத்து பழைய மோதிரம் எடுத்துக்கொண்டான். நாளைக்கு பாத்திமாவுக்கு போடலாம் என்று.



அடுத்த நாள் கோவிலுக்கு எல்லாரும் வந்துவிட்டனர். கல்யாண எற்பாடு எல்லாம் நடக்க ஆரம்பித்தது.
..புள்ள நீ சமைஞ்சுட்டியா...?” என்று பாத்திமாவ பார்த்து கேட்டாள் பாட்டி.
எல்லாரும் முன்னாடி கேட்டதும் பாத்திமாக்கு வெட்கம் வந்தது. சுதாவும் வெட்கப்பட்டாள்.
சமைஞ்சுதுனா... அப்படினா என்னடா..” என்று ஜோசுவை பார்த்து கேட்டான் அண்டன்.
அப்படின்னா.. கூட்டாஞ்சோறு சமைப்பாங்கல்லா...அதான்.. அந்த கிழவிக்கு தெரியாது போல..அதான் பாத்திமாட்ட கேட்கும் போல..” என்று சொல்லிக்கொண்டே நடந்து சென்றான் ஜோசு.

இல்ல பாட்டி.. “ என்று கூறிவிட்டு ஒடி வந்து விட்டார்கள் பாத்திமாவும் சுதாவும்.

கல்யாணத்துக்கு முன்பு பச்சை குத்தும் சடங்கு நடைபெற்றது. ஜோசுதான் வேப்பங்காயை ஒரு குச்சியால் குத்தி அதில் உள்ள பாலைத் தொட்டு செவத்தி கையில் பாத்திமா என்று எழுதினான். பின்பு கரியைத் தொட்டு அதில் மேல் தடவினான். பாத்திமா என்று பளிச்சென்று பச்சை குத்துனது மாதிரி தெரிந்தது. பாத்திமா கையிலும் செவத்தி என்று எழுதும் போது தடுத்துவிட்டாள். ஜோசும் வற்புறுத்தவில்லை.










பீட்டர்தான் ஃபாதராகிவிட்டான். தம்பான் அவனுக்கு ஃபாதர் வேடம் குடுத்தான்.
கோவில் ஸ்டேஜ்ல மேலேறி நின்றான் பீட்டர்.
கீழே பாத்திமாவும் செவத்தியும் நினறனர்.

பாத்திமாவைப் பார்த்து
இனபத்திலும் துனபத்திலும் செவத்தியுடன் பங்குகொள்வாயா..?” என்றான் பீட்டர்.
ஆம்..”





செவத்தியைப் பார்த்து
இனபத்திலும் துனபத்திலும் பாத்திமாவுடன் பங்குகொள்வாயா..?”
ஆம்"

கையில் சணலை தாலியாக பாவித்து, அதை பீட்டர் எடுத்து செவத்தி கையில் கொடுத்தான். செவத்தி பாத்திமா கழுத்தில் கட்டினான். எல்லாரும் கை தட்டினர். பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.


ஃபர்ஸ்ட் நைட்லா உண்டாடே...”என்று குரல் கொடுத்தான் ஜோசு.
ஆமா.. அதுலாம் இல்லாம....”தம்பான் அதுக்கான வேலைல இறங்கினான்.
அதுலாம் வேண்டாம்..”என்று சினுங்கினாள் பாத்திமா..
சும்மாத்தான்பா.. வாப்பா..” என்று அவளையும் செவத்தியும் இழுத்துட்டுப் போய் சப்பரகுடிலுல் விட்டனர். சப்பரகுடில் இருட்டா இருக்கு்ம். திருவிழா நடக்கும் போது மட்டும்தான் சப்பரத்தை ஜோடிக்க வெளிய எடுப்பார்கள். மற்றப்படி அது பாழடைந்துப்போய்தான் கிடக்கும்.

வெளியே தென்னைந்தட்டி கொண்டு அடைத்திருந்தனர்.
உள்ளே போய் இருவரும் உட்கார்ந்தனர். சின்ன சப்பரத்தின் மேல் பாத்திமா உட்கார்ந்தாள். பெரிய சப்பரத்தின் மேல் செவத்தி இருந்தான். ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர். தீடிரென்று செவத்தி எழுந்துப் போய் பாத்திமா கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அவள் அலறியடித்து தட்டியை தள்ளிவிட்டு வெளியே ஒடினாள். பீட்டரிடம் போய்
அழுதுக்கிட்டே
என் கண்ணத்தை எச்சிப் படுத்திட்டான்..” என்று அழுதாள்.



கோபம் வந்தவனாய் செவத்தியப் போய் அடித்தான் பீட்டர். அடித்த அடியில் செவத்தி கீழே விழுந்து விட்டான். திருப்பி அடிக்க முடியவில்லை. ஜோசு வந்து தடுத்துப் பார்த்தான் அவனுக்கு உதை விழுந்தது.
அடித்த அடியில் முட்டெல்லாம் பேந்துவிட்டது. தம்பான் தான் தடுத்து விட்டான். எல்லாரும் ஒடிவிட்டனர். செவத்தி கூட ஜோசு மட்டும் இருந்தான். கால் மூட்டுல ரத்தம் வந்தது. ஈ மொய்க்க ஆரம்பித்தது.
சூ சூ என விரட்டிக்கொண்டிருந்தான். கையில் உள்ள பாத்திமா என்ற எழுத்தை அழித்தான்.  அழித்தது அழித்ததுதான்.

**********************************************************************************


பீட்டர் மற்றும் பாத்திமா வின் திருமணத்திற்கு வருகை தரும் மண்ணின் மைந்தர் ஃபாதர் ஜேம்ஸ் அவர்களை வரவேற்கிறோம் என்று ஊர் முழுக்க பேனர் அடித்திருந்தது.

ஃபாதர் ஜேம்ஸ் வந்தார். ஊரே வந்து ஆசி வாங்கியது. பாவ மன்னிப்பு கொடுத்தார்.

திருமண திருப்பலி நடைபெற ஆரம்பித்தது. மாப்பிளை பொண்ணுமாக பீட்டரும் பாத்திமாவும் ஜோடியா முன்னால் நின்றுக்கொண்டிருந்தனர்.
ஜேம்ஸ்தான் திருமணத்தை நடத்திவைத்தார்.

இனபத்திலும், துன்பத்திலும், நோய் நொடியிலும் பக்கத்தில் இருந்து பீட்டரைப்பார்த்துக்கொள்வாயா...?”
பார்த்துக்கொள்வேன்..”
இனபத்திலும், துன்பத்திலும், நோய் நொடியிலும் பக்கத்தில் இருந்து பாத்திமாவைப் பார்த்துக்கொள்வாயா...?”
பார்த்துக்கொள்வேன்..”

உனக்கு பீட்டரை மணப்பதற்கு சம்மதமா..?
சம்மதம்..”
உனக்கு பாத்திமாவை மணப்பதற்கு சம்மதமா..?
சம்மதம்..”

இருவரை கையை சேர்த்து பிடித்து ஒரு வசனம் சொன்னார்.
தாலிச்செயினை எடுத்துக் கொடுத்து கட்டச்சொன்னார்.
பீட்டர் பாத்திமா கழுத்தில் தாலி கட்டினான். கோவில் மணி அடித்தது.
வெடி வெடித்தது.

இருவருக்கும் திருமண வாழ்த்து சொன்னார் செவத்தியான் என்ற ஜேம்ஸ்..

காசோலை - சிறுகதை

2011-09-24

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை பச்சை என்று இருந்தது... நெல்லு
பச்சை இல்ல.. கரும்பு பச்சை...
ஏதோ ஒரு கரும்பு மூட்டுக்குள் இருந்து சத்தம் வந்தது..
" எப்பத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிப்ப... நானும் உன்னை நெனைச்சு
சின்னப்பட்டு கிடக்குறேன்.. கேட்டா..  இந்தா பண்ணிருதேன்னு
சொல்லிட்டுத்தான் நிக்குறியே தவிற... செயல்ல ஒன்னையும் காணோம்.." என்று
சலிச்சுக்கொண்டாள் சுகந்தி.
சுகந்தி மடியில் இருந்து அவ பேசுறத ரசித்துக்கொண்டே அவ தொடையில ஒரு
கிள்ளு கிள்ளினான் திருமலை.
" எதுக்கு இப்படி அடிச்சுகிடுத..முதல் கல்யாணமுன்னா தைரியமா வந்துக்
கேட்கலாம்... இப்ப எனக்கு பொண்டாட்டியும் புள்ளையும் இருக்கு
தெரியும்லா.." என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான்..
கரும்புக் காட்டுக்குள்ள அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருப்பது இது
புதுசு இல்லை.. அப்பப்ப நட்க்கிறதுதான்..
வீட்டுல ஜோதி தனியா இருப்பா, இவன் இங்க சுகந்தி கூட கொஞ்சிகொண்டிருப்பான்..
இங்க தனியா  கெடந்து நம்ம அல்லல் படுறோமே என்று அடிக்கடி நினைத்து
வருத்தப்பட்டுகொள்வாள் ஜோதி..

ஜோதியும் திருமலையும் காதலிச்சுத்தான் கல்யாணம்
பண்ணிக்கிட்டிங்காங்க..ஜோதிக்கு இவன் ஊருக்கு பக்கத்து ஊரு.. அடிக்கடி
டிராக்டர் ஒட்டப் போறேன்னு ஒவ்வொரு ஊரு காட்டுக்கும் உழவு ஒட்டப்
போவான்.. அங்க மயங்கினதுவள கொஞ்ச நாள் வச்சுகிட்டு இருப்பான்..அது
கல்யாணம் ஆனதா இருந்தாலும் சரி.. இல்லாட்டாலும் சரி... ஒரு பார்வை.. சில
பல சிரிப்பு.. அவ்வளவுதான்..எங்கயாவது ஒதுக்குபுறமா போயி காரியத்தை
முடிச்சிருவான்...கோபாலு கூட கேட்பான் எப்படிடா இப்படி
என்று...அதுக்கலாம் ஒரு மச்சம் வேணும்டா என்று பெருமை பீற்றிக்
கொள்வான்..

ஆனால் ஜோதியை மட்டும் அவனுக்கு கழட்டி விட மனசு வரவில்லை..
முதல் நாள் பார்த்தலிருந்தே அவனுக்கு படக்கு படக்குன்னு அடித்துகொண்டது..
எப்படியாவது இவளை கல்யாணம் பண்ணிக்கிட வேண்டும் என்று சபதம் கட்டிக்
கொண்டான்..
இரண்டு வருசம் வுடாபுடியா காதலிச்சு கொண்டுவந்துட்டான் ஜோதியை... வீட்டில
யாரும் ஒத்துக்கொள்ளல..




அப்புறம் எதோ ஒத்துகொண்டார்கள்.. இவனுக்கு வீட்டோடு இருக்கப்
பிடிக்கவில்லை.. கொல்லைப் பக்கத்துல உள்ள வீட்டுக்கு போறேன்னு ஜோதியை
கூட்டிட்டு வந்துட்டான்... அந்த வீடு முதல்ல ஜோதிக்கு புடிக்கவே
இல்லை..அது வீடு மாதிரியே இருக்காது.. பக்கத்தில் பேச்சு துணைக்கும்
ஆளுருக்காது. ஊருக்குள்ள போக அரை கிலோ மீட்டர் நடக்கனும்..வேற வழியே
இல்லன்னுத்தான் குடும்பம் நடத்த வேண்டியதாயிருந்தது.இவன் காலையிலே போனா
அடைஞ்சாத்தான் வருவான்..




ஜோதி ஊருக்குள்ளே போயி மாமியார் வீட்டில் உட்கார்ந்துக்கொள்வாள்..
மாமியார் தான் பையனைப் பற்றி புட்டு புட்டு வைப்பாள்.
மாமியார் திருமலையைப் பற்றி சொல்லும்போதெல்லாம் இவளுக்கு எதுக்குடா
கல்யாணம் பண்ணிட்டு வந்தோம் என்று இருக்கும்.. இன்னும் வாழ வேண்டிய
நாட்களை எண்ணிப்பார்ப்பாள்.. மலைப்பா இருக்கும்..

எங்க போவான்னு தெரியாது, நைட் வரும்போது தண்ணி அடிச்சுட்டு
வருவான்..வந்து சண்டைலாம் போட மாட்டான்.. அப்படியே தூங்கிருவான்.

சுகந்திக்கூட பழக்கம் எற்படுற வரைக்கும் ஜோதிகூட நல்லாத்தான் இருந்தான்..
எப்ப சுகந்தியை கரெக்ட் பண்ண ஆரம்பித்தானோ, அப்பவே ஜோதி மேல இருந்த ஆசை
எல்லாம் போயிருச்சு.. இந்த உடம்பை நினைக்கும் போது சிரிப்பா வரும்
திருமலைக்கு..

ஊருக்குள்ளே பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற வரும் சுகந்தியை அடிக்கடி
நோட்டம் விடுவான் திருமலை.. பால் சொசைட்டி நடத்துறது திருமலை நண்பன்
வெங்கடேசன்தான்.
பால் ஊற்ற வரும்போதெல்லாம் வெங்கடேசன் கூட நின்னுக்கிட்டு அவள கிண்டல்
அடிப்பான்.. டபுள் மீனிங்க்ல பேசிக்கிட்டு இருப்பான்.. சுகந்தி மட்டும்
விடுவாளாக்கும்.. இவ அவனை விட பச்சை பச்சையா பேசுவா..
குனிந்து பால் ஊற்றும் போது திருமலையப் பார்த்து கண்
சிமிட்டுவாள்..அந்தப் பார்வையிலே சொக்கிப்போவான் திருமலை.. அவளுக்கு வலை
விரிக்க காத்துட்டு இருந்தான்..
தீடிரென்று வீட்டுக்கு வந்து இந்த வீட்டுல இருக்க வேண்டாம் ஊருக்குள்ளே
போயிரல்லாம் என்று ஜோதியை தள்ளிட்டுப் போனான்.



ஜோதிக்கு ரொம்ப நிம்மதியாயிருந்தது.. ஊருக்குள்ளே ஜோதி வந்ததும்
சுகந்தியை அடிக்கடி காட்டுக்க்கொட்டாய் வீட்டுக்கு அழைத்துட்டுப் போய்
அவர்கள் தனிமையைப் போக்கிக்கொள்வர்..

இவளுக்கு வீட்டுல இருக்கிறதுக்கு போரடிக்கும் "நானும் வாரேன்  அத்தை"
என்று மாமியரோடு கிளம்பிருவாள் காட்டுக்கு..
வேலை எதுவும் செய்ய மாட்டாள், செஞ்சாலும் மாமியார் வுட மாட்டாள்.. சும்மா
வரப்புல உட்கார்ந்திருப்பாள்..
ஊர்ல உள்ள கதை எல்லாம் அங்க உட்கார்ந்து கேட்கலாம். எவன் எவளை
வச்சிகிட்டு இருக்கான், எவ எவனை வச்சிகிட்டு இருக்கா..
அந்த கதையில திருமலை பேரும் அடிபடும். திருமலைக்கும் சுகந்திக்கும் உள்ள
தொடர்பை அப்பத்தான் தெரிஞ்சிகிட்டாள்..
அழுதுகிட்டே மாமியாரிடம் கேட்டதுக்கு "அந்த பைய எப்போதும்
அப்படித்தான்..திருந்திருவான் திருந்திருவான் நினைச்சா.. கழுத சரி வர
மாட்டுக்கான்.. நீ அத எதும் நினைக்காத.. ஊர்ல உலகத்தில இல்லாததா..உனக்கு
ஒரு புள்ள பிறந்தா சரியாயிரும்.. உங்க மாமனாரே இப்படித்தான் ஆட்டம்
போட்டாரு இப்ப எப்படி அடங்கி போயி இருக்காரு பார்த்தியா.." என்று சர்வ
சாதரணமாய் சொல்லிட்டுப் போனாள்.

ஜோதி குழந்தை உண்டானாள். திருமலைக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தது. அதப்
பார்த்த ஜோதிக்கும் "அப்பாடா.. திருந்திருவான்" என்று நம்ப ஆரம்பித்தாள்.
சுகந்தியைப் பார்க்க போக மாட்டான். எப்போதும் ஜோதிக் கூடவே இருக்க
ஆரம்பிச்சான்..அதுலாம் கொஞ்ச நாள்தான். ஜோதியை அம்மா வீட்டுக்கு
அனுப்பனதுக்கு அப்புறம் மறுபடியும் சுகந்தியை தேடி போவான்.

சுகந்தியே எதுக்கு நம்ம தேடுறோம், அவகிட்டத்தான் அப்படி என்னத்தான்
இருக்கு. கழுதைய ஒழிச்சுக்கிட்டவும் முடியலையே.. ஜோதிக்கும்
தெரிஞ்சிருக்கும் அவளும் ஒரு வார்த்தை கேட்க மாட்டுக்கா.. குழந்தை
பிறக்குற வரைக்கும் சுகந்திக்கிட்ட போவோம் அதுக்கப்புறம் போகவே கூடாதுடா
சாமி என்று நினைத்துக் கொண்டான்.
நினைக்கிறதெல்லாம் எங்க நடக்குது.. எத செய்யவே கூடாது என்று
நினைக்கிறமோ.. அததான் செய்ய தோணுது..

ஜோதிக்கு குழந்தை பிறந்தது. திருமலை ஆசை ஆசையா போய் பார்த்தான்.
குழந்தையோடு ஜோதியை அழைத்துட்டு வந்தான்.




ஒரு நாள் திருமலை வெளியே போயிருந்தான். சுகந்தி, ஜோதி குழந்தையைப்
பார்க்க வந்திருந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜோதிக்கு பத்திக்கிட்டு
எரிந்தது. குழந்தை பெற்ற உடம்போடு படுத்துகிடந்தவ எந்திரிச்சு சுகந்தி
கூட சண்டை போட ஆரம்பித்தாள்.
கூட மாமியாரும் சேர்ந்துக் கொள்ள சண்டை பெரும் சண்டையாகிவிட்டது..ஒரு
வழியா கடித்து குதறாத வழியா சுகந்தியை அனுப்பி வைத்தனர். அழுதுக்கொண்டே
போனாள் சுகந்தி. விசயம் கேள்விப்படும் போது திருமலை சுகந்திக்கிட்டத்தான்
கோபப்பட்டான்.
"எதுக்குப் போய் குழந்தையைப் பார்க்க போன..."
"பார்க்கனும் தோணுச்சு.. அதான் போனேன்.. ஆனா உன் ஆத்தாவும்
பொண்டாட்டியும் இப்படி இருப்பாளுவன்னு நான் நினைக்கவே இல்லை...யப்பா
சாமி.."
"சரி சரி வுடு..வுடு..." என்று வீட்டுக்கு கிள்ம்பினான்.. வாசலில் கால்
வைக்கவுமே ஜோதி கத்த ஆரம்பித்தாள்.
"எப்படி அவ இங்க வரலாம்..நானும் நீ திருந்திட்டன்னு நினைச்சா...அவ கூட
சுத்திட்டுத்தான் இருக்க...நான் எங்க ஆத்தா வீட்டுக்கே போறேன்.."
இவனுக்கு கோபம் தலைக்கேறி
"உங்க ஆத்தா வீட்டுக்கு போனா போ.. உன்னை யார் புடிச்சு வச்சிகிட்டு
இருக்கா.."என்று பதிலுக்கு பேசினான்.



குழந்தையோடு பிறந்த வீட்டுக்கு போயிட்டாள் ஜோதி. மாமியார் எவ்வளவு
தடுத்தும் போயிட்டாள். திருமலையும் சனியன் ஒழியது என்று இருந்துவிட்டான்.

அதுக்குள்ள குழந்தை பிறந்ததுக்கு காசு ஆஸ்பத்திரியில தாராங்கன்னு
கேள்விப்பட்டு மாமியார் திருமலையிடம்
" செக் குடுக்காங்கலாம்.. போய் அவளை கூட்டிட்டு வாடா.."
" ஒரு மயிரும் நான் போக மாட்டான்.. தேவைன்னா நீயே போயி கூட்டிட்டு
வா.."என்று கூறி எழுந்து போயிட்டான்.

                                              ********************************










கரும்பு காட்டுக்குள் இருந்து வெளிய வந்துக்கொண்டிருந்தான். பக்கத்தில்
உரசிக்கொண்டு சுகந்தி வந்தாள்.

"எதுக்கு ஒரு மாதிரி இருக்க.. உன் பொண்டாட்டி இல்லன்னு நினைச்சா.."
"இல்ல..இல்ல.. அந்த சிறுக்கிய யார் நினைக்கப் போறா.. "
"அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கோ.. பாண்டிச்சேரி போலாமா..? என்றாள் கனிவுடன்.
இவளை பார்க்கவும் பாவமா இருந்தது. என்ன பண்ணினாலும் நம்ம கூடவே வருது..
பேசாம இவளையே கட்டிக்கலாம் என்று யோசிச்சவாறு வந்துக்கொண்டிருந்தான்.
"என்ன யோசனை.."
"பாண்டிச்சேரி எதுக்கு...?"
"அங்கப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..பாண்டிச்சேரிய நானும்
பார்த்ததில்லை.. அப்படியே தாலியை கட்டிட்டு ஜாலியா இருந்துட்டு
வருவோம்.."
"வரலாம்.. ஆனா.. காசு இல்லையே...கொஞ்ச நாள் பொறு.."
"அப்படி என்னயா செலவு ஆகும்..ஒரு ஐயாயிரந்தான் ஆகும்.. உன்னால எற்பாடு
பண்ண முடியாது..?"
"இப்பலாம் ஒரு பயலும் கடன் கொடுக்க மாட்டான்...அதான் பொறுங்கிறன்...எங்க
அம்மாட்ட கேட்டாலும்.. என் பொண்டாட்டி போனதிலிருந்து எங்கிட்ட பேசகூட
மாட்டுக்கா..."என்றான்.

கொஞ்சம் நேரம் கழித்து
" நான் வேணா ஒரு ஐடியா சொல்லவா.. உனக்கு குழந்தை பிறந்ததுக்கு செக்
குடுப்பாங்கலா.. அந்த ஆறாயிரத்தை வாங்கிட்டு வந்துரு...எப்படி என்
ஐடியா.."
"நானும் அததான் யோசிச்சுகிட்டு இருந்தேன்... ஆனா அவளப் போய் மறுபடியும்
கூப்பிடுனுமே..."
"நான் வாரேன்... அவ பேர சொல்லிட்டு செக் வாங்கிட்டு வந்துரலாம்.."
"அதுலாம் வேண்டாம்..எங்க அம்மாக்கு எற்கன்வே செக் குடுக்கிறது
தெரியும்..நான் போய் அவளையே கூட்டிட்டு வரப் பார்க்குறேன்.." என்று
சொல்லி விட்டு வீட்டுக்கு போயிட்டான்.







ஜோதி வீட்டுக்குப் போய் அவளை கூப்பிடவும் அவளும் கிளம்பி வந்துட்டாள்.
நம்ம வேலை இவ்வளவு சுலபமா நடக்க்குன்னுதிருமலை நினைக்கவே இல்லை.
ஜோதியும் எப்படா திருமலை வந்து கூட்டிட்டு போவான்னு காத்திருந்தாள். இவன்
வரவும் கிளம்பிவிட்டாள்.






ஆசையாவும் பேசவில்லை.. ஒரிரு வார்த்தை மட்டும் பேசிக்கொள்வான்..
குழந்தையை மட்டும் கொஞ்சுவான்.
"உனக்கு ஒரு சித்தியை சீக்கிரன் கூட்டிட்டு வாரேன் "என்று குழந்தையைப்
பார்த்து மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.

அடுத்த நாளே ஆஸ்பத்திரிக்கு ஜோதியை கூட்டிட்டு போய் கையெழுத்துப் போட்டு
செக்கை வாங்கினான்.
செக்கை கொண்டுட்டு பேங்குக்கு போனா, செக்கை அக்கவுண்டில் போட்டுத்தான்
எடுக்கனும் என்றனர்.
அதுக்கு புதுசா அக்கவுண்ட் ஆரம்பிக்கனும் என்றனர். இந்த ஆறாயிரம்
வாங்குறதுக்குள் விடிஞ்சிரும் போலிருக்கு என்று ஊருக்கும் பேங்குக்கும்
ஜோதியை கூட்டிட்டு அழைந்தான். ஒரு வழியா அக்கவுண்ட் ஒபன் பண்ணி செக்
கலெக்சன் போட்டுட்டு வந்தான்.
பணம் எப்ப வரும் என்று கேட்டதுக்கு
"அது விருத்தாச்சல்ம் பேங்க் செக், அங்க போயிட்டுத்தான் வரும்.. ஒரு
வாரத்துக்கு மேல ஆகும்.. "என்றார் பேங்க் கிளார்க்.

பணம் எடுக்குற சீட்டுல முதலிலே விபரமா ஜோதிட்ட கையெழுத்து வாங்கி வச்சுகிட்டான்.
தினமும் பேங்குக்கு போயி பணம் வந்துட்டான்னு பார்த்துட்டு வருவான்.
திருமலை தினமும் வருவத பார்த்து நாளைக்கு வந்துரும் வந்து எடுத்துக்கோங்க
என்று வெடுக்குடன் கூறி விட்டார் பேங்க் கிளார்க்.

ஜோதிக்கு ரொம்ப சந்தோசமாயிருந்தது. திருமலை செக் வாங்குவதற்கு கூட்டிட்டு
போனதும், பேங்குல கணக்கு தொடங்குனதும் நம்ம மேல இவ்வளவு அக்கறையா
இருக்கான்,
அவனிடம் சிரிச்சு பேசி ரொம்ப நாளாச்சு, இனிமேல் அவனை நல்லா
கவனிச்சுகிடனும் என்று நினைத்துக்கொண்டாள்.
பணம் நாளைக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சுகந்தியிடம் நாளைக்கு
பத்து மணிக்கு கள்ளகுறிச்சி பஸ்டாண்டுல வெயிட் பண்ணச்சொன்னான். பணம்
வந்ததும் நான் வந்துருதேன் என்று சொல்லிட்டான்.

காலையிலே நல்லா டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான். எங்க போறிங்கன்னு
கேட்ட ஜோதியிடம் ஒரு பதிலும் சொல்லவில்லை.

பைக்கில வேகமா பேங்குக்கு போனான். பேங்க் இருக்குற ஊருக்கும் இவன்
ஊருக்கும் ஐந்து கிலோ மீட்டர் துரந்தான். இவனுக்கு அவசரம்.. வேகமா
போனான்.

பணம் எடுக்கறதுக்கு கணக்கு வச்சுக்கிற ஆள்தான் வரனும், அவங்களைப் போய்
கூட்டிட்டு வாங்கன்னு திருப்பி அனுப்பி வச்சுகிட்டாங்க..
இவனுக்கு டென்சன் தலைக்கு மேல் எறியது.. வண்டியை எடுத்துட்டு வேகமா வந்தான்.

வீட்டில் இருக்கும் ஜோதிக்கு போன் வந்தது.. அடித்து பிடித்து
கிளம்பினார்கள் ஜோதியும் மாமியாரும்...
அங்கப் போய் பார்த்தா திருமலையை ஆஸ்பத்திரியில்
சேர்த்திருந்தார்கள்..காலில் பலமா அடி பட்டிருந்தது.
மாமியார் அதுக்குள்ள அழ ஆரம்பித்து விட்டார்கள்.
திருமலை வேகமா வண்டியில் வரும் போது எதிர்த்தாப்புல வந்த வண்டியில்
மோதிவிட்டான். அப்புறம் பக்கத்தில் உள்ளவங்களெல்லாம் இங்க வந்து
சேர்ந்துட்டாங்க.
இது சின்ன ஆஸ்பிட்டல்தான். கள்ளகுறிச்சி கூட்டிட்டு போங்க என்று டாக்டர்
சொல்லி விட்டார். காலில் எதோ எலும்பு முறிந்த மாதிரி இருந்தது.

உடனே ஜோதி பேங்குக்கு ஒடிப் போய் ஆறாயிரம் பணத்தை எடுத்துட்டு திருமலையை
காரில் எற்றிக்கொண்டு கள்ளகுறிச்சிக்கு கிளம்பினாள்.

கள்ளகுறிச்சி பள்ஸடாண்டை கார் கடக்கும் போது ,சுகந்தி பஸ்டாண்டில் ஒர்
பையுடன் திருமலைக்காக நின்றுக்கொண்டிருந்தாள்...
கார் மெதுவா ஆஸ்பத்திரிக்குள் ஊர்ந்து சென்றது....!


---ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ்.பி

தங்க ஆஸ்பத்திரி-- சிறுகதை

2011-09-20

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்





தண்ணி பிடிக்கிற இடத்தில, குளத்தில, காட்டுக்கு போற வழியில எல்லாம் இடத்திலும் கேட்டுப் பார்த்தாள் செல்லம்மாள்.
ராஜாத்தி மசியவே இல்லை. செல்லம்மாள் மட்டுமல்ல; மஞ்சுளா, அமுதா ரெண்டு பேரும் தனியா தனியா கேட்டுப் பார்த்தார்கள்..
ஒரு பதில் வராது ராஜாத்தியிடம் இருந்து.. வேற வழியே இல்லன்னு செல்லம்மாள், மஞ்சுளா, அமுதா மூணு பேரும் கூட்டு சேர்த்துப் போய் கேட்டகலாம்னு முடிவு பண்ணி சத்திரத்துகிட்ட நின்னார்கள். ராஜாத்தி தனியா ஆத்துல குளிச்சிட்டு வந்துக் கொண்டிருந்தாள். ஈரத்துணியை உடம்பில சுற்றிட்டு வருவது எதோ கருந்தூண் அசைந்து வருவது போலிருந்தது..
இடுப்பில வாளி இருந்தது. அதில் துணிகள் நிரம்பி இருந்தது.. ஒரு புறம் வாழைத்தோட்டம், மறுபுறம் வயக்காடு. ரோட்டுக்கு நேரா மேல பார்த்தா மலை மேல வெங்கடாஜலபதி கோவில்.. ஆட்கள் ஆத்துல குளிச்சிட்டு ஊருக்குள்ள வருவதும் போவதுமாக இருந்தனர்.
நல்லா ஜிலு ஜிலுன்னு காற்று அடித்தது.
சத்திர பஸ்டாண்டுல ஒரு ரூபாய்க்கு வெள்ளைரிக்காயை வாங்கி கடித்துக் கொண்டாள் ராஜாத்தி. வீட்டுக்கு போய் சேருர வரைக்கும் நேரம் போகனும்லா.. பாளையங்கோட்டை போறதுக்கு பஸ்ஸுக்காக காத்திருந்த
ரோஸ் மேரி இவளைப் பார்த்து
" ஏய், ராஜாத்தி.. என்ன ஆற்றுப்பக்கம்... ஆச்சர்யமால்லா இருக்கு..." என்றாள். சொல்லும் போதே அவளிடம் இருந்த ஒரு வெள்ளைரிக்காய் பிஞ்சை ஒண்ண எடுத்துக்கொண்டாள். ரோஸ் மேரி ஆர்.சி கோவில் தெருக்காரி.
"அங்க குளம் வரண்டுலா கிடக்கு.. அதான்.. துணி வேற சேர்ந்துப் போச்சு...எடுத்துட்டு வந்து துவைச்சா ஒரு வேலை முடிஞ்ச மாதிரிலா.. அப்புறம் எங்க தூரமா...?"

"இங்கத்தான்... ஹைகிரவுண்டுக்கு போறேன்... என் மச்சான் பொண்டாட்டிய அங்க சேர்த்திருக்கு... போய் பார்க்கப் போறேன்..."


திருநெல்வேலி என்று போர்டு போட்டு பஸ் வரவும் ரோஸ் மேரி கிளம்பினாள். ராஜாத்தியும் நடையக் கட்டினாள்.

கொஞ்சம் தூரந்தான் நடந்திருப்பாள்..அங்க மூன்று பேரும் ஒன்னா நிக்கது பார்த்துட்டு கொஞ்சம் பயந்துதான் போனாள்..
இப்ப ஜிலு ஜிலு காற்றுலாம் போய் வெக்கை வந்தமாதிரி இருந்தது ராஜாத்திக்கு..





"ஏய் நில்லுடி, உன்னைத்தான்... எவ்வளவு தூரம் உன்னை கேட்டுப்பார்க்கிறோம்.. பதில் எதும் சொல்லாமல் சிலுப்பிக்கிட்டு போறே..இப்ப பதில் சொல்லிட்டு போடி " என்று வெடித்தாள் மஞ்சுளா..
"ஆமாக்கா.. நானும் கெஞ்சி வேற கேட்டுப் பார்க்கிறேன்.. ஒன்னும் சொல்ல மாட்டுக்குறா.. ஏய் இப்ப சொல்லுடி.. பங்கு தர முடியுமா.. முடியாதா...?" என்றாள் செல்லம்மாள்.
மூவரும் சண்டைகோழி மாதிரி சீறுவதப்பார்த்து ஆத்திரமா வந்தது ராஜாத்திக்கு. இதுல வேற ஒரு சைக்கிள்ல போன ஒரு பெருசு, நிண்ணு பார்த்துட்டுப் போச்சு..

தீடிரென்று ஆவேசம் வந்தவளாய்

" ஒரு மயிரும் தர முடியாதுங்கடி.. என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்கடி..." என்று கத்தி விட்டு இடத்தை காலி பண்ணினாள்.
மூன்று பேருக்கும் மூஞ்சில அடித்தால் போல் ஆகிவிட்டது.

நடந்த விசயம் இதுதான்.

முன்னால் திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தூத்துகுடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவைச்சார்ந்த கருங்குளம் ஊரில் இருந்து சிவராமகிருஷ்ணன் பொது மக்கள் சார்பாக எழுதிக்கொள்வது, எங்கள் ஊரைப் பற்றி தாங்கள் எற்கனவே அறிந்திருப்பீர்கள்.. தாமிரபரணி நதிக்கரையில் எங்கள் ஊர் அமைந்துள்ளது..பாதி பேர் விவசாயமும், மீதி பேர் கூலித்தொழிலையும் நம்பி உள்ளனர்.. நவதிருப்பதிகளில் ஒன்றான வெங்கடாஜலபதி கோவில் எங்களூரில் அமைந்துள்ளது. இங்கு எல்லா சமயத்தினரும், சமூகத்திருமாக சுமார் ஐயாயிரத்திற்கு அதிகமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கு மருத்துவ வசதி இல்லை..எதுக்கெடுத்தாலும் ஹைகிரவுண்டுக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் ஒட வேண்டியதாயிருக்கிறது.. இருக்கிறவன் ஓடுவான், இல்லாதவன் என்ன பண்ணுவான்..எனவே எங்கள் ஊரில் ஒரு ஆஸ்பத்திரி தொடங்க எற்பாடு செய்ய வேண்டும் என்பதை ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.


இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
சு.சிவராமகிருஷ்ணன்
தலமை ஆசிரியர் ( ஓய்வு)
கருங்குளம்





சிவராமகிருஷ்ணன் வாத்தியார் அக்ரகாரத்துக்காரர்.. அக்ரகாரம் மலைக்கு கீழே அமைந்துள்ளது.. யூகோ வங்கி அருகில்தான் வாத்தியார் வீடு.. இந்த வங்கியே வாத்தியாரின் வலியுறுத்தலின் பேரில்தான் வந்தது என்று பெருமைபட்டுக்கொள்வார். அவரது வீட்டின் திண்ணையில்தான் ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் ஆஸ்பத்திரி அமைக்கும் முடிவு...எழுதி முடித்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ விடம் நேரில் சென்று கொடுத்துட்டு வந்தார்.. சீக்கிரம் ஆஸ்பத்திரி வரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ஊரின் முக்கியஸ்தர்கள்..
ஒரு வழியா சுமார் ஒரு வருடம் கழித்து கருங்குளத்திற்கு ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டம் வந்தது.. அது வந்ததுக்கு வாத்தியார் போட்ட மனுதான் என்று ஊருக்குள்ளே பேசிக்கொண்டார்கள். ஆஸ்பத்திரி கட்ட இடம் பார்ப்பதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. முதலில் சந்தன மாரியம்மன் கோவில் கிட்டயும், பின்னர் கள்ளிகாட்டு கிட்டயும் இடம் பார்த்தனர். பின்னர் முடிவாக மலைக்கு அடியில் கட்டலாம் என்று இடம் ஒதுக்கப்பட்டது..
ஊருக்குள் இச்செய்தி கேள்விப்பட்டு சந்தோசமடைந்தனர்.. மலைக்கு மேல செல்ல போடப்பட்ட தார் ரோட்டுக்கு கிழக்காக, வாத்தியார் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.. வேலை மும்முறமாக நடைபெற ஆரம்பித்தது.
வானம் தோண்ட ஆள் வரவழைக்கப்பட்டனர்.. அவ்வாறு வந்தவர்கள்தான் சுப்பையா, இசக்கி, ஆறுமுகம் மற்றும் மாணிக்கம்..நான்கு பேருமே உள்ளூர்தான்..
சுப்பையாவுக்கு வாத்தியார் நல்ல பழக்கம்.. அதனாலயே சுப்பையாவுக்கு வானம் தோண்டும் வேலை கொடுக்கப்பட்டது.
சுப்பையாத்தான் மற்ற மூணு பேர கூட்டிட்டு வந்திருந்தான்..
நான்கு பேரும் நாலு பக்கமும் மண் வெட்ட ஆரம்பித்தனர். மலைப்பகுதியினால கல்லும் பாறையுமாக இருந்தது.. தோண்டுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டனர்.. அப்பப்ப ஊர் மக்கள் வந்து பார்த்துட்டு போவார்கள்..
ஒரு நாள் வேடிக்கை பார்க்க வ்ந்த ராமு கோனார்
" ஏல, என்ன வேலை ரொம்ப மந்தமா நடக்கிற மாதிரி இருக்கு.. வேகமாய் தோண்டுங்கப்பா.. அதுக்குன்னு காலுல கீலுல போட்டுராதிங்க..." என்றார்.
"அதுலாம் எங்களுக்கு தெரியும்.. உம் ஜோலியப் பார்த்துட்டு போரும்.." என்று வெடுக்குடன் கூறிவிட்டான் சுப்பையா.



"வெயில் வேற மண்டையை பொழக்குது.. ஒரே வேக்காடா இருக்குதே ஒரு பைனி வாங்கிட்டு வந்து கொடுக்கலாம்லா.. அதவிட்டுட்டு நொள்ள மயிரு சொல்லிக்கிடுதானுவோ..." என்று கூறிக்கொண்டே கடப்பாறையை ஒரு போடு போட்டான்.
ராமுகோனார் எப்பவோ இடத்தை காலி பண்ணிவிட்டார்.

கடப்பாறையை போட்ட போடுல "டிங்க்"னு சத்தம் வந்தது. மண் எதும் கிளறவில்லை.மறுபடியும் ஓங்கி குத்தினான். மறுபடியும் அதே சத்தம்.. மற்ற மூணு பேரையும் பார்த்தான். அவர்கள் இதை கவனித்த மாதிரி தெரியவில்லை.. காலால் நொண்டிப்பார்த்தான்.. ஏதோ இடறுது மாதிரி தெரிந்தது.. சுற்றும் முற்றும் பார்த்துட்டு கீழே குனிந்து கையால் நெருடினான்.. பானை மாதிரி இருந்தது.. சுப்பையாவுக்கு குப்பென்று வேர்த்து விட்டது. சந்தோச வேர்வையா என்று தெரியவில்லை..புதையலா இருக்குமோன்னு சந்தேகமாயிருந்தது.. இருந்தாலும் இப்ப எடுக்க முடியாது..இவனுவ வேற இருக்கானுவ.. ராத்திரி வந்து பார்க்கலாம்.. என்று எண்ணிக்கொண்டு மணலை போட்டு மூடினான். வேற இடதில தோண்ட ஆரம்பித்தான், எதுவும் தெரியாத மாதிரி..
நடகிறத எல்லாம் தெரியாத மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மூணு பேரும்..
மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஒரு விதமான பட படப்புடன் வேலை செய்தான் சுப்பையா.

" என்ன.. சுப்பையான்ன.. ஒரு மாதிரி இருக்கியே... என்ன ஆச்சு..எதும் புதையல் எதும் அம்புட்டுகிச்சா..." என்று நெண்டினான் இசக்கி.

" யேய்.. அதுலாம் ஒண்ணுமில்லப்பா.. வேலையப்பாருங்கப்பா... ஐயர் வானம் தோண்டுறதுக்கு பத்து நாளுதான் குடுத்திருக்காரு..சீக்கிரம் முடிச்சாகனும்.. ஆகட்டும் ஆகட்டும்.." என்று மண்வெட்டியைக் கொண்டு கொத்த ஆரம்பித்தான்.

மூன்று பேரும் சிரித்துக் கொண்டனர்.

சாயங்காலம் எதிர்த்தாப்புல உள்ள ஒடையில் கை,கால் கழுவிட்டு நான்கு பேரும் வீடு திரும்பினர்.



இரவானதும் பொண்டாட்டி தூங்கினதுக்கப்புறம் பூனை மாதிரி எழுந்து மலைக்கு வந்தார். ஆள் அரவமே இல்லை.. ஒரே இருட்டு கசமாயிருந்தது.. மலைக்கு மேல கோவிலில் மட்டும் லைட் எரிந்தது.

டக்குன்னு குழில இறங்கி பானையைச்சுற்றி உள்ள மண்ணை கையால் தோண்டி , பானையை வெளிய எடுத்தான்.. செம்பா, வெண்கலமா என்று இருட்டில் தெரியவில்லை. பானையின் வாயில் எதோ கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.. மூச்சு நின்று விடும் போலிருந்தது.. அப்படியே பானையை எடுத்துக்கொண்டு மேலேறினான்.. பாறைக்கு பின்னால் இருந்து மூன்று பேரும் வெளிய வந்தனர்.. சுப்பையாவுக்கு கண்ணு முழியெல்லாம் பிதுங்கிவிட்டது.

"கையில் என்ன சுப்பையான்ன... சுடு சோறா..? வாங்க சாப்பிடலாம்... நாங்க குழம்பு வச்சிருக்கோம்..." என்று கூறிக்கொண்டே மூன்று பேரும் சூழ்ந்துக் கொண்டனர். வேற வழியில்லை பங்குதான்...
பாறைக்கு பின்னால் போயி பானையின் வாயை அவிழ்த்தனர். உள்ளே தங்கம் ஜொலி ஜொலித்தது..
அந்த இருட்டுக்குள்ளே மொத்தம் எத்தனை என்று எண்ணினர். மொத்தம் 60 காசு இருந்தது.. ஒவ்வொண்ணும் நாலு கிராம் இருந்தது..
மூன்று பேருக்கும் மிகுந்த சந்தோசம்.. சுப்பையாவுக்கு மட்டும் வருத்தமாயிருந்தது..
ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டனர். பானை மட்டும் தனக்கு வேண்டும் என்று கூறி விட்டான் சுப்பையா.. அவர்கள் மறுப்பெதும் கூறவில்லை.. காரியத்தை முடித்து விட்டு வீட்டுக்க்கு வந்தனர். அவர்கள் புதையல் எடுத்ததுக்கு சாட்சியாக நிலா மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அவரவர் பொண்டாட்டியிடம் மட்டும் சொல்லி வைத்தனர். அவர்களுக்கும் அடக்க முடியாத சந்தோசம்..

இசக்கி பொண்டாட்டி செல்லம்மாள் கேட்டாள்

"சரி.. இந்த தங்கமெல்லாம் எதுல இருந்தது.." என்றாள்.

"அது ஒரு பானையில இருந்தது.." என்றான் இசக்கி.

"மண் பானையா...?"

"இல்லை... அது என்னமோ.. தெரியல.."

"அத எங்க..."

" அது நம்ம சுப்பையா அண்ணன் எடுத்துகிட்டாரு.."

"அவருக்கு எப்படி குடுக்கலாம், நமக்கு அதுலயும் பங்கில்லையா...? என்று கேட்டாள்.

இதே கேள்வியைத்தான் மஞ்சுளா மாணிக்கத்திடமும், அமுதா ஆறுமுகத்திடமும் கேட்டார்கள்.

"நாங்க பார்த்துக்கிறோம்...அத எப்படி வாங்குவதுன்னு எங்களுக்கு தெரியும்.." என்று பார்க்கிற இடத்திலெல்லாம் சுப்பையா பொண்டாட்டி ராஜாத்தியிடம் நச்சரிக்க ஆரம்பித்தார்கள்..

இதுதான் நடந்தது..

மூன்று பேரும் ராஜாத்தி வீட்டு முன்னால் நின்று கத்த ஆரம்பித்தார்கள். இதை கேள்விப்பட்டு இசக்கி ஒடிவந்து

"பொட்டை முண்டைகளா... காரியத்தை கெடுத்துடாதிங்கடி... இடத்தை காலி பண்ணுங்கடி..." என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தான்.
அவர்கள் அதை காதுல வாங்கின மாதிரி தெரியல.

" அந்த பானை வைரமாயிருந்துருக்கலாம்.. இல்ல அத வுட பெருசா இருந்திருக்கலாம்.. அதான் புருசனும் பொண்டாட்டியும் கமுக்கமா ஆட்டையப் போட்டுட்டிங்க...பானைய எடுத்து வந்து காட்டுடி.. அப்ப எதுக்கு ஒழிச்சு வைக்க..."என்று தாருமாரா கத்திகொண்டிருந்தார்கள்.. அதற்குள் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விட்டது.. இசக்கி தலையில் அடித்துக் கொண்டான்.
விசயம் வாத்தியாருக்கும் தலைவர் காதுக்கு போனது.. ஊரே ஒன்று திரண்டு விட்டது.

அதற்குள் சுதாகரித்துக் கொண்டு நாலு பேரும் ஒன்று தெரியாதது போல நாடகமாடினர்..வீட்டுக்குள் யாரையும் சோதனை செய்ய விடவில்லை..
செய்துங்கநல்லுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார்.. வாத்தியார்தான் தகவல் சொன்னார்.. இன்ஸ்பெக்டர் மிரட்டி கேட்டதில் ஒத்துக்கொண்டனர்..


சுப்பையாத்தான் எல்லாருட்டயும் தங்க காசுகளை வாங்கி மொத்தம் 60 காசுதாங்க என்று சாமி மேல சத்தியம் செய்து போலிஸீடம் ஒப்படைத்தான்.. பத்திரமாக அரசாங்க கருவூலத்தில் கொடுக்கப்பட்டது..
சுப்பையாவ பார்க்கத்தான் பாவமாய் இருந்தது.. அன்றிரவு நாலுபேர் பொண்டாட்டிகளுக்கும் உதை விழுந்தது..
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே என்று நொந்துக்கொண்டார்கள்.

விறுவிறுவென்று ஆஸ்பத்திரி கட்டிமுடிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ வந்திருந்தார்.
" இந்த ஆஸ்பத்திரி வருவதற்கு எம்.எல்.ஏ எடுத்த முயற்சி சொல்லி மாளாது.. மேலும் தோண்டும் போதே நமக்கு தங்கம் கிடைத்தது.. இனிமேல் இத தங்க ஆஸ்பத்திரி என்றே கூப்பிடுங்கள்.. நமக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும்.." என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தார் சிவராமகிருஷ்ணன் வாத்தியார்.
ஆஸ்பத்திரி திறந்து வைக்கவும் கூட்டம் ஆர்ப்பரித்தது. கூட்டத்தில் சுப்பையா மட்டும் அழுதுக் கொண்டிருந்தான்..


பல வருடம் கழித்து...!

" ஏய்.. ராஜாத்தி அக்கா... தங்க ஆஸ்பத்திரியில உங்களுக்கு பேரன் பிறந்திருக்காமே.. போய் பார்க்கலயா..." என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் உட்கார்ந்தாள் வள்ளி.

"கேள்விப்பட்டேன்... மருமகனுக்கும் நமக்கும் சண்டை..அவுங்க குடும்பம்லா ஆஸ்பத்திரிய வந்து மொய்க்கும்.. அதான் லேட்டா போய் பார்த்துக்கலாம்.. முதல் பேத்திக்கே மோதிரம் போட்டோம்.. இப்ப போட தங்கம் வாங்க எவண்ட காசு இருக்கு...
வந்த சீதேவியை விரட்டி விட்டாச்சு..அப்புறம் போய் பேரனை பார்க்கணும் வள்ளி..” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

சுப்பையா கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.. வீட்டுக்குள் சென்று அடுக்களையின் மேல் உள்ள பரணியில் மூடி வைத்த பானையத்தூசி தட்டி எடுத்தார். நேரா கணேச ஆசாரி கடைக்கு போய் பானையை விற்று ஒரு கிராம் மோதிரம் வாங்கிக்கொண்டார்.





புதையலை போலிஸிடம் ஒப்படைக்கும் போது அங்கு நடந்த கூச்சல் குழப்பத்தில், தங்கத்தை மண்பானையில் வைத்து கொடுத்ததை யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை..

தங்கத்தோடு தங்க ஆஸ்பத்திரிக்கு பேரனை பார்க்க நடக்க ஆரம்பித்தார் சுப்பையா.


---ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி

ரட்சிக்கப்பட்டவள்.....

2011-09-14

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



ராமாயீ கலப்பையும் மண்வெட்டியும் வெளியே எடுத்து வைக்கும் போதே, அம்பிகா கேட்டாள்

" என்ன ஆச்சி, காட்டு வேலையா. யார் காட்டுல..." 
 
ராமாயீ ஒரு சிரிப்புடன் "ஏங்காட்டுக்கா போகப் போறேன்...எல்லாம் அந்த தங்கவேல் தலைவர் காட்டுக்குத்தான்.." என்று வீட்டை பூட்டிக்கொண்டே சொன்னாள்.

ராமாயீ எந்த ஒரு பதிலுக்கும் ஒரு சிரிப்புடன்தான் பதில் சொல்வாள். அதுவும் மனசில இத்தனை கவலையை வச்சிக்கிட்டு...தங்கவேல் தலைவர் கூட சொல்லுவார்" எப்படி ராமாயீ.. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் எப்பொழுதும் சிரிப்பா இருக்க.." என்பார்.

இவளுக்கு பதில் சொல்ல தெரியாது. இருந்தாலும் எதோ சொல்லி சமாளிப்பாள்..தான் புருசன் ராஜவேல் சாகும் போது நீ எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொன்னதாக அம்பிகாட்ட மட்டும் சொன்னாள். அதுவும் சிரிச்சிக்கிட்டுத்தான்.. ஆச்சி எப்படித்தான் எல்லா விசயத்தையும் ரொம்ப சுலபமாக எடுத்துக்கொள்ளுகிறாளோ என்று ஆச்சர்யப்படுவாள் அம்பிகா.. நம்மளும் இருக்கிறமோ.. என்று கவலைப்படுவாள். தான் புருசன் இறந்துப்போனதிலுருந்து தனக்கு ஆச்சிதான் எல்லாம் என்று நினைத்துக் கொள்வாள்..
யாரும் இல்லாத தனக்கும் தன் பையனுக்கும் ஆச்சி மட்டுமே துணை என்று சொல்லிக்கொள்வாள்.. யாரும் இல்லாத ராமாயீக்கும் அவள் மட்டுமே துணை.. ராமாயீக்கு இன்னொரு துணை இருந்தது. அதுதான் அவளுடைய ஆடு.. அரசன்னு பேரு வச்சு அழகாய் வள்ர்த்து வந்தாள்.அம்பிகா வீடும் ராமாயீ வீடும் பக்கம் பக்கம்தான்..

வீட்டு பூட்டை பூட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் முடியவில்லை.. அம்பிகாவும் முயற்சி பண்ணிப் பார்த்தாள்.
முடியவில்லை.
"இழவெடுத்த பூட்டு, இன்னைக்கு ஏன் மக்கர் பண்ணுதுன்னு தெரியலயே..." என்று நொந்துக் கொண்டாள்.
" சரி.. நீ போ.. நான் வீட்டை பார்த்துக்கிறேன்..." என்று ராமாயீயை அனுப்பி வைத்தாள்.
" சரி சரி.. பார்த்துக்கோ... பேரன் தூங்கிட்டானா..." என்று கேள்வியைக் கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தாள்.
தோளில் மண்வெட்டியும், ஒரு கையில் கலப்பையும் இன்னொரு கையில் சாப்பாடு சட்டியுமாக நடந்துப் போனாள்.
அம்பிகா ராமாயீ போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராமாயீ ஒரு நாள் கூட வீட்டில் இருந்ததே கிடையாது. எதாவது ஒரு வேலைக்கு சென்று விடுவாள்.
நூறு நாள் வேலை பஞ்சாயித்துல போட்டாங்கன்னா முதல் ஆளு ராமாயீ தான் கிளம்புவாள். மற்றபடி தினமும் களை வெட்டுவத்ற்கு எதாவது ஒரு வீட்டில் இருந்து அழைப்பு வந்து விடும். சில நேரங்களில் பக்கத்து ஊருக்கும் களை வெட்டுவதற்கும் செல்வாள். மேலும் ஊரில் உள்ள கரண்ட் ஆபிஸ், பஞ்சாயத்து ஆபிஸ், பேங்க், போஸ்ட் ஆபிஸ் எல்லாத்துக்கும் ராமாயீதான் கூட்டி பெருக்குவாள்... யாரும் விஷேச வீட்டுக்கு கூப்பிட்டாங்கனா, போய் பாத்திரம் தேய்த்து காசு வாங்கிட்டு வருவாள்.. ஒரு வாய் கூட எதிர்த்து பேச மாட்டாள். அதனாலயே எல்லாரும் ராமாயீயதான் எதுக்குனாலும் கூப்பிடுவார்கள்..
தினமும் சமைக்க முடிந்தால் சமைப்பாள்.. இல்லன்னா அம்பிகா வீட்டில் கை நனைத்து விடுவாள்.. அம்பிகா வீடு மட்டுமல்ல எல்லார் வீட்டுக்கும் போக அவளுக்கு உரிமை இருந்தது.. உரிமையோடு போய் சாப்பாடுவாள். எல்லாரும் அவளுக்காக வருத்தம்தான் படுவார்கள்.

ஒரு சின்ன கவலை மட்டும் ராமாயீக்கு இருந்தது. அது ஒடிப்போன தன் மகன் ராஜேந்திரன பற்றித்தான்.
அவனுக்காகவே இவ்வளவும் உழைத்தாள்.. ஒரு நாள் தன் பையன் திரும்பி வருவான்..அவன் நம்மள வச்சு காப்பாற்றா விட்டாளும் அவனை நம்ம வச்சு காப்பாற்றுவோம் என்ற நினைப்பிலே உழைத்து வந்தாள்..
தினமும் கோவிலுக்கு சென்று வேண்டுவாள்..செவ்வாய்க்கிழமை தோறும் ஊர்ல உள்ள அந்தோணியார் கோவிலுக்கு போவாள்.. மனமுருகி வேண்டுவாள்.. ஆனால் இதுவரைக்கும் அந்தோணியார் அவள் குரலுக்கு காது குடுத்த மாதிரி தெரியவில்லை..


ஒரு நாள் அம்பிகா கேட்டாள்.

" ஆச்சி... எல்லா பணத்தையும் எங்க போட்டு வச்சிருக்க... பேங்கலயா..? இல்ல போஸ்ட் ஆபிஸ்லயா..?" என்றாள்.

" பேங்கலத்தான் போட்டுருக்கேன்.. என் ராசா இங்க வா.." என்று அம்பிகா மகனை தன் பக்கம் இழுத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

தன் மகன் ராஜேந்திரன் ஞாபகம் வரும் பொழுதெல்லாம் அம்பிகா மகனை எடுத்து கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள்..

"கீரை கட, கீரை கட.. இது உனக்கு, இது இந்த ஆச்சிக்கு, இது உங்க அம்மாக்கு, இது நம்ப ராஜேந்திரன் மாமாவுக்கு " என்று அவன் கயை பிடித்து விளையாடிக்கொண்டிருப்பாள். ராஜேந்திரன் மாமான்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வந்துரும்..
"நண்டு நண்டு வருது..." என்று கூறிக்கொண்டே அவனுக்கு கீச்சு காட்ட அவன் சிரிப்பான்.. அவனுடன் சேர்ந்து ராமாயீயும் சிரிப்பாள். அந்த சிரிப்பிலயே தனக்கு இப்படி ஒரு பேரன் இல்லையே என்ற குரல் மெதுவாக ஒலிக்கும். தனக்கு இந்த குடுப்பனை கூட வைக்காமல் போய்ட்டானே என்று நொந்துக் கொள்வாள்..

வீட்டில் போய் படுக்கும் போதுதான் கை, கால் எல்லாம் வலிக்கும். வலியில் கண்ணீர் வரும்.. கண்ணீரின் வழியே தன் பையனின் நினைப்பு வரும்..
ராஜவேல் இருக்கும் போது எந்த குறையும் இல்லாமல்தான் இருந்துச்சு.. ராஜவேலுக்கு எந்த காடும் கிடையாது..குத்தகைக்கு எடுத்து பயிர் பண்ணிட்டு வந்தார். ஒரு நாள் காட்டுல பாம்பு கடித்து ராஜவேல் இறந்துப் போக, குடும்ப நிலமை தலை கீழாக மாறியது.

அதன் பின் காட்டு வேலைக்கு போய் ராஜேந்திரனை படிக்க வைத்தாள். அவனும் பாதியிலே படிப்பை நிப்பாட்டி விட்டு வெல்டிங்க் பட்டறைக்கு சென்று விட்டான். இவளுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. நாலைந்து வருசம் அங்கயே வேலை பார்த்தான்.. பின்னர் வேலை கற்றுக்கொண்டு சென்னை போவதற்கு முடிவெடுத்தான். யாரோ சென்னை போனா நல்ல காசு கிடைக்குன்னு சொன்னதற்காக இந்த முடிவு. ராமாயீக்கு இதில் துளி அளவுக்கும் விருப்பம் இல்லை. எதோ பையனுக்காக ஒத்துக்கொண்டாள்.

சென்னை போனான். நல்லா வேலை பார்த்தான். மாசம் மாசம் ராமாயீயை பார்க்க வந்திருவான். ஊர்ல " உன் பையனை டவுனல பார்த்தேனே.." என்று சொல்லும் போது ராமாயீக்கு சந்தோசமாயிருக்கும்.
தீடிரென்று இரண்டு மாசம் ராஜேந்திரன் ஊர் பக்கம் வரவில்லை.. ராமாயீ எதிர்பார்த்து எதிர்பார்த்து எமாந்துப் போனாள்..

அங் நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாள். வேலை செய்யிற இடத்திற்கு போன் பண்ணி கேட்டதற்கு ஊருக்கு போறாதாக சொல்லிட்டுப் போனார் என்று சொல்லிவிட்டனர். அது வேற இவள் மனதை மிகவும் பாதித்தது. அந்த நேரத்தில் எல்லாம் அம்பிகாதான் ராமாயீயை பார்த்துக் கொண்டாள்.
ஆறு மாதம் கழித்து ராஜேந்திரன் ஊர் வந்து சேர்ந்தான். ஆளே மாறி இருந்தான். அழுக்கு சட்டையும் கைலியுமாக இருந்தான்.
பல நாள் வளர்த்த தாடி அவனை பிச்சைக் காரனைப் போல காட்டியது. ராமாயீக்கு தன் மகன் வந்ததில் மிகுந்த சந்தோசம்.
ராஜேந்திரன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.. எங்கேயோ நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருப்பான். ஊர் முழுவதும் வந்துப் பார்த்துட்டுப் போனது. ஊருக்குள் பைத்தியம் பிடித்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள்.. ராமாயீக்கு அப்படித்தான் தோன்றியது. எதும் பேசினாலும் பேசமாட்டான். சாப்பாடும் ஊட்டி விட வேண்டியாதாகிருந்தது.. ஊரார் தன் பையனை பைத்தியம் என்று சொல்வதை அவள் விரும்பவில்லை.. சின்ன பசங்களெல்லாம் அவனை சேது என்று கிண்டலடித்தனர்...
பக்கத்து ஊர் பள்ளி வாசலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாள். அங்கு போயிட்டு வந்ததிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை,.
பேசுவது புரிந்துக் கொள்வான். அடிக்கடி அம்பிகா பையனிடம் விளையாடவும் செய்வான்.
எப்படி புத்தி குழம்பியது என்ற கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டான். வீட்டிலே அடைந்து கிடப்பான். கொஞ்சம் நாளில் வெளிய போக ஆரம்பித்தான். அந்தோணியார் கோவில், வயக்காடு, அப்பா சமாதி என்று எங்கெங்கோ சுற்றுவான்.. ராமாயீக்கு நிம்மதியாயிருந்தது. ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தால் மகன் திருந்தி விடுவான் என்று நினைத்தாள். பொண்ணு தேட ஆரம்பித்தாள்.
பக்கத்தில் ஒரு ஊரில் பொண்ணு ஒன்றை பார்க்க ராமாயீ போயிருந்த சமயம் ராஜேந்திரன் வீட்டில் நூறு ருபாய் மட்டும் எடுத்துட்டு
ஒடிவிட்டான். அதன் பின் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
அவன் ஓடிப் போய் சுமார் இரண்டு வருடம் ஆகிறது. இது வரைக்கும் எந்த தகவலும் இல்லை.

காலையில் எழுந்தாள் ராமாயீ.. உடம்பு வலியாயிருந்தது.. தலை சுற்றுவது போலிருந்தது. கீழே விழுந்து விட்டாள்.
சத்தம் கேட்டு அம்பிகா ஒடி வந்தாள். அவளை தூக்கி வேண்டிய பணிவிடைகளை செய்தாள். ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்தாள்.

ப்டுத்த படுக்கையாகிவிட்டாள் ராமாயீ.. வார்த்தைக்கு வார்த்தை ராஜேந்திரா, ராஜேந்திரா என்று உளறிக்கொண்டிருந்தாள்.
அம்பிகாதான் பக்கத்தில் இருந்து கஞ்சி வச்சு கொடுப்பது, சுடுதண்ணீர் கொடுப்பதுமாக இருந்தாள். ஊர் பெரியவர்கள் வந்து பார்த்துட்டுப் போனார்கள்.. ஆளாளுக்கு இரக்கம் தெரிவித்தனர். சில பேர் " தேறாது " என்று வெளிப்படையாக சொல்லிச் சென்றனர்.

ஒரு நிறைந்த பௌர்ணமி நாளில் ராமாயீ காலமானாள்.. அவள் முகம் பௌர்ணமி மாதிரி பளிச்சென்று இருந்தது.
அம்பிகாதான் ஒயாமல் அழுதுக்கொண்டிருந்தாள்.

ஊர் பெரியவர்களெல்லாம் முடிவு பண்ணி ராமாயீன் உடலை பெரும் விமர்சையாக அடக்கம் பண்ணினர்...
அடக்கத்திற்கு மழை வந்திருந்தது. பெரும் மழை.. ராஜேந்திரன் தான் மழையாய் வந்ததாக அம்பிகா நினைத்தாள்.

இப்பொழுது ராமாயீ கல்லறையில் நிரந்தரமாக துங்கிக்கொண்டிருந்தாள். ராஜேந்திரன் வருவான் என்ற நம்பியக்கையில்..!!
மழை மட்டும அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது.. அது ராஜேந்திரனா என்று தெரியவில்லை...!!